Friday 10 April 2020

கந்தில் பாவை - நிகழ்த்திய கதை

" தோம்பு " என்றொரு சொல்லை நீண்ட காலத்தின் பின் வாசித்தபோது,  சுமார் பத்து ஆண்டுகள் ஒரு மைதான  வழக்குக்காக அலைந்த அந்த நாள்கள் நினைவுக்கு வந்தன. அடி உறுதி,  கள்ள உறுதி...  என்றும், "பருத்தி புடவையாக காய்ச்சுகிடக்கு" "அலவாங்கு விழுங்கி" "எள்ளு காயுதெண்டு எலிப்புளுக்கையும் ஏன் காயுது " என்றும் எங்கள் மீது பலர் எறிந்த  சொல்லாடல்களை நினைவுக்குக் கொண்டுவந்திருந்தது அந்த ஒற்றைச்சொல். கூடவே இயத்துகள், பூவல் நிலம், "பழிப்பு படலைக்குள்ள சிரிப்பு சீலைக்குள்ள ' என சில சொற்கள் அம்மம்மாவின் தோல் சுருங்கிய  கன்னங்களையும், பொக்கைவாய் சிரிப்பையும் நினைவில் கிளப்பியது.

கிளர்ந்த அந்த  நினைவுகளின் அருட்டலுடன் தான்  கந்தில் பாவையை வாசித்து முடித்திருந்தேன்.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து  கனடா, நோர்வே என தம் கிளைகளைப் பரப்பி நிற்கும் ஒரு குடும்ப உறவுகளின்  கதையை,  நம் காலத்தில் ஆரம்பித்து 1880 களை நோக்கி கொண்டு செல்லும் நாவல்,  தாயின் மன இயல்பின்மைக்கான காரணத்தை தேடி செல்லும் மகள் அறிந்துகொள்ளும் தகவல்களாக ஒரு பகுதியும், அவள் அறியாதவற்றை இன்னொரு பகுதியுமாக  தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

யாழ்ப்பாணிய  நிலவுடைமை சமூக இயக்கம்,  சைவ, கிறிஸ்தவ மிஷன்களின் செயற்பாடுகள்,  எண்பதுகளின் பின்னான  யுத்தம், இடப்பெயர்வு, புலம்பெயர்வாழ்வு என   காலத்தை நான்காக பிரித்து எடுத்துக்கொள்வது வாசிப்பதற்கான மனநிலையை இலகுவாக  தயார்ப்படுத்திவிடுகிறது. நாவல் கொண்டிருக்கும் மொழிப்பிரயோகம் ஒரு நாகரிக அல்லது மேட்டிமை தன்மையை கொண்டிருக்கிறது. தேவகாந்தனின் அநேக படைப்புகளில் இந்த மொழியை உணரமுடியும். ஈழத்து பிரதியாக்கங்களைப் பொறுத்தவரை இவரது மொழி தனித்து நிற்கிறது.

நாவல்   அந்த அந்த காலகட்டங்களுக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றிக்கொள்வதும், பழமொழிகள், சிலேடைகள், பேச்சுவழக்கு முறைகள்,  அந்தக்கால சொல்லாடல்கள் என  வரித்துக்கொள்வதும் தன்னியல்பிலேயே நிகழ்கிறது.  புனைவுக்கான சாத்தியங்களை நிராகரித்து  கதை கொண்டு செல்லப்படுகிறது. அநேக கதைகளும் சம்பவங்களும் நாமும் எங்கள் அம்மாவிடமோ அம்மம்மாவிடமோ கேட்டு சிலிர்ந்த கதைகளாக மீந்து நிற்கின்றன. கதை கேட்டு உறங்கிய இரவுகளில் பயந்து அலறிய கனவுகளை உருவகிக்கின்றன

மன  இயல்புகள், அவைகள் உருவாக்கும் தாக்கங்கள், அவற்றின் நீட்சி, என நாவலெங்கும் உள்மனதின் பண்புகளை,  சிக்கல்களை முன்வைக்கிறது. அது குடும்பத்தொடர்ச்சியாக நீள்வதும், பிறிதொரு சூழலில், பிறிதொரு வாழ்வியலுள் தங்களை அமிழ்த்திவிட்ட போதிலும்  ஒரு சிறிய சிதைவில் மீண்டும் உருக்கொள்வதும், நீட்சி கொள்வதும், காட்சிகள், வெளிப்படுத்தல் முறைகள் கூட  தொடர்ச்சியான ஒன்றாக அமைவதுமாகத்  தொடரும்    பண்பினை எங்கும் வெளிப்படுத்துகிறது.  மனதின் ஊடுபாயும் தன்மையையும், சிதைவுகளின் போது நிகழும் பண்பு மாற்றங்களையும்,  நம்மில் கூட  எதிர்பாராமல் நிகழும் சில சந்தர்ப்பங்களில்  பொருத்திப்பார்க்க வைத்துவிடுகிறது.

