Monday 29 December 2014

என்னிருப்பு..

சொற்களிலிருந்து புன்னகைகளைக்  கழற்றி
ஆடைகளோடு கொழுவியபின்,
இறந்துபோன அந்தச் சொற்களால்
எழுதத் தொடங்கினேன்
நாட்குறிப்பை.

நாள் நிறைந்து கொண்டது.

முடியாத இரவு

சுவர்களில் தெறிக்கும்
காமம் தீர்ந்த ஒற்றையொலி
புழுக்களாய் படரத்தொடங்கும்

தீண்டாத இடத்தில் திரளும் விடம்
மெல்லக்கொல்லும் நரகத்தை
தீண்டியும் தணியாப் பெரும் தீ
இரைதேடிப்  பரவும்

வானம் நிறையும் தனிமை.

பெரும் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கிறது
இலையுதிர்காலத்தின் கடைசிப் பாடலை
நீண்டவால்க் குருவி.

வானத்தின் சோகங்களையும்
வீதியின் தனிமைகளையும்
பழுத்த ஊசிஇலைகளின் துயரங்களையும்
துணைக்கழைத்து நேசிப்பின் வரிகளை
இழைத்துக்  கூவியழுகின்றது.

Sunday 14 December 2014

இன்றென் பெருவாழ்வு.

பறவைகளின்றி வானம் இறந்து கிடக்க,
இலைகள் கழற்றிய கிளைகள்
காற்றோடு குலவுகின்றன,

மதில்களில் பூனைகள் இல்லை.
வாசல்களில் யாதொன்றினதும் அரவங்களும் இல்லை.
அறைகளில் ஒளிரும் மின்குமிழ்கள்
கண்ணாடி யன்னல்களில் ஒளியத்தொடங்குகின்றன.

Saturday 29 November 2014

மனதுக்குள் கரையும் வெளி...

ஏனோ தெரியவில்லை, மிக நீண்ட நாட்களின் பின் நினைவுகளில் அந்த வெளி வந்து நிறைகிறது. தொண்ணூறுகளின் ஆரம்பகாலங்கள் என நினைக்கிறேன், அம்மாவின் மடியில்  அமர்ந்து  இலங்கைப்பேருந்தில் "அரை ரிக்கற்" எடுத்துச் சென்ற முதல் பயணத்தில் மோதிய  வெப்பமான உலர்ந்த உவர்க்காற்று இன்னும்  முகத்தருகில் கடப்பது போலவே இருக்கிறது. 

சிதிலமடைந்து கிடந்த கட்டடங்களை  காட்டி, இது நெசவு ஆலை, இது ஆஸ்பத்திரி, இது நீர்த்தாங்கி கட்ட ஒதுக்கிய நிலம் என அம்மா கூறியது, வளர்ந்த பின் ஒவ்வொரு முறையும் இந்த வெளியினை கடக்கும் போது என்னையறியாமல் நினைவுக்கு வரும். சில பயணப் பொழுதுகளில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த வெளியின் மதகுகளில் அல்லது வீதியின் மருங்கில் நாட்டப்பட்டிருக்கும் மைல்கல்லில் இருந்து வெளியின் மௌனத்தில் கரைந்து போனதுமுண்டு.

வடமராட்சியையும் வலிகாமத்தையும் பிரித்து நிற்கும் இந்த சதுப்பு நிலம் ஒரு இயற்கையான பறவைகள் சரணாலயம். வலசை வரும் பெயர் தெரியாப் பறவைகள்  உயர்ந்து நிற்கும் தாழை மரங்களில் தங்கி சல்லாபித்து குஞ்சுகள் பொரித்து தம்மிடம் ஏகும்.கொக்குகளும், நாரைகளும், நீர்க்காகங்களும் காலம் முழுதும்  நிறைந்திருக்கும்.  மண் திட்டுகளும், சிறியநீர் தேக்கங்களும் ஆங்காங்கே பரவிக் கிடக்கும். நீண்டிருக்கும் வெளியினை ஊடறுத்துப் போகும் ஆமையின் ஓடு போன்ற வீதியின் அருகில் அரசமர நிழலில்"முனியப்பர்" என்ற சிறு கோயிலும் உண்டு. கர்ணபரம்பரைக் கதைகளாலும் வரலாற்றுப் பதிவுகளாலும் குறிப்பிடப்படும் இந்த வெளி குறிப்பிடப்படாத எத்தனை எத்தனையோ வரலாறுகளை தன்னுள்ளே கொண்டு அடங்கி இருக்கிறது.

கால நீட்சியானது எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது. எதிலிருந்தெல்லாம் நீங்கினானோ அதையெல்லாம் கொண்டாடுபவனாகவும், எதையெல்லாம் தேடினானோ அதையெல்லாம் நிராகரித்து விடுபவனாகவும் மாற்றிவிடுகிறது. சமூகத்தின் மீதான நம்பிக்கையில், சமூகத்துக்காக தன்னை மாற்றத்தொடங்குகிறான்.  இருந்தபோதும், ஏதாவதொரு கணத்தில்
நிகழ்ந்துவிடும் ஒரு சிறு அதிர்வு அவனை மீள ஒருமுறை உருக்குலைத்துப் போட்டும் விடுகிறது. ஒவ்வொருவரும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கணங்களை நினைவுகளோடு கடந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

 நீளும் அந்த வெளியில் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறேன் தனியனாக. வழமையாக என் கூடவரும் நண்பனும் இல்லை. காகங்களும் நீண்ட அலகுகளைக் கொண்ட பறவைகளும் குவிந்து ஒரு இடத்தை வட்டமிட்டுக்கொண்டிருகின்றன. யாரோ ஒருவர்  ஒரு கால்நடையை திருடிக் கொன்ற பின் அதன் எச்சங்களை அல்லது இறந்தபின் அதனையே கொண்டுவந்து போட்டிருக்கலாம்.

