Tuesday 25 September 2012

கண்ணீரை சேமிப்பவன்


தூரிகை தொடாத வர்ணத்தின் 
துர்மணமாய் அடங்கிக்கிடக்கும் 
ரணமொன்றின் கசிவுகள்,
அதிகாலை அமைதிக்குள் 
வான் துப்பும் தீக்கங்குகளாகி தெறித்து 
கருகி கரையும் ஆதங்கத்தோடு.

வடிகால் தேடாத கசிவுகளின் திசுக்கள் 
கடவுளாகி இருந்தது.
மந்திரங்களும் மலர் அர்ச்சிப்புக்களும் 
கைதட்டல்களும் கரைந்து கொண்டிருந்தன.

புடம் போடுதலென்ற போர்வையில் 
வடிவங்களை மாற்றிய பின்னும் 
அந்தரங்க துவாரங்களில் வழிந்துகொண்டிருந்தது
கசிவுகளின் வன்மம் துர்வாசனையோடு. 

கரையாத திசுக்களின் வேர்களில் 
கண்ணீரை பாச்சத்தொடங்கினேன்......
உவர்ப்பின்  பிசுபிசுப்பில் கருகத்தொடங்கியது
திசுக்கள் ஒவ்வொன்றாக ....

அக்கணமே 
சேமிக்கதொடங்கினேன் கண்ணீரை _இனி 
எங்கெல்லாம் ரணங்களோ 
அங்கெல்லாம் வருவேன் சுமந்து.

Monday 24 September 2012

அறிவிக்கப்படும் சுயரூபம் ......................


தொலைந்துபோதல் 
எப்போதும்  எங்கேயும் 
இலகுவான ஒன்றல்ல,

தொலைவதற்கு முன்னான கணங்கள் 
தயார்ப்படுத்தலின் தளம்பல்களை 
வெளிவிடும் ஒரு நீர்வட்டம் போல,

ஒவ்வொன்றாக விலக்கிய பின்னும் 
ஒன்றாவது விலகாமல் நிலைத்திருக்கும் _அது 
குற்றஉணர்ச்சியாகவும் இருக்கலாம்.

இருளின் கனதியொன்றை ஊடறுக்கும் 
தெருநாயின் ஊளையைப்போலவும்
வயல்வெளிகளில் எதிரொலிக்கும் 
ஆட்காட்டிகளின்  அவலசத்தமாகவும்
உன் மூச்சு சத்தமே உனக்கு கேட்கலாம்.

தடயங்களை அழிக்க தொடங்குதல் 
தடயமாகிவிடும் சாத்தியத்தை 
விழிகள் அல்லது  மௌனம் 
சொல்லிவிடும் எல்லோருக்கும்.

அதற்கு பின்னான 
உனது கணங்களை அறிவதற்கான 
முயற்சியாகவும் இருக்கலாம்.
அப்படியாக  மட்டும்  இருந்துவிட்டால்,

அதற்கான 
முழுப்பொறுப்பையும் சுமக்க வேண்டிய
பரிதாபத்துக்குரியவர்கள் நாங்களே.


Tuesday 18 September 2012

யதார்த்த யாத்திரிகன்


ஏகாந்த பொழுதொன்றில் 
அலையத்தொடங்கிய நினைவுகள் 
பரிணாமத்தின் முடிவில் 
ஏதிலியாய் உணர்ந்தன

ஆதியின் போர்வைகளுள் 
தனக்கான சிதையொன்றை  உருவாக்கி 
காத்திருக்கதொடங்கியது நாளைக்காக.......

அந்த கணங்களில் 
அவற்றின் பிளவுகளூடாக 
வழிந்துகொண்டிருந்தது ஆற்றாமையின் நிழல் 
உருவமற்ற அவற்றின் கனதிகளால் 
மிக மிக ஆழத்தில் அமிழ்த்தப்பட்டது  
வாழ்வுக்கான அர்த்தம்.

