Monday, 28 January 2013

விடுதலை தீ சுமந்தவனே ..........

வாசல்களில் 
மரணத்தின் வரவுகளை 
கணக்கு வைத்திருந்த கணப்பொழுதுகள் அவை .

முன்பெல்லாம் உறவுகள்கூடி
உடலம் சுமந்து 
மயானம் செல்வோம்,
ஊரே மயானமாகிப்போக
இறுதிக்கடன் மட்டுமல்ல 
இறுதியாய் கண்ணீர்கூட விடாமல் 
உடலங்களை  கடந்த தினங்கள் அவை.

எங்காவது எமக்காய் 
எம் குழந்தைகளுக்காய்
எம் உறவுகளுக்காய்
ஒரு குரலாவது ஒலிக்காதா என்று ஏங்கிக்கிடந்தோம். 
கரகரத்த குரலாவது ஒலிக்கும் என்று முனுங்கிக்கிடந்தோம்.

காற்றும் கடலும் வானும் 
எண்திசைகளும் எரிந்தன
எரிகுண்டுகளாலும் எறிகுண்டுகளாலும்,
உடலங்களை கண்ட 
நாய்களும் நரிகளும் இன்னபிற 
விலங்குகளும் அஞ்சியோடின,

அப்போதும் வலிகளோடு 
ஏங்கித்தான்கிடந்தோம்.
எதிலியாகி நடந்தோம்.

அறிந்தவன்  நீ எரிந்துபோனாய்.
தோழனே முத்துக்குமார் !!!!
நீ மூட்டியது தீயுமல்ல, 
உன்னையுமல்ல,
இனவிடுதலையின் பெருநெருப்பையும், 
துரோக அரசுகளின் கௌரவ முகத்தையும் தான்.

ஈரநெஞ்சத்தில் 
இணையற்றபெருவீரம் சுமந்த 
வீரத் தமிழ்மகனே_அன்று நீ 
மூட்டிய பெரும்தீயில் 
முகிழ்க்கின்றன ஆயிரம் ஆயிரம் சாதகப்பறவைகள்.
நாளையவை_ஈழ 
விடியலின் கீதம் இசைக்கும்.
அந்த பூபாள அதிர்வில் 
உன் பெயரே ஒலிக்கும்.

Monday, 21 January 2013

உயிர் தின்னிகள்


அனுமானங்களை சுமந்து 
பரவிக்கொண்டிருந்தது 
இருளடைந்த சொல்லொன்று. 

உப்புக்கரிக்கும் அதன் ஓரங்களில் 
உறங்கிக்கிடக்கும் விசும்பல்களை
ஆதங்க பெருமூச்சுக்களை
ஓரந்தள்ளி, 
வக்கிர நிழல்களை பூசினார்கள்.

பின், 
திசைகளை தின்று வியாபித்த
கரிய நிழலில் ஒளிந்துகொண்டு, 
அவர்களுக்கான போதனையை ஆரம்பித்தார்கள்.
அது நிர்வாணத்தை துகிலுரித்தது.

இருளடைந்த சொல்லின்
மறுபக்கம் பற்றிய கவலையேதுமின்றி
கொண்டாடத்தொடங்கினார்கள்
தங்களுக்குள்.

அவள்
காற்றில் நிறைந்த  
வக்கிரங்களின் வெப்பத்தால்
உருகத்தொடங்கினாள்
கொஞ்சம் கொஞ்சமாக .............!!

Tuesday, 8 January 2013

வாருங்கள் பொங்கலிடுவோம்............நீர் தேங்கி நீண்டு
கிடக்கிறது வயல்வெளி,
தீண்டுவாரில்லாத ஒற்றைப்பனையில்
தூக்கணாங்குருவிக்கூடுகள்
நிறைந்துபோய் கிடக்கின்றன,
சிதைந்த வயல்வரம்புகளில்
வெண்கொக்குகளும் காகங்களும் 
இறகுகோதி உலாத்துகின்றன,

கலப்பைகீறாத நிலமதில்
அல்லியும் நீர்முள்ளியும்
மண்டிக்கிடக்கிறது,
உடலங்களை உண்ட மதமதப்பில்.

நெல்லுத்தூத்தல்களும்
அறுவடைக்கால கூச்சல்களும் 
இல்லாத வெளிபார்த்து 
சலித்துக்கடக்கிறது  பருவக்காற்று.

நார்கடகங்களும் சாக்குகளும்
மக்கி மண்னேறிப்போகிறது 
வண்டில் சில்லுகளில் வலைபின்னி 
சிலந்தி கிடக்கிறது.

அசைமீட்கும் எருதுகளின் ஏரிகளில்
கரிக்குருவியின் எச்சங்கள் கோடுகளாய், 
விலைகென்று வளர்த்த கிடாயும் 
விழியுயர்த்தி மிரள்கிறது.  

காலநிலைப்படி
இது தைமாதம் தான்.
கதிர் அறுத்துப் புதுப்பொங்கலிடும்
புண்ணிய காலம் தான்.

முற்றம் முதல் 
உழுது விதைக்கும் நிலம்வரை 
சிலுவைகுறிகளாய் எச்சரிக்கை பலகைகள்.
எப்படி விதைப்பது?

உற்ற சொந்தங்களும்
பெற்ற மகன்களும் தடுப்புக்களில்,
யார் விதைப்பது?

விதைக்காத போது
எதைக்கொண்டு பொங்கலிடுவது ?

வாருங்கள்,
வித்துக்கள் சுமந்த மண்ணெடுத்து
தீ மூட்டுவோம்
பற்றியெழும் பெரும் தீயில்
இருப்பதைக்கொண்டு
படையல் செய்வோம் சூரிய தேவனுக்கு.

நாளைய விடியலில்,
சூரிய தேவனின் வருகையோடு
கருக்கொள்ளும்
வித்துக்கள் சுமந்த எங்கள் நிலம்.