Tuesday 29 May 2012

ம்ம்மம்மம்...........




நாவீரமாய்,
விலக்கவோ
இழக்கவோ முடியவில்லை
நினைவுகளை .............

கள்,கள்ளகசிப்பு ௬ட தந்ததில்லை
வெடித்தெழும் போதை _உன்
விழி மடிக்கையில்


                                                                                                                 
                                                                                                                


                                                                                                                


விழுதுப்பாலாய்
ஒட்டிவிட்டது
 வெண்சிரிப்பு _இனி
அழுது முடியுமோவென்
 பிழைப்பு 


                                                                                                         
பாடை மேளம் எல்லாம்
தயாராக,
ஊர்வலம் பிந்துகிறது .
அட நான் இன்னும்
சாகவில்லையே ............!

வத்தாக்கிணற்றடியில்
முத்தாதகொவ்வை பளபளப்பு,
பாவற்காய் மினுமினுப்பு,
என்னவோ செய்யுது,



சரம் தூக்கி நடப்பது 
றோட்டில் நாயை
துரத்தி ஓடி மகிழ்வது _என்
மட்டுமிருந்த எனை
தாடி சொறிந்து வானம்
 பார்க்க வைத்த கொடுமை



காத்தடிக்க நீவர
சைக்கிள் கடையிலிருந்த
எனக்கல்லவா வேர்த்தது ?


எப்பவோ எப்படியோ பார்த்த
கால்முடிகள் ,
இப்பவும் அப்படியே
நிறைந்திருக்கின்றன .......

உன்னறையில் விளக்கெரிந்தால்
கல்லெறி வேண்டும் பக்கத்துவீட்டான்
செய்த பழிதான் என்ன ?

ஐயருக்கு சில்லறை
வைரவருக்கு வடை
எனக்கு நீ
கோவிலில் வேறென்ன ?

திரும்பி பார்த்த நீ
விரும்பி பார்க்கவில்லை
திரும்பி பார்த்ததே
கரும்பாய் இனிக்க தவறவில்லை!



எல்லோருக்கும் எல்லாமும்
கிடைத்திருந்தால்    
எனக்கும் நீ கிடைத்திருப்பாய்





உங்களைப்போல


நிறைகுடம்தான் நான்
விரக்திகளால் மட்டும் தான்
நிறைந்திருக்கிறேன் .
ஒளிர்விடும் சுடர்நான்
காலடி எங்கும் தனிமை
இருளை சுமந்திருக்கிறேன் .
நடுவூரில் பழுத்த
நல்ல மரம் நான்
வேர்கள் இன்னும் எனை தேடிக்கொண்டு ....
மாவிலை தோரணங்கள் சூடி
சந்தன வாசம் பூசி
பூரனப்பட்டவனாய் நிற்க
முயலவில்லை நான்
உங்களைப்போல்..........................

கண்ணாடிகள் அலங்கரிக்கப்படுவதால் _முக

கறைகள்என்றும் மறைவதில்லை .


நிழல்களை எடைபோட்டு
நிரப்பிக்கொள்ளவும்
கனவுகளை கருவாய் சுமந்து திரியவும்
ஏக்கதொப்பைகளை
ஏற்றிக்கொண்டு நிற்கவும்
சம்மதித்ததில்லை _என்
மனசாம்ராட்சியம்
உங்களை போல்....................

அரிதாரம் பூசி முகத்தை மறைத்தாலும்

முகவரிகள் மறைவதில்லை .



நிறைகளைத்தேடி ஓடுவதால்
குறைகளோடு வந்திருப்பது
நியமாகிறது .
குறைகளிலிருந்து குறைகளே
கிடைக்குமாகையால் _எந்த
எச்ச அடையாளங்களையும்
விடப்போவதில்லை
உங்களைப்போல்.........







ஒன்றுமில்லாமல் அவதரித்தவன் _எதற்காக
என்றும் வாழும் நினைவுகளை விதைக்கவேண்டும்

Wednesday 23 May 2012

த(ய)ங்கிய வேர்கள் ..........



