Wednesday, 27 November 2013

கந்தகமேனியர் கலந்த காற்றை தடுக்கவா முடியும்..

தோரணங்கள் இல்லை
மஞ்சள் சிகப்பு நீலக்கொடிகள் இல்லை
எழுச்சி கீதங்களும் இல்லை
இது கார்த்திகைதனா
நாங்களும் தமிழர்கள் தானா..

ஒடுங்கிப்போகிறது சர்வமும்,
சவங்களா நாம்.
இத்தனை திங்களாய் என்ன செய்தோம்.

களையிழந்து கொண்ட நிலைதொலைத்து
வாடிக்கிடக்கிறாள் ஈழநங்கை.
மரகதமாமணிகள் உறங்குமிடமெங்கும்
பேரிருள் மேவி கிடக்கிறது.
காந்தள் சூடி ஒளிகொண்டு நிற்கும் காலமல்லவா இது.
நினைவேந்தலில் உருகியழும் நேரமல்லவா இது.

தீக்கடைக்கோல்களை மறந்துவிட்டு
எவரெவர் கால்களில் விழுந்தோம்.
ஒப்பாரி வைத்தோம்
எவராவது பார்த்தார்களா ?

வாருங்கள்
சாம்பல் அகற்றித் தீமூட்டுவோம்.
வேர்களில் இருந்து மீண்டும் தழைப்போம்.

விண்நிகர்த்த மேனியர் விதைத்த நிலத்தில்
புல் முளைத்தாலும் புலியாகுமென்று
நடுகல் உடைக்கிறான் .
கண்மணிகள் கண்திறந்திடுமோவென்று
கல்லறைகள் சிதைக்கிறான்.

கந்தகமேனியர் கலந்த காற்றை தடுக்கவா முடியும்?

வாருங்கள்
சுவாசித்து மீண்டும்
வேரிலிருந்து தழைப்போம்.
ஈழத்தேர் இழுக்கும் தினவு கொள்வோம்.

மணியொலித்து
மலர்முகம் பார்த்து
நெய்யூற்றி ஒளியேற்றாத
கார்த்திகை  இது கடைசியாகட்டும்.

Tuesday, 19 November 2013

உன் பாடலுக்காக காத்திருக்கிறேன்.

இந்த கணங்களை கடந்து போவது 
எப்படி என்று தெரியாமல்....
கனத்த மௌனத்துடன் சலனமற்றுக்கிடக்கிறேன்  
வெறுமையை சுமந்தபடி ...

நீ  
உனது பிரியங்களால் 
தின்று கொண்டிருக்கிறாய்.

கண்ணீர் கூடப்  பிரியம் தான்.

கனவுகளை தின்னும்  பூதத்திடம்
மோதுகிற வண்ணத்துப்பூச்சியே,
ஏக்கம் தெறிக்கும் உன் கண்கள்
என் அறைகளில் அலைகின்றன..

திரண்டெழும் நீரை மறுப்பதாக
நடித்து நீ விழுத்தும் வார்த்தைகளோடு
மௌனித்துப்போவதை விட வேறெதையும்
செய்ய முடியவில்லை என்னால்.

என்ன செய்ய முடியும் என்னால் 
கண்ணீரை துடைப்பதற்கு
விழி துடைக்கும்  சிறுகரத்தினைவிடவா..!!!

அநேக பொழுதுகளில்,
வணக்கத்தில் தொடங்கி
கண்ணீரில் முடிந்துவிடுகிற வார்த்தைகளில்
மூழ்கிக்கிடக்கிறேன் நீ போனபின்பும்,
ஆற்றுப்படுத்தும் வித்தை தேடி.

எப்படித்தான் ஒப்பனை செய்தாலும் 
உனக்கான
வார்த்தைகளை உருவாக்குவதில் தோற்றுப்போகிறேன்.

தோழியே...
அவாந்திரவெளிகள் கடந்தும்   கூடடையும் பறவை.
நீ பறவையாகு...
நாளைய விடியலில்
உன் பாடலுக்காக காத்திருக்கிறேன்.
அன்புத் தோழனாக...
அன்று என் மௌனமும் தொலைந்திருக்கும்.(என் அன்புத்தோழி ஒருவரின் கண்ணீர் என்னை சிதைத்த  கணத்தில் எழுதியது )

Monday, 18 November 2013

நிழல் தேடும் நியம்...

திரண்டெழும்  ஏக்கத்தின் கனதி சுமந்த வேர்கள்
நீர்ப்பிடம் தேடியலைந்து
வெடித்துக்கிளம்ப எத்தனித்து
கேவல்களுடன் ஒடுங்கிப்போகிறது.

இந்த
தோட்டத்தின் அந்தரங்க இருளில்
அரங்கேறுகிறது அவலநாடகம்.

வெற்றிடத்தில்
எதிர்கொள்ளவியலாத மௌனம்

உள்ளெழுந்த  விரிசல்களும்
எதிர்பார்ப்புக்களும்
கௌரவவிம்பத்தால் புறக்கணிக்கப்பட
எழுகிறது முடிவற்ற ஈனக்குரல்

இப்போதெல்லாம்  நான் கேட்பது
பரிபூரண சரணடைதல் ஒன்றையே.
காலம் ஒப்பனைகளுடன் கூடிய நேசித்தலை சுமத்துகிறது.

சபிக்கப்பட என் இதயமே,
எந்த விலக்கப்பட்ட கனியை உணவாக்கினாய் ?
மக்கிக்கிடக்கும் எலும்புகள் மீது
இனி எக்காலம் எவரால் கங்கை பாயும் ?

எங்கோ தொலைவில்,
வசந்தகாலக் கனவில் பாடிக்கொண்டிக்கும்
பறவையின்  குரல் சுமந்து தொடுகிறது காற்று.


