Monday 30 September 2013

நாளொன்றின் வெற்றிடத்தில்.

மகரந்தங்களின் கண்ணீரும்
பருவம் தப்பிப்போன
பாலணுக்களின் திட்டைக்களும்
நிறைந்து கிடக்கின்றன தேன்களில்கூடுகளில்,

சுடர் தின்ற விட்டிலின் கனவுகள்
கருகி பரவுகின்றன

அழகோடு இயைந்த நிலவினைப் புணர
தேடியலைகிறான் சூரியன்
இரவினை கொன்றும் பிறக்கிறது
இரவும் நிலவும்.

இலைகளை வெறுத்த கிளைகளை
காத்திருக்கின்றன,
பறவையொன்றின் விரல்களின் தீண்டலுக்காக,

சாம்பல்மேடுகளில் மேய்ந்த மாடுகளின்
மடிகள் கறக்கின்றன
ஆசை தீய்ந்துபோன வெப்பத்தோடு,

அன்பு...
ஒருவர் மனம் நெகிழும்படி
மற்றொருவர் வெளிப்படுத்தும்
பாசமும் நேசமும் நட்பும் என்று
தெளிவாக வரையறை செய்கிறது அகராதி.

அநேக நாக்குகளில் வழிகிறது
துர்நாற்றம் சிலவேளைகளில்
விசமாகவும்.

அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும்
விடைகளை சுமந்து  அலைகிறான்
கேள்வியை தேடி
மனிதனொருவன்.

இப்படிதான்
நிறைந்து போகிறது
நாளொன்றின் வெற்றிடம்.

Monday 23 September 2013

கசியும் வேர்கள்

வேர்களில் கசியும்
நேசிப்பிற்கான  ஏக்கத்தினை
வன்மத்தோடு புறந்தள்ளி
இலைகளையும் மலர்களையும்
வருடிச்செல்லும் இந்த பிரியங்களை
புரிந்துகொள்ள இயலவில்லை.

இப்போதெல்லாம்
வெற்று ஒலிகளால்
ஊதப்படுகிறது பிரியங்கள்
ஒப்பாரிகளையும் ஓலங்களையும்
விதைத்துவிடுவதே அதன்
அதிஉன்னத கற்பிதமாகி போகிறது.

அடைய எதுவுமில்லாத நாளொன்றினை
கடக்கும்  அவலத்துடன்
எதிர்கொள்ள வேண்டியதாகிறது
இன்றைய பிரியங்களை

அவசரத்தில்
துப்பிவிட்ட பிரியங்கள்
படுக்கையெங்கும்  சிதறி கிடக்கிறது.

இனியவை ஒன்றுகூடி
வேட்டைக்கு கிளம்பலாம்

மனதை வருடி மென்மையாக
கொல்லத்தொடங்கலாம்.
நரம்புகளை சீண்டி
வக்கிரங்களை பரப்ப தொடங்கலாம்
கரங்களில் பயணித்து
இணைவுகளை தகர்க்க தொடங்கலாம்
வேர்களில் புகுந்து நேசிப்பினை
வறட்சியடைய வைக்கலாம்

எதுவாக இருந்தாலும்  இந்த
பிரியங்களை சிந்துவோர் மீதும்
எழுந்துவிடுகிறது
புரிந்துகொள்ளவியலாத ஒரு பிரியம்.

Sunday 15 September 2013

காலம் எனதாகும்........

வாழ்தலின்  மீதான கனவை
தடயங்களின்றி உண்டு செரிக்கிறது
காலவேள்வியின் பெரும் தீ

தரித்த கருக்கள்
இமையொரங்களால் கசிந்து
இறந்துகொண்டிருக்கின்றன ..

சுவடுகளை உருவாக்கும்
தன்னெழுச்சியில் எழுந்த பாதங்கள் 
குத்திட்டு கிடக்கின்றன.

கால வேள்வி 
வாழ்தலின் மீதான கனவுகளை  
உண்டு செரிக்கிறது.

ஆகுதியாகிப்போன கனவுகள்
ஒருநாள்
வாழ்வின்  கனதி சுமந்து
பெருமழையாகிப் பொழியும்.

தாழிகளில் நிறைந்து
வன்மத்தோடு வழிந்து ஓடி.......

கனவுகளை தின்ற வேள்வியின்
சாம்பல் மேடுகளில்
பூத்துக்கிடக்கும் காளான்களை மகிழ்விக்கும்
துகள்களை உயிர்ப்பிக்கும்.

வண்ணமயமான
அந்தத் துகள்கள் ஒன்றாகி
திசைகளை கடக்கும் பறவையாகி எழும்.

அப்போது
காலம் எனதாகி இருக்கும்.


Friday 6 September 2013

காலம் தின்ற பாசங்கள்.......!!!

