Friday 4 September 2015

இருள் தின்ற ஈழம்.. -ஒரு பார்வை

நவீன கலை இலக்கிய வடிவங்களுள் கவிதைக்கு  இருக்கும் பெறுமானமானது தனித்துவமானது. தான் சார்ந்திருக்கும் கருத்துருவாக்கத்தின் உச்சபட்ச வெளிப்பாட்டு தன்மையினை வெளிக்கொணரும் அதேவேளையில், இயங்குகின்ற தளத்திற்கு  வாசகனை விரைவாகவும் நெருக்கமாகவும் அழைத்தும் செல்கிறது. மனதின் அக புற வயங்களில் அதீதமானதொரு  ஊடுருவலை  நிகழ்த்தி, நிகழ்கின்ற கணங்களை நிறுத்தி, தான் நிகழ்த்தும்  கணத்துக்கு வாசிப்போனை கடத்திச்செல்லும் போதே கவிதையும்  முழுமையடைகிறது.

அதேவேளையில், ஒரு படைப்பாளியின் இயங்கு தளமும், உணர்வுகளும் கவிதையின் உணர்வுகளையும் கவிதையின்  வடிவங்களையும் தீர்மானித்தாலும், அந்த கவிதையூடாக பயணிக்கப்போகும் வாசகனின் தளமும், உணர்வும் அதே கவிதையில் வேறுபல பரிமாணங்களைக் கண்டெடுத்துக் கொள்கிறது. இது புதுக்கவிதைகள் கொண்டிருக்கும் விசேடமான ஒரு இயல்பு.

ஒரு கவிதையில் இயங்குதளமும், படைப்பாளியின் உணர்வுகளும் எப்படி செயற்படுகிறது என்பதனை ஈழதமிழ்க் கவிதைகளை உற்றுநோக்குவதனூடாக அறியலாம். ஈழதமிழ்க் கவிதைகளைப் பொறுத்தவரை, பெரும்பாலும் அது புலமாகவும் இருக்கலாம் புலம்பெயர்ந்த இயந்திரவெளியாகவும் இருக்கலாம், படைப்புக்களின் மையப்புள்ளி இனமுரண் அரசியல் அவலங்களே. அழிவுகளாலும் அலைவுகளாலும், இழப்புக்களாலும், வலிகளாலும் நிறைந்துபோயிருக்கும் வாழ்வியலின் பக்கங்களை பிரதிமை செய்கின்றனவாகவே அவை அமைகின்றன.

அவ்வாறானதொரு பிரதியாகவும், மனதுக்கு நெருக்கமானதாகவும் தேவ அபிராவின் "இருள் தின்ற ஈழம்" என்ற கவிதைத் தொகுப்பினை அடையாளம் காணமுடியும். இத்தொகுப்பில் பயணிப்பதனூடாக,  வேறெந்த தொகுதியிலும் அடையமுடியாத ஒரு கால இயங்குநிலை மாற்றத்தினை கண்டடையமுடியும். இருதசாப்த காலநீட்சியில் படைக்கப்பட்ட கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை அந்த அந்த காலநிகழ்வுகளை படைப்புமனமூடாக பதிவு செய்யப்பட நிலையில், ஒரு படைப்பு மனம் அவற்றினூடாக எவ்வாறு பயணித்திருக்கிறது என்பதனையும் உணர்ந்துகொள்ள வைக்கிறது.

இயல்பான விபரிப்புக்களுடன், நேரடியான பொருள் தரும் எழுத்தோட்டத்தை கொண்டமைந்த கவிதைகள் நீண்டதொரு அனுபவ செழுமையூடாகவே பரிணமித்திருக்கின்றன. தான் வாழ்ந்த சூழலை, அந்த சூழல் தனக்கழித்த துயரத்தை, சந்தோசத்தை, நேசத்தை, பிரிவை  ஊடுகடத்தி ஒரு துயரப்பொழிவை உருவாக்கி ஏங்கவைக்கின்றன. கவிதை மொழி அல்லது கவிதைக்கான மொழி என்பதைக் கடந்து எல்லாமும் கவிதைக்கான மொழியே என்று சாதாரணமாகவே படைப்பை நிகழ்த்தி முடிக்கிறார். சில இடங்களில் அந்த மொழியே இது கவிதைதானா என்ற கேள்விகளை எழுப்பினாலும் அந்த மொழியோடு இழையோடும் அனுபவமும் உணர்ச்சியும் இன்னொரு தளத்தினை திறந்து விடுகிறது.

ஒரு கவிதை எங்கே ஆரம்பிக்கிறது .. என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் ஒரு கவிதையில், மிக அழகாக கவிதைகள் உருவாகும் சந்தர்ப்பங்களை குறிப்பிட்டு கவிதையை நகர்த்துகிறார். முடிவில் ஒரு கேள்வியை எழுப்புகிறார்.  ஒரு கவிதை எங்கே முடிகிறது.. என. அப்படியே மனதுக்குள் நிறைந்துபோகிறது கேள்வி. வியாபித்து பெருகி  நினைவுகளை நீளவைக்கிறது. ஆம் ஒரு கவிதை எங்கே முடிகிறது.. எப்படி சொல்லமுடியும். ஆனால் வலிசுமந்த ஈழத்தமிழன் சொல்வான். அடக்குமுறைகளுக்குள் அடங்கிக்கிடக்கும் ஒவ்வொருவனும் சொல்வான் அதை.
கவிதை இப்படி கூறுகிறது.