இப்படிதானே அன்று அவர்களும் கிடந்திருப்பார்கள்.

1989 களின் இறுதிக் காலம். வல்வைப் படுகொலைகளை நிகழ்த்தி தம் கோரமுகத்துடன் திரும்பிக்கொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படை, ஊரில் இருந்த இளைஞர்களை கைதுசெய்து அழைத்துச்சென்றது. எட்டுப்பேரை தடுத்துவைத்துக்கொண்டு மற்றவர்களை விடுதலை செய்தது. சிலநாட்களில் எட்டுப்பேரில் ஐவர் வீடு சேர்ந்தனர் இரத்தம் தோய்ந்து கிழிந்தும் சிதைந்தும் கிடந்த  உடலுடனும் ஆடைகளுடனும்.

எஞ்சிய மூவரும் இதோ இந்த வெளியில் தானே யாருமில்லாமல் கிடந்திருப்பார்கள். நரிகளும் காகங்களும் அவர்கள் உடலங்களை அன்றும் இப்படித்தானே வட்டமிட்டிருக்கும்.

திரும்பி வந்தவர்கள் சொன்ன கதைகள் தாயால் மகளுக்கும், அண்ணன்களால் தம்பிகளுக்கும், தோழர்களால் தோழர்களுக்கும் கடத்தப்பட்டதே தவிர எங்குமே பதியப்படவில்லை. சாட்சியங்களாக இருந்தவர்கள் எங்கெங்கோ வாழ்ந்தாலும் அவர்களின் நினைவுகளிலும் இந்த வெளி ஒரு மரணவெளியாகவே நீண்டிருக்கும் எப்போதும்.

தூக்கம் வராத இரவுகளில் அம்மாவின் கண்களில் இருந்து நீர் வழிய அவர்களைப்பற்றிய கதைகளை சொல்லுவாள். ஒரே குடும்பமாக வாழ்ந்த ஊரில் அவர்களும் அம்மாவுக்கு என்னைப்போலவோ, அண்ணாவைப் போலவோ ஒரு மகன்களாகதானே இருந்திருப்பார்கள். சந்தையில் இருந்து நடந்து திரும்பும் அம்மாவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து விட்டிருக்கலாம். வீடு வேய்ந்து கொடுத்திருக்கலாம்,தோட்டத்தில் வயலில் உதவிகள் செய்து கொடுத்திருக்கலாம்..ஏன் என்னைக்கூட அவர்கள்  தூக்கி விளையாடி இருக்கலாம்...

இந்த வெளி இத்தோடு மட்டும் அடங்கிப் போனதா?

1996 யாழ்குடாநாடு  முழுமையாக சிறிலாங்கா இராணுவ வளையத்துக்குள் சிறைப்பட,  கன்னிப் பெண்ணாய் கலகலத்து நின்ற இந்த வெளி விதவைக் கோலம் பூண்டு சூனியமாகிப் போனது. சந்தியில் பிரதான முகாம் அமைத்து தமது வேட்கைகளை தணிக்கத்தொடங்கினர் சிங்கள இராணுவத்தினர். அன்றைய நாட்களில் இந்த வெளியினை கடப்பது குறித்து பேசாத எவரும் இருந்திருக்கமாட்டார்கள். செம்மணி வெளி  கிருசாந்தியின் அவக் குரல்களால் நிறைந்திருந்த காலமல்லவா.

அன்றிலிருந்து, பத்துவருடங்களின் பின்னும், எப்போது எங்கே என்ன நடக்கும் என்று தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் இதுதான் கடைசி சந்திப்பாக இருக்குமோ என்ற அச்சத்துடன் சந்தித்த காலமாக இருந்தது. சுமார் நூற்றியைம்பதுக்கும்  அதிகமான  இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட காலம் அது.

கார்த்திகை மாதத்தின் மெல்லிய குளிரோடு  நீண்டநேரம் கதைத்துவிட்டு வீடுதிரும்புகையில் காத்திருந்து  மறித்த இராணுவத்தினர் அடையாள அட்டையை பறித்துவிட்டு மறுநாள் இந்த முகாமுக்கு வரும்படி கூறி சென்றனர். மறுநாள் காலை, அவன் போக மறுக்கிறான். ஊரெல்லாம் நிகழும் படுகொலைகள் மனதில் வருகிறது. கண்களில் அச்சம் வளர மூச்சு ஏறி இறங்கத்தொடங்குகிறது. அக்காவைப் பார்க்கிறான் அம்மாவைப் பார்க்கிறான். அவன் பாசத்துடன் வளர்த்த சிவப்பி ஆடு அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றது.

அடையாள அட்டை இல்லாமல் எதுவுமே செய்யமுடியாது. முகாமுக்கு போயே தீரவேண்டும் இல்லாவிட்டால் நாளை அவர்கள் வீடுதேடி வரக்கூடும். அப்படி வந்தால் வீட்டில் எல்லோருக்கும்...வேட்டைநாயின் கோரமுகம் நினைவுகளில் வர,  வேறு தெரிவுகள் இன்றி முகாம் நோக்கி பயணிக்கிறான். கையைப் பிசைந்துகொண்டு, உறுத்தும் மனதோடு அவன் வீட்டு வாசலில் ஏதும் செய்யமுடியாத நிலையில் நண்பர்களாகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

இவ்வளவும் போய்ச் சேர்ந்திருப்பான். இப்போ வந்துகொண்டு இருப்பான். என்ன கேட்டிருப்பாங்கள் ,அடித்திருப்பாங்களோ, எங்களுக்குள் எதுவும் வாய்களால் பேசாவிட்டாலும் மனங்கள் பேசிக்கொண்டிருந்தன. அமைதியை குலைத்து எழுந்தது மூன்று சூட்டுச்சத்தம். அது காதுகளில் விழுந்த அதே கணத்தில் விட்டுக்குள் இருந்து தாயின் ஓலம் எழுந்தது. "ஐயோ சுட்டுப்போட்டாங்கள்"

நீண்ட அந்த வெளியின் நடுவீதியில், சைக்கிள் கால்களுக்கிடையில் கிடக்க, சாரம் உயர்ந்து முழங்கால் தெரிய விழுந்து கிடந்தான். தலையின் பின்புறமிருந்து வழிந்திருந்த குருதி வீதியின் கருமையோடு கலந்து தேங்கிநின்றது. நெற்றியில் வைத்திருந்த சந்தனப்பொட்டு அப்போதும் அப்படியேதான்  இருந்தது.  திறந்திருந்த அவன்  கண்களில் படர்ந்திருந்த அச்சம் அந்தக் கணத்தில் அங்கு பெருகத் தொடங்கியது.

