Sunday 1 March 2020

செண்பகம்.

 தொலைபேசியில் அழைத்துப் பேசியவர் அவளது கிராமத்தின் விதானையார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் இறுதி வேலைகளுக்கான பணத்தினை வழங்கும் பொருட்டு, முடிந்த வேலைகளை மதிப்பீடு செய்வதற்கு வரப்போவதாக கூறினார். முதல் கட்டமாக வழங்கிய பணம் தாயின் மருத்துவச் செலவுகளுக்கும், இறுதிக் கிரிகைளுக்குமாக செலவாகிவிட, வீட்டுவேலை என ஒரு துரும்பைத் தன்னும் எடுத்துப் போட்டிருக்கவில்லை. அது விதானையாருக்கும் தெரியும். இருந்தும், வேலைகளை பார்வையிட வருவதாக சாட்டு ஒன்றினை உருவாக்கி தன்னுடன் பேசவும், வீட்டுக்கு வரவும் முனைவதனை அவளால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. 

என்றாவது ஒருநாள் சுதர்சன் அழைத்துவிடக் கூடும் என்ற நம்பிக்கையில் தொலைபேசியை பாவனைக்கு உகந்ததாக வைத்திருந்த தனது நம்பிக்கையை நொந்துகொண்டாள். இனி அவன் அழைக்கப் போவதில்லை. இது இருந்தால் தானே கண்டவர்களின் அழைப்புக்கு பதில் சொல்லவேண்டி வருகிறது பேசாமல் உடைத்தெறிந்துவிடலாம் எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள். பின் எதோ நினைத்தவளாக தொலைபேசியில் பதிவு செய்திருக்கும் பெயர்களை மெதுவாக தட்டி உச்சரித்துக் கொண்டாள். விதானையாரின் பெயர் வந்ததும் அழிப்பதா விடுவதா என சிலகணம் தடுமாறினாள். எதுவும் செய்யத் தோன்றாமல் பெருமூச்சுடன் மெதுவாக தொலைபேசியை நிலத்தில் வைத்தாள். முற்றத்தில் நிறைந்திருந்த மல்லிகை செடியிலிருந்து சரசரவென சாரைப் பாம்பொன்று இறங்கிப் போனது. நேரத்தைப் பார்த்தாள். இருள் மெல்ல அவளுக்குள்ளும் இறங்கியது. 

சுதர்சன் இருந்தவரை அயலவர்கள் என்ன கதைத்தாலும் ஒருவித துணிவு இருந்தது. இப்போது அதுவுமில்லை. சும்மா நாய் குரைத்தாலும் ஒருதடவை கால் நடுங்கித்தான் துணிவு வருகிறது என எண்ணியபடி தன்னைமீறி அவன் வழமையாக படுக்கும் இடத்தைத் திரும்பிப் பார்த்தாள். அவனை எதிர்பாராமல் சந்தித்த அந்த நாள் நினைவில் வந்தது. 

கூச்சல் நிறைந்திருந்த சந்தைக்குள் ஓரமாக நின்றிருந்தான். ஒரு கையில் பாதி உடைக்கப்பட்ட தேங்காயை வைத்திருந்தான். மறுகையால் சரத்தினை இறுக்கிப் பிடித்திருந்தான். அவன் நின்ற கோலத்தைப் பார்த்த உடனேயே அவனது நிலைமையை உணர்ந்து கொண்டாள். யாருமே கண்டுகொள்ளாத அவனருகில் சென்று மெதுவாக பேச்சுக்கொடுத்தாள். அவன் பேசாமல் அமைதியாக இருந்தான். திடீரென என்னைக் கூட்டிக்கொண்டு போகத்தானே வந்தனீங்கள் என்று கேட்டான். 