   கிறிஸ்தவ - சைவ மோதலாக உருக்கொள்ளும் நாவலின் பிற்பகுதி அதன் காலம் சார்ந்து ஆணாதிக்க   நிலவுடைச்சமூகத்தின் இயல்புகளை வெளிப்படுத்தியும், சாதிய சமூகமாக தன்னை கட்டமைத்திருந்ததையும்  தொட்டு பேசுகிறது.  சைவ மேலாதிக்க சமூகம் ஆறுமுக நாவலரை கொண்டாடும் தன்மையை கோடிட்டு செல்வதும், கச்சப்பு தன்னை மதம் மாற்றிக்கொள்வதனூடாக மேல்நிலையாக்கம் பெறுவதை பொறுக்கமுடியாத ஆண்டான்  மனப் போக்குகளையும் பதிவு செய்கிறது. இதில், கச்சப்பு ஒற்றைப் பாத்திரம்தான். நாவலின் காலத்துக்குள் எத்தனையோ ஆயிரம் கச்சப்புகள் கடந்து போகமுடியாதவரை மறைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நான்கு பிரதான பிரிவுகளிலும் பெண்கள் முக்கியமான பாத்திரமாக உருவாக்கப்பட்டு  இருக்கிறார்கள். நாவலின் உள்ளார்ந்த மௌன கதையாடல் முழுவதும் பெண்களால் தான் நகர்த்தப்படுகிறது.  அதுதான் இந்த நாவலின் மிக முக்கியமான கூறு.  சமூகம் ஆணாதிக்க சமூகமாக  புறவயமாக இயங்குகின்றதெனிலும் பெண்கள்  அதற்கான எதிர்ப்பை மறுப்பை நிராகரிப்பை முன் வைக்கிறார்கள்.  மீறிய தருணத்தில் முடிவுகளை எடுத்து செயற்படுத்துபவர்களாகவும்  மாறி விடுகிறார்கள்.

வெற்றிலை, இராசவள்ளி, பீர்க்கம் கொடி என பல செடிகள் படரும் ஒரு வேலி வருகிறது. அதில் படரும் கொடிமரங்களை அந்தந்த கொடிகளோடு இணைத்து வளர்ப்பவளாக இருக்கிறாள்  பொன்னரியம்.   அவள் சைவ விரதமொன்றை கடைப்பிடித்திருக்கும் பின்னொருநாளில் கிறிஸ்தவனாக தன்னை வரித்துக்கொண்ட   கணவன் சண்முகம் அதே வேலியோரத்தில் வைத்து  கட்டாயப்படுத்தி உறவு கொள்கிறான். "வேலி உடைந்து விழுகிறது".   அவனது நோக்கம் மனைவி கடைப்பிடிக்கும் விரதத்தின் கட்டுப்பாடுகளை குலைப்பதாக இருக்கிறது.   அந்தக்கணத்தில்  உருவாகும் மன உடைவு, நாவலில் வரும் பெண்பாத்திரங்கள் உறவு கொள்கையில் எதோ ஒரு ஒவ்வாமையில் சட்டென பற்றிக்கொள்கிறது அதுவே நீண்டு செல்கிறது. இதோடு ஆணாதிக்கமும், ஆண்டான் மனோபாவமும் குடும்பத்திலும், சமூகத்திலும்  நிகழ்த்தும்  அக புற வினையாற்றல்களையும் அடையாளப்படுத்திவிடலாம்.

தன்னை ஒரு கிறிஸ்தவனாக மாற்றிக் கொண்டமைக்காக  தன் சாதியினாரலேயே கொல்லப்படும் சண்முகம்,  அவன் கொலையை இயல்பாக கடந்துசெல்லும் பொன்னரியம் என ஆரம்பிக்கும் குடும்பம் இறுதியில்(2004) ஒரு கிறிஸ்தவ சைவ காதலர்களில் அதனை இயல்பாக அணுகும் முறையையும் வெளிப்படுத்துகிறது. 