ரகசிய பெருமூச்சின் ஒலிகளால் 
ஊழிக்கால அழிவுகளை 
உள்ளெங்கும் நிகழ்த்திவிட்டு 
இறுகிப்போனது வைரமாய் உள்ளேயே ,

இப்போதெல்லாம் .......
சரித்திர புன்னகைகளை வழியவிடும் 
உதடுகளின் ஓரங்களில் 
சலனமில்லாமல் நிகழ்ந்துவிடுகிறது
அழகிய மரணமொன்று.

Friday 14 September 2012

தடம் மாறும் தமிழ்தேசியகூட்டமைப்பும், கிழக்கு மாகான சபையும்.

                                                               இறையாண்மையை இழந்து  நிற்கும் தமிழ் இனத்தின்  பூர்விக தேசமும், வரலாற்று ரீதியாகவும்,பூகோளரீதியாகவும் தலைநகராக நிர்ணயிக்கப்பட்ட மாவட்டத்தினை உள்ளடக்கியதுமான கிழக்கு மாகான சபையின் தேர்தல், அரச இயந்திரத்தின் உச்சக்கட்ட வலுவை பயன்படுத்தி,தமக்கு சாதகமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.சிறுபான்மை தமிழ் முஸ்லிம்  மக்கள் அதிகமாக வசிக்கும் கிழக்கு மாகான சபையில்,பெரும்பான்மை அரசானது வெற்றிபெற்றிருப்பதும் ,அதிகூடிய விருப்பு விருப்பு வாக்கினை பெற்று முன்னாள் முதலமைச்சர் மட்டும் அவரது கட்சி சார்பில் தெரிவாகி இருப்பதும்,நடந்து முடிந்த தேர்தல் நியாயமாக நடந்துள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இருக்க,இந்த பத்தி நடந்து முடிந்த தேர்தல் பற்றிய தேடலுக்காக அல்ல. தேர்தலில் போட்டியிட்டு பதினொரு ஆசனங்களை பெற்று, இரண்டாவது  நிலையிலும்,ஓரளவு ஆட்சியினை அமைக்க கூடிய சாத்தியங்களை கொண்டிருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கு பின்னான நிலைகள் குறித்த ஒரு கருத்துப்பகிர்வுக்காகவே.
                                                இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதற்காக உருவாக்கப்பட்டது என்பதனை ஆராய்தல் அரைத்த மாவையே அரைக்கும் ஒரு செயலாகும் என்பதால்,நேரடியாக கிழக்கு மாகாண சபைதேர்தலின் பின்னான நிலைக்கு வருவோம்.
                                                 தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட பின்,மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் அறிக்கைகைகளை விடுத்தார். எந்த ஒரு நிலையிலும் கிழக்கின் ஆட்சி பொறுப்பு தமக்கே என்றும்,அரசின் எந்தவொரு மிரட்டலுக்கும் அல்லது சலுகைகாகவும் அதை விட்டுக்கொடுக்க போவதில்லை என்றும் முழங்கினார்.எந்த ஒரு அதிகாரங்களும் இல்லாத,ஆளுனரால் கட்டுப்படுத்தகூடிய ஒரு பொம்மை முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடுவதாக தோன்றினாலும், கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் இருப்பினை உறுதிப்படுத்தவும்,தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் ஒரு தீர்மானமான தகவலை வெளியுலகத்துக்கு சொல்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாக  இந்த வெற்றியினை,முதலமைச்சர் பதவியினை கைக்கொள்ள முயல்வதாக ஒரு அர்த்தத்தினை கற்பிதம் செய்யலாம்.இருந்தாலும்,பின்னர் ஆட்சி அமைக்க தேவையான 19 ஆசனங்கள் என்ற இலக்கினை அடைவது பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேசவல்ல பல உறுப்பினர்கள் கூறிய  கருத்துக்கள் மீளவும் அவர்களின் அப்பட்டமான அடிபணிவு அரசியலை வெளிப்படுத்தி நின்றது.