நீண்ட அந்த வெளி அப்போதும் மௌனமாகவே கிடந்தது. அவன் சுடப்பட்ட அந்தக் கணத்தில் அந்த வெளியின் அரசமரத்தில் இருந்த பறவைகள் எல்லாம் கூச்சலிட்டுப் பறந்தனவாம்.

அதன் பின் ஒருபோதும் அவன் விழுந்த அந்த இடத்தை கடக்கவே இல்லை. இனியும் அதன் அருகில் போகும் துணிவும் இல்லை.

அன்று அவன் கண்களில் இருந்து பெருகிய நிர்ணயிக்கமுடியாத அந்த அச்சம் கலந்த உணர்வுப்படிவு என் அறைசுவர்களில் இருந்து பெருகி  என்னை மூழ்கடித்துவிடும். அந்தக் கணங்களில் என் உதடுகள் என்னையறியாமல்

"எரிக்கப்பட்ட காடு நாம் 
ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது.
எஞ்சிய வேர்களில் இருந்து 
இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் 
தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்
இல்லம் மீழ்தலாய்
மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய் 
சுகந்திர விருப்பாய் 
தொடருமெம் பாடல் 
என்ற கவிஞர் வ ஐ ச ஜெயபாலனின் வரிகளையே உதிர்த்து தேறும்.

இப்போது அந்த வெளி  மாறிப்போயும் இருக்கலாம். உயர்ந்த புகைப்போக்கிகளாலும்  இயந்திர ஓசைகளாலும் நாளை நிறைந்தும் போகலாம். மீண்டும் ஆஸ்பத்திரியும், நீர்த்தாங்கியும் திரும்ப எழக்கூடும். நீண்ட அந்த வீதியில் அங்காங்கே கடவைகள் போட்டு பள்ளிசெல்லும் மழலைகள் கடக்கவும் கூடும். மகாவலி ஆறு திசைதிருப்பட்டு வந்து கலந்து நன்செய் நிலங்களாக மாறியும் போகலாம்.

எது எப்படி மாறிப்போனாலும்,

உயர்ந்து நிற்கும் பனைமரங்களும், தொடர்ச்சியான ஈச்சம் பற்றைகளும், தடித்த இலைகளைக் கொண்டுயர்ந்த தாழை மரங்களும், அவைகளுடூடே வாழ்ந்து பெருகிப் போன அந்த பெயர் தெரியாப்பறவைகளும், இன்னும் அங்கேயே இருக்கும் முனியப்பரும், அந்த நிலத்தில் விளைந்து எங்கெல்லாமோ பரவும் உப்பும்  இந்த வெளியின் மௌனத்தினை மொழிபெயர்த்துக் கொண்டே இருக்கும்.

நன்றி 
முகடு சஞ்சிகை. 


Saturday 22 November 2014

உள்ளெரியும் தீ சுமந்தொரு தீபமேற்றுவோம்,

துயர் காவிகளாய்
இருண்டு கிடக்கின்றன வான்முகில்கள்

முகம் மழுங்கிச்
சிதைந்து எழுகிறது ஒளிமுதல்

விதை விழுந்த நிலத்தில்
கிளையெறிந்த பெருமரங்கள்
இயலாமையோடு மௌனித்துக் கிடக்கின்றன,

Thursday 20 November 2014

எனக்கு கவிதை வலி நிவாரணி --- திருமாவளவன் (நேர்காணல்)

திருமாவளவன். ஈழத்தின் வளம்பொருந்திய  வருத்தலைவிளான் (வலிவடக்கு தெல்லிப்பளை) கிராமத்தின் மண்வாசனையோடுயுத்தம் கனடாவுக்கு  தூக்கியெறிந்த  ஒரு ஆளுமை. இடதுசாரித்துவ  பின்னணியுடன் ஒரு நாடகக் கலைஞனாக  கிராமத்தோடு இயைந்திருந்த அவரை  கவிஞனாக்கியது புலப்பெயர்வு வாழ்க்கை.

பனிவயல் உழவு, இருள்யாழி, அஃதே இரவு அஃதே பகல், முதுவேனில் பதிகம் என்ற நான்கு கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், பத்தி எழுத்துகள், அரங்குசார் நிகழ்வுகள் எனத் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பவர். இவரின் இயற்பெயர் கனகசிங்கம்  கருணாகரன். யாழ் அருணோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் பழையமாணவர்.

Saturday 8 November 2014

கால வழு

காலம் உலர்த்த மறந்த நீர்
விரல்களில் ஒட்டிக் கொண்டது
தன்னிலை பகிராமல்..

வலிந்த
வெப்ப இழப்பினை உருவாக்கி,
திரட்டத் தொடங்கியது
ஆதிச் சிதைவுகளை,

Friday 31 October 2014

க விதை

உதட்டில் வழுக்கியதைக் கூட்டி
விரல்களில் ஏந்திக்
காற்றில் மிதந்ததில்  ஏத்தினேன்.

மிதந்தது  சுமந்ததன்
நிறைவேறாத கனவோடு
புணரமுயன்றதில்  உருமாறிக்கொண்டது.

Saturday 25 October 2014

நினைவில் வை...

