Tuesday 5 February 2019

மூன்றாவது கண்


  நீல நிற விழிகளை அசைத்து அந்த மனிதன்  உணர்த்திய  கணத்தில் ஆரம்பிக்கத் தொடங்கியது அவனது எஞ்சிய நாட்கள். நாக்கு  உலர்ந்து வார்த்தைகள் வறண்டுவிட்ட அந்தக் காலத்தை மெல்லியதாகக் கிழித்து வெளியேற முயன்றான். அன்றையின் பின், எப்போதும் அந்த நீலக் கண்கள் பிடரிப் பக்கத்தில் படர்ந்திருப்பதைப் போல ஒரு கனம் அவனது மனதினில் இறுகத்தொடங்கியது. அவனால், எஞ்சியிருப்பது எவ்வகையான வாழ்வென்றே அனுமானிக்க முடியாதிருந்தது. பிடரியில் ஒட்டியிருப்பதான நீலநிற விழிகள் இரவுகளில், மரங்களில், சுவர்களில் அசைந்து கொண்டிருப்பது போலவும் பாம்பின்  நாக்குப் போல அவ்வப்போது இடைவெட்டிக் கொள்வதாகவும் கண்டுகொண்டான். காற்பெருவிரல் நகத்திற்கும் தசைக்கும் இடையினாலா, இடைவெளியினூடாக ஊடுருவும்  மெல்லிய குளிர் போல, எஞ்சிய நாட்கள் குறித்த அவஸ்தை உடலெங்கும் பரவி வளரத்தொடங்கியது.