Thursday, 31 October 2013

தவிப்பு...

வானம் தீப்பிடிப்பதற்கு சற்று
முன்னான கணத்தில்தான்
அது நிகழ்ந்தது.
முன்னெப்போதுமில்லாத வாசத்தில் 
பெய்திருக்கிறது நேற்றிரவு மழை.
இந்த சந்திப்பைப்போல....
இறகு விரித்து தேவதைகள் கடக்கின்றன
தலைக்கு மேலே..
இதயத்துக்கு  உள்ளே...
இலைகளின் குரல்கள் சுமந்து வருகின்றன
மலர்களின் மகிழ்ச்சியை.
நான் தேடத்தொடங்க,
நீ கடந்து விட்டிருந்தாய்.
வானமும் தீப்பிடித்துவிட்டது.
வேர்க்கிறது கழுத்தில், கண்ணில்.
மரமும் அமைதியாகிவிட
கூடு காத்திருக்க தொடங்குகிறது.
சென்ற பறவை வருமா ?

Sunday, 20 October 2013

நிறமிழந்து போவேனோ

பார்த்தலையும்,
புன்னகைத்தலையும்,
நிராகரித்துவிடும் பலரை கடக்கவேண்டியிருக்கிறது.

அரவணைப்புகான ஏக்கத்தைதையும்
இன்றின் ஏமாற்றத்தையும்
சுமந்து திரியும் சிலரையும் கடக்கவேண்டியிருக்கிறது.

வீடுகளில்,
வேலைத்தளங்களில் - இருந்து
ஏதாவதொன்றை காவி வருபவர்களையும்,
ஒரு சீக்கரெட் , கபே வழியாக
ஏதோவொன்றை  இறக்கி வைக்க முயல்பவர்களையும்
சந்திக்க வேண்டியிருக்கிறது.

லெதர் ஜக்கெற்றுக்களும்
மப்ளர்களும் மனதையும் மூடிவிட
ஐபோனும் கூலிங்கிளாசும்
பொறிகளையும் தின்றுவிட
கொட்டடி முதல் கொடிகாமம் வரை
உறவாடி உணர்வோடு இருந்தம் என்பவரையும்
பொறுத்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது.

சென் நதியிலும் லூவர் மியூசியத்திலும்  ஈபிள் கோபுரத்திலும்
நீண்ட மெற்றோக்களிலும் ஏறிவந்த பின்னும்
ஒரு ஆபிரிக்கனை,
ஒரு துனிசியனை,
ஒரு ரூமேனியனை,
கள்ளன் கறுவல் என்று திட்டிக்கொள்பவர்களையும்
சகிக்க வேண்டித்தான் உள்ளது.

இந்தப் பயணத்தில் ...
முகமூடிகள்  மட்டுமல்ல
முகமில்லதவர்களும் பக்கத்து இருக்கைகளில்,

ஒரு காலத்தில்,
வல்லைக் காற்றையும்
வல்லிபுரக்கோவிலையும்
தாவடிச் சுருட்டையும்
கீரிமலைக் கேணியையும் சுகமென்றவர்கள்,
மாத விடுப்பில் பார்த்த
சுவிசும், பார்சிலோனாவும், லூட்சும் போதும் என்கிறார்கள்.
வலைபின்னி வலைபின்னி
வாழ்வினை இரையாக்கி கொள்கிறார்கள்.

இப்போது,
எனது பயமெல்லாம்
இவர்களைப்போல,
நானும் ஒரு அகதி என்பதை மறந்துபோவேனோ ?

Tuesday, 15 October 2013

நாளை நானும்...

அடங்கிக்கிடக்கிறது.
என்றும் இப்படி கிடந்ததில்லை
இறகுகோதும்  ஓசையாவது கேட்கும்.
எதுவுமில்லை.

நேரம் அறியக்கூட  பர்ப்பதுண்டு
காலம் தப்பியதில்லை
ஒருபோதும்.

காலம்...??