                                                எந்த ஒரு பேரம் பேசுதலும் இல்லாமல்,எடுத்த எடுப்பிலேயே ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான கோரிக்கையை ஆளுநரிடம் வைக்கபோவதாக அறிவித்தனர்.(இந்த இடத்தில் முல்லிம் காங்கிரஸ் பற்றி பின்னர் பார்ப்போம்).அரசுக்கு எதிராக,கண்மூடித்தனமான அரவணைப்பின் மூலம் ஆட்சியினை பெற்றுக்கொள்ள முன் வந்தனரே தவிர அதன் விளைவுகள் பற்றி எதுமே யோசிக்கவில்லை.கிழக்கில் தமது பலவீனத்தை உணர்ந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியும் ஒன்றும் பேசாமல் தம் மென்மையான போக்கினை உணர்த்திவிட்டு அமைதியாகிவிட்டது.பழுத்த அரசியல் சானக்கியவாதியான ரணில் கிழக்குக்கான வியூகங்களை பெரும்பான்மை இனத்துக்கு சாதகாக்கி கொண்டு  தங்களின் இருப்புக்கு பங்கம் வராத வகையில் நகர்த்துவதில் என்றும் பின் நிற்க போவதில்லை.உதாரணமாக யாழில் சம்மந்தன் ரணில் இணைந்து நடத்திய மேதின நிகழ்வுகளை குறிப்பிடலாம்.ஆணியாய்  அறைந்த அந்த நிகழ்வின் வலிகள் இன்னும் மக்கள் மனதில் இருந்து காயவில்லை உணர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களோடு கை கோர்க்க முன் வந்திருப்பது கூட்டமைப்பின் அதிகார மோகத்தைத்தான் உணர்த்துகிறது. அடுத்தசில நடவெடிக்கைகள் மூலம் அதனை உறுதிப்படுத்தி நின்றனர்.இந்த சூழ்நிலையினை நன்கு உள்வாங்கி தங்களின் பங்களிப்பை சரியன  விதத்தில் பயன்படுத்த தொடங்கினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள்.அவர்களை பொறுத்தவரை தங்களின் இருப்பும்  அரசியல் பெறுமதியும் முக்கியமேதவிர அப்பாவி தமிழ் முஸ்லிம் அடிப்படை அபிலாசைகள் பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லை.எங்கே தமக்கான சலுகைகளும்,அதிகாரங்களும் உடனடியாக கிடைக்குமோ அங்கே தாவிவிடுவதில் மட்டும் குறியாய் இருக்கின்றனர்.இந்த நிலை பெரும் தலைவர் அஷ்ரப்பின் மறைவின் பின் மேலோங்கி நிற்கிறது.
                                                 மதில் மேல் பூனையாக இருந்த மு.கவை தம் பக்கம் இழுப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பத்தில் எலும்புத்துண்டு களைத்தான் வீசியது.ஆனாலும் மு.கவின் மனதில் ஆரம்பம் முதலே அரசுடன் இணையும் ஒரு நெகிழ்வு தன்மை காணப்படட்டு  வந்திருந்தது. அரச பங்காளிக்கட்சியான தாம்,அரசின் மத விரோத காரணங்களால் தேர்தலில் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக அரசில் இருந்து விலத்தி நின்று தேர்தலை முகம் கொடுத்து,அப்பாவி முஸ்லிம்களின் வாக்குகளை ஏப்பம் விட்டுவிட்டு மகிந்தரின் அடுப்படியில் படுப்பதே நோக்கமாக  இருந்தது.இவற்றை விடுத்து நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகளுக்கு வருவோம்.எலும்புகளுக்கு அசையாத மு.க வுக்கு பாரிய விட்டுக்கொடுப்புடன் இணைய விருப்பம் தெரிவித்தனர்.அதாவது முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் பங்கிடுவதாகவும்,முதல் முறையில் முஸ்லீம் காங்கிரஸ்க்கு வழங்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
                                                  ஆட்சி பொறுப்புக்காக அடிபணிவு அரசியலின் ஆழத்துக்கு இறங்கிய கூட்டமைப்பினர்,தமக்கு வாக்களித்த மக்களின் அபிலாசை பற்றிய எந்த கருதுகோளும் இல்லாமல், நிபந்தனைகளும் இல்லாமல் ஆட்சிக்கதிரைக்காக  இணைவதில்தான்  முன் நின்றனர்.ஆட்சிக்கான தகுதியை தக்க வைப்பதில் முன் நின்றவர்கள் இனத்துக்கான தேவையை மறந்து போனார்கள்.எதற்காக தமிழ் மக்கள்  ஒன்றிணைந்து  வாக்களித்து தங்களின்  பிரதிநிதியாய தமிழ் தேசிய கூட்டமைபை முன் நிறுத்தினார்கள் என்பதனை இலகுவாக மறந்து விட்டனர். எந்த ஒரு அதிகாரங்களும் இல்லாத இந்த சபையினை தக்கவைப்பதன் மூலம் எந்தனை சாதிக்க போகிறார்கள் என்று அறிக்கை கூட விடவில்லை.இனி கேட்டால் சிலநேரம், உங்களுக்கு எதுக்கு சொல்லணும் ?என ஊடகங்களையும் எல்லா விடயங்களையும் வெளிப்படையாக சொல்லமுடியாது என கூட்டங்களிலும் சொல்லி தங்களில் இராயதந்திரம் என்றும் இனி அரசால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அப்பாவி தமிழ் மக்களின் தலைகளில் குட்டுவார்கள்.
