Tuesday, 26 March 2013

என் சுயத்தின் வழியே...............

அவசரப்படும் மனிதர்கள் 
அடைக்கப்படும் முன்கதவுகள் 
அடங்கி கூடடையும் பறவைகள்
அமைதியாகிப்போகும் தெருக்கள் - என 
அந்திகள் அழைத்துவருவன 
அந்நியமானவொன்றாகவே போய்விடுகின்றன,

நழுவிச்செல்லும் கதிர்களும் 
மினுங்கத்தொடங்கும் நட்சத்திரங்களும் 
ஒடுங்கிப்போகும் ஓரிரு பூமரங்களும்
அந்தரத்தில் எழுந்தலையும் ஒளிப்புள்ளிகளும்
புதர்களின் அரவங்களும்- இந்த 
அந்திகளை கோரமாக்கிவிடுகின்றன.

இந்த,
அந்திகள் இருளை மட்டும்
சுமந்து வருவதில்லை
பகல் பற்றிய பெருமூச்ச்சுக்களையும்
பயம் நீங்காத சில  இரவுகளையும் கூட
அழைத்து வந்து விடுகின்றன,

அநாயாசமாய்
அந்திகளை அனுபவித்து வரவேற்கின்றன
அரவங்களும் ஆந்தைகளும்
புதிரான சில மனிதர்களும். 

என்னவோ தெரியவில்லை........... 
இன்னும்,
அந்திகள் வருவது 
அடுத்த விடியலுக்கு தான்- என்ற 
உணர்வுகள் ஏற்படவே இல்லை!!!

Tuesday, 19 March 2013

இனி விரைவில் விடியும்!!!

என் தேசப்பெருநிலமெங்கும்
குவிந்து கிடக்கும்
வெண் சாம்பல் மேடுகள்
புன்னகைக்கின்றன.......
தோழர்களே நன்றி.


காலநீட்சியின் கனவுகள் சுமந்த  வாழ்தலை
ஈழமீட்சிக்காய் உதிர்த்துவிட
துணிந்த வீரம் கண்டு,
உமிழ முடியாத
பெருவெப்பம் சுமந்து உறங்குமவர்கள்
விழிகள் பனிக்கின்றன............
உங்களுக்காக............

தொண்டைமான் நீரேரியும்
வழுக்கியாறும் -அழகிய
சப்ததீவுக்கூட்டங்களும்
தசாப்த உறக்கம் கலைத்து நோக்குகின்றன,
சோழமண்டல உறவுகளே
உங்களின் எழுச்சியை,

வல்லைமுள்ளி வெளிகளுக்கும்
பகைபணிந்த ஆனையிறவுக்கும்,
வலசைவரும் ஆயிரமாயிரம் பறவைகளிடம்
வாழ்த்துக்களை பகிர்கின்றனர்
கண்களால் எம்மவர்கள் -அவை
நாளையாவது உங்களிடம் வரும்
என்ற நம்பிக்கையில்.

கருக்கொண்ட மேகங்கள்
எழத்தொடங்கிவிட்டன-இனியவை
கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்றுகூடும்,
பெருமின்னல் வெட்டும்,
ஆழியை சுமந்துவந்து கொட்டும்
ஒரு பெரும் குளிர்காற்று.

எல்லாளனும்
பண்டாரவன்னியனும்
நந்திக்கடல் நாயகர்களும்
சுமந்த வெப்பம் இனி
மெல்ல மெல்ல குறையும்.
ஈழத்தின் பெரும் தீ பரவும்
உங்களின் வடிவில்,
விரைவில் எமக்கும் விடியும்!!!

Sunday, 17 March 2013

பகிரப்படாத அல்லது பகிரமுடியாத .............!!

யாரும் வசிக்காத அல்லது
வசிக்க விரும்பாத அந்தவீட்டின்
அமைதி கொடியது !
மிக மிக வலிமையானது !!

ஓட்டிடைகளில் எலிகளோ,
யன்னல் இடுக்குகளில் பல்லிகளோ,
இல்லாத அந்தவீட்டின் அமைதி
மயானத்தை நினைவூட்டிக்கொண்டிருந்தது.

கதவுகளில் சிலந்திவலைகளும்
சாவித்துவாரங்களில் மண்கூடுகளும்
கைபிடிகளில் கறல்களும்
சருகுகளுள் மறைந்து கிடந்த மிதியடியும்
சூழ்ந்திருந்த அமைதியை
கோரமாக்கிகொண்டிருந்தன.