அவளது வீட்டில் புதிதாக ஒரு ஆணின் நடமாட்டத்தை கண்டுகொண்ட சனங்கள் அவள் முன்னும் பின்னுமாக கதைக்கத் தொடங்கினர். அவள் முன்போல எதையும் எதிர்கொள்ளும் துணிவுடையவளாக  இல்லை. தன்னை முடக்கும் எதனையும் எதிர்க்கக்கூடிய வல்லமை அவளிடமிருந்து வடிந்து போயிருந்தது. சுதர்சனோ யதார்த்தத்தின் எந்த ஒரு அசைவையும் கண்டுகொள்பவனாகவும் இல்லை. உறவுகள் யாருமற்று தனித்தலைந்து திரிந்தவனுக்கு அவளது பரிவு மட்டும் தேவையானதாக இருந்தது. அவனை பரிசோதித்த முன்னாள் புலிகளின் வைத்தியர், நித்திரை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை பரிந்துரைத்தார். பகல் பொழுதுகளில் எங்காவது மரங்களில் ஏறி இருப்பான். இறங்கி வா என்று அழைப்பவர்களுக்கு நான் மேலே போகப்போறன் என்று வானத்தை காட்டுவான். சிலநேரங்களில் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கோவிலில் ஆளை மறைக்குமளவு பெரியதான தூணோடு ஒட்டி  ஒளிந்திருப்பான். 

நினைவுகளில் துல்லியமாக வரையப்பட்ட தேசமொன்றில் வாழ்ந்தவர்களும், அந்த நினைவுகளிலிருந்தே தப்பிச்செல்ல முயன்றவர்களுமாக ஒரு இனம் இருந்தது என்று கூறினால் இன்று யாரும் ஏற்கப் போவதில்லை. அதேபோல் ஒரு காலத்தில் வன்னியின் வாசலாக இருந்த முகமாலையில் போராளிகளை வரவேற்க கூடிய கூட்டம் ஏறக்குறைய அய்ந்து மைல்கள் நீளத்திற்கு நீண்டிருந்த நாளொன்றும் இருந்தது என்று சொன்னாலும் இன்று யாரும் நம்பத் தயாராக இல்லை. அப்படியாக யாழ்ப்பாணம் தன்னை மாற்றிக் கொண்டுவிட்டிருந்தது. 

இந்த மாற்றங்கள் எதுவும் அவனை நெருங்கி இருக்கவில்லை. அவன் எல்லாம் கடந்தவனாகி இருந்தான். கோவில் தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக இருந்த புராண கதைகளைச் சொல்லும் கற்பாலகர்களுடன்தான் அவனது உரையாடல்கள் இருந்தன. அவனது எந்தவொரு கேள்விக்கும் விடையில்லாமலும், வைத்திருக்கும் பதில்களுக்கு கேள்விகள் இல்லாமலும் அவனது பொழுதுகள் இருந்தன. எவராலும் நெருங்கமுடியாத ஒரு இடத்தில் தன் இருப்பை அந்தப் பாலகர்களுடன் வைத்துக்கொண்டான். இடையிடையே அவன் நினைவுகளில், தாயைப் போலவே சிகப்பு சேலையுடன் அவள் வருவதையும், அந்த நேரங்களில் அவளின் கண்களில் எழும் பூரிப்பையும் உணர்ந்துகொள்வான். அவளை நேரே பார்க்கும் கணங்களில் அவளது கண்களில் அந்தப் பூரிப்பை தேடுவான். அவள் கண்கள் எதனையுமே அவனுக்கு கற்பிக்காமல் போக, குனிந்துகொள்வான். 

அவள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபின், முதலாவது சோதனை சாவடியில் சுதர்சனைக் கண்டாள். அடையாளம் தெரியாதபடி உருக்குலைந்திருந்தான். அவனை உற்று நோக்குவதே அபாயத்தினை ஏற்படுத்திவிடுமென்ற நினைப்பில் பார்வையை விலக்கிக்கொண்டாள். ஒரு போராளியின் இறுதி வணக்க நிகழ்வில் பார்த்த அவனது முகம் அழியாத நினைவாக அவளுக்குள் பதிந்துபோயிருந்து. இறுதியாக அவள் கலந்துகொண்ட நிகழ்வும் அதுதான். 

போராளியாக சாவடைந்த தங்கையின் தலையை தன் மடியில் வைத்து கன்னங்களைத் தடவிக்கொண்டிருந்தான். இருவரும் ஒரே சாயல். இரணைப் பிள்ளைகளாகவும் இருக்கக் கூடும் என எண்ணிக் கொண்டாள். "கட்டாய ஆள்சேர்ப்பில் பிடிச்சுக் கொண்டு போனியள் இப்ப ஒரு மாதம் கூட ஆகேல்லை அதற்குள் அவளை கொண்டுவந்து கிடத்தியிருக்கிறீயளே நீங்கள் அழிஞ்சுதான் போவியள்" என்று திருப்பி திருப்பி அவன் சொல்லி அழுவதை சகிக்க முடியாமல் வெளியில் சென்றாள். 

