Monday 17 June 2013

நியமம்.....

ஆலாபனையொன்றின்
சிதைவுகளிலிருந்து  எழுகின்றது
சீரான முனகல் ஒலியொன்று
இன்றைய  பொழுதுகளில்,

கரிய இருளூடு
அந்தரித்தலையும் மெல்லிய
வெண்மையொன்றை போல,

நீண்ட அமைதிகளை
ஊடறுத்து ஒலித்தோயும்
தெருநாயொன்றின் ஊளையைப்போல,

வைகறையொன்றை நோக்கி
தவமிருக்கும் ஒரு
பறவையின் பசியைப்போல,

நிகழ்த்திப்போகிறது
உணர்த்தமுடியாத
எதோ ஒன்றை,

மதர்த்தெழும் அடுத்தடுத்த பொழுதுகளில்
எழும் அச்சங்களை
தொலைக்கும் அபயகரமொன்றின்
ஓங்கார ஒலியை,

தடுக்கமுடியாத
ஊனங்களை  கடக்கும்
யாதார்த்த கணங்களில்
தேவகணங்களின் ஆதரவுப்பார்வைகளை,

எதிர்பார்த்து கிடக்கிறது
ஒலி எழுப்பிய அந்த சிதைவுகள்.
இருந்தபோதும்....................

ஆலாபனைகளூடான
நீடிக்கும் அந்த ஒலிமட்டும்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
எல்லாவற்றையும் மீறி........


Tuesday 11 June 2013

இது கோழிகளின் கதை......... (உருவகம்)