அதுசரி
ஒரு கவிதை எங்கே முடிகிறது
அங்கே அதோ
நிறுத்து என்றறிவித்தல் பலகையை நீட்டியபடி
சீருடை அணிந்தொருவன் மறிக்கிறானே
அங்கே...

எங்கெல்லாம் ஆயுத அடக்குமுறைகள் கோலோச்சுகின்றனவோ அங்கெல்லாம் பயணிக்கும் இந்தக் கவிதை ஒன்று போதும் இந்த தொகுப்பின் கனதியினை எடுத்தியம்பும்.

முத்தமிடலும் தழுவிக்கொள்ளலும் 
எல்லாமும் முடிந்துபோன பின்னும் 
நான் உன்னை நேசித்தேன் 
என்பதை நீ உணர, 
நான் என்ன செய்யவில்லை மூடா ????

என்று காதலுடன் ஆண்மையை கேள்வி கேட்கிறது. பாசமும் நேசமும் தவிப்பும் அடங்கிக்கிடக்கும் இந்த வரிகள் உருவாக்கும் அதிர்வுகளை எப்படி வார்த்தைகளில் கொண்டுவருவது.. எவ்வளவு எதிர்பார்ப்புகளை இந்த வரிகள் எடுத்துச்செல்கிறது..இப்படிக்  கேட்கவேண்டிய ஒரு இடத்தில் நான் இருந்தால் என்ன செய்வேன் என மீண்டும் மீண்டும் நினைக்கவைக்கிறது. ஆண்மை என்ற அந்தக் கவிதை மேலும் பேசுகிறது,

அண்டமாய் பிரபஞ்சமாய் பால்வேளியாய் 
பறந்துசெல்லும் காலத்தை வியாபித்த 
அவளின் வார்த்தைகளின் கீழ் 
நான் தனித்து விடப்பட்டேன்.


"நான் தனித்து விடப்பட்டேன்"  எவ்வளவு கொடுமையானது இந்த நிலை.ஒரு நாவலை உள்ளடக்கி எழுந்திருக்கும் இந்தக் கவிதை மனதில் கல் எறிந்துவிடுகிறது. நினைவுகளை வளையங்களாக்கி சுழல வைக்கிறது.


நேரடியான வாரத்தைப்பிரயோகங்களும், கேள்விகளை எழுப்பி நிற்கும் விதங்களும் இவரின் கவிதைகளின் ஒரு சிறப்பான பக்கம்.அநேக கவிதைகள் கேள்விகளை எழுப்பி விடைகளை தேடவைக்கின்றன அல்லது ஒரு கனத்த மௌனத்தை உருவாக்கி விடுகின்றன.

மிகச்சிறப்பாக நதி என்ற உருவகத்தினை எடுத்துக்கொண்டு கவிதையை மழலைக் காலத்தில் ஆரம்பித்து வளர்ந்து, புலம்பெயர்ந்து வேரூன்றியபின்னும் நிகழும் அவநம்பிக்கைகளையும் சுமந்துகொண்டு இருக்கையில் நாளைய சந்ததியின் பார்வைகளுக்கு என்ன பதில் சொல்லமுடியும் அந்தக் கவிதை இப்படி முடிகிறது.

பெரும்பனிவீழுமிப் பெருவெளியில் 
தனித்தவென்னுள்
உறைந்துபோனது என் நதி.
என்றாவது ஒருநாள் 
என்னை நீயேன் அகதியாக்கினாய் அப்பா 
என்றென் மகன் கேட்கையில் 
இறந்தே போகும் என் நதி.

ஈழநிலத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் அவலங்களில் ஒன்று முஸ்லீம்கள் வெளியேற்றம். அன்றைய நிலையில் அதற்காகவும் குரல் உயர்த்துகிறார்.

துயர அழுகையின் இறுதி முறையீடுகளும் 
பாங்கொலி இழந்த பள்ளிவாசல்களும் ...
ஈழ மண்ணில் ஆறுகாலமும் 
உயர்கோபுரங்களில் மணி ஒலிக்கிறது 
மறுக்கப்பட புன்னகைகளை 
மனிதரிடத்திருந்து பிடுங்கி பெருமானுக்கு சாத்துங்கள்.

இது தொன்னூறுகளில் எழுதிய கவிதை. மட்டுமல்லாமல்,வாழ்வு வாழ்தல் என்ற கவிதையில், பெண்னடிமைத் தனங்களை உடைத்தெறியவும் அறைகூவல் விடுக்கிறார். காதல் கவிதைகளில் பெருகி ஓடும் துயரம் மிக அண்மையாக வந்து சேர்க்கிறது.

