Tuesday, 4 December 2018

மீறலும் மீறிச் செல்ல முயல்தலும், மீந்து கிடக்கும் யதார்த்தமும்.

 பச்சை நரம்பு அனோஜனின் இரண்டாவது தொகுப்பு. இதில் பத்து கதைகள் இருக்கின்றன.  போர் நீங்கிய நிலத்திலிருந்து   தன்  கதைகளை எழுதுகிறார்.  சமகாலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவராகவும் இருக்கிறார். தொடர்ந்தும் எழுதி வருகிறார். முக்கியமான  சிறு பத்திரிகைகளிலெல்லாம்  எழுதி இருக்கிறார். சிறுகதைகள் மட்டுமில்லாமல்  கட்டுரைகளும், விமர்சனக் குறிப்புகளும் எழுதுகிறார். 

அனோஜனின் எடுத்துரைப்பு மொழி வாசிப்பவர்களுக்கு  இலகுவானது. எந்த வித சிக்கலையும் ஏற்படுத்தாமல் சரளமான  ஒரு வசிப்பினை தூண்டக்கூடியது. சித்தரிப்புக்களோடு  மிக லாவகமாக நகரும்  தன்மை இவரது கதைகளில் இருக்கிறது. வடிவ நேர்த்தியும் இருக்கிறது. சமீபத்திய வழக்கு போல தேவைக்கு மிஞ்சிய பாலியல் ஊடாட்டமும் கதைகளில் இருக்கிறது. பாலியல் சிக்கல்களை  எழுதிவிடுதல் ஒரு தனிமனிதனின் உள்ளுறையும் உணர்வுகளை எழுதிவிடுதல்தான். அனோஜன் யாரும் எழுதாத, மனிதர்களில் உள்ளுறையும் காமத்தை எழுதிவிடவில்லை. பலரும் எழுதி இருக்கிறார்கள்  ஆனால் அவர்களிலிருந்து   அனோஜனின்  எழுத்துமுறைமை   வேறுபடுகிறதா  என்பதுதான்  முக்கியமானது.


அனோஜனின் கதைகளில்  நிகழ்கின்ற காலம், இடம், சம்பவங்கள்  நாம் அநேகர் கடந்துவந்த காலங்கள் தான். அதனாலும் நெருக்கமாக இந்தக் கதைகளை உணர முடியும். அதே நேரத்தில் எம் அனுபவத்தினூடாக கதைகளை அணுகுகையில் அதன் போதாமைகளும் வெளித்தெரியும். பாரம்பரியமான ஒரு கதை சொல்லல் முறைக்குள் அல்லது அனுபவத்தினை கடத்தும் முறைக்குள் அனோஜனுக்கு முந்திய தலைமுறையொன்று  அந்த நிலத்திலிருந்து எழுதி வந்திருந்தது. இன்றும் எழுதிவருகிறார்கள். ஆனால் அவர்களிலிருந்தெல்லாம் அனோஜன் தன் கதைகளில் வேறுபடுகிறார். இங்கு அவர் புதிய கதைகளை எழுதவில்லை. அவர்களிலிருந்து விலகி தனக்கேயுரித்தான கதை நிகழ்த்தல் முறை ஊடாக அந்த கதைகளை முன் வைக்கிறார்.  இது தான் அனோஜனின்  தனித்துவம்.