காற்றினிலேயே 
மகரந்த தூதனுப்பி விட்டு 
மோகனவேலி கட்டி 
இளமையை காவல் செய்கிறாயே
முட்டாள் தான் நீ 

வண்டினை விரட்டிவிட்டு 
தேனினை என்ன செய்யப்போகிறாய்?

வாசலில் செருப்பினை வைத்துவிட்டு 
ஆட்களில்லை என்று எழுதி வைப்பது போல...

வெட்டிவிட முடியாத 
மனவிரல்கள் நீள்கின்றன 
என்ன செய்யப்போகிறாய்...

தாழிடப்பட்ட கதவுகள்

ஒற்றை சொற்களாய் உதிர்த்து
வானத்தை நிரப்பிய பின்,

உன்
துயரம் தோய்ந்த நாக்கு
என் தனிமையை தின்னத்தொடங்குகிறது.

இரவின் நீட்சியும்
வியர்வை நாற்றமும்
பிசுபிசுப்பின் அந்தரிப்பும்
மோகனத் தவம் கலைக்காமல்
சாய்ந்தெழும் பெருமூச்சும்
அவசத்துடன் பகிரப்படுகையில்

Tuesday 21 October 2014

இரவைத் தின்னும் நிலவு

நட்சத்திரங்கள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள்
காற்றினை நடுக்கமுற வைத்த இரவொன்றில்
தனிமையின் பயத்தால்
உனைப் பற்றிப்  பேசத்தொடங்குகிறேன்.

பிரிய தோழி,

நீ யன்னல் சீலைகளில் இருந்து இறங்கி
அறியப்படாத வர்ணமொன்றாகி
அறையெங்கும் நிறைகிறாய்.

Sunday 21 September 2014

காலத்தின் எதிரொலிகளைப் பாடுபவன் - நேர்காணல் கவிஞர் வாசுதேவன் .

க.வாசுதேவன். கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், என பன்முக ஆளுமைகளோடு இயங்கிக்கொண்டு இருப்பவர். தமிழ் மொழியில் முதன்முதலில் பிரெஞ்சுப் புரட்சியை எழுதிய ஈழப் புலம்பெயரி. எதையும் தர்க்கித்துப் பார்க்கும்  மொழியாடல் கொண்ட ஒருவர்.   இவைகளைக் கடந்து தமிழ் சமூகத்தின் ஒடுங்குதல் அல்லது உறைநிலை மீது பெரும் கோபம் கொண்ட ஒரு படைப்பாளி.
தொலைவில், அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே  ஆகிய இரண்டு கவிதைத்தொகுப்புகளையும் தேர்ந்து எடுக்கப்பட்ட 19 நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிதைகள் என்ற கவிதை மொழிபெயர்ப்பையும் பிரெஞ்சுப் புரட்சி என்ற வரலாற்று நூலினையும் எழுதி இருக்கிறார். 2007 ம் ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுப்பாக தொலைவில்கவிதைத் தொகுதி கனடா தமிழ் தொட்டத்தினரால் தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Thursday 21 August 2014

அந்த ஒருவனுக்காக காத்திருத்தல்.

பேசவேண்டும்
யார் இருக்கிறீர்கள்
வெறுமையாகிப்போன தேநீர்க் கோப்பையில்
நிறைகிறது என் குரல்.

நீங்கள் எனக்காவும் பேசுவதாக இருந்தால்
தேநீர்க் கோப்பையை கவிழ்த்துவிடலாம்
என் வெற்றிடங்கள் நிறைந்து கொள்ளும்.

Tuesday 5 August 2014

வலி மூலம்...

எதிர்கொள்ளமுடியாத நடுக்கமொன்றை
சிலிர்ப்பால் கடத்தியது
வாசலில் கூடுமுடைந்து அடைந்துகிடந்த தாய்ப்புறா.

வீடும்,
நாளைய தன் குஞ்சுகளும்
நினைவுகளில் நீண்டிருக்கும்...

மரம் தேடி
நிலைகொள்ளுமொரு கிளை பார்த்து
சிறுசுள்ளி வளைத்து,
துணைகூடி வீடமைத்து இயல்பான வாழ்வென்று
இணைபுணர்ந்த நேற்றையை நினைத்திருக்கும்.

Wednesday 30 July 2014

இனி வரும் காலம்

அரங்கேறிய இருத்தல்கள்
அலைகின்ற பெருவெளியில்
என் காலமும் ..

யுகாந்திரக் கூச்சல்களும்
வஞ்சிக்கப்பட்டவர்களின்  பெருமூச்சுகளும்
ஆசிர்வதிக்கப்படவனின் ஆசிகளும்
வழியெங்கும் நீர்த்துக் கிடக்க,

Monday 28 July 2014

குறிகளை தின்னும் சுடுகுழல்கள்...

ஆமணக்கும் நெருஞ்சியும்
பூவரசும் பனங்கூடல்களும் இயல்பிழந்து போக
அரசமரங்கள் எழில் கொள்கின்றது,

மின்குமிழ்களின் பின்னும்
தொலைபேசிக் கோபுர அடிகளிலும்
தொடரூந்து தண்டவாள இடைவெளிகளிலும்
யாருமறியாமல் நிறைந்துகிடக்கிறது
பேரிருள் சூழ்ந்த மௌனமொன்று..

Sunday 20 July 2014

ஒலித்துக்கொண்டிருக்கும் இசை....

எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் வாசிக்க முடியாது. அப்படி வாசிப்பது  என்பதும் உண்மையில் அது ஒரு ஆழமான வாசிப்பாகவும் இருக்கமுடியாது. அதுவும் கவிதைகள் என்றால், அதனை உள்ளுணர்ந்து வாசிக்கவும், அதன் அழகுணர்ச்சியில் மூழ்கிப்போகவும் அதனோடு ஒன்றிணைந்து பயணிக்கவும், தனியானதும் நேர்த்தியானதுமான ஒரு வேளை அல்லது சந்தர்ப்பம் அமையவேண்டும் என்பது என் அனுபவமாக இருக்கிறது. சிலருக்கு வேறுவிதமாகவும் இருக்ககூடும்.