ஒற்றைப்பனை,
வஞ்சகமில்லா நெடுவளர்த்தி
காற்றுக்கு காவோலை கழண்டால்
மாற்றமில்லாமல் தாண்டும் நூறடி !

ஆடுமாட்டமும் கரியவுருவமுமாக
மின்னலொளியில் பார்த்தால் ,
மயிர்கூச்செறியும் மழையிரவுகளில்
அதிகாலை அப்பாவியாய் நிற்கும் ,

கூடுவிழுந்து காகம் போனபின்னே
வீடாக்கி கொண்டது அணிலொன்று வட்டை !

கறையான் தின்ன இறங்கிவரும் அணிலை ,
இரையாக்க காத்திருக்கும் கடுவன்பூனை
வெள்ளைதான் ,மனசெல்லாம் கள்ளமதுக்கு ,
காத்திருப்பும் தப்பித்தலுமாக
அணிலும் பூனையும் கொஞ்ச காலம் ...............

பாணியதிகம் பழத்தில்,
அணிலோ பருவத்தில் கோதிவிடும் _அம்மாவின்
ஏச்சு சிலவேளை அணிலுக்கும் விழும்!
பாணியெடுத்து பனாட்டு போடுவதைவிட
பணியாரம் சுடுவதை வழக்கமாக்கியிருந்தாள்!
கொக்காரை பன்னாடையென்று
எதுவிழுந்தாலும் தொட அனுமதிப்பதில்லை
புருனைசிலந்தியிருக்கும் என்று சொல்லி ,
தட்டிதானெடுத்து வைப்பா !

மாடு முதுகுதேய்க்கவும்_சிலகாலத்தில்
கொடிகட்டி புகையிலை போடவும் ,
எப்பவாவது சாய்ந்துகொள்ளவும்,_அவதிக்கு
அப்பாடா என்றுஒன்னுக்கு அடிக்கவும்
போனதைதவிர பலவேளைகளில்
ஒற்றையாகவே .............!

இப்போதெல்லாம் நினைவில்
தினமும் வந்துதொலைக்கிறது
அந்த ஒற்றைப்பனைமரம் .............

ஓ வென்று அழவேண்டும் போலிருக்கிறது ,
இந்த தனிமையை எண்ணி !!!




Sunday 20 May 2012

இப்படித்தானோ .........!


நெஞ்சிலடித்து _ஓடி
வந்தணைத்து ஒப்பாரிவைப்பர்
அப்புறமென்ன _கொஞ்சம்
தள்ளியிருந்து
எப்படியாம் ..............!
செத்தவன் மீண்டும் செத்துப்போகும்படி
பித்துப்பிடித்த கதைகளை
வாய்கள் மெல்லும்
வெற்றிலை வரும்வரை .

Wednesday 9 May 2012

ஓங்கியொலிக்கட்டும் எங்கும்............


நாகரிக வாழ்வியலில் ஈடுபடத்தொடங்கிய மனித சமுதாயம் வர்க்க பாகுபாடு உடையதாக மாற்றமடைந்து ,சக மனிதனின் உரிமைகளை மறுத்து அவனை அடக்கி அடிமையாக்கி உழைப்பை சுரண்டும் ஒரு மிருகத்தனமான முதலாளித்துவ இயல்புக்குள் இயங்கிக்கொண்டிருந்த காலத்தில்,அந்த முதலாளித்துவத்தை எதிர்த்து,சமுதாய வாழ்வியலில் சரிசமனாக வாழ்வியலை பெற எழுந்த போராட்டங்களே இந்த மேதினம் உருவாக அடிப்படைக்காரணம் .(இதுகுறித்து விரிவான விளக்கம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் )சுமார் ஒரு நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய இந்த புரட்சி இன்று எந்த மாற்றத்தை மனிதசமுதாயத்தில் ஏற்படுத்தி இருக்கிறது ? குறிப்பாக ஈழத்தமிழர் வாழ்வியலில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது ?