Monday 26 November 2012

முத்தமிழ் காத்த மூலவர்கள்

 செங்கொடி சுமந்த செல்வங்கள் _இவர்கள்
சங்கத்தமிழ் காத்த செம்மல்கள்
வெங்களம் புகுந்த வேங்கைகள் _இவர்கள்
வீரத்தமிழின் மங்கள கீதங்கள்

தேகம் கரைத்த தெய்வங்கள் _எங்கள்
தேசம் சுமந்த விழுதுகள்
யாகம் நடத்திய அக்கினிபிஞ்சுகள் _எங்கும்
யாதுமாகி நிறைந்த தென்றல்கள்

முத்தமிழ்  காத்த  மூலவர்கள்_எம்
மூச்சாகி நிலைத்த காவலர்கள் 
நித்திலம் எங்கும்ஒளிரும் தாரகைகள்_எம் 
நினைவுகளில் வாழும் ஓவியங்கள். 

மலர்சொரிந்து மணியோலித்து விழிகலங்கி
முகம்துடைத்து அகல் ஏற்றுவோம்
தளர்வகற்றி தடையுடைக்குமொரு வழியெடுக்க
தலைநிமிர்த்தியொரு சபதமெடுப்போம் !!!

Thursday 22 November 2012

பெருந்தீ சுமந்தோரே, வாருங்கள் மலர்கள் சுமந்து.....

திசைகள் மூடி இருள் கவிழும் 
இந்த பனிப்பொழுதின் 
ஈரமெல்லாம் உலர்ந்து 
மோதிக்கடக்கிறது காற்று,

இனி 
பெரு வீதிகளிலும் ஓரங்களிலும்
படரும் பின்உருகி கசியும் பனித்திரள்.
இந்த மனங்களைப்போல,

இலைகளை உதிர்த்திவிட்டு 
வேர்களில் உயிர்ப்பை 
ஒளித்துக்கொண்ட மரங்களாய்
உள்ளெரியும் பெருந்தீயை மறைத்து 
பொறுத்திருக்கிறோம் இந்த கார்த்திகையிலும்,

கொழுந்துவிட்டெரியும் 
பெருந்தீயில் கொதித்து  
உருகி வடிந்து  கண்ணீராய் வெளிவருகிறது 
கோபங்களும் ஆற்றாமைகளும்,

நாளை,
சூரியதேவனின் தீண்டல்களால் 
துளிர்க்கும்மரங்கள் _ சட்டென 
வெடித்துக்கிளம்பி முகிழ்விடும்.
அந்த வசந்தகாலத்தில் 
பெரும் இடிகொண்டு இறங்கும் ஊழித்தீ.

பிரளய அதிர்வுகளை பிறப்பித்து
பொழியத்தொடங்கும் ஊழித்தீயில்
இரத்தகறைகளும் உக்காத உடல்களும்
எரிந்தழிந்து போக,
சுடுகாடாகிய என்தேசம்
குளிர்ந்து மீளக்கருக்கொள்ளும்.

இன்று
கொடிய ஒரு இலையுதிர்காலத்தை
சுமத்திவிட்டது காலம்.

இந்த
இழிகாலத்தை
கடந்து போவோம் பெருந்தீயுடன்.

பெருந்தீ சுமந்தோரே,
வாருங்கள் மலர்கள் சுமந்து_இது
தேகத்தை கரைத்த தெய்வங்கள்
கண்விழிக்கும் காலம்,
ஒளியேற்றி மலர்தூவி_நாம்
காலவெளி கடக்கும் கதைகளை சொல்லுவோம்.

Monday 19 November 2012

சகிப்புக்கு பின்னான வன்மங்கள்.......!!!


திணிக்கப்பட்ட  பாதையின் ஓரத்தில் 
படிந்திருக்கும் புழுதிகளின் ஓலங்கள் 
தற்கொலை செய்துகொண்ட ஒருவனின் 
இறுதி மூச்சுக்களாய் தீண்டும் 
ஒவ்வொருவரையும், 

அநாதரவான அந்த ஒலிகளின் 
ஆழத்தில் வியாபித்துக்கிடக்கும் 
நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தமொன்றின்
உறையாத கறைநிழலில்,
ஒடுங்கியடங்கிக்கிடக்கும் அவனது கனவுகள்
முகத்திலறைந்து போகும்.

வினோத திரையொன்றால் 
முகங்களை மறைத்துக்கொண்டு
ஒருவரை ஒருவர் விலத்திக்கொண்டிருப்போம்
எந்த சங்கடமுமில்லாமல்,

ஏற்கனவே 
திணிக்கப்பட்ட பாதையில்
விலத்திக்கொண்ட சுயவன்மங்கள்
சிரித்துக்கொள்ளும் சத்தமில்லாமல்........!!!!








