Tuesday, 28 May 2013

நானில்லாத எனது அறையில்............

யன்னலால் எட்டிப்பார்த்து
எக்கத்தொடு மெல்ல திரும்புமோ
நிலவொளி,

நிசப்தத்தால் நிலைகுலைந்து
வெதும்பி வெளியேறுமோ
மலர்தடவிய தென்றல்,

நிழல்கரங்களால்
நிலம் தடவித் தவிக்குமோ
தளர்ந்து கொம்பாய் கிடக்குமோ
செம்பருத்தி,

மேட்டுக்குள் கடக்கும் எலிகள்
இறங்கி உலாவுமோ,
மேசை லாச்சிகளில்
குட்டிகளை ஈனுமோ,

என்னதான்  நிகழும்
எனது அறையில் !!

சுவரில் மாட்டிய அழகியின் படத்தில்
கூடுகட்டிய வண்டு
ஆணியடித்த தடத்தில் உறங்கிக்கிடக்கும்
ஆடை கொழுவியில்
அமைதியாய் கிடக்கும் வலைபின்னி சிலந்தி,

கதவில் ஒட்டிய படம்
மக்கிப்போயிருக்கும் -அந்த
கதவும் கொஞ்சம் இறங்கிப் போயிருக்கும்.
மேசையும் கதிரையும் புத்தகங்களும்
தூசுகளில் கிடக்கும்.
மையிறுகி பேனையும்,
தோல்வெடித்துக் காலணியும்,
சக்குப்பிடித்து எண்ணைப் போத்தலும்,
அந்தந்த இடத்திலேயே கிடக்கும்.

இவையும்
நிகழ்ந்திருக்க கூடும்.

யாருக்கும் தெரியாது,
நானில்லாத அந்த அறையில்
என் கனவுகளும்
நிராகரிக்கப்பட்ட பிரியங்களும்
கண்ணீரின் உவர்ப்பு வீச்சமும்
பெருமூச்சுக்களும்
ஒரு காலடிக்காக காத்திருப்பது !!

Monday, 13 May 2013

கானல் உறவுகள்.........

என் விழியே.........
           என்று ஆரம்பித்த அந்த கடிதத்தின் ஆரம்ப வரிகளை வாசித்தபோது  அவளின் மனதில்  இருந்து எழுந்த மெல்லிய நடுக்கம் உடலெங்கும் பரவி பெருமூச்சாக வெளிவந்தது. கடிதம் முழுவதையும் வாசிக்கவேண்டும் போலவும், அப்படியே அந்த கடிதத்தை கண்களில் வைத்து  சத்தமிட்டு அழவேண்டும் போலவும் இருந்தது ரேவதிக்கு. தன்னுணர்வில்லாமல் கடிதம் கிடந்த அந்த கொப்பியை மூடியவள், ஒரு உந்துதலால் கொப்பியின் முதல் பக்கத்தை  திறந்து பார்த்தாள். "மறத்தல் கொடுமையானது அதிலும் கொடுமையானது மறந்தது   போல நடிப்பது" என அவளின் கையெழுத்தில் எழுதப்பட்டு இருந்தது.

            தனக்கு மட்டும் கேட்கக்கூடியவாறு  அந்த வரிகளை வாசித்தவளுக்கு, முகத்தில் அறைந்தது போல இருந்தது அந்த வரிகள்.  அறையின் புழுக்கமும், பழைய புத்தகங்களை கிண்டியதால் எழுந்த நமச்சல் மணமும், கையில் கிடைத்த கடிதம் இருந்த கொப்பியும் தொடர்ந்தும்  அந்த அறையில் இருக்கவிடாது செய்தன. கொப்பியை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியில்  வந்தவள் சாய்மனைக்கட்டிலில் தந்தையார் படுத்திருப்பதையும், குசினிக்குள் தாய் பெருமெடுப்பில் சமையலில் ஈடுபட்டிருப்பதையும் கவனித்தாள், சத்தமில்லாமல் பின் கதவை திறந்து வளவுக்குள் இருக்கும் கிணற்றடி நோக்கி நடந்தாள். செழித்து நின்ற வாழைகளும், கொய்யாமரமும், நிழல்களை பரப்பி  நின்றதால் ஏற்பட்ட  குளிர்மை அவளது பதட்டத்தை குறைத்து அவளை ஓரளவு இயல்புக்கு கொண்டுவந்தன.

Sunday, 5 May 2013

மாயமானாய் ஓடிப்போகாதேடி............

கண்ணுக்குள்ள
நிக்கிறியே -என்ன (னை)
விண்னுக்குள்ள
தள்ளுறியே,
அடியே......
எ எண்ணத்தில
தீய வைக்கிறியே........

செவ்விதழை
மடிக்கிறியே-என்ன(னை)
செவ்வாயில
புதைக்கிறியே,
கொடியே....
ஏஞ்சிந்தையில புது
சிந்துபாடுறியே...............

ஒத்திவச்ச
காணிய கடக்கயில
பத்தியெளும் பெருமூச்சு-உன்ன
பாக்கையில தோணுதடி!
பொத்திவச்ச
ஆசையெல்லாம்
முத்திவந்து முனுங்குதடி!!


நெத்தி சுருக்கி
நீ பாக்கையில
நெட்டுருகி போகுதடி!
எட்டுவைச்சு பாதகத்தி
நீ நடக்கையிலயென்
சத்திகெட்டுப்போகுதடி!!

மனச சுத்தி
அடிக்கிறியே
மலைய சுருக்கி
சுமக்கிறியே.......
கனவ அள்ளி
தெளிக்கிறியே
கையளவிடை
மறைக்கிறியே.......
ஊன உருக்கி -புது
உருவம் திரட்டுறியே
கானக்குயிலாய்
உருவேத்திறியே...........

சீனமதில் போல
நீளுதடி ஏக்கம்
வீணா போயிடுவேனோ
உள்ளுக்குள்ள வொருதாக்கம்
மாயமானாய்
ஓடிப்போகாதேடி
மயானத்தில என்ன(னை)
விதைக்காதேடி..........