பயிற்சிக்கென பிடிக்க வந்தவர்கள் அவனைக் காணாததால், எழுந்த ஆற்றாமையில் "கொண்ணனை பயிற்சிக்கு வரச்சொல்லு உன்னை விடுறம்" கூறி தங்கையை இழுத்துச் சென்றார்கள் என்றும், சிலநாள்களின் பின்னர், ஒளிந்திருந்த அவனுக்கென கஞ்சி வேண்டச் சென்றிருந்த தாயும் செல்வீச்சில் இறந்து போனதாகவும் அங்கு நின்றவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டும் கேளாததுபோல நின்றிருந்தாள். அங்கு நின்றவர்கள் பார்வையில் முன்பிருந்த கண்ணியம் இல்லாமல் போயிருந்ததையும் கண்டாள். யுத்த இறுதிநாள்கள். திரும்பும் இடமெல்லாம் எறிகணைகளும் சாவின் ஓலங்களும்தான். இன்றோ நாளையோ நானும் கூட இறந்துபோகலாம் என்ற எண்ணமே அவளிடத்தில் இருந்தது. அதில் சாகாமல், சரணடைந்து புனர்வாழ்வு என்ற அவாந்திரகாலத்தையும் முடித்து நினைத்தே பார்த்திருக்காத வகையில் வாழ்கையை கடத்திக்கொண்டிருக்கும் நாளொன்றில், சந்தையில் அவனைக் கண்டபோது எழுந்த உணர்ச்சிகளை அவளால் புரிந்துகொள்ள இயலாமல் இருந்தது. தன்னை விடுவித்துக்கொள்ளும் நோக்கில் தான்  தன்னையும் மீறி பேசியதை  உணர்ந்துகொண்டாள்.

சூழ்ந்திருந்த சனங்களின் முகங்களிலிருந்து எழுகின்ற எள்ளல் அவளைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. ஆயிரம் குரல் ஒலிகள் அவளின் தேகத்தில் மோதி காற்றில் கரைந்து போயின. தனியனாக எல்லாவற்றையும் எதிர்கொண்டாள். ஒதுங்கவும் ஒடுங்கவும் தன்னியல்பிலேயே கற்றுக்கொண்டாள். சூழும் தனிமையிலிருந்து தப்பிக்கொள்ள தடுப்புமுகாமில் ஒன்றாக இருந்த நண்பிகளின் வீடுகளுக்கு சென்று வருவாள். அவர்களோடு தங்கியிருக்கையில் உள்ளார்ந்து புதிப்பித்துக்கொள்ளும் ஒரு உணர்ச்சி பெருகிவழியும். ஏதாவது ஒரு கணத்தில் சட்டென சுதர்சனின் நினைவு எழும். பெருகும் குற்றவுணர்வில் சிதைந்துபோவாள். அன்றே அவர்களிடம் விடைபெற்று வீடு வருவாள். ஒருநாளோ இருநாளோ அவளைக் காணாதவன், உணவேதுமில்லாமல் பசியில் சுருண்டு கிடப்பான். அவனைப் பார்த்த கணமே எல்லாம் மறந்து சமையலை தொடங்குவாள். 

அன்றும் அப்படிதான் நான்கு நாள்களின் பின் வீடு திரும்பியவளை, கண்டவுடன் சுதர்சன் ஓவென்று அழுதான். ஓடி வந்து அணைந்து தோளில் முகத்தை வைத்து கண்ணீர் வடித்தான். சூடான அவன் தேகமும் கண்ணீரும் அவளை உருக்கி அழித்தது. அணைப்பிலிருந்து ஒரு குழந்தையைப் போல விலக்கியவள் அவனை ஆழ்ந்து பார்த்தாள். அன்றுவரை அவளுக்குள் இல்லாத சுதர்சன் அங்கே நின்று கொண்டிருந்தான். அவனது உயரமும், மேலாடையற்ற அவனுடலில் இருந்து எழுந்த வியர்வை மணமும் அவனை வேறொருவனாக அடையாளம் செய்தன. திகைத்து நின்றவள், அவனை அப்படியே ஒதுக்கிவிட்டு குடிசைக்குள் புகுந்தாள். பசியில் அவிந்திருந்தவனுக்காக உணவினை தயாரிக்கத் தொடங்கினாள். 