எங்கே போயிருக்கும்,
இரைபோதாமல்
இன்னும் தூரம் போயிருக்குமோ
இணைகூடி இடம் மாறி இருக்குமோ
இரையாகி இருக்குமோ

இறகு உருத்தியும்,
எச்சமிட்டும்,
சுள்ளித்தடிகளை விழுத்தியும்,
தூண் விட்டத்தில் குறுகுறுத்து தலை புதைத்தும்,

எங்கே
போய் தொலைந்திருக்கும்.
"சனியன்" என்று வாய்விட்டு
திட்டவேண்டும் போல ஒரு உணர்வு.

காலம்
காத்திருப்பை சேமிப்பதில்லை.

சிக்கிக்கிடந்த ஓரிரு இறகுகளும்
தவறி அலைகின்றன.
எச்சங்கள் காய்ந்து  துகளாகி
இல்லாமல் போகின்றன.
சந்தங்களால்,
குதூகலித்துக்கிடந்த கூட்டிலிருந்து
வெறுமை  பரவத்தொடங்குகிறது.

பரவுகின்ற  வெறுமை
தின்னத்தொடங்குகிறது
ஒவ்வொன்றாக....
நான்,
இழந்து கொண்டிருக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாக அந்த
கூடுதிரும்பாத பறவையின் நினைவுகளை.

நாளை,
நானும் கூடு திரும்பாவிட்டால் ...

Tuesday, 8 October 2013

மீட்பர்களின் வருகைக்காக.......

எஞ்சி இருக்கும் 
உடலங்களையும்  அரிக்கத்தொடங்கிவிட்டது  
வார்த்தைகளால் வளைத்த கூட்டம்,

புதிய ஏற்பாடு என்றும்,
மீள்ந்தெழல் என்றும்,
அறையப்பட்ட ஆணிகளை
அறைந்தவர்களை கொண்டே அகற்றுவோம் என்றும்
செவியை வழியாக்கி இதயத்துள் இறங்கினர்.

நச்சுக்காற்றும் பிணவாடைகளும் முகத்திலறைய,
மண்டையோடுகளையும் சிதைந்த கூடுகளையும்
தரவைகளிலும் உப்பங்களிகளிலும் எழும்
அவல ஓலங்களையும் கடந்து,

நம்பிக்கைகள் தொலைந்த நிலத்தில்
குருதியுண்டு செழித்த அடம்பன் கொடிகளையும்
இறந்தவர்களின் உறுதிகளால்
இறுகிப்போன விண்ணாங்கு மரங்களையும்
அலகுதுடைத்த ஊனுண்ணிகளின் ஏவறைகளையும் கடந்து,

எக்களிப்புடன் வனப்புடல் பார்த்து
குறிகசக்கி பல்லிழிப்பவனையும்,
சுடுகருவிகொண்டு படு என்றழைப்பவனையும் கடந்து,

தோற்றுப்போனாலும்,
நேற்றுப்போனவர்களின் நினைவுடன்
வாழ்தலின் விதிஎழுதவென்று தானே மைகொண்டோம்.

எம் வாசலில் எம் வயலில்
எம் கோவிலில் எம் ஊரில்
நாமேதான் இருக்கவேண்டும்
நாமாகத்தான் இருக்கவேண்டும்.

புதிய ஏற்பாடு செய்தவர்களே...
மீழுகை அறிவிப்பு செய்தவர்களே ...

எங்களின் முள்ளந்தண்டுகளை உருவி
தீ மூட்டி இருக்கிறீர்கள்
நீங்கள் குளிர்காய...
எங்களின் மூச்சுக் காற்றுக்களை விற்று
செங்கோல் ஏந்தியிருக்கிறீர்கள்
நீங்கள் கோலோச்ச...
எங்களின் ஏக்கங்களை கடன் வாங்கி
உங்களை நிரப்பிக்கொள்கிறீர்கள்
நீங்கள் உயிர்வாழ...

பெருவெடிப்பின் அவலம் சுமந்து
கொப்புளிக்கும் குருதியடக்கி
கொலையுண்டும் காணாமலும் போனவர்களின்
கடைசி மூச்சினை உள்வாங்கி
அமைதியாய் கிடக்கிறது தரவைகளில் ஆக்காட்டிகுருவிகள்

அவைகளுடன்
மக்களும் இந்த
தேசத்தின் தெருக்களில் இன்னும் 
காத்திருக்கிறார்கள்...