Saturday 30 June 2012

அர்த்தமிழந்து போன அர்த்தங்கள்


நிலாக்கரையும் பொழுதொன்றில்
உலர்ந்த உதடுபிரித்து
பேசத்தொடங்கினேன்
ஒலிக்குறிப்பற்ற சொற்களால்.
நிசப்தமுடைக்கும்
மிக நிசப்தமாய்
மிதக்கத்தொடங்கின அர்த்தங்கள் .

இலையில் பின்னிய வலைக்குள்
இறந்துபோன புழுவாய்
உக்கத்தொடங்கியது மனம் !

இடைவெளிகளை
முரண்களால் நிரப்பி
இணைப்புக்களை தயக்கங்களால்
சோடித்துத்திரும்பியபோது,
வறண்டு வெடித்துப்போயிருந்த
மனதேசத்தில் விழுந்த கண்ணீர் துளிகள்
விதைகளை எரித்து கருக்கின ..........

மரண ஊர்வலம் போன
பாதையில் நிலைத்திருக்கும் வாசம்போல்
படர்ந்திருக்கிறது உள்ளுக்குள்
காயத்தின் ஊனநீர் நாற்றம்

ஒடுங்கி
ஒன்றுமில்லாத ஒன்றாக
மீண்டும் மீண்டும்
ஒடுங்கி கொள்கிறது
இந்த நாட்கள் மீதான இருப்பு

மெல்ல மெல்ல
கரைந்து மறைகிறது நிலவு

அர்த்தங்கள் எல்லோராலும்
பகிரப்படுகின்றன பெருமூச்சுக்களாக
அவளிடமிருந்தும் ........................!!!



காலங்கள் கடக்கும் ஓலி....................



கொண்டாடப்படட்டுமென்று
கொண்டுவரவில்லை
திண்டாடித்துண்டாடி
தீந்தமிழ் வார்த்தைகளை

அன்றாடத்தமிழ் _இது
அழகியல் நின்றாடுமென் வளவுத்தமிழ்.

படிமங்கள் பூட்டி தேரிழுத்தால்
படித்தவன் ஆலாத்தி எடுப்பான்.
எதுகைமோனையென்று எடுத்தெறிந்தால்
அதுக்குள்ள நின்று பிழைபிடிப்பான்.

உருவேத்தி உவமையெல்லாம்
தரவேத்தி இலக்கணங்களை ஆங்காங்கே
நிறைவேத்திப்பாட நானென்ன,
செருப்போட வயலுக்குபோகும்
பொறுப்பில்லா தோட்டக்காரனா?

பல்லுத்தடக்கும் சொல்லெடுத்து
பலருக்கு விளங்காபொருளெடுத்து
நெல்லுக்க நிக்கிற புல்லுப்போல
நாலுவார்த்தை நயமாய்போட்டு
மல்லுக்கட்ட இதுவொன்றும்
மயில் கழுத்துவண்ணமில்ல,
வில்லுக்கேற்ற அம்பிது_கற்ற
கல்விக்கேற்ற கவியிது !

வரங்கொடுத்த சிவனே
வதைபட்டான் _எனக்கு
தமிழ் கற்றுக்கொடுத்தவரே
தளரலாமோ ?
தலை குனியலாமோ?
மருந்தடிச்சு வளத்தபயிர்
மலராதாது பயிரின் பொறுப்பு
பிரம்பாலடிச்சும் படிக்காதது _இந்த
பிரமசத்தியின் கொழுப்பு.

வேசங்களுள் ஒளிந்துகொள்ள
சாத்திரசடங்குகளில் ஆழ்ந்துபோக
ஆத்திரஅவசரத்துக்கு திட்டிக்கொள்ள
பண்டபாத்திரங்களை காலாலடிக்க என
எல்லாம் கற்றுதேறி செய்துமுடித்து,

நான் நானாகவே இருந்து
எனக்காகவென்றில்லாமல் இருந்து
எதுக்காகவும் இல்லாதிருந்து

எவர் எப்படிச்சொன்னாலும்
என் இருப்பு நிரந்தரமானது !!




Saturday 16 June 2012

கனத்த மனதின் ஓலம்

ஆறிப்போனவொருகோப்பை தேநீர்
பிய்த்துபோட்ட சிலபாண் துண்டுகள்
சிலசமயங்களில் வரும் கோபம்
தேடுவாரற்று கிடக்கும் ஊசிநூல்
மடிக்கப்படாத படுக்கை
கிழிக்கப்படாத கலண்டர் _எப்பவாவது
விரல்வெட்டி வரும் இரத்தம்
ஈரவிறகின் கண்ணெரிக்கும் புகை
தனியாக எனைக்கடக்கும் தாய்
இப்படியாக என்பொழுதுகள்
ஒவ்வொன்றாலும்
உணரப்படுகிறாய் நீ !


அழைத்தநினைவுகளை விட _உனை
உறுக்கிய உணர்வுகளே பகிரப்படாமல்
இறுக்குகின்றன இதயத்தை.
உன்னிடம்,
வலிக்காமல் வலிக்கிறது என்று
சொன்ன பொழுதுகளை
வலிக்கிறபோதில் நினைக்கதான் முடிகிறது.

