Monday 29 December 2014

என்னிருப்பு..

சொற்களிலிருந்து புன்னகைகளைக்  கழற்றி
ஆடைகளோடு கொழுவியபின்,
இறந்துபோன அந்தச் சொற்களால்
எழுதத் தொடங்கினேன்
நாட்குறிப்பை.

நாள் நிறைந்து கொண்டது.

முடியாத இரவு

சுவர்களில் தெறிக்கும்
காமம் தீர்ந்த ஒற்றையொலி
புழுக்களாய் படரத்தொடங்கும்

தீண்டாத இடத்தில் திரளும் விடம்
மெல்லக்கொல்லும் நரகத்தை
தீண்டியும் தணியாப் பெரும் தீ
இரைதேடிப்  பரவும்

வானம் நிறையும் தனிமை.

பெரும் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கிறது
இலையுதிர்காலத்தின் கடைசிப் பாடலை
நீண்டவால்க் குருவி.

வானத்தின் சோகங்களையும்
வீதியின் தனிமைகளையும்
பழுத்த ஊசிஇலைகளின் துயரங்களையும்
துணைக்கழைத்து நேசிப்பின் வரிகளை
இழைத்துக்  கூவியழுகின்றது.

Sunday 14 December 2014

இன்றென் பெருவாழ்வு.

பறவைகளின்றி வானம் இறந்து கிடக்க,
இலைகள் கழற்றிய கிளைகள்
காற்றோடு குலவுகின்றன,

மதில்களில் பூனைகள் இல்லை.
வாசல்களில் யாதொன்றினதும் அரவங்களும் இல்லை.
அறைகளில் ஒளிரும் மின்குமிழ்கள்
கண்ணாடி யன்னல்களில் ஒளியத்தொடங்குகின்றன.