                                                         முஸ்லிம்  காங்கரஸ் ஐக்கிய சுகந்திர முன்னணி இணைவு ஓரளவு உறுதிப்படுத்தப்பட நிலையில்,கூட்டமைப்பின்   பேசவல்ல உறுப்பினரும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான திரு .சுமந்திரன்,  மகிந்த அரசு கோரிக்கை விடுத்தால் பொது வேலைத்திட்டத்தினூடக  இணைவது குறித்து பரிசீலிக்கலாம் என அறிவித்தார்.
                                                          எந்த ஒரு அரசு தமிழர்களை முஸ்லிம்களை இலங்கையில் இருந்து அகற்றி விடுவதாக கங்கணம் கட்டி செயல்படுகிறதோ,ஒரு பெரும் இன அழிப்பினை நிகழ்த்தி,ஆயிரமாயிரம் அப்பாவிகளின்,குழந்தைகளின்,முதியவர்களின் உயிரினை பொருட்படுத்தாமல் யுத்தத்தை நடத்தி தன்  இறுமாப்பை காட்டியதோ,எத்தனை ஆயிரம் இளம் பிராயத்தினரை சிறையில் எந்த ஒரு தகவல்களும் இல்லாமல் வைத்திருக்கிறதோ,கொலைகளை சிறையில் கூட நடத்தி தன்  இன வெறுப்பை உமிழும் அரசை,பாலியல் கொடுமைகளை இன்றுவரை எங்களின் சகோதரிகள் மீது பிரயோகித்து,அவர்களை கொலை செய்துவிடும் அரசை, ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து ஆட்சி நடத்த துணிந்துள்ளர்கள் என்றால்,
                                                                நில அபரிப்புகள் குடியேற்றங்களை தொடர்ந்து நடத்தும்,அதிகாரபகிர்வுக்கான திட்டங்கள் எதையும் உருவாக்காமல், இன்னும் புதிதாக தமிழர் தாயகத்தில் இராணுவ மையங்களை உருவாகும்,தொழில் சார் கட்டுப்பாடுகளை விதித்து,இன்னும் இராணுவ ஆட்சியில் வடக்கு கிழக்கை மட்டுமல்ல  முழு இலங்கையையும்  வைத்திருக்கும் ஒரு பாசிச அரசை,பொது வேலைத்திட்டம் ஒன்றினூடாக இணைந்து ஆட்சி நடத்த துணிந்துள்ளார்கள் என்றால்,
                                                           இனத்துவேச கட்சிகளை இணைத்து,சொந்த சகோதரங்களை கொன்றொழித்த இன்னும் கொன்றொழித்துவரும் ஆயுத ககுழுக்களை அரவணைத்து ஆட்சி செலுத்தும் ஒரு அரசை,இணைத்து ஆட்சி நடத்த துணிந்துள்ளார்கள் என்றால்,
                                                            சர்வகட்சி குழு உற்பட அரசால் உருவாக்கப்படும் அனைத்து அமைப்பு சார் குழுக்களையும் அரசின் இனவாத நடவெடிக்கைகளை காட்டி புறக்கணித்த கூட்டமைப்பினர் இன்று கிழக்கின் அதிகாரங்களுக்காக அரசுடன் இணைந்து நிற்க முன் வருகின்றனர் என்றால்,
                                                         பிள்ளையானை முதலமைச்சராக முனையும் அரசினை ஏற்று கருணா பிரதித்தலைவராக இருக்கும் கட்சியினை அரவணைத்து ஆட்சியினை நடத்த முனைகிறார்கள் என்றால்,
                                                          பெரும் இனப்படுகொலையை நடத்தி முடிந்த அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் முகமாக,மனிதஉரிமைகள் அமைப்புக்களால் நடத்தப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அரசுக்கு சார்பாக வாக்களிக்குமாறு மத்திய முஸ்லிம் சமூக நாடுகளை கோரிய மு.க வுடன் இணைந்து ஆட்சி செய்ய முன் வருகின்றனர் என்றால்,
                                                           ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் தேர்தல்களை சந்திக்க மறுத்து,இன்று இனத்தினை அழித்தொழித்த அரசுடன் இணைந்து நிற்பது என்றால்,
                                                           
                                                                    எங்கே போகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு?எதற்காக உருவாக்கப்பட்டதோ,அந்த அச்சில் இருந்து எந்தளவு தூரம் விலகி வந்துள்ளது இன்று.பதவிக்காகவும்,தன் தொழில் மற்றும் சிறப்பு உரிமைக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளதா ?ஒரு தனி மனித சுயநலத்துக்காக மக்களின் வாக்குகளை பயன்படுத்தும் அதிகாரங்களை யார் தந்தது இவர்களிடம்.இந்த இடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிவில் சமூகத்துக்குமான கலந்துரையாடல்கள் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவெடிக்களைகளில் நம்பிக்கை இழந்ததன் விளைவே இந்த சிவில் சமூகம் எழுந்திருந்தமைக்கான காரணம் ஆகும்.அன்றைய தினத்திலும்,சுயநிர்ணய உரிமைகள் பற்றிய கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களே வழங்கப்பட்டது கூட்டமைப்பின் தலைமையால்.
                                                              மக்கள் முன்னால்  நிற்கும் போது  மட்டும் தமிழ் தேசியம்,சுயநிர்ணய உரிமை என்று முழங்கும் கூட்டமைப்பு திரைமறைவில் என்ன செய்கிறது.தங்களின் சுய நல அரசியல் இருப்புக்காக தமிழர்களின் இறைமையை விலை பேசுகிறதா?அப்படியாயின் இவர்களுக்கும் டக்ளஸ், கருணா பிள்ளையான் போன்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்.சுமந்திரனின் இந்த கூற்றுக்கு இன்றுவரை எந்த ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரின் மறுப்பும் தெரிவிக்கப்படாமையானது,அவர்களும் சுமந்திரனின் இந்த கருத்தை வழி மொழிகிறார்களா அல்லது எதுவும் கதைக்கமுடியாத நிலையில் இருக்கிறார்களா ?
                                                           இந்த நிலையானது தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகள் சிதறடிக்கப்பட்டு,அடையாளமிழந்த ஒரு இனமாக மாறிவிடக்கூடும்.மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கவேண்டுமே தவிர,மக்களின் உணர்வுகளை புரியாத சுமந்திரன் போன்றவர்களின்  ஊதுகுழலாக இருக்க கூடாது.இனம் சார்ந்த சரியான முடிவுகளை எடுக்க தவறும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை முழுவதையும் இழக்கவேண்டி வரலாம்.
                                                              அடுத்துவரும் சில தினங்களில் முஸ்லிம் காங்கிரஸின் நாடகத்தையும்,மகிந்த சகோதரர்களின் பண,பயமுறுத்தல் பலத்தினையும் தெளிவாக அறியலாம்.இந்த இடத்தில் தமிழ் தேசிய கூடமைப்பு எடுக்கும் முடிவானது,தமிழ் மக்களின் சுயநிர்ண உரிமையையும்,மகிந்த அரசின் இனவிரோத போக்கினையும் வெளிஉலகுக்கு தெரியப்படுத்துவதாக அமையவேண்டும்.தவறும் பட்சத்தில் வரலாற்று தவறொன்றினை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவிதி அடுத்த தேர்தல்களில் தீர்மானிக்கப்படும்.
       