Wednesday 16 July 2014

முத்தப்பா.


முத்தப்பா,  வயது எழுபது . ஊரின் கால அடையாளம்.

பெரு மழை இரவுகளிலும் நூலகத்தின் வாசலில் குந்தி இருப்பார். அல்லது கோயிலடி மடத்தில் படுத்திருப்பார். கம்பராமாயணம் முதல் சகுந்தலா காவியம் வரையும், கிளிண்டன் முதல் ஜாக்கிசான் வரையும் அவரிடம் தகவல் இருந்தது. பட்டிமன்றங்களிலும் சரி ஐயர் ஓதும் மந்திரங்களிலும் சரி பிழை பிடித்து ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது முத்தப்பாவினதாகவே இருக்கும்.


இப்படிதான் ஒரு திருமண நிகழ்வில் ஐயர் வீடு குடிபுகும் போது சொல்ல வேண்டிய  மந்திரத்தை சொல்லிவிட்டார் என்று சண்டையைக் தொடக்க..ஐயர் இங்கேயும்  இப்ப நடப்பது புது வீடு குடிபுகுதல் மாதிரித்தான் அதனால் இந்த மந்திரமும் சொல்லலாம் என்று சமாளிச்சு போனதை  அம்மா நெடுக சொல்லுவார். எந்தளவு படிச்ச மனுசன் எப்படி வாழ்ந்திருக்க வேண்டியவர் பார் என்னமாதிரி இருக்கிறார் என்று.. அவரின் அந்த இருப்பு ஊடாக  வாழ்க்கையை கற்றுக்கொடுக்க நெடுக முனைவார். அம்மா.

Tuesday 20 May 2014

என் தமிழாசான் திரு. ஆழ்வாப்பிள்ளை சுப்பிரமணியம்.

அகரம் உணரத்தியவர்.
அகவயம் இழந்து உறங்கிவிட்டார். 
காற்றுவழி தகவல் காதடைந்த கணத்தில்
உயிருடன் மெய்யும்  ஒருகணம் நடுங்க அமைதியாகினேன்.

என்றாவது ஒருநாள் ஊரடையும் போதில் அவர் முன்னால்,
கைகட்டி எழுந்து நிற்கவேண்டும் என்ற என் மனப்படிமம் குறுகிக் கிடக்கிறது.

அடங்காப்பிள்ளை
பாடசாலையில் மட்டுமா 
கோவிலில், மைதானத்தில் எங்குமே எப்போதுமே..

Saturday 26 April 2014

எட்டாவது வர்ணம்..

நிலவின் நிர்வானத்தால்  
கடல் தினவு கொள்ளும் இரவுகளில் 
உன்னிரு இதழ்களிலும் வழிகிறது
சுயத்தை தின்றுவிடும் சூட்சுமம்..

நம் அன்பு
தொலைந்துபோன எட்டாவது வர்ணம்
மழைப்பொழுதில் விழுந்து தொலைக்கும் மின்னலின் கனம்

புல்நுனிகளில் திரளும் நீர்
யாருமறியாமல்
எங்கிருந்தோ எழுகிறது மறைகிறது
உனக்குள் தொலைந்து போதலும்..

Thursday 10 April 2014

துளிகளால் அழிதல்

வேர்முடிச்சுக்களில் ஒளிந்துகொண்டவனை
தின்றுவிட தயாராகிறது
பெரும் பூதமொன்று..

முதலில்
ஒற்றைத்துளியாகத்தான் விழுந்தது.

வெப்பத்தாலோ
காற்றாலோ ஆவியாகிவிடாமல்
அடையாளமாகிப் பூத்துக் கிடந்த
அந்த முதல் துளி
வெறுமையை உடைத்து
அலங்கரித்துக்கொண்டது தன்னை..

Saturday 5 April 2014

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் -ஒரு பார்வை

    ஒரு கவிதைப் படைப்பானது எப்போது உணர்வுகளை ஊடுருவிச் செல்கின்றதோ அப்போதே  அது ஒரு வெற்றிபெற்ற படைப்பாகிறது. அப்படியானதொரு படைப்பினை வெறுமனே கற்றுக் கொள்வதாலோ அல்லது அனுபவத்தாலோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிகழ்தலின் உண்மையை உணர்ந்து,  உணர்ச்சிகளால்  ஊடுருவி பார்க்கும் பார்வை யாருக்கு வாய்கிறதோ, அந்த பார்வையில்  ஒரு அழகியல் கலந்து உணர்வுகளை தளம்பச்செய்யும் வகையில் யாரால் வெளிவிட முடிகிறதோ அவரால் மட்டுமே வெற்றிபெற்ற ஒரு  கவிதையை பிரசவிக்க முடியும்.

  அந்தவகையில் "நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்" என்ற காரண கரியத் தொடர்புகளை  தன்னிலை சார்ந்து வெளிக்கொண்டுவந்துள்ளார் பூங்குழலி வீரன். அவர் தன்னிலை சார்ந்து அவற்றை வெளிக்கொண்டு வந்த போதிலும் ஒவ்வொருவரையும் தன்வயப்படுத்தி ஒருமுறை தம் சொந்த நினைவுகளுள் மூழ்கிப் போக வைக்கிறது. கடந்துபோனவைகளை நினைத்து ஒரு பெருமூச்சினை வெளிவிடத்தூண்டுகிறது. கழிந்த மற்றும் வரப்போகும் நாட்களின் மறு பக்கத்தை எளிமையாக வெளிக்கொண்டுவந்து வாசிப்பவர்களை உணர்ச்சிகளின் திரளுக்குள் ஆழ்த்தி வைப்பதனூடாக தன்னை வெளிக்கொண்டுவரும் அவரை ஒரு காத்திரமான கவிஞராக அடையாளப்படுத்த முடியும்.

