Sunday 29 December 2013

திரும்பிப்பார்க்கிறேன் 2013....

நாளை புதிய வருடம்.

நேற்றுப்போல இருக்கிறது இரண்டாயிரத்து பதின்மூன்று(2013) ஆரம்பித்து... 

காலத்தின் வேகத்தோடு ஓடமுடியாமலும் ஒதுங்கிப்போக முடியாமலும் அந்தரித்த ஒரு நிலையுடன் ஆரம்பித்த அந்த வருடத்தின் முதல் நாளை, முதல் மணித்துளியை நினைத்துப்பார்க்கிறேன். 

மாற்றங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையேதுமின்றி வரவேற்க துணிந்த அந்த முதல் மணித்துளியில், எதோ ஒரு புரிந்துகொள்ளமுடியாத உணர்வின் உந்துதலால் சிவாஸ் உடன்   (CHIVAS REGAL) ஆரம்பித்த அந்த வருடம் குறித்த பயம் பதற்றம் எதுவுமின்றி இன்று அந்த வருடத்தினை பார்த்து சிரிக்கத்தான் முடிகிறது. 

இந்த சிரிப்பின் பின்னால் பலவலிகள் இருந்தாலும், நல்ல சில  மறக்க முடியாத நிகழ்வுகளும் இருக்கின்றன. 


Wednesday 25 December 2013

என்னதான் இருந்தாலும் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்...(இது, கதையல்ல. எடுத்துக்கொள்ளலாம் )

     இப்படித்தானுங்கோ சின்னனில எனக்கு  உந்த வெள்ளயளை அறிமுகப்படுத்தினவை. அப்பேக்க எனக்கு ஒரு ஆறோ ஏழு வயசெண்டுதான் நினைக்கிறேன். ஆங்கில புத்தகத்தை எடுத்தா முதல் பக்கத்திலேயே போட்டு இருந்தாங்கள். எதோ என்னவோ என்று  பிரமிச்சுபோய் பார்த்தேன். நம்மள மாதிரித்தான் இருந்தாங்களா அப்படியே விட்டுட்டன். பிறகு கொஞ்ச காலத்தில காந்தி உந்த வெள்ளையனே வெளியேறு என்று சொன்னார் எண்டும் படிப்பிச்சாங்கள். என்னடா இவங்கள் நல்லவங்கள் தானே உந்த மனுஷன் எதுக்கு இப்படி செய்கிறார் என்றும் யோசித்தேன். அந்தள் கொண்டு திரிஞ்ச  கம்பை பார்த்த பயத்தில ஒன்றும் கேட்கவும் இல்லை யாரிடமும் சொல்லவும் இல்லை.

Tuesday 24 December 2013

வன்மம் புணர்ந்த பிரியம்.

நேசிப்பின் நிழல்களில் ஒதுங்குதல்
சாத்தியமிழந்த பொழுதொன்றில்
தீப்பிடித்த வடுக்களால்
வேர்களில் சாம்பல்நெடி...

காயங்களையாற்றும் காலம்
இந்தக் காலத்தையும் அனுப்பியிருக்கலாம்..
வறண்ட நிலத்தின் மேல்
திரியும் கருமேகங்கள் போல..

என் தோட்டத்தின் சாம்பல் மீதிலும் பூக்கள்.

நீண்ட தெருக்களை
விலகி நடக்கத் தொடங்குகிறேன்..
காற்றும் ஒளியும் தழுவிப் போகின்றன.
பறவைகளின் பாடல்கள் நெருக்கமாகின்றன
கடல் விரிந்து கிடக்கிறது.

மூழ்கடிக்கவும் மூழ்கிப்போகவும் முத்தெடுக்கவும்
பிரியமும் கடலும் தான்  இருக்கின்றன


நான்
நேசிக்கப்படுகிறேன் !!!

என்
பிரியத்தின் இழைகளில்
வலைபின்னி காவலிருக்கிறது
சுமக்கவியலாத கனத்தோடு மர்ம சிலந்தியொன்று.
இன்னொரு பிரியத்தை கொன்றுவிடுவதற்காக
அல்லது வடித்து விடுவதற்காக...

இப்போது
என் தோட்டத்துப் பூக்களின் கீழும்
செத்துகிடக்கின்றன
வழி மறிக்கப்பட்ட
அல்லது
மறுக்கப்பட்ட  பிரியங்கள்.

Saturday 14 December 2013

எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ

புற்றில் நுழையும் பாம்புபோல
மென்மையாக இறங்குகிறாய்
இரைதேடியோ அன்றில்
உறைவிடம் நாடியோ ?

இழக்காத
அந்தரங்கவேர்கள்  மீதும் சொல்லெறிகிறாய்
இடம்மாற்றவோ அன்றில்
பிரட்டிப்போடவோ ?

மௌனங்களை வென்றுபோக
சலனமில்லாத விழிச்சுழற்சியை  அனுப்புகிறாய்...
என்னை கொள்ளவா
கொல்லவா?

எதுவென்றாலும் செய்துவிட்டுப்போ..
அதற்குமுன்
வா ..
இந்த குளிரைப்போக்க ஒரு தேநீர் அருந்தலாம்..
பின்பொரு முத்தத்தை பகிரலாம்.