கண்ணாடியில்
ஒட்டியிருந்த பொட்டும்
சீப்பில் சிக்கியிருந்த முடிகளும்
அடுப்பின் ஓரத்தில்,
காய்ந்துகிடந்த எண்ணைச்சட்டியும்
வெள்ளைகரித்துனியும்
விளக்கமுடியாத அந்தரத்தை விதைத்தது.
மனதுள் ஊசலாடியது மங்கலாக
ஒரு உருவம்.

அழகியசாமிப்படங்கள்
அபூர்வ சங்கு,மக்கிபோன ஊதுபத்தி
அலங்கரிக்கப்பட்ட அறை
மிக மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது!!

ஒன்றுமட்டும்
இறுதிவரை புரியவேயில்லை,
எதற்காக சாமிஅறையை தேர்ந்தெடுத்தாள்,
தற்கொலைக்கு !!!

யன்னலால் தெரிந்த மாமரத்தின்
உச்சாணிக்கிளையில்
கூச்சலிட்டுக்கொண்டிருந்தது
அணிலொன்று தனியாக

Thursday, 14 March 2013

மௌனத்தின் ஒலிக்குறிப்பு.......

கடந்துவிட முடிந்தாலும் 
தொடர்கின்றன -ஒரு 
பகல் நிலவைப்போல
நேசிப்புகளும் காயங்களும்,

சப்தங்களை இழந்த 
சங்குகளாய் வெதும்புகின்றன
இன்றைய பொழுதுகளில் - இந்த 
இதயத்தின் துடிப்புக்கள்..

உருவங்கள் கரைந்து மறைந்தும்
அழிந்திடாத 
நதிக்கரை படுக்கைகளாய்
உள்நிறைந்து போகிறது
நேசிப்புக்கள். 

நேசிப்பின் வர்ணங்கள்
நீர்த்துப்போகாமல் அலங்கரித்து
வியாபித்துப்படரும் கனவுகள்,
பின்னான பொழுதுகளில் 
நேசிப்பையே ஈமத்தாழியாக்கி 
அடங்கிக்கொள்கின்றன
நிதர்சனங்களின் வலிகளை சுமந்து
மௌனமாக,

இந்த 
மௌனங்கள் திரண்டொரு பெரும் 
ஒலிக்குறிப்பாய் எழும்
அது ஒருநாள்  
நேசிப்புக்கான  மரணத்தை  
முகங்களில் அறையும்.Tuesday, 5 March 2013

தொலைக்கப்பட்ட அன்பு...........

கசிந்துகொண்டிருக்கிறது
தொலைக்கப்பட்ட அன்பின் மீதான
கடைசி துளிகளும்.

முதல் சில
நாட்களைப்போலவே இல்லை
இந்த பிந்திய நாட்கள்,

அதீதமான அரவணைப்பை
வெறுத்தொதுக்கும்
மழலையொன்றின்
பக்குவமற்ற நாட்களாய்
கடந்துபோனது முந்தைய சில நாட்கள்.

எல்லை நோக்கி
வளர்ந்துகொண்டிருக்கும் மரணமொன்றை,
எல்லைகடந்து
வளர்ந்துகொண்டிருக்கும் வாழ்தலொன்றை,
உணர்த்தியழுதத்துகின்றன
இந்த நாட்கள்.

தொலைக்கப்பட்ட  அன்பு
அழிந்துபோய்விடுவதில்லை - அது
வேர்களில் அடங்கிக்கிடக்கிறது
பின் அதுவே
இலைநுனிகளில்
நீராய் திரண்டும் வருகிறது.

யாரவது ஒருவருடைய
கண்களை பார்க்கும் போதும்,
யாராவதொருவர் முகத்தினை தடவும் போதும்,
யாரவது ஒருவர்
கை அசைக்கும் போதும்.
தொலைக்கப்பட்ட அன்பு மிக கனதியாகிவிடும்.

அன்பின் மீதான கடைசி துளிகளும்
நாளையொன்றில்
வெளியேறிவிடக்கூடும்.

ஆதலால்,
இப்போதெல்லாம்
எழும் கேள்வி
கடைசி துளிகளும் வெளியேறிய வெற்றிடத்தை
எதைக்கொண்டு நிரப்புவது என்பதே ?