        கோழிகள் கூட்டமாக வாழ்ந்த அந்த வளவுக்குள் தான் பூனையும் ஒருநாள் வந்து சேர்ந்தது. கொஞ்சம்  கொஞ்சமாக இடத்தை பிடித்து வசதியாக இருந்துகொண்டு அந்த வளவிலேயே கிடைத்த உணவுகளை உண்டு வளர்ந்தும் வந்தது. சும்மா கிடக்கிற இடம் தானே என்றும் மென்மையான வனப்பான தேகத்தைபார்த்தும், கவர்ச்சியான கண்களை ரசித்தும், அமைதியாக அரைகண்ணை மூடி  தியானம் செய்யும் அழகையும் பார்த்து கோழிகள், ரொம்பவே நல்லவர் இருக்கட்டும் எங்களுக்கும் இவரால் மோட்சம் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டன.
        கோழிகள் எப்போதும் கொத்துப்படுவதும், கத்திக்கொண்டு திரிவதும் கிண்டி கிளறி களைத்துப்போனதும் அப்படியே அங்கினேக்கை  சூடுகண்ட இடங்களில் கண்ணை மூடி சுகங்களை அனுபவித்தும் நாட்களை கடத்திக்கொண்டு இருந்தன. வளவுக்குள்ள இடைக்கிடை குரங்கு நரி நாய்  போன்ற  சில விலங்குகளும் அத்துமீறி வந்து தங்கட உணவு உள்ளிட்ட தேவைகளை நிறைவேறிக்கொண்டன. ஒருபக்கம் பூனையும், பூனைக்கு முதலே வளவுக்குள் குடி வந்த கோழிகளுக்கும் மற்ற விலங்குகள் வந்துபோறது கொஞ்சம் பிரச்சனையாக தான் இருந்தது. இந்த இடையில மூன்றாவதாக எப்படி வந்தது என்று தெரியாமலேயே காகக்கூட்டம் ஒன்றும் குடிவந்து சேர்ந்து கொண்டது. கோழி கிண்டுற இடத்திலும், பூனை தட்டி விழுத்துற இடத்திலுமாக தன் தேவைகளை நிறைவேற்றி வளமாக வாழத்தொடங்கியது காகங்கள்.
            நாளும் பொழுதுமாக காலம் கடந்துகொண்டிருந்தது. காலமாற்றங்களை சாதகமாக்கிய பூனையும் கோழிகளை சீண்டத்தொடங்கியது. ஆரம்பத்தில் சும்மா சும்மா கோழிகளை பிடித்து செட்டைகளை பிய்ப்பதும் புடுங்குவதுமாக ஆக்கினை செய்யத்தொடங்கி அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அடித்து கொல்லதொடங்கியது. கோழிகளும் பயந்து நடுங்கி ஒதுங்க தொடங்கியதும்  இரத்த ருசி கண்ட பூனை இன்னும் துள்ளத்தொடங்கியது.
      கோழிகளும் நொந்து நூலாகி, சகோதரகோழிகளை காவு கொடுத்ததும், ஓடி ஓடி ஒளியத்தொடங்கின....கடைசியில் ஒளிய முடியாத நிலையில் எல்லா கோழிகளும் ஒன்று கூடின. ஒரே சத்தமும் ஒப்பாரிகளும் வீம்புப் பேச்சுகளும் வீராவேச கூச்சல்களுமாக ஒன்றுகூடின.  கூட்டத்தில்  யார் தலைமை தாங்குவது என்று முடிவெடுக்க முடியாமல் தங்களுக்குள் கொத்துப்பட்டுக் கொண்டன. ஒவ்வொரு கோழியும் தான் தான் தலைவன் என்ற ரீதியில் கூச்சல் போட்டுக்கொண்டன. பூனையை கண்டதும் மறைந்து கொள்வதும் பின் வந்து கொக்கரிப்பதாகவும் நடந்து கொண்டன. நிலைமையை அவதானித்த ஒரு கோழி தீர்க்கமான முடிவிவோடு எழுந்தது. அன்றிலிருந்து அடிவிளத்தொடங்கியது பூனைக்கு. பூனைக்கு அடி விழ அடிவிழ அந்த கோழிக்கு பின்னால் அநேக கோழிகள் செல்லத்தொடங்கின. கொஞ்ச  கோழிகள் பூனையோடு சேர்ந்துகொண்டன.பூனையும் தன்னோடு  சேர்ந்த கோழிகளை தட்டிகொடுக்கொண்டு மற்ற கோழிகளை கெட்டவர்களாகவும் கலகக்காரன்களாகவும் எல்லோருக்கும் சொல்லிக்கொண்டும் திரிந்தது. அதுமட்டுமில்லாமல்  எந்தப்பக்தால கொத்து விழும் என்று தெரியாமல் தூங்கவும் முடியாமல் ஒரு இடத்தில நிலையாய்  இருக்கவும் முடியாமல் தவிக்கத்தொடங்கியது. கடும் முயற்சி செய்து கோழிகள் பறந்து வந்தும் பூனையை தாக்க தொடங்கின.
     கோழிகளின் கொத்தல் தாங்க முடியாமல் பூனை பக்கத்து வீடுகளில் இருக்கும் விலங்குகளிடம் போய்  முறையிட்டு அழுது தொழுது  உதவி கேட்டு அவைகளையும் அழைத்துக்கொண்டு வந்து கோழிகளை விரட்ட தொடங்கியது.கொஞ்சம் கொஞ்சமாக கலைக்க கலைக்க ஒதுங்கிய கோழிகளை கண்டபாட்டுக்கு சிதைத்துத் தள்ளியது பூனையோடு சேர்ந்த அயல் வீட்டு மிருகங்கள்.
கொஞ்ச கோழிகள் காணமல் போயின.....
கொஞ்ச கோழிகள் உயிரோடு புதைந்து போயின
கொஞ்ச கோழிகள் சிதைத்து போயின
கொஞ்ச கோழிகள் பூனையோடு போயின
கொஞ்ச கோழிகள் இயலாமையால் இருப்பை தொலைத்து போயின
கொஞ்ச கோழிகள் தப்பி ஆங்காங்கே போயின........
கொஞ்ச கோழிகள் மானத்தோடு ஓரமாய் போயின.......
                  பூனையோடு கலந்து போன கோழிகள் பாட்டும் கூத்துமாக கொண்டாட்டத்தில் திளைத்தன.
                 கொஞ்ச கோழிகள் கண்ணீரோடு மற்ற கோழிகளுக்காக
வாழத்தொடங்கின.
                அப்பதான் முழிச்ச கொஞ்ச கோழிகள் மீண்டும் கொக்கரித்து கூட்டம் கூடத்தொடங்கின.......................
                பூனையோடு கலந்து போன கோழிகளோடும்  பூனை கொஞ்சம் கொஞ்சமாக தனகத்தொடங்கியது. ஒன்றும் செய்யமுடியாமல் அந்த கோழிகளும் பூனைக்கான தமது கொக்கரிப்பை குறைக்காமல் நீட்டிக்கொண்டது.
               குழுக்களாய் இயங்க தொடங்கிய கோழிகளைப் பார்த்து தலையாட்டிக்கொண்டே இருப்பை தக்க வைத்துக்கொண்டது காகக்கூட்டம்.
                மீண்டும் கொக்கரித்தொடங்கிய கோழிகள் மட்டும் மண்ணை கிளறி கிளறி காட்டி கொக்கரித்துக் கொண்டே பூனைக்கும் போய்வர செம்கம்பளம் விரித்துக்கொடுத்துக்கொண்டிருந்தன.....
                கொஞ்சம் கொஞ்சமாக கோழிகள் சின்ன கரப்புக்கூடுகளை தமது வளவுகள் என்று சொல்லி அதற்குள்ளேயே கொக்கரிக்கத் தொடங்கின.
            பின் அப்படியே
எல்லாம் மறந்து தலையை செட்டைக்குள் புதைத்து உறங்கத் தொடங்கின.
            கோழிகளுக்கு இப்போது  துன்பமே இல்லை என்று கத்தியபடி,  பூனை தன் வாயில் இருந்த கறைகளை நக்கி அழித்துக்கொண்டது.
               (பூனை கண்ணை மூடினால் ......................... கோழிகளும் அல்லவா கண்ணை மூடிவிட்டன)