படங்கள் :நன்றி இணையம்.                                                

Tuesday 11 September 2012

அதுபோதும் அதுபோதும்

அணிசெய்தன அணிகலன்கள் 
அணியாதவைகள் கோணிக்கிடந்தன_உனக்கு 
பணிசெய்திட பருவக்காற்றுக்களும்  
பாதையெங்கும்  தவமிருந்தன

கூந்தலில் குடியேறி
குலவையிட்டது மல்லிப்பூ _அங்கே 
செந்தணலில் விழுந்ததாய்
நொந்துபோனது ரோஜாபூ

வீரம்பேசி எழுந்த சூரியன்  
வீழும்வரை வெம்மை கொண்டது _தன்
ஓர்மம் குலைந்து ஒளியடக்கி  
ஓடி ஒளிந்தது மருகி.

மோகினி நீ மோகித்தவன் நான் 
மோகித்தல் மோகத்தால் அல்ல 
வாகினியுன் தேகவாகத்தால் அல்ல 
வான்மழையால் சுகமடைவது வானல்ல!!

நெருக்கங்கள் நெகிழ்வுகள் 
நமக்குள் வேண்டாம் ஏந்திழையே,
தெருக்கூத்தாகிட இதுவொன்றும்
தற்கால தாராளமயமாக்கலில்லை.

நெஞ்சில் இருத்தி ஒரு நேசம்
நெஞ்சுருக்கும் ஒருபார்வை 
அஞ்சுகமே, அதுபோதும் _என்காதல் 
அந்திமம் இன்றிநிலைக்க அதுபோதும் 

Monday 10 September 2012

விடாத அல்லது விடக்கூடாத ......................


விலக்கப்பட அந்த தெருவின் ஓரத்தில் 
கழிப்புகளும் பழைய துணிகளும்
சருகாய் சிலபூவின் வடுக்களும் 
சிதைந்தும் புதைந்தும் கிடந்தன
ஏதேதோ சடங்குகளின் அடையாளமாய் ...........

தெருவின் மையத்தில், 
நேர்த்தியாக ஆழமாக பதிந்திருந்தது  
யாரோ ஒரு மனிதனின் காலடி.

யாராயிருக்கும் ........................
விலக்கப்பட இந்த தெருவினூடாக
எதற்காக  பயணித்திருப்பான்?
எருக்கலையும் நாயுருவியும் மண்டிக்கிடக்கும் 
தெருமுடிவில் என்ன முடிவெடுத்திருப்பான் ?