Sunday 30 March 2014

நான் ஒதுங்கும் நிழல் நீ

காற்று கொதிக்கிறது
நீ மௌனத்தை கரைத்திருக்கிறாய்
மரங்களும் ஏரிகளும் கூட எரிந்துபோகலாம் இனி..

ஏன் இந்த இளவேனில் பொழுதில்
உன் விழிகள் துயரப் பாடலை கேட்கிறது..

Thursday 27 March 2014

இவர்களுக்கிடையில் நானும்....

முகங்களுக்காக நெய்யப்படும்
புன்னகைகளின் ஓரங்களில்
கசிந்து கொண்டிருக்கிறது
மரணித்துப்போன கனவுகளின் வாசங்கள்..

முகவரிகள் மீது  பரிமாறப்படும்
வணக்கங்கங்களும்  வாழ்த்துக்களும்
கூசவைக்கிறது உடலையும், மனதையும்
இந்த நாகரீகத்தைப் போல..

Sunday 23 March 2014

ஒ கட்டியக்காரர்களே எங்கு போனீர்கள் ?.........

சாம்பல் பூக்களின் 
கண்ணீரை திருடும் தேசமிது ..
வெந்து வடியும் ஊழியின் 
பெருமூச்சுக்களை தின்று களிக்கும் கூட்டமுமிது
இயலாமையின் ஓலங்களின் மீது 
வக்கிரக்குறிகளால் புணரும் அரசுமிது..

ஒ கட்டியக்காரர்களே..
எங்கு போனீர்கள் ?

சாவுப் பட்டியலில் புள்ளடியிடுகிறீர்களா ஜெனிவாவில்?

கண்ணீரால்  நிரம்பிய எங்கள் 
வாசல்களில் கால் நனைத்தீர்களே.. 

நீரருந்தி நிமிர்ந்து 
நல்ல உணவருந்தி 
இன்னும் ஓராண்டு உள்ளக விசாரணைக்கு  
ஒப்புதல் அளியுங்கள்.. 

பிணங்களைப் புணர்ந்தவர்கள் காவலில் 
தேவதைகள் சிறகு விரிப்பதாக 
வரைவுகளை எழுதுங்கள்...

இருள் மூடிக்கிடக்கிறது எங்கள் வானம் 
நட்சத்திரங்களையும் சூரியனையும் தொலைத்துவிட்டு..
பேரமைதியோடு அடங்கிக் கிடக்கிறது காற்றும் கடலும்..
இரவுகளில் கூவைகளும் வல்லூறுகளும் காவலுக்கு வருகின்றன..
பகல்களில் குருதி தோய்ந்த பற்களுடன் திரும்புகின்றன 

ஒ கட்டியக்காரர்களே 
எங்கு போனீர்கள்..

விபூசிகாவும் நிருபனும் 
இன்னும் கேதீச்சர மனிதர்களும் 
ஆசீர்வதிக்கப்படவர்களா உங்களால் ????

குருதிகளும் நிணங்களும் 
எலும்புகளும் கிழிக்கப்பட்ட மனிதர்களும் 
ஓலங்களும் கண்ணீர்களும் 
வெற்றுப் பதிவுகளா உங்களுக்கு..

வாருங்கள் 
அடுத்த வருடமும்,
உங்களுக்கென்ன புள்ளிவிபரங்கள் தானே குறியீடு.. 
கண்ணீரால் நிரம்பிய வாசல்கள் 
சவக்குழிகளால் நிரம்பியிருக்கும் 
வந்து கால் பதித்து பதிந்து செல்லுங்கள்...











பொங்குதமிழ் இணையத்தில் வெளியான கவிதை.
http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=9f9da8b6-05e7-4c49-bb2f-b2446b757df4

Tuesday 18 March 2014

உனக்காகவும் அழத்தான் முடிகிறது இன்றில்...

விதைகளை தின்னும் தேசத்தில் 
முகிழ்த்தவளே, 
கனவுகளை கருவறுக்கும் 
கொலைவாள்களிடையே எழுந்தவளே..

இழப்பின் வலிகளை 
மொழிகளால் இறக்க முனைந்தவளே 
இழிகாலதில் இறங்கிய 
ஊழியின் மகளே..

குருதி குடிக்கும் பேரினத்தின் 
குரல்வளையில் விலங்கு பூட்டவா
நீ எழுந்தாய் ...
இல்லையே..
அண்ணன்களோடு ஆனந்தவாழ்வு கேட்டுதானே
நீ அமர்ந்தாய் வீதியில்...

விபூசிகா...
வலி முடிவொன்றின் வழக்குரைத்தவளே

உன் 
குரலணுக்களின் தீண்டலால் 
தீப்பற்றியெரிந்த வெளிகளிலும் 
கருகி நைந்துபோன திடல்களிலும் 
ஆயிரமாயிரம் விழிகள் திறந்து கண்ணீர் வடிகின்றன..

வேரீரமிழந்து 
இலையுருத்திக்  கிளைசிதைந்து போன பெருமரத்தில் 
கூடுகள் அழுகின்றன.

உடல்சுமந்த
குற்றவுணர்வோடு குனித்து நிற்கின்றோம்..
எட்டப்பர்கள் நாங்கள்தான் தங்கையே.. 

காத்திரு 
என்றெப்படி உரைப்பது
பொறுத்திருக்கும் இக்காலம் வல்லமையில்லாதது...
அழுகைக்கும் கண்ணீருக்கும் தொழுகைக்கும்
அர்ப்பணிக்கப்பட்டவர்கள் நாங்கள்
உனக்காகவும் அழத்தான் முடிகிறது இன்றில்...






Wednesday 26 February 2014

ஒரு கோழிக் கள்ளனின் ஒப்புதல் வாக்குமூலம்...