Monday, 11 November 2013

ஒரு குற்றப்பத்திரிக்கை

தன்னைக் கொன்றவனின் 
வாக்குமூலம் ஆராய்தலின் பின்
தற்கொலையென்று தள்ளி வைக்கப்படுகிறது.

அங்கு,
தன்னைக் கொன்றவனின்
வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்காது.
தன்னைக்கொல்ல துணிந்தவனின் வார்த்தைகள்
வாழ்க்கைக்குள் தன்னை கொன்றவனுக்கு
எப்படிப் புரிந்திருக்கும் ?

தன்னைக் கொல்லுதல்
மலர் உதிர்வதுபோலவும் இருக்கலாம்.
மை கரைவது போலவும் இருக்கலாம்.
ஒரு மரம் சரிவது போலவும் இருக்கலாம்.

தன்னைக்கொன்றவனின்
கடைசி நிமிடங்கள் பற்றி எவரும் பேசுவதில்லை,
அவன் சுமந்திருந்த
தனிமையை எவரும் உணர முயல்வதுமில்லை.
அவன் உருவாக்கிய
வெற்றிடம் குறித்தும் எவரும் கவலைப்படுவதில்லை,
ஆனாலும்,
தன்னைக்கொன்றவனைத்
தாண்டிவிட முடிவதில்லை எவராலும் வழமைபோல,

அவனுக்கு
அந்த நேரத்தில் தேவையாக இருந்திருப்பது
ஒரு உச்சபட்ச விடுதலை.
அது தன்னை
தன்னிலிருந்தும்
பிறரிலிருந்தும்
விடுவித்துவிடுமென்று  நம்பியிருக்கலாம்.

தன்னைக் கொல்லுதலூடாக
அவன் தன்னை விடுவித்தாலும்
நீங்கள் உங்கள்
குற்றங்களில் இருந்து விடுவிக்கப்படவில்லை.Sunday, 3 November 2013

வெள்ளாடையோடு வருகிறாள் வாள்சுமந்த தேவதை

தேச ஒருமைப்பாடென்று கூடிக்
கற்பழித்தவர்கள்  எங்கள் வாய்கால்களில் 
தங்கள்  குறிகளை 
கழுவிக்கொண்டிருக்கிறார்கள்.

வாருங்கள் மன்றாடுவோம்.

கழுகின் நிழல்களில்
வாள் சுமந்த  நீதிதேவதை
வெள்ளையாடையோடு  வருகிறாள்

உயர்ந்த ஜனநாயகநாடும்
காந்தியச் சக்கரங்களால்
சாம்பல் மேடுகளிலும் எலும்புச்சிதைவுகளிலும்
ஏறி வருகிறது.

காடுகளை அழிக்கையில் உறங்கி இருந்திருப்பார்கள்.
அல்லது
விருந்தில் இருந்திருப்பார்கள்.
இவர்களுக்கு எதுவுமே தெரியாது
வாருங்கள் மன்றாடுவோம்.
நீதி கேட்போம்.

வண்ணாத்துப்பூச்சிகளையும்
மின்மினிப்பூச்சிகளையும் கொன்று சிதைத்த
கதைகளை சொல்லுவோம்.

கூட்டம் கூட்டமாய் தவித்து நின்ற
மான்குட்டிகளை நஞ்சு பூசிக்கொன்ற
கதைகளை சொல்லுவோம்.

ஒலிவ் சுமந்த வெள்ளைப் புறாக்களை
அம்பால் துளைத்த வேடன்களின்
கதைகளை சொல்லுவோம்.

சிதைந்த உடல்களிலும்
அழுதுவந்த நடைபிணங்களிலும்
குறிபுதைத்துக்  கொக்கரித்த யந்துகளின்
கதைகளை சொல்லுவோம்.

இவர்களுக்கு எதுவுமே தெரியாது
வாருங்கள் சொல்லி மன்றாடுவோம்.
நீதி கேட்போம்.

வட்டமேசைகளில் வர்ணக்கொடிகளின் கீழ்
கோப்புகளில் தேடுவார்கள்.
எலும்புகளையும் மண்டையோடுகளையும்
கிழிந்த ஆடைகளையும் வைத்து
விவாதிப்பார்கள்.

பின்
திரைமறைவில்
சமாதான தேவதையின் தட்டுக்களில் 
பாலச்சந்திரன்களின்
இசைப்பிரியாக்களின் தசைதுண்டுகளை  நிறைத்துவிட்டு
விலை பேசுவார்கள்.

இவர்களுக்கு எதுவுமே தெரியாது
தங்களின் தேச நலன்களை தவிர
எங்களுக்கும் எதுவும் புரியாது
வாருங்கள் சொல்லி மன்றாடுவோம்.
நீதி கேட்போம்.

Friday, 1 November 2013

ஒரு தீப வலி

தீபாவளி...
 எத்தனை தீபாவளிகள் கடந்துவிட்டன..
அன்றும் ஒரு தீபாவளி நாள் தானே.
பச்சை உனக்கு பிடித்த நிறம். எனக்கு சிகப்பு.
அன்று நீ தேவதை போலத்தான், இல்லை தேவதையாகத்தான் தெரிந்தாய்.

யாருக்குத்  தெரியுமடி ?
அன்றுமுதல் எனக்கு தீபாவளி இல்லை என்று.
அந்த தீபாவளி மட்டும் வராமலேயே போயிருந்தால்...
அல்லது,
நீயாவது வராமல் போயிருந்தால்...
நானும் என் நண்பர்கள் போல ஒரு சராசரியாக
இன்று கொண்டாடிக்கொண்டிருப்பேன்.