கால்நடைகள் மேயாத,
காலடிகள் படாத அந்த சூனியவெளியை,
சூழ்ந்திருக்கும் வெம்மையை,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
கடந்துபோகும் பறவைகளை, 
அனுபவித்திருப்பானா_அன்றில் 
சடுதியான தன் முடிவை எட்டியிருப்பானா?

நிதானமான அவன் காலடி
மதுவேதும் அருந்தியிருக்காததையும் 
உறுதியான மனதினையும் உணர்த்தியது.
என்ன செய்துகொண்டிருப்பான் ............

இருள் மெல்லியதாய் இறங்கிக்கொண்டிருந்தது.
மருண்டெழுந்த பூச்சிகளின் கூச்சல் 
மனதை நெருடியது ...........
அதிர்ந்த மனதுடன்,
திரும்பி நடக்கத்தொடங்கினேன் 
என் காலடிகளை நானே அழித்துக்கொண்டு.

Wednesday 5 September 2012

இப்படியாக தானிருக்கிறோம் நீங்களும்,நானும்......


ஏதோவொன்று வலிந்து   
திணிந்துகொண்ட கணத்தில், 
விலத்தத்தொடங்கின ஒவ்வொன்றும்,
காரணம் தெரிவிக்காமலேயே ..............

விலத்தியவைகளின் எச்சங்கள் மட்டும் 
விலத்திப்போக முயலாமல் 
கூச்சலிட்டு சண்டையிடத்தொடங்கின
காரணங்களை முன்வைத்து.

மறந்தும்அவை,
பேசிக்கொள்ளவேயில்லை எதோவொன்றிடம்
அதன் வருகைக்கான காரணங்கள் பற்றி.
மிக மிக கவனமாக இருந்தன
அதை தனித்திருக்க வைப்பதில். 

மிக எளிய,கேவலமான 
உத்தியொன்றை பயன்படுத்தி 
குழப்பிக்கொண்டிருந்தன.

விபரீதமான அவற்றின் போக்குகளால் 
குற்றவுணர்வுடன் குலைந்துபோய் 
தன்னோடு பேசத்தொடங்கிய அது,
ஈற்றில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு   
தற்கொலை ஒன்றுக்கான 
ஆயத்தங்களை செய்ய தொடங்கியது நிதானமாக,

சண்டையை நிறுத்தி 
வேடிக்கை பார்க்க தொடங்கின 
விலத்தியவைகளின் எச்சங்கள்.
(தலைப்பை பார்க்கவும் )



Sunday 2 September 2012

கல்லறை இதயம்......

ஆத்மபலத்தின் அடிவாரத்தை
இலக்கு வைத்து அறையப்பட்டது
மிக மிக பலவீனமான உளிகள்..................

நெளிந்தும் வளைந்தும் 
ஊடுருவிய உளிகள் 
வேர்களிடையிருந்த வெப்பத்தால் அஞ்சி 
கருக்கத்தொடங்கின கிளைகளை 
கொஞ்சம் கொஞ்சமாக,

ஊதிப்பெருத்த நினைவுகள் 
உன்மத்தங்கொண்டலைந்து 
காலக்கிழவியின் அரவணைப்பில் 
அழத்தொடங்கியது தன்னையிழந்து,

சந்திரசூரிய வியாபிப்புக்களை இழந்துபோய் 
மின்மினிப்பூச்சிகளின் இறக்கைகளில் 
இறங்கிக்கொண்டது ஆதிவெம்மை 
அடங்கிப்போய் ............................

கண்களால் வளர்த்த கனவுகளுக்கு 
கண்ணீரால் தூக்கழித்து 
துயவளாக்கிக்கொண்டவளே,

உச்சரிக்கப்பட்ட கணத்திலேயே 
தற்கொலை செய்துகொள்ளும் 
தீமூண்ட வார்த்தைகள் _உனை
தீண்டிவிடக்கூடாது என்பதற்காய் 
தோண்டிக்கொண்டிருக்கிறேன் 
இதயத்திலேயே புதைத்துவிட .................