அவளைக் கண்ட மகிழ்வில், தன்னை மறந்து பசிக்களைப்பில் உறங்கத் தொடங்கியிருந்தான். சமையல் முடிந்து உணவை எடுத்துவைத்துவிட்டு அவனை எழுப்ப சென்றவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை குழப்பாமல், தலையை கோதிவிட்டு அவன் முகத்தை பார்த்துக்கொண்டு நின்றாள். நெற்றியில் முத்தமிட்டுவிட்டு திரும்பி வந்து வாசலில் அமர்ந்துகொண்டாள். 

விலகலும் நெருக்கமுமாக அவளது மனதுக்குள் ஒரு திரள் உருவாகி அலையத் தொடங்கியது . முறுகித் துடித்த உடலெங்கும் சூடு பரவத்தொடங்கியது. மார்புகள் ஏறி இறங்க பெருமூச்சோடு எச்சிலை விழுங்கினாள். இறுக்கமாக இருந்த கொண்டையை அவிழ்த்து கூந்தலை விரித்து விட்டாள். உடலில் இரத்த ஓட்டம் மிகைப்பட்டது போல உணர்ந்தவள், திரும்பி அவன் படுத்திருந்த இடத்தைப் பார்த்தாள். கால்களை நீட்டி இணைத்து உடலை ஒருமுறை விறைப்பாக்கி, இயல்பாக்கினாள். அப்படியே ஒருக்களித்து தொடைகளுக்கிடையில் கையை வைத்து கதவோடு உடலை சாய்த்து உட்கார்ந்து கொண்டாள். 

இரவின் அமைதியின் ஆழத்தில் வேலியருகில் இருந்து பூனையின் கண்கள் இருபுள்ளிகளென ஒளிர்வதைக் பார்த்தாள். தணலென ஒளிரும் பூனையின் கண்களைக் கண்டதில் மனம் பகுதியாக அல்லப்பட்டது. தன்னை மீறி அந்த ஒளிப்புள்ளிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தவள், குழந்தையின் அழுகுரலை ஒத்ததான அதன் கதறல் சத்தம் கேட்டதும் எழுந்து குடிசைக்குள் சென்றாள். சுதர்சன் போர்த்தியிருந்த சிகப்பு சேலையை விலக்கி அவனருகில் நெருக்கமாகப் படுத்துப் போர்த்திக் கொண்டாள். 

சேலையின் வாசனை மாறி இருப்பதை உணர்ந்தவன், படுத்திருந்தபடியே முகத்தருகில் சேலையை வைத்து ஆழ்ந்து வாசனை பிடித்தான். கலவையாக எழுந்த வாசனைகளால் முகம் சுழித்தான். தலைக்குள் வாசனைகள் மாறி மாறி உருவங்கொள்ளத் தொடங்கின. மெல்ல அந்த உருவங்கள் அவனை தூரத்தத் தொடங்கின. மெதுவாக எழுந்து விளக்கின் வெளிச்சத்தை தீண்டினான். வர்ணக் கலவைகளாக அலையும் அந்த உருவங்களை வெளிச்சத்தில் தேடத்தொடங்கினான். வெளிச்சம் மடிந்து இருள் கலக்குமிடத்தில் அவள் நிர்வாணமாக ஒருக்களித்துப் படுத்திருந்தாள். எழுந்து அருகில் சென்றான். அவளுடலிருந்து எழுந்த வாசனை அவன் முகத்திலடித்தது. அங்கிருந்து வெளியேறினான். அது இரவின் மூன்றாம் பொழுதாக இருந்தது. 

அதன் பின் அவன் யாருக்கும் தென்படவே இல்லை. அவன் போர்த்தியிருந்த சிகப்பு சேலை அரசமரத்தின் அடியில் சுற்றிக் கட்டப்பட்டுக் கிடந்தது. அன்றையின்பின் அந்த பாதைவழியே பயணிப்பவர்கள் அரசமரத்தின் உச்சியை அண்ணாந்து பார்ப்பதுவும், குழப்படி செய்யும் தங்கள் பிள்ளைகளுக்கு "மரஉச்சியில் சுதர்சன் ஒளிஞ்சிருக்கிறான் பிடிச்சுக் கொடுத்திடுவன்" என்று சொல்வதும் வழமையானது. 

