Wednesday, 17 June 2020

பக்குவத்தின் கதை


   ஐந்து மணித்தியாலங்களைக் கடந்தும்,  இரண்டரைப் பனைமர உயரமுள்ள, அந்த ஆலமரத்தின் உச்சியிலிருந்து வடக்கு நோக்கி நெற்றியில் கையை வைத்து ஒளியை மட்டுப்படுத்தி, கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரலிங்கம். அவரது மனைவி தலையில் பெரிய கட்டுடன் வைத்தியசாலையிலிருந்து நேராக ஆலமரத்தடிக்கு வந்திருந்தார்.

சந்திரலிங்கம் சரியாக நான்கு மணித்தியாலங்களுக்கு முன் ஆதிகோவிலடிக் கடற்கரைக்கு சென்று தமிழ்நாட்டுக்கு போகவேண்டும்  யாராவது ஓட்டியை பிடிச்சு விடு எவ்வளவு காசு என்றாலும் கொடுக்கலாம் என சரசுவதி ஆச்சியை ஆக்கினை செய்தார். அவர் சரசுவதி ஆச்சியிடம் வாடிக்கையாக மீன் வாங்குபவர். பதிலாக தன் தோட்டத்தில் விளைகின்ற மரக்கறிகளை பார்த்துப் பாராமல் கொடுப்பார்.

Friday, 10 April 2020

கந்தில் பாவை - நிகழ்த்திய கதை

" தோம்பு " என்றொரு சொல்லை நீண்ட காலத்தின் பின் வாசித்தபோது,  சுமார் பத்து ஆண்டுகள் ஒரு மைதான  வழக்குக்காக அலைந்த அந்த நாள்கள் நினைவுக்கு வந்தன. அடி உறுதி,  கள்ள உறுதி...  என்றும், "பருத்தி புடவையாக காய்ச்சுகிடக்கு" "அலவாங்கு விழுங்கி" "எள்ளு காயுதெண்டு எலிப்புளுக்கையும் ஏன் காயுது " என்றும் எங்கள் மீது பலர் எறிந்த  சொல்லாடல்களை நினைவுக்குக் கொண்டுவந்திருந்தது அந்த ஒற்றைச்சொல். கூடவே இயத்துகள், பூவல் நிலம், "பழிப்பு படலைக்குள்ள சிரிப்பு சீலைக்குள்ள ' என சில சொற்கள் அம்மம்மாவின் தோல் சுருங்கிய  கன்னங்களையும், பொக்கைவாய் சிரிப்பையும் நினைவில் கிளப்பியது.

கிளர்ந்த அந்த  நினைவுகளின் அருட்டலுடன் தான்  கந்தில் பாவையை வாசித்து முடித்திருந்தேன்.

Sunday, 1 March 2020

செண்பகம்.

 தொலைபேசியில் அழைத்துப் பேசியவர் அவளது கிராமத்தின் விதானையார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் இறுதி வேலைகளுக்கான பணத்தினை வழங்கும் பொருட்டு, முடிந்த வேலைகளை மதிப்பீடு செய்வதற்கு வரப்போவதாக கூறினார். முதல் கட்டமாக வழங்கிய பணம் தாயின் மருத்துவச் செலவுகளுக்கும், இறுதிக் கிரிகைளுக்குமாக செலவாகிவிட, வீட்டுவேலை என ஒரு துரும்பைத் தன்னும் எடுத்துப் போட்டிருக்கவில்லை. அது விதானையாருக்கும் தெரியும். இருந்தும், வேலைகளை பார்வையிட வருவதாக சாட்டு ஒன்றினை உருவாக்கி தன்னுடன் பேசவும், வீட்டுக்கு வரவும் முனைவதனை அவளால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. 

Tuesday, 5 February 2019

மூன்றாவது கண்


  நீல நிற விழிகளை அசைத்து அந்த மனிதன்  உணர்த்திய  கணத்தில் ஆரம்பிக்கத் தொடங்கியது அவனது எஞ்சிய நாட்கள். நாக்கு  உலர்ந்து வார்த்தைகள் வறண்டுவிட்ட அந்தக் காலத்தை மெல்லியதாகக் கிழித்து வெளியேற முயன்றான். அன்றையின் பின், எப்போதும் அந்த நீலக் கண்கள் பிடரிப் பக்கத்தில் படர்ந்திருப்பதைப் போல ஒரு கனம் அவனது மனதினில் இறுகத்தொடங்கியது. அவனால், எஞ்சியிருப்பது எவ்வகையான வாழ்வென்றே அனுமானிக்க முடியாதிருந்தது. பிடரியில் ஒட்டியிருப்பதான நீலநிற விழிகள் இரவுகளில், மரங்களில், சுவர்களில் அசைந்து கொண்டிருப்பது போலவும் பாம்பின்  நாக்குப் போல அவ்வப்போது இடைவெட்டிக் கொள்வதாகவும் கண்டுகொண்டான். காற்பெருவிரல் நகத்திற்கும் தசைக்கும் இடையினாலா, இடைவெளியினூடாக ஊடுருவும்  மெல்லிய குளிர் போல, எஞ்சிய நாட்கள் குறித்த அவஸ்தை உடலெங்கும் பரவி வளரத்தொடங்கியது.

Tuesday, 4 December 2018

மீறலும் மீறிச் செல்ல முயல்தலும், மீந்து கிடக்கும் யதார்த்தமும்.

 பச்சை நரம்பு அனோஜனின் இரண்டாவது தொகுப்பு. இதில் பத்து கதைகள் இருக்கின்றன.  போர் நீங்கிய நிலத்திலிருந்து   தன்  கதைகளை எழுதுகிறார்.  சமகாலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவராகவும் இருக்கிறார். தொடர்ந்தும் எழுதி வருகிறார். முக்கியமான  சிறு பத்திரிகைகளிலெல்லாம்  எழுதி இருக்கிறார். சிறுகதைகள் மட்டுமில்லாமல்  கட்டுரைகளும், விமர்சனக் குறிப்புகளும் எழுதுகிறார். 

அனோஜனின் எடுத்துரைப்பு மொழி வாசிப்பவர்களுக்கு  இலகுவானது. எந்த வித சிக்கலையும் ஏற்படுத்தாமல் சரளமான  ஒரு வசிப்பினை தூண்டக்கூடியது. சித்தரிப்புக்களோடு  மிக லாவகமாக நகரும்  தன்மை இவரது கதைகளில் இருக்கிறது. வடிவ நேர்த்தியும் இருக்கிறது. சமீபத்திய வழக்கு போல தேவைக்கு மிஞ்சிய பாலியல் ஊடாட்டமும் கதைகளில் இருக்கிறது. பாலியல் சிக்கல்களை  எழுதிவிடுதல் ஒரு தனிமனிதனின் உள்ளுறையும் உணர்வுகளை எழுதிவிடுதல்தான். அனோஜன் யாரும் எழுதாத, மனிதர்களில் உள்ளுறையும் காமத்தை எழுதிவிடவில்லை. பலரும் எழுதி இருக்கிறார்கள்  ஆனால் அவர்களிலிருந்து   அனோஜனின்  எழுத்துமுறைமை   வேறுபடுகிறதா  என்பதுதான்  முக்கியமானது.