எனக்குள் சிரித்துக்கொண்டே கோழியினை வெட்டிக்கொண்டிருந்தேன் கடையில்,
..
நீண்ட நேரமாக கவனித்திருப்பான் போல 
பக்கத்தில வந்து "கோழியைப் பார்த்து எதுக்கு சிரிக்கிறாய்" என்று கேட்டான் வெள்ளை... 

"அட போடா உனக்கு எங்கே புரியும்... எனக்கும் கோழிகளுக்குமான உறவு" என்று மனதுக்குள் எண்ணியபடி பெருமூச்சுடன்  "ஒன்றுமில்லை" என்றுவிட்டு வேலையை தொடர்ந்தேன். 

Wednesday 19 February 2014

இழப்பின் வ(த)ளர்வு

பாதச் சுவடுகளால் 
கலைந்திருந்த அழகிய முற்றத்தில்.. 

நிசப்தங்கள்
நிறைந்துகிடக்கும்..

முல்லையும் பூவரசும்
கருமை பூண்டு  கனத்து நிற்கும்

ஓணான்களும் அறணைகள்
அமைதிக்குள் நகரும்..
குயில்களும் புலுனிக் குருவிகளும்
அரைவிழியில் உறங்கிக் கிடக்கும்..

முழுதும் முழுதும்
வற்றிப் போயிருக்கும்,
நேற்று
நீ இருந்த முற்றம்...

நேர காலமின்றி
வரவுகளால் நிறைந்திருந்த
முற்றம் அது..

தூணிலும்
கதவிலும் படிந்த கருமை
நிழல்களை தோற்றுவிக்கும்
யாருக்காவது
இப்போது...

நீ பிரிந்தபின்
மொழியின் இனிமை தொலைந்து போனது
விழியின் வெளிச்சம் கலைந்து போனது

வெளித்தெரியாத இறப்பொன்றுடன் கைகோர்த்து 
வளர்ந்து கொண்டிருக்கின்றன
என் நினைவுகளும் கனவுகளும்...

அந்த முற்றத்தில் நீ
சிந்திச் சென்ற மௌனங்களும்
சலனமில்லாத கடைசிப் பார்வைகளும்
இன்னும் அலைந்துகொண்டிருக்கும்
என்னைப் போலவே...

அம்மா.....


Sunday 9 February 2014

ரகசியத்தின் நாக்குகளால் பேசுகிறேன்.....

ரகசியத்தின் நாக்குகள். 

வெளியீடு கண்டுவிட்டது. 

எனது மண்ணில், எனது நண்பர்கள் முன்னிலையில், என்னை வழிநடத்திய நல் ஆசான்கள் முன்னியில், இந்த வெளியீடு  நடைபெற வேண்டும் ஆசைப்பட்டேனோ  அதேபோல, சிறப்பாகவும், எளிமையாகவும் நடைபெற்று முடிந்திருகிறது. நான் கலந்து கொள்ளமுடியாதமைக்கு உங்களிடம் ஆழந்த மன்னிப்பினை கேட்கிறேன். 

ஒரு படியில் அதுவும் முதற் படியில் ஏறி இருக்கிறேன். நீங்கள் கரம்  கொடுத்து ஏற்றிவிட்டிருக்கிறீர்கள்.

Saturday 8 February 2014

சருகுகள்.

       மணிக்கூட்டினைப் பார்த்தான் குமார். ஆறுமணி காட்டியது.



"ஐயா  உதில ஒருக்கா காசு  கொடுக்கணும் . இப்ப உடன வந்திடுவன்".|

என்றபடி, படியைநோக்கி  வந்தவனுக்கு முன்னால், மிக வேகத்தோடு வந்து முன் பின் பிரேக்குகளை ஒரே சமயத்தில் அழுத்திப்பிடித்து ஆடிவிட்டு நின்றது பல்சர். அதில் இருந்தது  ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவன்.



"அண்ண சீக்கரெட் இருக்கோ" மோட்டர்சைக்கிளில் இருந்தபடி கேட்டான்.



" உமக்கு தரேலாது நீர் சின்னப்பொடியன்." என்றான் குமார்.

அப்போதுதான் கடைக்குள் இருந்து குமாருக்கு உதவியாக வேலைசெய்யும் ஐயா எட்டிப்பார்த்தார்.

"அண்ண எனக்கில்ல அப்பாதான்  வேண்டிவரச்சொன்னவர் அதுதான் நான் வந்தனான்" என்றான். இப்போது மோட்டர்சைக்கிளை விட்டு இறங்கி கடையின் சாமான் வேண்டும் பகுதியை அண்மித்திருந்தான்.

Sunday 2 February 2014

ஒளிதல்

நீ எங்கோ ஒளிந்திருக்கிறாய்  
உனது தேவை என்ன சூடான ஒரு கண்ணீர்த்துளியா ?
  
மரங்களின் மௌனத்தால் 
பறவைகள் அழுகின்றன
யாருக்கு யார் 

மெல்லியதாக பரவுகிறது  ஒரு கேவல் ஒலி 
என்ன நிகழ்ந்திருக்கும்..
ஒரு பகிரமுடியாத மரணம் 
ஒரு விபத்து 
காமம் தீராத ஒரு கலவி 
குறைந்த பட்சம் 
இன்னொரு காதல் தோல்வி..

மெல்ல காற்று குளிர்கிறது
வானம் அழக் காத்திருகிறது
நனையக் காத்திருக்கிறேன் 
மழையில் கண்ணீரில்

Sunday 26 January 2014

அரிதாரம் பூசிய விலங்குகள்.


மடிகளை உள்ளிழுத்த மாடுகள்
காலவெற்றிடத்தில்  உறுமத் தொடங்கி
நாணயக்கயிற்றுக்குள் வளைந்து
உடல் சிலுப்பி நிலம் விறாண்டி
மூச்செறியவும் செய்தன..

