Wednesday 11 November 2015

கதை சொல்லத் தொடங்கிய கதை.

 இந்தக் கதைக்கும், கதைசொல்லியான எனக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று, இந்தப் பிரதியை வாசிக்கும் போது  நீங்கள் நினைக்கக் கூடும் என்ற நினைப்போடுதான்   இப்பிரதியினை உருவாக்கத் தொடங்குகிறேன். எவ்வகையானதொரு  நோக்கு நிலையில்  நின்று நீங்கள் இதனை வாசிப்பீர்கள் என்ற ஒரு சந்தேகமும் என்னுள் எழாமல் இல்லை ஏனென்றால் நான் கூட புதிய கதைசொல்லிகளின் கதைகளை, வாசிப்பின் ஆரம்ப காலங்களில் அதிகளவு ஈடுபாட்டுடன் வாசித்ததில்லை. பின்நவீனத்துவம் ,பெருங்கதையாடல்களின் முடிவு, பிரதியினை கட்டுடைத்தல், மையசிதைவு அல்லது மையமின்மை போன்ற பல்வேறு உத்திகளுடன் ஒரு கதையை ஆரம்பித்து நகர்த்துதல் என்ற பல்கோட்பாட்டு நிலையில், ஒரு சிறுகதைக்கான கட்டமைப்பு மீதான கரிசனம் அதிகரித்தபின் கண்ணில் படும் எந்த ஒரு பிரதியையும் வாசிக்க தவறியதில்லை. உண்மையில் இன்றைய இந்த நிலைக்கு நான் பாரிசில் சந்தித்த ஒரு ஈழக் கதைசொல்லி தான் காரணம்.

Friday 4 September 2015

இருள் தின்ற ஈழம்.. -ஒரு பார்வை

நவீன கலை இலக்கிய வடிவங்களுள் கவிதைக்கு  இருக்கும் பெறுமானமானது தனித்துவமானது. தான் சார்ந்திருக்கும் கருத்துருவாக்கத்தின் உச்சபட்ச வெளிப்பாட்டு தன்மையினை வெளிக்கொணரும் அதேவேளையில், இயங்குகின்ற தளத்திற்கு  வாசகனை விரைவாகவும் நெருக்கமாகவும் அழைத்தும் செல்கிறது. மனதின் அக புற வயங்களில் அதீதமானதொரு  ஊடுருவலை  நிகழ்த்தி, நிகழ்கின்ற கணங்களை நிறுத்தி, தான் நிகழ்த்தும்  கணத்துக்கு வாசிப்போனை கடத்திச்செல்லும் போதே கவிதையும்  முழுமையடைகிறது.

அதேவேளையில், ஒரு படைப்பாளியின் இயங்கு தளமும், உணர்வுகளும் கவிதையின் உணர்வுகளையும் கவிதையின்  வடிவங்களையும் தீர்மானித்தாலும், அந்த கவிதையூடாக பயணிக்கப்போகும் வாசகனின் தளமும், உணர்வும் அதே கவிதையில் வேறுபல பரிமாணங்களைக் கண்டெடுத்துக் கொள்கிறது. இது புதுக்கவிதைகள் கொண்டிருக்கும் விசேடமான ஒரு இயல்பு.

Monday 23 March 2015

மூன்றாம் புணர்ச்சி

திசைகள் புணர்ந்த இடத்திலிருந்து
திரும்பத்தொடங்குகிறேன்.
நான்
நீ
இனி முத்தமிட்டுக்கொள்ளலாம்.

முன்னைய முத்தத்தின் நினைவுகள்
கூடாதவகையில் முத்தமிடு.
இனியொருபோதும்
நிகழமுடியாத சந்திப்பின்
இறுதி முத்தமென்று நினைவில்கொள்

முத்தமிடு.

சாம இரவுகளில் வெற்றுத்திடல்களில்
சுடரும் ஒளியிறக்கி முத்தமிடும்
மின்மினிகளைப் பார்.
பேரண்டத்தின்  மூர்க்கம் கொண்ட
மூலையில் இருந்து எடுத்துவை முத்தத்தை.