சொன்னதை செய்யாமலும்
செய்வதை சொல்லாமலும்
குறைகளை மட்டும்
முறையிட்டவென் குரலில்
நிறைகள் மட்டும் கேட்கிறது
கேட்க நீயில்லாத இப்போதெல்லாம்,

கதைக்கவும் கதைகேட்கவும்
சலித்த கணங்கள்,
கூட்டிப்போகவும்
கூடவரவும் மறுத்த நிகழ்வுகள்,
கொட்டிய உணவுகள்
திட்டிய மணித்துளிகள்
அரிக்கின்றன இன்னுமிங்கு,

நெற்றியில் பார்த்த காச்சல்
நெஞ்சைதடவவைத்த இருமல்
வெற்றிலை வைத்த விசபரு
காலில்குத்திய முள் என
எல்லாம் என்னால் நடக்கின்றன _உனை
நினைவுறுத்தி கடக்கின்றன

தயக்கங்களோ
தளர்வுகளோ நானறிந்ததில்லை
நீயிருந்தவரை _இன்று
இயங்கவியலாசோர்வுடன்
இருத்தலை சுமக்கிறேன்
அவலத்துடன் ...............
                                                  

Tuesday 12 June 2012

மனிதர்களில் மட்டுமென்று ................


சட்டைக்குள் சில்மிசம் செய்த_ என்
கிராமத்துக்காற்றே,
ஆலமர மடத்தில் _உன்
ஸ்பரிசம் தந்த சுகமும்
விளையாடிக்களைத்த
மம்மல்போழுதில் வந்தெனை
ஆரத்தழுவி வியர்வைதுடைத்தளித்த
பரவசமும் _ இன்று
நினைவுகளில் மட்டுமே !
எல்லைகளில் உயர்ந்த
பனைகளோடுஉரசி சிரித்தவள் நீ ,
முல்லையின் வாசத்தோடு
முற்றத்து மண் அள்ளிக்கொட்டி
ஆக்கினைசெய்தவள் நீ ,
நெற்கொழுவில் நெற்கதிகளோடுசல்லாபித்து
நெஞ்சைத் தொட்டவள் நீ ,
ஏகாந்த இராத்திரியில்
மஞ்சம் வந்து _கன்னம்
கொஞ்சிப்போனவள் நீ ,












கிராமத்துப்பூங்கற்றே
வேலிக்கிழுவையும்ஆடுதண்டுப்பூவரசும்_உன்
தரவுகளின்ஆமொதிப்பர்களாக
இ(த)லையாட்டிக்கொண்டிருக்கும் வரை
மாற்றமில்லாமல் நீ வந்து போவாய் .
எனக்குத்தெரியும் _மாற்றங்கள்
மனிதர்களில் மட்டுமென்று ................


Tuesday 5 June 2012

முகமின்னும் மீதமிருக்கிறது!!!


நினைவு வலிகளை நீக்குமொரு
நிகழ்வுப்பயணத்தை
நினைவுகளூடே நீட்டிக்கொள்கிறது மனது.
நீழ்கின்ற இரவினில்,
உள்ளச்சுவரில் நினைவுகளின்
வர்ணங்கள் பூசப்பட பூரித்துப்போகிறது
நிகழ்கணங்களில் முகம்.
வல்வைக்கடலுவர்க்காற்று
வந்துமோதி முற்றத்து
முல்லை பூவுருத்திப்போகும்
எல்லையிலுயர்ந்த ஒற்றைபனையில்
இணைதேடும் அணிலோன்றின்
அவதிக்குரல் கடந்து போகும் .......

தெருக்கரைஎருக்கலையும் நாயுருவியும்
மறுக்காதனுப்பிய தூதுகள்,
முறுக்கெழுந்த கறுவல்காளை
செருக்குடன் நிமிர்ந்து பார்த்தபார்வைகள் _ஊர்
உருக்குலைதிருந்தாலும் வைரவரின்
திருக்கலையாதிருந்த கோலங்கள் ...............



பிணிஎதுமில்லாமல் போய்வர_வல்லை
முனியப்பரை துணை கேட்டு
எல்லைத்தாண்டிய பயணங்கள்
உடுவை சந்தியில்
உணர்வறியா உவர்ப்புடன் தேடல்
பாடுபொருளாய் பலகாலங்கள்
அவள்மீதிருந்தகாதல்..........
என்நிதி கேட்டும் அவன்
சந்நிதி போனதில்லை _என்
சங்கதி அங்கிருந்தால் வேறு
வேலையிருந்ததில்லை.

ஊரணி ஊற்றுக்கும்
தொண்டைமான் ஆற்றுக்கும்_எம்
பேரணி செல்லும் நீந்திவர,
ஊர்புரணி பாடும் .........
பிறந்தாலும் மலர்ந்தாலும்
இறந்தாலும் _காதலில்
விழுந்தாலும் வென்றாலும் _நண்பர்களின்
விருந்து வரும்_ மறுநாள்
நாயள் பெற்றவர்களின் என்று பேச்சும்வரும்.....

விழிகளில் நீர் வர
நினைவுகள் கரைந்தழிகிறது
மொழிகள் போய்மறைகிறது
போகாதிருக்கும் நினைவுகளால்
முகமின்னும் மீதமிருக்கிறது
இந்த அகதி வாழ்க்கையில்