         யாரும் தன்ர கதையை காது கொடுத்து கேக்கினம் இல்லை என்ற இயலாமையை   மெல்லிய முனுமுனுப்பால் ஒருத்தருக்கும் கேட்டுவிடக்கூடது என்ற கவனத்துடன் கொட்டிக் கொண்டிருந்தாள் கண்மணி. என்னதான், தான் புறுபுறுத்தாலும், யாரும் தன்னை கண்டுகொள்ளப் போவதில்லை என்ற உண்மை கண்மணிக்கும் புரிந்திருந்தது. இருந்தும், அவளால் புறுபுறுப்பதை விட்டு விட  முடியவில்லை.        
                                
  புறுபுறுத்துக்கொண்டே வீட்டின் உற்புறத்தை எட்டிப் பார்த்தாள். ஒரு பேத்தி ரிவியிலும், மற்றவள் கணணியிலும் தங்கள் தலையை புதைத்துக்கொண்டிருத்தார்கள். அவர்களை சொல்லிக் குற்றமில்லை உதுகளை வேண்டிகொடுத்து பிள்ளையளைக் கெடுத்து வச்சிருக்கிற தாயையல்லோ சொல்லணும், உதுகளை  அடிச்சு கலைக்கனும் ஓடிப்போய் விளையாடுங்கோ எண்டு, கண்டறியாத கரண்டு ஒண்ட கொடுத்து பொடியள் உதிலேயே கிடக்குதுகள். என    தன்மட்டில் கதைத்தபடி திரும்பியவள், கட்டிலில் தலையணைக்கு பக்கத்தில் கிடந்த வியாழன் மாற்றம் என்ற புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தொடங்கினாள்.

Sunday 1 September 2013

நாங்களும் துரோகிகளே..................

இத்தழிந்து போய்விடவில்லை
என் இனத்தின் நம்பிக்கை.

கொழுந்தெறித்து கிளைபரப்பிய
இனவிருட்சத்தின் வேர்களை கிளறியவனே
பார்......

செத்துவிடவில்லை எங்கள் வேர்களில்
இன்னும் நம்பிக்கை.

என்ன செய்யப்போகிறாய் இனி....

எங்களை
கொன்ற கதையை
யார்யாருக்கோவெல்லாம்
வென்ற கதையாக சொன்னாய்.....

எங்கள்
பிணங்களை புணர்ந்த பின்னான பொழுதை
மாலை புனைந்து கொண்டாடினாய்.....

எங்கள்
மகவுகளின் நெஞ்சுகளில்
நச்சுகுண்டுகளை விதைத்துவிட்டு
மண் வணங்கி மகிழ்ந்தாய்.....

உனக்கான காலமென்று ஒன்றிருந்தால்
எமக்கான காலமொன்றும் வரும் !
மீண்டும் வரும் !!

***********************
காலம் திரும்புகிறது.

நாச்சியார் விழிநீர் துடைக்கிறாள்
குருவிச்சியும் இனி வரக்கூடும்
வன்னியன் குதிரையின் காலடியும் கேட்கலாம்.

நாச்சியார் கோபம் இனி
நெடுங்காலம்  அடங்கிக்கிடக்காது.
எல்லாகேள்விகளையும் சுமந்திருக்கிறாள்.

வீரையும் பாலையும் நிலம் பிளந்து
வான்நோக்காது போனதுமில்லை,
வீரமும் வேகமும் கொண்டவன்
நேரமறிந்து எழுந்துகொள்ளாமல் போனதில்லை.

காலம் திரும்புகிறது.

வல்லையிலும் ஆனையிறவிலும்
கண்டல் காடுகளில் இருந்து எழுகிறது
பெயர் தெரியாப்பறவை.

தொண்டைமானாற்றிலும்
வளுக்கியாற்றிலும் மீண்டும் ஒலிக்கிறது
துடுப்புக்களின் ஓசை.

பூநகிரியிலும் கல்லுண்டாயிலும்
சன்னதம் கொள்கிறது காற்று
தேவன் குறுச்சியிலும் வீரமாகளியம்மன்  திடலிலும்
புறப்பாட்டின் குலவை எதிரொலிக்கிறது.

காலம் திரும்புகிறது.
*************
தாயின் கண்ணீரின் கனதியை
கரங்களில் ஏந்ததுணிந்தவள்
எப்படி சுமப்பாள்?
கண்ணீரின் காயாத பிசுபிசுப்பை
எங்கே துடைப்பாள் இவள்.?

என் குழந்தையே.....
துள்ளி விளையாடும் வயதினில்
உன்னையும் இங்கழைத்தது
எங்களின் விதியோ ?

எழுதுகோல் சுமந்து பள்ளிசெல்லும் நேரத்தில்
படம் தந்து ரோட்டில் நிறுத்தியது
எங்களின் இயலாமையோ ?

விரல் நீட்டும்  உன் உணர்வுகூட
எமக்கின்றிப்போனதே
மரணிதவர்களா நாம்?

மன்னித்துவிடு மகளே
உனக்கு முன்
நாங்களும் துரோகிகளே......