2)
செண்பகம் என்று அழைக்கப்பட்ட நீலவள்ளி கதிர்காமர் 

கடற்கரையில் இருந்து நூறுமீற்றர்கள் தூரத்தில் அமைந்திருந்தது அந்த முகாம். தென்னைமரங்களும் மாமரங்களும் நிறைந்திருந்த ஒரு பெரிய வளவினை முகாமாக மாற்றி இருந்தார்கள். கடலிலிருந்தும், வானிலிருந்தும் எறிகணை தாக்குதல்கள் அடிக்கடி நடப்பதால் பிரதான வீதியிலிருந்து சில நூறு மீற்றர்கள் உட்புறமாக அமைந்திருந்த அந்த முகாமினை சூழ்ந்திருந்த வீடுகளில் யாரும் வாசிக்க முடியாது போயிருந்தது. அந்த சூழல் எப்போதும் அமைதியாகவே இருக்கும். திடீரென முகாமுக்கான வழங்கலை செய்யவென வாகனங்கள் வந்து செல்லும் ஒலியைத் தவிர, ஏனைய நேரங்களில் இரையொன்றை விழுங்கிவிட்டு அடுத்த இரைக்காக காத்திருக்கும் முதலையின் அமைதியைப்போல அந்த நிசப்தம் பயமுறுத்திக்கொண்டே இருக்கும். 

நேரெதிராக முகாமினுள் எந்த நேரமும் ஒரு மகிழ்வான சூழல் நிலவும். வாசலிலிருந்து வரிசையாக நடப்பட்டிருக்கும் பூஞ்செடிகளும், அங்கு நிலவும் குளிர்மையும், பனைமூரி மட்டைகளால் வரிசையாக அடைக்கப்பட்டிருக்கும் சிறுசிறு குடில்களும் சிரித்த முகங்களுமென அந்த இடம் மனதிற்கு நெகிழ்ச்சியை உண்டாக்கும். ஆனால் கடந்த இரண்டு நாள்களாக அவர்களுக்குள் இருந்த மகிழ்ச்சி குறைந்து தளர்வின் சாயலும், ஒருவரை ஒருவர் விலகிப்போகும் இடைவெளியும் வெறுப்பும் உருவாகி இருந்தது. என்னாகுமோ என்ற அய்யமே எல்லோரினதும் விழிகளிலும் தெரிந்தது. 

முகாமின் பொறுப்பாளரான செண்பகம் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தாள். நீண்ட விசாரணையின் முடிவில் அவளிடமிருந்து அறிக்கையைப் பெற்றுக்கொண்ட விசாரணையாளர் "முகாமின் பொறுப்பாளர் என்ற வகையில் அனைத்து நடவெடிக்கைகளும் உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். உங்களை மீறி ஒரு நிகழ்வு நடைபெறுகிறது என்றால் நீங்கள் உங்கள் பணியை செம்மையாக செய்யவில்லை என்றே கொள்ள இயலும். அதற்கான தண்டனை உங்களுக்கு உண்டு. நீங்கள் இங்கேயே இருங்கள். உங்களுக்கான அழைப்பு வரும் என்று கூறி விட்டு சென்றுவிட்டார். மறுநாள் அவளது அணியிலிருந்த அனைவரும் பிரிக்கப்பட்டு அணி மாற்றம் செய்யப்பட்டதாகவும், அவளுக்கு மூன்று மாதங்கள் தண்டனைக்காலமாக தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் பின்னர் விரும்பினால் விலகி செல்லாம் அல்லது மாவீரர் பணிமனையில் போராளியாக செயற்பாடுகளை தொடரலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. 