இந்த தொகுப்பின்  முதலாவது சிறுகதை வாசனை. ஒரு பெண் தன்  வளரிளம் காலத்தில் தான் உணர்ந்த  எதிர்ப்பாலினத்தாரின்  உடல் வாசனையை முன் வைத்து, தானே கதை சொல்லியாக நின்று நிகழ்த்தப்படுகிறது. இதில்  வாசனை என்பதனை ஒரு புனைவாகக்  கொண்டும் இந்தக்  கதையை வாசிக்க முடியும். தந்தையின், தன்னுடன்  படித்த சக தோழனின்,காதலனின்  பின் கணவனின் என நீளும் இந்த  வாசனை,  இறுதியில் எவ்வாறு மாற்றடைகிறது என்பதே கதை.  தந்தை தன்னுடைய இளமைக் காலத்தில் யாழ்தேவியில் பயணிக்கும் ஒரு பெண்ணை காண்கிறார். ஒருதலையாக காதல் கொள்கிறார். அவள் சிகப்பு சேலைதான் அணிவாள். கதைசொல்லி தான் சந்தித்த ஆண்களில் எல்லாம் தந்தையின் வாசனையை தேடுகிறாள். அது தருகின்ற ஒரு பாதுகாப்பினை, அன்பினை  உளமார விரும்புகிறாள். ஆனால் நிகழ்கின்றவை அதற்கு மாறாகவே இருக்கிறது. ஜெயந்தன் மற்றும்  ஹரியின் மீதான  வாசனைகள் தந்தமையின் உணர்வினை, பாதுகாப்பை  தரவில்லை. தான்  வஞ்சிக்கப்படுவதாக உணர்கிறாள். இவை எல்லாமே ஒரு கதைக்கான சிறந்த அம்சங்களை கொண்டுவருகிறது. ஆனால் ஹரியினதும், மதனினதும், தகப்பனின் காதலியாக சொல்லப்படும் பெண்ணினதும் பாத்திரங்கள் இந்த கதையின் உருவமைப்புக்குள் இயங்கவில்லை. மிகப் பரிதாபமாக மதன் என்ற பாத்திரம் வேண்டுமென்றே  இழுத்து வரப்பட்டிருக்கிறது. ஜெயந்தன் மீதோ, மதன்  மீதோ காதலிக்கும் காலத்தில் இந்த வாசனை வரவில்லை. மீறி ஜெயந்தனிடத்தில் தந்தையின் வாசனை இருந்ததாக நம்பியதாக சொல்லுகிறாள். நம்புதலுக்கும்  உணர்தலுக்கும் இடையில்  இருக்கும் இடைவெளி  வேறானது.   தகப்பனின் காதலியாக சொல்லப்படும் சிகப்பு சேலை அணிந்த பெண் கூட எதுவிதமான புதுமையையும் நிகழத்தவில்லை. அப்படி  நிகழ்த்தியிருந்தாலாவது, இறுதியில் கதைசொல்லியாக வரும் பெண் சிகப்பு சேலையுடன் வெளியேறுவதற்கு பொருத்தமாயிருந்திருக்கும். அந்த பெண்ணைவிட  எல்லாவகையிலும் கதைசொல்லி புதுமையானவளாகவே இயங்குகிறாள்.  ஜெயந்தன் மீதான வெறுப்பு உருவாகுவதற்குகான காரணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவே ஹரியிலிருந்து விலகுவதற்கும்  காரணமாகிறது. ஜெயந்தனை காண்பதற்கு முன் ஹரி ஒரு நேசமுள்ள ஆணாக, கணவனாகத்தான் இருந்திருக்கிறான். ஜெயந்தன் மீது  ஏற்படும் நம்பிக்கையிழப்பு ஹரியிலிருந்தும் விலகத்  தூண்டுகிறது. இது மிக முரண்பாடான கருத்துநிலை. உளவியல் சார்ந்தும்  நல்ல கருவினைக் கொண்ட கதை. தந்தமையின் பாதுகாப்பினை, அருகாமையினை, சந்திக்கும் ஆண்களிடத்தில் கண்டுகொள்வது என்பது ஒரு முக்கியமான பெண்  உளவியல். அதை சரியான முறையில் பாத்திரங்கள் பிரதிபலிக்கவில்லை, வீணான சித்தரிப்புக்களும் பாத்திர அமைப்புகளும் கதையின் முக்கியமான பலவீனங்கள்.

பச்சை நரம்பு இந்தக் கதைதான் புத்தகத்தின் தலைப்பாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. தாயின், தான் காதலிக்கும் தீபா என்ற பெண்ணின், மற்றும் தன்னை வசப்டுத்தும் செல்வமக்காவின் கழுத்தில் என தான் சந்தித்திருக்கும் மூன்று பெண்களிடத்தில் இந்த நரம்பினைக் காண்கிறான் வின்செட் என்ற பதின்நான்கு வயதேயான கதைசொல்லி.      