புளுதிகளையும் மூச்செறியும் கனதியையும்
வலியேதுமில்லாமல் வழிந்த
வீணீர்களையும்  முகர்ந்த உண்ணிகள்
தாமும் கூட உறுமமுயன்று
உருத்திரதாண்டவமாடின...

எரிந்து கிடக்கும் நிலத்தின்
எச்சங்களை தின்றும்,
உறைந்துபோன மனங்களின்
மர்மங்களை கொன்றும்,
ஈரமிழந்த வேர்களிலா
லும் உயிர்ப்பை சுமக்கும்
புனிதர்கள் தோள்கள் மீதேறியும்,

இன்னலற்ற சுவரோரம்
முதுகு தேய்த்து உண்ணவும் உறங்கவும்
ஆகுதிகளை வைத்து அவிபாகம் பெறவும்
மடிகளை மறைத்து
உறுமத்தொடங்கின கறவைமாடுகள்..

மேச்சல்நிலம் கொண்ட
மாடுகளின் ஏவறைகளுக்கும்
ஓய்வுநேர அசைபோடலுக்கும்
அர்த்தமாயிரம்  கற்பித்துக்கொண்ட
கூடுதொலைத்த குருவிகளின் கூட்டமொன்று
பின்னாவர்த்தனம் பாடத்தொடங்கின..

மடிமறைத்த மாடுகளின் உறுமலும்
உண்ணிகளின் தாண்டவமும்
பூகோள திசைகளில் எதிரொலிக்க,
காடுகளிலும் கூடுகளிலும்
சிரித்துக்கொண்டன
உறுமி மௌனித்துப்போனவைகள்...

Sunday 19 January 2014

யாரிடமிருக்கிறது...

அதிக பட்ச தேவை
ஒரு புன்னகை
யாரிடமிருக்கிறது..
விடை அல்லது கேள்வி
இவற்றை விடுத்து....

விரல்களால் வழிகிறது 
கால துயரத்தின் நீட்சி 
கொடுங்கள். 
நிர்வாணத்தின் மறைப்புக்களை 
களையும் அந்த புன்னகையை.

கேட்பதற்கான தகுதி என்னிடமிருக்கிறது.

என்னிடமிருப்பது 
ஒரு நாற்காலி 
ஒரு மேசை 
கொஞ்ச புத்தகங்கள் 
நிறைய வெற்றிடத்தோடு  மனதும்.

Thursday 16 January 2014

புலம்பெயர் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளிடம் ஒரு கோரிக்கை.

       புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகத்தின்  கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுதளத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு ஆற்றொழுக்கான மாற்ற நிலையினை அண்மைய காலங்களில் அனுபவிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த மாற்ற நிலையானது புலம்பெயர் தமிழ் இலக்கிய தரத்தினை மேம்படுத்துகிறதா என்று நோக்கினால் அதற்கான பதில் ஒரு மௌனம் கலந்த பெருமூச்சாகவே இருக்கிறது.

ஒரு வாசகனின் வெளிப்பார்வைக்கு ஒரு கவர்ச்சிகரமான உலகமாக தோற்றமளிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழ் படைப்பாளிகள் சமூகம் மிக கேவலமான பண்புசார் உத்திகளுடன் தான் இன்று தமக்கான தளத்தினை கட்டமைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஒரு குறிப்பிட்ட கால இயங்கு நிலை இழந்த அல்லது மறுக்கப்பட்ட ஒரு தரப்பினரும், தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கும் ஒரு தரப்பினரும், மட்டுமில்லாமல் இயங்கு நிலை மறுக்கப்பட்ட போதிலும் அதனை உடைத்து தமக்கான இலக்கிய தளத்தினை கட்டமைத்த ஒரு தரப்பினரும், என தம்பண்புசார் நிலைகளில் இயங்குகின்ற ஒரு தளப்பின்னணியூடாகவே இன்று புலம்பெயர் இலக்கிய தளத்தினை நோக்கவேண்டி உள்ளது.

Thursday 2 January 2014

வண்ணாத்துப் பூச்சிகள் மீண்டும் இளைப்பாறும்

விடைபெறும் ஆண்டே 
விதைத்து விட்டு போகிறாய் 
பலவற்றை எம்  வயல்களில்...

அறுவடைக் காலத்திற்காய் 
காத்திருக்கும் வலிமையையும் 
விளைவுகளை சாதகமாக்கும் திண்மையையும் 
தந்துவிட்டு போ....

கண்ணீரின் கனதி சுமந்த காற்றும் 
கலைந்த கனவுகளின் ஓலங்களும் 
பேரிருள் ஏறிய உறைவிடங்களில் நிறைந்துபோக,

ஏக்கங்களும் ஏமாற்றங்களும் 
யுகாந்திர காத்திருப்புக்களும் 
மௌனமாக வாழ்விடங்களில் நிலைத்துப்போக,

இயலாமை சுமந்து 
விடை கொடுக்கிறோம். 

கருவழிந்த காலத்தின் குறியீடே... 

உயிர்ப்பினை ஒளித்துவிட்டு 
சாம்பல் பூசி அடங்கிக்கிடக்கும் கிளைகள் மீதினில்
மோதட்டுமுன்  ஊழியின் பெருங்காற்று.

மக்கிப்போகாத எலும்புகள் மீதும் 
மண்தின்ற தசைத் துண்டங்கள் மீதும் 
இறங்கட்டுமுன்  பிரளயம்.

இனி 
பகை கொண்டநிலம் மேவி 
நிறைகொண்டு தமிழ் எழுந்திட  
வானம்பாடிகளும் வண்ணத்துப் பூச்சிகளும் 
இளைப்பாறிடும் சோலையாகட்டுமென் தேசம். 

காலத்தின் திசுக்கள் மீது எழுதட்டும் 
கருவழிந்த கதையையும் 
மீள கருப்பெற்ற கதையையும்....