இதழ் ஊறும்
காமம் தீண்டி உயிர்க்கும் விரல்கள்
இறந்துபோன காலமொன்றினை கடந்துவரட்டும்.

மேனிகுழல்
வாய்முத்தம்
இசைக்கின்றன துவாரங்கள்
கனப்பொழுதொன்றில் வித்துறை உடைந்து
நிலம் கிழித்து எழுகிறது முளையம்.
அன்பு.

ஒற்றைப் பார்வைக்கும்
மற்றைச்சொல்லுக்கும்
ஒத்திவைக்கும் முத்தமொன்றைவிட,
இந்த,
இரண்டு முத்தங்களுக்கு இடையில்
குறுவாள் ஒன்றை செருகிவிடு



Friday 20 March 2015

தனித்திருத்தல்...

தனித்திருத்தல் வரம்.
நீண்ட  இரவில்
ஏதாவது ஒரு மாலையில்
தன் குரல் கேளாத தொலைவில்

எதுவும் தேவையில்லை
நீ நான் அவர்கள்

Tuesday 20 January 2015

அலவாங்கு

   என்ன நினைத்தானோ தெரியவில்லை கையில் எடுத்த பிரஸ்சை திரும்பவும் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு  சரத்தை தூக்கிச்  சண்டிக்கட்டு கட்டினான் சுரேந்தர். சுவரில் பொருத்தப்பட்ட கண்ணாடியை நிமிர்ந்து  பார்த்தவன், கம்பியில் கொழுவி இருந்த துவாயை எடுத்து  கழுத்தால் சுற்றி முதுகை மறைத்துப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு முன்புறம் வந்து  வேப்பம் மரத்தில் சாய்த்துக் கிடந்த கொக்கத் தடியை எடுத்து ஒரு வேப்பம் கோப்பை வெட்டி விழுத்தினான். மொக்கு நீக்கு இல்லாத நேரான குச்சியை முறித்து இலைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு  நுனியை வாயில் வைத்து சப்பித் தும்பாக்கிகொண்டு வீட்டின் முகப்பு கேற்றை  நோக்கி நடந்தான்.

Friday 2 January 2015

உயிர் சுமக்கும் வேர்கள்..

குளிர்காலத்தின் துயர் சுமந்த கிளைகளில்
கனவுகளை எழுதுகிறது 
சாம்பல் பறவையொன்று,

இனிவரும்,
வசந்தகாலத்தின் இலைகள்
பறவையின் கனவுகளை 
மொழிபெயர்க்கவும்,
இன்னொரு பறவை சுமந்து செல்லவும் கூடும்,

அந்தக் கணங்களில்,
அந்தப் பறவையும்
மரமும்
என்ன பேசிக்கொள்ளும்......

கனவுகளை வைத்திருந்து
கையளித்ததிற்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லுமோ..
கிளையின் துயர் மீது
கண்ணீர் சிந்திக் கழுவிப்  போகுமோ..
கூடுமுடைந்து
அங்கேயே தங்கிவிட துணியுமோ..

சாம்பல் பறவையின் கண்களில் இருந்து
பெருவெளியில் கலந்தது
அரூபமொன்று,

கிளைகளில் இருந்து
வழியத்தொடங்கிய காலத்தின் துயர்
பறவையின் கனவுகளை மூடிப் பெருகத்தொடங்கியது.

யாருக்குத் தெரியும்
இனிவரும் வசந்தகாலத்தில் 
இந்தப் பறவையும் எப்படி இருக்குமென்று?

திணை மாறி அலையும்
கனவுகள்  மௌனமாகச் சுழிகொண்டு எழ,
பகலுக்குள் இறங்கும் இருளைமீறி
தேடத்தொடங்குகிறேன்.

யாராவது இருக்கிறீர்களா ?

இந்த
அகதியின் கனவுகளையும் 
என்ன செய்வதென்று சொல்லுங்கள்.