Saturday 26 April 2014

எட்டாவது வர்ணம்..

நிலவின் நிர்வானத்தால்  
கடல் தினவு கொள்ளும் இரவுகளில் 
உன்னிரு இதழ்களிலும் வழிகிறது
சுயத்தை தின்றுவிடும் சூட்சுமம்..

நம் அன்பு
தொலைந்துபோன எட்டாவது வர்ணம்
மழைப்பொழுதில் விழுந்து தொலைக்கும் மின்னலின் கனம்

புல்நுனிகளில் திரளும் நீர்
யாருமறியாமல்
எங்கிருந்தோ எழுகிறது மறைகிறது
உனக்குள் தொலைந்து போதலும்..

Thursday 10 April 2014

துளிகளால் அழிதல்

வேர்முடிச்சுக்களில் ஒளிந்துகொண்டவனை
தின்றுவிட தயாராகிறது
பெரும் பூதமொன்று..

முதலில்
ஒற்றைத்துளியாகத்தான் விழுந்தது.

வெப்பத்தாலோ
காற்றாலோ ஆவியாகிவிடாமல்
அடையாளமாகிப் பூத்துக் கிடந்த
அந்த முதல் துளி
வெறுமையை உடைத்து
அலங்கரித்துக்கொண்டது தன்னை..

Saturday 5 April 2014

நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும் -ஒரு பார்வை

    ஒரு கவிதைப் படைப்பானது எப்போது உணர்வுகளை ஊடுருவிச் செல்கின்றதோ அப்போதே  அது ஒரு வெற்றிபெற்ற படைப்பாகிறது. அப்படியானதொரு படைப்பினை வெறுமனே கற்றுக் கொள்வதாலோ அல்லது அனுபவத்தாலோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிகழ்தலின் உண்மையை உணர்ந்து,  உணர்ச்சிகளால்  ஊடுருவி பார்க்கும் பார்வை யாருக்கு வாய்கிறதோ, அந்த பார்வையில்  ஒரு அழகியல் கலந்து உணர்வுகளை தளம்பச்செய்யும் வகையில் யாரால் வெளிவிட முடிகிறதோ அவரால் மட்டுமே வெற்றிபெற்ற ஒரு  கவிதையை பிரசவிக்க முடியும்.

  அந்தவகையில் "நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்" என்ற காரண கரியத் தொடர்புகளை  தன்னிலை சார்ந்து வெளிக்கொண்டுவந்துள்ளார் பூங்குழலி வீரன். அவர் தன்னிலை சார்ந்து அவற்றை வெளிக்கொண்டு வந்த போதிலும் ஒவ்வொருவரையும் தன்வயப்படுத்தி ஒருமுறை தம் சொந்த நினைவுகளுள் மூழ்கிப் போக வைக்கிறது. கடந்துபோனவைகளை நினைத்து ஒரு பெருமூச்சினை வெளிவிடத்தூண்டுகிறது. கழிந்த மற்றும் வரப்போகும் நாட்களின் மறு பக்கத்தை எளிமையாக வெளிக்கொண்டுவந்து வாசிப்பவர்களை உணர்ச்சிகளின் திரளுக்குள் ஆழ்த்தி வைப்பதனூடாக தன்னை வெளிக்கொண்டுவரும் அவரை ஒரு காத்திரமான கவிஞராக அடையாளப்படுத்த முடியும்.