Monday 12 November 2012

இவன்தான் இவன்தான் தமிழன்


 தொழுவான் தமிழன்
தொடர் தொல்லை கொடுத்தால் 
அழுவான்  அடங்கியேயவன் 
விழுவான் காலிலேன்றே யார்ப்பரித்த தன்று பகை!

ஆண்ட இனம், 
அரசுகொடி சுற்றமென்று வாழ்ந்த இனம்,
கண்டமெல்லாம் கடந்து தமிழ் 
கொண்டுசென்று நிலைத்த இனம், 
பண்பாடிப்பாங்காய் பளுவின்றியொரு
பகையின்றி வாழ நினைத்த இனம்,

இனங்கள் சமமென்று 
இதயத்தால் உரைத்தனர் எம்மவர். 
பிணங்கள்தான் விழுமென்றனர் சமமென்றால்,
பிரதானிதாமென்றே தம்மொழியென்றே 
இணக்கமின்றியே இயற்றினர் பல்கதை!!

அடங்குகையில் அடித்தனர் 
ஒதுங்குகையில் ஓங்கி உதைத்தனர் 
பதுங்குகையில் பாடையே கட்டினர்_தடுமாறி 
தாங்குகையில் தாய்மண்ணையே சிதைத்தனர்.

ஓடியவன் திரும்பினான் 
ஒதுங்கியவன் நிமிர்ந்தான் 
பதுங்கியவன் எழுந்தான் 
தாங்கியவன் துடித்தான்.

விடுதலையொன்றே மூச்சாய்
வில்லிருந்து விடுபட்ட சரமாய் 
கொடுபடைமுடிக்க புறப்பட்டனர் 
கொள்கையோடு நம்மவர்.

அணிகள் பல ஆங்கு முகாம்கள் சில 
பணிகள் ஒன்றே அதன் வழிகள் ஒன்றே 
இனிவிடுதலையெமக்கே  அகமகிழ்ந்தது தமிழ்_அந்தோ 
பனிப்போர் விளைந்தது பல்லுயிர் பிரிந்தது.

அன்றேமகிழ்ந்த பகை _இன்று 
கைகோர்த்து நின்றே நடந்தது,
வென்றிடவென்றேயொரு 
வரைமுறையின்றி கொன்றழித்து எக்களித்தது.
என்றுமில்லா பேரழிவு 
எந்தையினத்தின் சீரழிவு._இன்றும் 

ஒன்றுபடாத்தமிழன் இவனுக்கேதுக்கடா மானம் 
இரண்டகமிவன் குணம்  இவனுக்கேதடா வெட்கம் 
கூனிகுழைந்து மடியேந்தும் இவனுக்கேதடா ரோசம்.
அடிதொழுது உயிர்வாழும் இவனுக்கேதடா வீரம்.


Friday 2 November 2012

மைகளாலும் புணரப்படுபவள்........... !!

விழியோரங்களில் மலரும் 
துளிப்பூக்களின் வாசங்களை 
நுகர்ந்துமகிழ்ந்த யந்தொன்றின்,

தேடிக்களைத்த கேவலச்சிறகுகளை,
மொய்த்துரீங்காரமிட்ட நோக்கல்களை,
கணநேர ஈனப்பிதற்றல்களை,
பொய்நாக்குகளின் வீணிகளை,
விலக்கி சீராக்கமுடிகிறது   
படுக்கையொன்றை இலகுவாக அவளால்.

இது 
திணிக்கப்பட்டதா என்றாலும் 
தவிர்க்கமுடியாதா என்றாலும்
தெரியாதென்பதே பதிலாகுகிறது.

வகையறியும் பார்வைகளை 
தகையுரியும் நாவுரைகளை  
முகைகருக்கும் வசவுகளை  
பகைபெருக்குமோர் பல்லவிகளை 
நகைத்தேவிலக்கி  யுள்யெரிதலவள் வழக்காயிற்று.

தினவெடுத்த மிருகங்களின்
நாவுகளில் படிந்திருக்கும் 
அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள்,
தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில்
இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்

இவள் 
உதடுகளில் வலைபின்னிய சிலந்தியின் 
உயிரிருப்பினால் இன்னும் 
உயிரோடிருக்கிறது சில மனிதர்களின் சந்ததி.

நாளையிவளின்,
வரலாறொன்றின் கடைசி எழுத்துக்களின்
வடிவமும் சிதைக்கப்பட்டிருக்கலாம், 
எழுதுபவரின் ஆத்மதிருப்தியின் பொருட்டு.