முன்னறையில் இருந்து 
பிரியும் என் முதுகைப் பார்த்திரு.... என்றும்,

பாறை வெடிப்பொன்றினூடு சீறிப்பாயும் 
ஊற்றுநீர் போல உன் நினைவு 
இக் காதலும் இப் புனிதமும் 
இப்படியே வாழட்டும்  என்றும்,

காதலின் பிரிவுத்துயரை அழகியலோடு கொண்டுவருகிறார்.

மென்நய மௌனத்தில் 
அரளிப்பூவின் விளிம்போரம் படரும் 
செம்மையைப் பார்த்தேன் -உதடுகள்.. எனவும்,

உன் செவ்விதழ்களில் 
என் காதலைத் தரக் காலம் இல்லையே -எனவும்

உற்ற தோழிக்காக அவளின் அன்புக்காக பாடும் கணங்களில் மூ.மேத்தா அவர்களினை நினைவுபடுத்திச்செல்கிறார்.

அழகியலும் அனுபவச்செறிவும் இயல்பான மொழியும் நேரடியாகவே கருத்து வெளிப்படு தன்மையினையும் கொண்டிருக்கின்றன இவரின் கவிதைகள். அதீத கற்பனைகள் எதுவுமே இல்லாமல் வாழ்வியலை அந்த வாழ்வாகவே பார்த்திருக்கிறார். வசனங்களின் நீட்சியும், சில இடங்களில் உள்வாங்கப்படும் மேலதிக சொற்களும் கவிதையின் தகைமையினை சிதைக்கின்றனவோ என எண்ணத் தூண்டுகிறது.  கவிதைகளில் மிகுந்து வரும் வசனத்தன்மையும், சில சொற்பிரயோகங்களும் கவிதையோடு ஒன்றிப்பதில் தடங்கல்களை உருவாக்குகிறது.

தத்துவவாதிகள் தாங்கள் அறிந்த புத்தகங்களுக்கு மேல் 
தலைகளை உயர்த்தவில்லை 
வியாபாரிகள் இரத்தத்தை வடிகட்டிய 
நிலத்தை பங்கு போடுகிறார்கள் 
எஞ்சிய நிலத்தில் நீயோ கண்ணிவெடியென்கிறாய் 
எனது பிள்ளைகளோ அழுகிறார்கள் 
அவர்களின் முன் நீயோ வாக்குப்பெட்டிகளை வைக்கிறாய்.
இது போன்ற சில  இடங்களை குறிப்பிடலாம்.

 அதேபோல் "எலும்புக் கூடும் இரண்டு கனவுகளும்" என்ற கவிதை கொண்டுள்ள கருத்துருவாக்கம் மிக அலாதியானது. ஒரு மனதில் ஆதங்கத்தை, ஏக்கத்தை, அர்ப்பணிப்பை பதிவு செய்திருக்கும் விதம் அதனோடு பயணிக்கையில் உற்றுநோக்கவைகிறது. ஆனால் அந்தக் கவிதையில் நிகழ்ந்திருக்கும் அமைப்பு கவிதைமீதான கவனக்குறைவை உருவாக்குகிறது. எல்லைக்கோடுகள் இல்லாதவன் தான் கவிஞன். ஆனால் நிகழ்த்தும் படைப்புகள் புதிய புதிய கோடுகளை உருவாக்கி செல்லவேண்டும்.

உள்ளத் துள்ளது கவிதை -இன்பம்  
உருவெடுப்பது கவிதை என்றார் கவிமணி. 
வெற்று வார்த்தைகளை கோர்த்துவிடாமல்  அழகியல் மற்றும் உணர்ச்சியோடு இணைந்து உருவாகும் கவிதைகளே மனதினை நெருங்குகின்றன. தவிர்த்து மற்றவைகள் கட்டுரையாகவோ அல்லது உரைநடையாகவோ அன்றில் வசன அமைப்பாகவோ கண்டுகொள்ளப்படுகின்றன. 

தன் கவிதை முனைப்புப் பற்றி பின்னிணைப்பில் கவிஞர் கூறுகையில், கவிஞர் நா.பஞ்சாட்சரம் அவர்களின் மரபுவழிக் கவிதைகளின் தாக்கத்தில் கவிதைகளை எழுதத்தொடங்கி, கவிஞர் சேரன்  "நடவாப் புல்வெளிகள் தேடு" என்றபோது தடம் தெளிவுபட்டது என குறிப்பிடுகிறார். சில கவிதைகளில் எனக்கு ஏற்பட்டிருக்கும் குறுக்கீடுகள், இன்னொரு தளத்தில் புதுக் கவிதையை அனுகுபவருக்கு புதுமையான "நடவாப் புல்வெளிகளாக" இருக்கவும் கூடும். அல்லது இது எனது அனுபவமின்மையகவும் இருக்கலாம்.

ஆளுமையும் அனுபவச்செறிவும் மிகுந்திருக்கும் இக் கவிதைகள் இனிவரப்போகும் கவிஞரின் கவிதைகள் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் மிக ஆழமாகவே எழுப்பி இருக்கிறது என்பதில் மாற்று எதுவும் இல்லை.














1 comment:

  1. கவிதைப்புத்தகத்தை வாங்கத்தூண்டும் பார்வை .

    ReplyDelete