ஆதிக்கசாதியினரால் தம் சாதியிலேயே  மதம் மாறியமைக்காக நிகழ்த்தப்படும் கொலை அந்தக் காலப்பகுதில் நிகழ்ந்த மதம் சார்ந்த கொலைகளுக்கும், வன் கொடுமைகளுக்கும் அடையாளமாக இருக்கிறது. அந்தக் காலப்பகுதியில் நிகழ்ந்த  சாதியக் கொடுமைகளையும்  பதிவு செய்கிறது. குறிப்பாக தம் சாதியினரை மதத்திற்காக  கொலைசெய்பவர்கள் கிறிஸ்தவனாக மாறிய தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த  கச்சப்புவை கட்டிவைத்து துன்புறுத்துவதும், பின் வழக்கின் மூலம்  நட்ட ஈடு கொடுத்து விலகிப் போவதையும் குறிப்பிடலாம். மேலாதிக்க சாதியமனதின்    பலத்தினை, அதிகாரத்தினை சில சட்டங்களை வைத்து அடக்கிவிடுவதாக வரையறை செய்தாலும் அது அவற்றை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.  

ஆண் பெண் உறவுச்சிக்கல்களின் அடிப்படையே பாலியல் முரண்பாடுகள் தான். அதனைப் பேசும் நாவல்,  ஆண் மனங்கள் குறித்து, அதன் உளைவுகள் அழுத்தங்கள் குறித்து உள்ளார்ந்து   வெளிக்கொணரவில்லை.  நிலவுடமை சமூகமாக இருந்த காலத்தில் தென்னிந்தியா வரை சென்று "உறவு" வைத்துக்கொள்வதும், அந்த உறவு அறுபடும் போதில் "பேயோட்டி விட்ட நின்மதி அவரில் இறங்கி இருந்தது என்று பதிவு செய்வதிலும், முற்பகுதியில் காமம் விற்பனையாகும் வீடுகளில் சென்று இறக்கிவைத்து விட முடியாது என்று கோட்டிட்டு செல்வதிலும் ஆண் மனம்  தன்னை தற்காத்து கொள்கிறது. 

யாழ்ப்பாண சைவர்களால்  அறுபது புத்தபிக்குகளை எரிக்கப்பட்டதாகவும், அவர்களின் எச்சங்களைக் கொண்டே, அவர்களின் நினைவாக கந்தரோடை பௌத்த சின்னங்கள் உருவாக்கப்பட்டதாகவும் நாவல் பதிவு செய்கிறது. யாழ்ப்பாணத்தில் பௌத்தர்கள் எரிக்கப்பட்டார்களா, இது குறித்து வரலாற்றுப் பதிவுகள், ஆய்வுகள் ஏதாவது இருக்கிறதா? மூத்தவர்களின் வாய்வழி தகவல்களாக தனக்கு கிடைத்தவற்றை பதிவு செய்வதாக முன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும், புனைவு என்று ஒதுக்கிவிடுவதாக இருந்தாலும், இது குறித்து விரிவான உரையாடல் ஒன்று அவசியமானது.  

கந்தில் பாவை ஒரு கதைசொல்லி. சிலப்பதிகாரத்தில்  மணிமேகலைக்கு முற்பிறப்பு பற்றியும், வாழ்வின் எஞ்சிய காலம் பற்றியும் கூறுவதாக அமைக்கப்பட்டிருக்கும் அதன் பாத்திரம். நாவலின் கட்டமைப்பும் , முதுமக்கள் கதைசொல்லி நகர்த்தலும் அதனை வெளிப்படுத்துகிறது. எமக்கு கதை  என்பதே வீட்டில் வாழும் முதியவர்களிடமிருந்துதான் அறிமுகமாகிறது. இந்த பிரதியும் அதையே ஒரு உள்ளீடாக கொள்கிறது.


 யாழ்ப்பாணத்தின் நிலவுடமை சமூக இயல்பின் ஒரு பக்கத்தினை அறிந்துகொள்ள கந்தில் பாவையை வாசிக்கலாம். 

நன்றி ; ஆக்காட்டி 








1 comment:

  1. நல்லதொரு பகிர்வு நண்பரே . பழைய நினைவுகளை கிளறிவிட்டது ,இதில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் இபோதும் பிரச்னைக்கு உரியவையே . கிடைத்தால் படிக்கிறேன்

    கரிகாலன்
    www,karikaalan.blogspot.com

    ReplyDelete