Sunday, 28 July 2013

கா(தல்)ல மாற்றம்..........

காற்றும் வறண்டு கிடக்கும்
இதுபோன்ற ஒரு கோடையில் தான்
உனை பிரிந்தேன்.

உனைப்பிரிந்த அந்த காலம்
புல் நுனிகள் கருகிய அந்த காலம்
காலமாகிப் போய்விடாமல் கிடக்கிறது.

அன்று,
உயிப்பூவிதழ்களின் சாயங்களை
வெளுறவைத்த
பெரும் கோடையின் கோபம்
நரம்புகளின் பச்சையத்தை தீண்டவே இல்லை........

இன்று,
விழிப்பூவிதழ்களில் எழுகின்ற வாசம்
தளம்பல்களை தந்தாலும்
கோடைக்கு முன்னான அந்த
இளவேனிற்காலத்தின் படிமங்களை மீட்டுகின்றன..........

வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில்
மக்கிக் கிடக்கும்
சிறுவெண் நண்டுக்கூடுகளாய்
காதல் உனக்குள்ளும் இருக்க கூடும் இன்னும்,

எனக்குத்தெரியும்
இருந்தவரை
நல்ல காதலியாக இருந்தவள் நீ.

எனக்குத்தெரியும்
பிரியும்வரை
அன்பை பொழிந்தவள் நீ

எனக்குத்தெரியும்
அனல்சுமந்த பெருமூசுக்களால்
நீ தீமூட்டப்பட்ட அந்த கோடை காலமும்,

 உனக்கு தெரியுமா?
இப்போதெல்லாம் என் பிரார்த்தனைகள்
தவறியும் அந்த இளவேனிற்காலம்
உன் நினைவுகளுக்கு வந்துவிடகூடாது
என்பதாக இருக்கிறது என்பது..........


Monday, 15 July 2013

உருவம் இழந்த வீடும்.........................

எப்படி அழைக்கப்படும்
நானில்லாத எனது வீடு
யாருமில்லாத இன்றில்.........

என் பெயரால் அழைக்கப்படமுன்
அண்ணாவின் பெயரால்,
அப்பாவின் பெயரால்,
அம்மாவின் பெயரால்,
அம்மம்மாவின் பெயரால்,
அழைக்கப்பட என் வீடு.........

எப்பவோ துளைத்து
கறல் ஏறிய சன்னங்களையும்,
எறிகணை சிதைத்து சிராம்பு கிளம்பிய
வளைமரங்களையும்,
அண்ணாவை தொடர்ந்து
எனது கீறல்களையும் சுமந்த
வைரமரக்கதவுகளையும்,
மஞ்சள் பூக்கொடிமரம் சுற்றிபடர்ந்து
மங்கலமாய் நின்ற  தூண்களையும்,
சுமந்த என் வீடு.........

எப்படி
அழைக்கப்படும்
யாருமில்லாத இன்று.

எல்லையோர ஒற்றைபனையும்,
வேலிக்கிளுவையில் படர்ந்த கொவ்வையும்,
செம்பருத்தியும் நித்தியகல்யாணியும்
நாலுமணிப்பூச்செடியும்
முற்றத்து மண் அள்ளி
கொட்டிஉலவிய காற்றும்
உறைந்துதான்போய் கிடக்குமோ?
நானிருந்த வீட்டில்,

நிசப்த
சூனிய சூழலை கடந்து
காகங்களும் கரியவால் குருவிகளும்
ஓரிருமுறை வந்து போகலாம்.

பூனைகளும் நாய்களும்
என்றாவது இரைதேடியோ
அன்றிலொரு
மறைவிடம் தேடியோ வந்து போகலாம்.

இதுதான்
அவனின் வீடு என்று
ஏதாவது பழைய நினைவுகளுடன்
யாரவது நண்பர்கள் கடந்து போகலாம்.

தாகம் தீர்க்கவோ
குறைந்தது,
முகவரி தேடியோ யாரவது கதவை தட்டி
ஏமாந்திருக்கலாம்......

யாருமில்லாத எனது வீடு
உருவத்தால் இன்னும்
வீட்டைப்போலதான் இருக்கிறது.
உணர்வுகளை இழந்த
ஒரு தேகத்தைப்போலத்தான் கிடக்கிறது.

இங்கும்
பூட்டிய வீடுகளை கடக்கையில்
எனது வீடு நினைவுக்கு வந்துவிடுகிறது.
கூடவே
வீடைப்போல சீரழியும்
இந்த வாழ்க்கையும்.Monday, 1 July 2013

எனக்கான பாடல்...........

இது எனக்கான பாடல்.
எனக்கான இந்த பாடல்
உங்களுக்கான அடையாளங்களை
சுமந்திருக்கலாம் .........
ஆனாலும் -இது
எனக்கான பாடலேதான். 

தரவையிலும் தரிசுநிலத்திலும் 
பாடிக்கொண்டிருக்கும் 
ஒற்றைப்பறவையின் பாடலொன்றை
ஆழ்ந்து கேட்டிருந்தால்,

ஆளரவமற்று 
வெறுமையோடு அடங்கிக்கிடக்கும் 
பெருவீட்டில் அமைதியோடு 
முடங்கிக்கிடக்கும் 
நாயொன்றின் விழிகளை 
கூர்ந்து பார்த்திருந்தால்,

கனிநிறை மரத்தில் கிளைதாவி 
குரலெடுக்கும் அணிலொன்றின்
தவிப்பின் காரணத்தை 
ஒருநாளாவது தேடியிருப்பின், 

எனக்கான இந்தபாடலின்
நியமம் புரிபடக்கூடும்.
இல்லையேல்,

ஓசைப்பிணைப்புக்களாலும் 
வார்த்தைச்சிக்கல்களாலும்
உணர்த்தப்படப்போவது 
எதுவென்று புரியப்போவதில்லை உங்களுக்கு
எனது பயணத்தைப்போல.......

அர்த்தச்செறிவுகளை தேடி
அங்குலமங்குலமாய் அலசி 
அடையாளம் கண்டுகொள்ள முயன்றாலும் 
தெரிந்துவிடப்போவதில்லை உங்களுக்கு 
எனது  இருப்பைப்போல..... 

இந்த பாடலின் முடிவில் உங்களுக்கு 
எதுவுமே இருக்கப்போவதில்லை
எனது வாழ்க்கைப்போல............ 

இருந்தாலும்,
வெறுப்புக்கள் உமிழ்ந்த
இருப்பினை சுமந்த
எனக்கான பாடல் 
உங்களிடமிருந்தொரு பெருமூச்சை 
பரிசாக கேட்கலாம்.
மறுத்துவிடாதீர்கள்..........