தண்டனைக் காலம் நிறைவுற்ற நாளில் செண்பகம் அழைக்கப்பட்டாள். அவளது அணியில் இருந்த தவறு செய்தாக கருதப்பட்ட போராளியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அமைதியாக அவளைப் பார்த்தாள் செண்பகம். அவள் மிகவும் நேசித்த அந்த போராளியிடம் என்ன கேட்பதென தடுமாறினாள். சிலகணம் நீடித்த மௌனத்தை உடைத்தது அந்தப் போராளியின் குரல்.  அக்கா, நான் செய்தது தவறுதான். அதற்கான தண்டனையை வழங்கி என்னை விட்டுவிட சொல்லுங்கள். அந்த சந்தர்ப்பத்தில் எதையுமே உணரும் நிலையில் நான் இல்லை பெண்ணாக என்னால் அதை கடந்துவிடவும் இயலவில்லை. அவனை திருமணம் செய்வதாக முடிவு செய்திருந்தேன். அதற்காக நான் இயக்கத்திலிருந்து விலகி செல்ல கடிதத்தை எழுதியிருந்தேன். அவனும் சம்மதம் சொல்லியிருந்தான். எங்கட இயக்க கட்டுப்பாடுகள் எதுவுமே அந்த சந்தர்ப்பத்தில் தெரியவில்லை. அவனைத்தான் திருமணம் செய்யப்போகிறேன் என்ற துணிவில், எனக்கான துணை என்ற நம்பிக்கையில், அவனுக்கும் நம்பிக்கை வரவேண்டும், என்ற ஆசையில் நிகழ்ந்துவிட்டது. என்னை காப்பாற்றுங்கள் அக்கா என்று கதறினாள். 

அமைதியாக அறையிலிருந்து வெளியேறினாள் செண்பகம். அவளிடம் சந்திப்பு பற்றி அறிக்கை கேட்கப்பட்டது. அமைப்பு விதிகளை மீறி காதலித்ததோடு, உடல்சார்ந்த தொடர்புகளும் கொண்டிருந்ததாக சம்மந்தப்பட்ட போராளியே ஒப்புக்கொண்டிருப்பதால் இயக்க விதிகளின் படி உச்சபட்ச தண்டனையை வழங்கவேண்டும். அது ஏனைய போராளிகளுக்கு தெளிவு படுத்தப்பட்டு அறிக்கையாக பேணப்படவேண்டும் அதன் மூலமாக இவ்வாறான சீர்கேடுகள் நடைபெறாமல் தடுக்க இயலும். அத்துடன் போராளி என்று தெரிந்திருந்தும் அவளை அவ்வாறு செய்யத்தூண்டிய நபருக்கும் உரிய வழங்கவேண்டும். நாங்கள் போராளிகள் எங்களது நோக்கம் சிந்தனை செயற்பாடு என்பன மக்களின் நலனும் இயக்கத்தின் நலனும் சார்ந்தே இருக்கவேண்டியது. என எழுதி சமர்ப்பித்தாள். கூடவே தனது அணிப்போராளி செய்த குற்றத்திற்காக வழங்கப்படும் தண்டனையை தான் செயல்படுத்த விரும்புவதாகவும் ஒரு குறிப்பினை சேர்த்திருந்தாள். 

3) 
சுதர்சன் தனக்கு மிகவும் பிடித்ததமான வாசமென்று வீட்டின் முற்றத்தில் ஊசிமல்லிகையை நட்டுவைத்திருந்தான். அதைப் பார்த்தவள் காணுமிடங்களில் இருந்தெல்லாம் மல்லிகை செடிகளை கொண்டுவந்து கொடுப்பாள். கண்கள் மினுங்க, பூரிப்புடன் அதனை நடுவதற்காக அவளையும் அழைத்துக்கொண்டு செல்வான். முற்றத்தில் இடம் தேடி அங்குமிங்கும் பார்த்து அவளிடம் ஆலோசனை கேட்பான். இருவரும் முடிவு செய்து நடுவார்கள். அப்படியாக அவளது முற்றமெங்கும் மல்லிகை செழித்து நின்றது. வீடெங்கும் மல்லிகை வாசம் நிறைந்திருந்தது. அந்த வாசம் அவனை எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருந்தது. 

