Sunday 26 January 2014

அரிதாரம் பூசிய விலங்குகள்.


மடிகளை உள்ளிழுத்த மாடுகள்
காலவெற்றிடத்தில்  உறுமத் தொடங்கி
நாணயக்கயிற்றுக்குள் வளைந்து
உடல் சிலுப்பி நிலம் விறாண்டி
மூச்செறியவும் செய்தன..

புளுதிகளையும் மூச்செறியும் கனதியையும்
வலியேதுமில்லாமல் வழிந்த
வீணீர்களையும்  முகர்ந்த உண்ணிகள்
தாமும் கூட உறுமமுயன்று
உருத்திரதாண்டவமாடின...

எரிந்து கிடக்கும் நிலத்தின்
எச்சங்களை தின்றும்,
உறைந்துபோன மனங்களின்
மர்மங்களை கொன்றும்,
ஈரமிழந்த வேர்களிலா
லும் உயிர்ப்பை சுமக்கும்
புனிதர்கள் தோள்கள் மீதேறியும்,

இன்னலற்ற சுவரோரம்
முதுகு தேய்த்து உண்ணவும் உறங்கவும்
ஆகுதிகளை வைத்து அவிபாகம் பெறவும்
மடிகளை மறைத்து
உறுமத்தொடங்கின கறவைமாடுகள்..

மேச்சல்நிலம் கொண்ட
மாடுகளின் ஏவறைகளுக்கும்
ஓய்வுநேர அசைபோடலுக்கும்
அர்த்தமாயிரம்  கற்பித்துக்கொண்ட
கூடுதொலைத்த குருவிகளின் கூட்டமொன்று
பின்னாவர்த்தனம் பாடத்தொடங்கின..

மடிமறைத்த மாடுகளின் உறுமலும்
உண்ணிகளின் தாண்டவமும்
பூகோள திசைகளில் எதிரொலிக்க,
காடுகளிலும் கூடுகளிலும்
சிரித்துக்கொண்டன
உறுமி மௌனித்துப்போனவைகள்...

Sunday 19 January 2014

யாரிடமிருக்கிறது...

அதிக பட்ச தேவை
ஒரு புன்னகை
யாரிடமிருக்கிறது..
விடை அல்லது கேள்வி
இவற்றை விடுத்து....

விரல்களால் வழிகிறது 
கால துயரத்தின் நீட்சி 
கொடுங்கள். 
நிர்வாணத்தின் மறைப்புக்களை 
களையும் அந்த புன்னகையை.

கேட்பதற்கான தகுதி என்னிடமிருக்கிறது.

என்னிடமிருப்பது 
ஒரு நாற்காலி 
ஒரு மேசை 
கொஞ்ச புத்தகங்கள் 
நிறைய வெற்றிடத்தோடு  மனதும்.

Thursday 16 January 2014

புலம்பெயர் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளிடம் ஒரு கோரிக்கை.

       புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகத்தின்  கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுதளத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு ஆற்றொழுக்கான மாற்ற நிலையினை அண்மைய காலங்களில் அனுபவிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த மாற்ற நிலையானது புலம்பெயர் தமிழ் இலக்கிய தரத்தினை மேம்படுத்துகிறதா என்று நோக்கினால் அதற்கான பதில் ஒரு மௌனம் கலந்த பெருமூச்சாகவே இருக்கிறது.

ஒரு வாசகனின் வெளிப்பார்வைக்கு ஒரு கவர்ச்சிகரமான உலகமாக தோற்றமளிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழ் படைப்பாளிகள் சமூகம் மிக கேவலமான பண்புசார் உத்திகளுடன் தான் இன்று தமக்கான தளத்தினை கட்டமைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஒரு குறிப்பிட்ட கால இயங்கு நிலை இழந்த அல்லது மறுக்கப்பட்ட ஒரு தரப்பினரும், தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கும் ஒரு தரப்பினரும், மட்டுமில்லாமல் இயங்கு நிலை மறுக்கப்பட்ட போதிலும் அதனை உடைத்து தமக்கான இலக்கிய தளத்தினை கட்டமைத்த ஒரு தரப்பினரும், என தம்பண்புசார் நிலைகளில் இயங்குகின்ற ஒரு தளப்பின்னணியூடாகவே இன்று புலம்பெயர் இலக்கிய தளத்தினை நோக்கவேண்டி உள்ளது.

Thursday 2 January 2014

வண்ணாத்துப் பூச்சிகள் மீண்டும் இளைப்பாறும்

விடைபெறும் ஆண்டே 
விதைத்து விட்டு போகிறாய் 
பலவற்றை எம்  வயல்களில்...

அறுவடைக் காலத்திற்காய் 
காத்திருக்கும் வலிமையையும் 
விளைவுகளை சாதகமாக்கும் திண்மையையும் 
தந்துவிட்டு போ....

கண்ணீரின் கனதி சுமந்த காற்றும் 
கலைந்த கனவுகளின் ஓலங்களும் 
பேரிருள் ஏறிய உறைவிடங்களில் நிறைந்துபோக,

ஏக்கங்களும் ஏமாற்றங்களும் 
யுகாந்திர காத்திருப்புக்களும் 
மௌனமாக வாழ்விடங்களில் நிலைத்துப்போக,

இயலாமை சுமந்து 
விடை கொடுக்கிறோம். 

கருவழிந்த காலத்தின் குறியீடே... 

உயிர்ப்பினை ஒளித்துவிட்டு 
சாம்பல் பூசி அடங்கிக்கிடக்கும் கிளைகள் மீதினில்
மோதட்டுமுன்  ஊழியின் பெருங்காற்று.

மக்கிப்போகாத எலும்புகள் மீதும் 
மண்தின்ற தசைத் துண்டங்கள் மீதும் 
இறங்கட்டுமுன்  பிரளயம்.

இனி 
பகை கொண்டநிலம் மேவி 
நிறைகொண்டு தமிழ் எழுந்திட  
வானம்பாடிகளும் வண்ணத்துப் பூச்சிகளும் 
இளைப்பாறிடும் சோலையாகட்டுமென் தேசம். 

காலத்தின் திசுக்கள் மீது எழுதட்டும் 
கருவழிந்த கதையையும் 
மீள கருப்பெற்ற கதையையும்....