Sunday 18 August 2013

முடிவே தலைப்பு.........

நண்பனை பெற்றுக்கொள்ளுதல்
என்பது
குறியீடுகளால்
குறியிடமுடியாத  ஒன்றிணைவு.

காலம் கரங்களை தரும்.
கரங்களுள் காணமல் போவது
மனதின் சுரங்களை பொறுத்தது.

நண்பனை பெற்றுக்கொள்ளுதல்
என்பது
வரலாறுகளால்
வரையப்படாத அனுபவக்கீறல்.

இடங்கள் நெருக்கங்களை தரும்.
நெருக்கங்களுள் நெகிழ்ந்து போவது
நேசிப்பின் வேர்களை பொறுத்தது.

ஒரு நண்பன்
ஒரு பறவையைப்போல
ஒரு மழையைப்போல
ஒரு புலர்வைப்போல
ஒரு நல்ல வாசனையைப்போல நெருங்க வேண்டும்.

அவனின் நட்பு
மாலையாக இருக்கவேண்டும்
கழுத்தில்

நீண்ட மனவெளிகளை....
நீண்ட மௌனங்களை.........
பயமுறுத்தும் சில பொழுதுகளை........
ஒதுக்கும் சில சடங்குகளை.....
கடக்க உதவியும்,
முயன்றும் பாருங்கள் நண்பனின் கரம் பற்றி.

எப்போதும்,
நல்ல நண்பனை பெற்றுக்கொள்பவன்
நல்ல நண்பனாக இருப்பவனே.

நானும் நீயும் ....................!!!!!!!!!!


Thursday 8 August 2013

மீளும்மென் முப்பாடன் பாடல்...........!!!

முப்பாட்டனின் பாடலும் அவனுக்கு
முன்னான ஆதிமுந்தையோனின் பாடலும்,
எனக்கு கேட்கிறது.

வேட்டையும் வேட்கையும் 
வேளாண்மையும் போதுமென,
கூடில்லாத கூட்டமாக  நகர்ந்த
ஆதிமுந்தையோனின் நிலாப்பாடலில்...

அடங்காத வீரமும் 
திடங்கொண்ட தோள்களின் தீரமும்
முடங்கிக்கிடக்காத விவேகமும்
தடங்குலையாத வேகமும் கேட்கிறது.

சீரான காலடிகளும் 
குதிரைக் குளம்படி ஓசைகளும்
காற்றை கிழிக்கும் வன்ம பிளிறல்களும்
ஒளிபட்டு தெறிக்கும் வேல் முனைகளும்
குருதி வழிந்து உயரும் வாள்களும்
பொருதி முடித்த களத்தே முனகும்
பேய்களும் நாய்களும் நரிகளும்
தெரிகிறது அடுத்தவன் பாடலில்,

பாடல் கேட்கிறது
மென்மையாக மெல்லியதாக
சம நிலத்தின் பயணிக்கும் காற்றுப்போல.....
பாடல் கேட்கிறது........

பாடல் கேட்கிறது
ஒரே இராகத்தில் வேறு வேறு குரல்களில்
நீளமாகவும் கட்டையாகவும்
பாடல் கேட்கிறது.

அலையோசைகள் கேட்க
துடுப்போசைகளுக்கிடையில்
மீண்டும் தொடர்கிறது  பாடல் உச்சஸ்தாயியில்.
கொற்றவையின் பூரிப்பில்
எல்லைமீறி கேட்கிறது.

விழி மூடிக்கேட்கிறேன் முப்பாட்டன் பாடலை.
விரிகிற கனவில் தெரிகிறது பெரும் களம்
கரவொலிகளும் காதல் கலப்போலிகளும்
உறவுகளின் உணர்வொலிகளும்
பக்திபண்சுமந்த இசையொலிகளும் கேட்கிறது.

உடுக்கையும் பறையும் சிலம்பும் கேட்கிறது
உடல் சிலிர்க்கும் குலவையும் கேட்கிறது
மதங்கொண்ட மார்புகள் மோதுமோலி கேட்கிறது
கொங்கையர்  மோக சிணுங்கள் கேட்கிறது.

கடக்கிறது முப்பாட்டனின்
முந்தையோன் பாடல்

கொஞ்சம் கொஞ்சமாக.....
தொடர்கிறது
என் பாட்டனின் பாடலும் அப்பனின் பாடலும்.
வரலாற்றை மீட்ட
பாட்டனும் அப்பனும் வரலாறாகிப்போக,
பாடல் மட்டும் தொடர்கிறது.

இதோ என் பாடல் கேட்கிறது...........

தலைகுனிந்து தளர்ந்த குரலில்
விலைபோய் இனம்விற்ற குரலில்
இடம் விட்டிடம் மாறி அலைந்த  குரலில்
அழுதும் தொழுதும் விழுந்தும் தளதளத்தகுரலில்
முன்னெப்போதுமில்லா இழி குரலில்கேட்கிறது

என் பாடல்
எனக்கான பாடல்
என் காலத்துக்கான பாடல்
கடந்து போகும்.-நாளை
விடியலின் கீதத்தோடு
என் மகனின் பாடல் வரும்
அவன் மகனின் பாடல் வரும்.

விழி மூடிக்கேட்கிறேன் பாடலை.
ஒலிக்கிறது என் முப்பாட்டனின் பாடல்.