Sunday, 30 March 2014

நான் ஒதுங்கும் நிழல் நீ

காற்று கொதிக்கிறது
நீ மௌனத்தை கரைத்திருக்கிறாய்
மரங்களும் ஏரிகளும் கூட எரிந்துபோகலாம் இனி..

ஏன் இந்த இளவேனில் பொழுதில்
உன் விழிகள் துயரப் பாடலை கேட்கிறது..

Thursday, 27 March 2014

இவர்களுக்கிடையில் நானும்....

முகங்களுக்காக நெய்யப்படும்
புன்னகைகளின் ஓரங்களில்
கசிந்து கொண்டிருக்கிறது
மரணித்துப்போன கனவுகளின் வாசங்கள்..

முகவரிகள் மீது  பரிமாறப்படும்
வணக்கங்கங்களும்  வாழ்த்துக்களும்
கூசவைக்கிறது உடலையும், மனதையும்
இந்த நாகரீகத்தைப் போல..

Sunday, 23 March 2014

ஒ கட்டியக்காரர்களே எங்கு போனீர்கள் ?.........

சாம்பல் பூக்களின் 
கண்ணீரை திருடும் தேசமிது ..
வெந்து வடியும் ஊழியின் 
பெருமூச்சுக்களை தின்று களிக்கும் கூட்டமுமிது
இயலாமையின் ஓலங்களின் மீது 
வக்கிரக்குறிகளால் புணரும் அரசுமிது..

ஒ கட்டியக்காரர்களே..
எங்கு போனீர்கள் ?

சாவுப் பட்டியலில் புள்ளடியிடுகிறீர்களா ஜெனிவாவில்?

கண்ணீரால்  நிரம்பிய எங்கள் 
வாசல்களில் கால் நனைத்தீர்களே.. 

நீரருந்தி நிமிர்ந்து 
நல்ல உணவருந்தி 
இன்னும் ஓராண்டு உள்ளக விசாரணைக்கு  
ஒப்புதல் அளியுங்கள்.. 

பிணங்களைப் புணர்ந்தவர்கள் காவலில் 
தேவதைகள் சிறகு விரிப்பதாக 
வரைவுகளை எழுதுங்கள்...

இருள் மூடிக்கிடக்கிறது எங்கள் வானம் 
நட்சத்திரங்களையும் சூரியனையும் தொலைத்துவிட்டு..
பேரமைதியோடு அடங்கிக் கிடக்கிறது காற்றும் கடலும்..
இரவுகளில் கூவைகளும் வல்லூறுகளும் காவலுக்கு வருகின்றன..
பகல்களில் குருதி தோய்ந்த பற்களுடன் திரும்புகின்றன 

ஒ கட்டியக்காரர்களே 
எங்கு போனீர்கள்..

விபூசிகாவும் நிருபனும் 
இன்னும் கேதீச்சர மனிதர்களும் 
ஆசீர்வதிக்கப்படவர்களா உங்களால் ????

குருதிகளும் நிணங்களும் 
எலும்புகளும் கிழிக்கப்பட்ட மனிதர்களும் 
ஓலங்களும் கண்ணீர்களும் 
வெற்றுப் பதிவுகளா உங்களுக்கு..

வாருங்கள் 
அடுத்த வருடமும்,
உங்களுக்கென்ன புள்ளிவிபரங்கள் தானே குறியீடு.. 
கண்ணீரால் நிரம்பிய வாசல்கள் 
சவக்குழிகளால் நிரம்பியிருக்கும் 
வந்து கால் பதித்து பதிந்து செல்லுங்கள்...பொங்குதமிழ் இணையத்தில் வெளியான கவிதை.
http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=9f9da8b6-05e7-4c49-bb2f-b2446b757df4

Tuesday, 18 March 2014

உனக்காகவும் அழத்தான் முடிகிறது இன்றில்...

விதைகளை தின்னும் தேசத்தில் 
முகிழ்த்தவளே, 
கனவுகளை கருவறுக்கும் 
கொலைவாள்களிடையே எழுந்தவளே..

இழப்பின் வலிகளை 
மொழிகளால் இறக்க முனைந்தவளே 
இழிகாலதில் இறங்கிய 
ஊழியின் மகளே..

குருதி குடிக்கும் பேரினத்தின் 
குரல்வளையில் விலங்கு பூட்டவா
நீ எழுந்தாய் ...
இல்லையே..
அண்ணன்களோடு ஆனந்தவாழ்வு கேட்டுதானே
நீ அமர்ந்தாய் வீதியில்...

விபூசிகா...
வலி முடிவொன்றின் வழக்குரைத்தவளே

உன் 
குரலணுக்களின் தீண்டலால் 
தீப்பற்றியெரிந்த வெளிகளிலும் 
கருகி நைந்துபோன திடல்களிலும் 
ஆயிரமாயிரம் விழிகள் திறந்து கண்ணீர் வடிகின்றன..

வேரீரமிழந்து 
இலையுருத்திக்  கிளைசிதைந்து போன பெருமரத்தில் 
கூடுகள் அழுகின்றன.

உடல்சுமந்த
குற்றவுணர்வோடு குனித்து நிற்கின்றோம்..
எட்டப்பர்கள் நாங்கள்தான் தங்கையே.. 

காத்திரு 
என்றெப்படி உரைப்பது
பொறுத்திருக்கும் இக்காலம் வல்லமையில்லாதது...
அழுகைக்கும் கண்ணீருக்கும் தொழுகைக்கும்
அர்ப்பணிக்கப்பட்டவர்கள் நாங்கள்
உனக்காகவும் அழத்தான் முடிகிறது இன்றில்...