Wednesday, 26 February 2014

ஒரு கோழிக் கள்ளனின் ஒப்புதல் வாக்குமூலம்...

எனக்குள் சிரித்துக்கொண்டே கோழியினை வெட்டிக்கொண்டிருந்தேன் கடையில்,
..
நீண்ட நேரமாக கவனித்திருப்பான் போல 
பக்கத்தில வந்து "கோழியைப் பார்த்து எதுக்கு சிரிக்கிறாய்" என்று கேட்டான் வெள்ளை... 

"அட போடா உனக்கு எங்கே புரியும்... எனக்கும் கோழிகளுக்குமான உறவு" என்று மனதுக்குள் எண்ணியபடி பெருமூச்சுடன்  "ஒன்றுமில்லை" என்றுவிட்டு வேலையை தொடர்ந்தேன். 

Wednesday, 19 February 2014

இழப்பின் வ(த)ளர்வு

பாதச் சுவடுகளால் 
கலைந்திருந்த அழகிய முற்றத்தில்.. 

நிசப்தங்கள்
நிறைந்துகிடக்கும்..

முல்லையும் பூவரசும்
கருமை பூண்டு  கனத்து நிற்கும்

ஓணான்களும் அறணைகள்
அமைதிக்குள் நகரும்..
குயில்களும் புலுனிக் குருவிகளும்
அரைவிழியில் உறங்கிக் கிடக்கும்..

முழுதும் முழுதும்
வற்றிப் போயிருக்கும்,
நேற்று
நீ இருந்த முற்றம்...

நேர காலமின்றி
வரவுகளால் நிறைந்திருந்த
முற்றம் அது..

தூணிலும்
கதவிலும் படிந்த கருமை
நிழல்களை தோற்றுவிக்கும்
யாருக்காவது
இப்போது...

நீ பிரிந்தபின்
மொழியின் இனிமை தொலைந்து போனது
விழியின் வெளிச்சம் கலைந்து போனது

வெளித்தெரியாத இறப்பொன்றுடன் கைகோர்த்து 
வளர்ந்து கொண்டிருக்கின்றன
என் நினைவுகளும் கனவுகளும்...

அந்த முற்றத்தில் நீ
சிந்திச் சென்ற மௌனங்களும்
சலனமில்லாத கடைசிப் பார்வைகளும்
இன்னும் அலைந்துகொண்டிருக்கும்
என்னைப் போலவே...

அம்மா.....


Sunday, 9 February 2014

ரகசியத்தின் நாக்குகளால் பேசுகிறேன்.....

ரகசியத்தின் நாக்குகள். 

வெளியீடு கண்டுவிட்டது. 

எனது மண்ணில், எனது நண்பர்கள் முன்னிலையில், என்னை வழிநடத்திய நல் ஆசான்கள் முன்னியில், இந்த வெளியீடு  நடைபெற வேண்டும் ஆசைப்பட்டேனோ  அதேபோல, சிறப்பாகவும், எளிமையாகவும் நடைபெற்று முடிந்திருகிறது. நான் கலந்து கொள்ளமுடியாதமைக்கு உங்களிடம் ஆழந்த மன்னிப்பினை கேட்கிறேன். 

ஒரு படியில் அதுவும் முதற் படியில் ஏறி இருக்கிறேன். நீங்கள் கரம்  கொடுத்து ஏற்றிவிட்டிருக்கிறீர்கள்.

Saturday, 8 February 2014

சருகுகள்.

       மணிக்கூட்டினைப் பார்த்தான் குமார். ஆறுமணி காட்டியது."ஐயா  உதில ஒருக்கா காசு  கொடுக்கணும் . இப்ப உடன வந்திடுவன்".|

என்றபடி, படியைநோக்கி  வந்தவனுக்கு முன்னால், மிக வேகத்தோடு வந்து முன் பின் பிரேக்குகளை ஒரே சமயத்தில் அழுத்திப்பிடித்து ஆடிவிட்டு நின்றது பல்சர். அதில் இருந்தது  ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவன்."அண்ண சீக்கரெட் இருக்கோ" மோட்டர்சைக்கிளில் இருந்தபடி கேட்டான்." உமக்கு தரேலாது நீர் சின்னப்பொடியன்." என்றான் குமார்.

அப்போதுதான் கடைக்குள் இருந்து குமாருக்கு உதவியாக வேலைசெய்யும் ஐயா எட்டிப்பார்த்தார்.

"அண்ண எனக்கில்ல அப்பாதான்  வேண்டிவரச்சொன்னவர் அதுதான் நான் வந்தனான்" என்றான். இப்போது மோட்டர்சைக்கிளை விட்டு இறங்கி கடையின் சாமான் வேண்டும் பகுதியை அண்மித்திருந்தான்.

Sunday, 2 February 2014

ஒளிதல்

நீ எங்கோ ஒளிந்திருக்கிறாய்  
உனது தேவை என்ன சூடான ஒரு கண்ணீர்த்துளியா ?
  
மரங்களின் மௌனத்தால் 
பறவைகள் அழுகின்றன
யாருக்கு யார் 

மெல்லியதாக பரவுகிறது  ஒரு கேவல் ஒலி 
என்ன நிகழ்ந்திருக்கும்..
ஒரு பகிரமுடியாத மரணம் 
ஒரு விபத்து 
காமம் தீராத ஒரு கலவி 
குறைந்த பட்சம் 
இன்னொரு காதல் தோல்வி..

மெல்ல காற்று குளிர்கிறது
வானம் அழக் காத்திருகிறது
நனையக் காத்திருக்கிறேன் 
மழையில் கண்ணீரில்