அந்த இரவில் தப்பிப்பிபோகாத நினைவுகள் வேர்களென அவளது காலடியிலிருந்து ஆரம்பித்து வளர்ந்து தலைவரை மூடி இறுக்குவதாக உணர்ந்தாள். மூச்சுக்காற்றின் வெப்பம் வேர்களின் நுனிகளைக் கருக்கி அழிக்கின்ற போதிலும், நினைவின் வேர்கள் நின்றுவிடாமல் வளர்ந்து கொண்டே இருந்தது. வேர்களால் சுற்றி முற்றுமுழுதாக அடைக்கப்பட்டு இனி இம்மியளவும் அசைய முடியாது என்றதொரு நிலை வந்துவிட்டது என பயந்து "அய்யோ" என்று வாயெடுத்து கத்தினாள். கத்திய ஒலி வெளியில் விழவே இல்லை. ஆனால் அவளுக்குள் அதன் எதிரொலியும் கேட்பதாக இருந்தது. எழுந்தவள் விளக்கினை கொழுத்தினாள். பின் நிதானமாக ஆடைகளையெல்லாம் களையத் தொடங்கினாள். அந்த இரவின் அமைதியை ஊடுருவி நாயொன்று ஊளையிட்டது. நிர்வாணமான தன் உடலை சுவரில் விழுந்த நிழலில் கண்டுகொண்டாள். அந்த நிழல் அவளில் அமைதியை உருவாக்கியது. அப்படியே தன் கைகளை விரித்து கால்களை சேர்த்து வைத்துக் கொண்டு நிழலை உற்றுப் பார்த்தாள். சிலுவையில் அறைந்து தொங்க விடப்பட்ட மனிதரை அந்த நிழல் ஒத்திருந்தது. 

வெளியில் இருள்மேகமென திட்டு திட்டாக திரண்டிருந்தது. காற்றில் அது பஞ்சுப்பொதியென அசைவதுபோலவும் அவளுக்கு தோன்றியது. இருளை நேசிப்பது மிக இலகு. அது பகலைபோல எதையும் வெளிச்சமிட்டுக் காட்டி விடாது. தனக்குள் எல்லாவற்றையும் புதைத்துக்கொள்ளும். அவள் சிலகாலமாகவே தன்னை இருள் திரண்டு உருவாகிய சதைகளின் மொத்தமாகவே கருதத்தொடங்கி இருந்ததை புரிந்துகொண்டாள். பாயிலிருந்த போர்வையை எடுத்து உடலில் சுற்றிக்கொண்டு திரும்பி பார்த்தாள். கதவினை தள்ளி வெளியில் இறங்கினாள். 

வானை நிமிர்ந்து பார்த்தவள், குடையென விரிந்துகிடக்கும் அதனுள் தன்னை ஒளித்துக்கொள்ள முயன்றாள். வானம்தான் எவ்வளவு பெரிது இருந்தும் நான் ஒளிந்துகொள்ள ஒரு இடமெனும் இல்லையே என்று எண்ணியபடி காற்றில் கரைந்துபோகும் கணமொன்று வந்துவிடாதா என்று சொல்லிக்கொண்டாள். காலடி நிலம் ஒருபிடியென சுருங்கி இருந்தது. இறுதிப் பிடிமானம் அது. இன்னொரு அடி எடுத்து வைப்பதென்றாலும் ஒருசாண் நிலம் அவளைத்த தாங்க வேண்டும். அது நிலத்திற்கு இருக்கிறது என்றாலும் எடுத்துவைக்கும் இயல்பு கால்களுக்கு இல்லாமல் போனது. போர்வையை எடுத்து கீழே போட்டுவிட்டு நடக்கத்தொடங்கினாள். 

பெருமரமொன்றிலிருந்து விழுந்த குளிர்மை தேகத்தில் அறைய, நிமிர்ந்து பார்த்தவள், வானத்தை மறைத்து பிரமாண்டமாக கிளைகள் பரந்து கிடந்ததைக் கண்டாள். அந்த மரத்தின் அடியில் சிகப்பு துணியொன்று சுற்றிக் கட்டப்பட்டிருப்பதை பார்த்தாள். அந்த துணியில் தன்னை மறைத்துவிடலாம் என்று நம்பத்தொடங்கினாள். 

இனிவரும் காலங்களில் யாராவது ஒருவர், அந்த மரத்தில் நிர்வாணமாக தூக்கிட்டு செத்துப்போன பெண்ணின் கதையை இன்னொரு விதமாக சொல்லவும் கூடும்.

No comments:

Post a Comment