செல்வமக்கா வின்செட் என்ற அவனை வசப்படுத்துவதற்காக நெருங்குகையில் அவனுக்குள் தாயின் நினைவுகள் வருகின்றன. கனவில் செல்வமக்கா மகனே என்று அழைக்கிறார். ஆனாலும்  அதையெல்லாம் மீறி செல்வமக்காவின்  கால்களும் தொடைகளும் மார்புகளும் அவனை அதிரவைக்கின்றன. அவருக்குள் ஒரு  மிருகம் ஒளிந்திருப்பதாக கண்டுகொள்கிறான். இப்படியான சில வசன அமைப்புகள் தேய்வழக்கானவை. பசித்தமானுடம் கரிச்சான் குஞ்சு முதல் நாகராஜன் எஸ்போ இராகவன் என ஒரு தொகை உதாரணங்களை சொல்லிவிட முடியும்.   இவற்றைக் கடந்து   இங்கே செல்வமக்காவை குறித்து முன் வைக்கப்படும் வர்ணிப்புகள் அல்லது சித்தரிப்புகள் அவர் இப்படித்தான் செய்வார் அல்லது இப்படி செய்யக்கூடியவர் இவ்வாறுதான் இருப்பார் என்பது போல உருவாகிவருகிறது. இது ஒரு சராசரி ஆண் மனநிலை. செல்வமக்காவின் மீது மறைமுகமாக  ஒரு குற்றப்பத்திரிக்கை வாசிப்பது போல இந்தக் கதை அமைந்துவிடுகிறது

பலி  இந்த தொகுப்பில் நேரடியாக யுத்தகால நிகழ்வுகளை பேசும் கதைகளில் ஒன்று. யுத்தம் சனங்களின்மேல் நிகழ்த்திய கொடுமைகளை சனங்களாகவும், யுத்தத்தில் பங்காளராக இருக்கும் இருதரப்பினராலும் நகர்த்தப்படும் கதை. தொடக்கத்தில்  இராணுவவீரன் தன் மகனினை  நினைவில் கொண்டுவருகிறான். அவன் இராணுவத்தினன்  என்பதைவிட நல்ல தந்தையாக இருப்பதை விரும்புகிறவனாகவே இருக்கிறான். எதிரில்  பலி கொடுப்பது, அல்லது பலி எடுப்பது என்பது  விடுதலையின் ஒரு படிநிலைதான் என்று நம்பிக்கை கொண்ட , மற்றவர்களையும் அவ்வாறு நம்பிக்கைகொள்ளத்   தூண்டுகின்ற   மனநிலையுடைய புலி வீரன். இவர்களுக்கிடையில் கதைசொல்லியும்  நண்பனும்.  தன்  இனம் சார்ந்த ஒரு சிறுவனை தவறுதலான கிளைமோர் தாக்குதலில்  கொன்றுவிட்டதற்காக வருந்தி குற்றவுணர்வு கொள்ளும் கதைசொல்லி பின் அடுத்த சந்தர்ப்பத்தில் ஆறு  இராணுவத்தினர் கொல்லப்பட்டவுடன் குற்றவுணர்வோ வருத்தமோ இன்றி அடுத்த அழைப்பை  ஏற்றுக் கொள்வதுடன் கதை முடிகிறது.   குற்ற உணர்விலிருந்து நீங்கி வெற்றிவாத உணர்ச்சிக்குள் இறங்கி விடுவதை சிறப்பாக கதை எடுத்து சொல்கிறது.  ஒரு சிறுவனைக் கொல்வதன் மூலமும், அவனது இறுதி நிகழ்வுகளை  வர்ணிப்பதன் மூலமும்    கதை சொல்லி  அதிர்சியை அல்லது  வேதனையை மிகைப்படுத்த முயல்கிறார். தன்னைக் குறித்த ஒரு பிம்பம் உருவாக அதனை முன் வைக்கிறார். தொடர்சியாக ஆறு இராணுவத்தினர் கொல்லப்பட்ட போதில் எதுவித வேதனைகளோ குற்றவுணர்வோயின்றி  வெற்றிவாத சிந்தனையுடன் எதிர்கொள்வதை முன் வைக்கிறது கதை. அந்த சிறுவனின் சாவுக்கு எந்த விதத்திலும் குறைவானதில்லை இந்த ஆறு உயிர்களும்.  யுத்தம் எமக்கு தந்த பரிசு இதுதான்.  இந்த மனநிலைதான்  இந்த விளைவுகளுக்கு காரணம். அதை இந்த கதை பதிவு செய்கிறது. இன்னொன்றை கவனிக்கவும் வேண்டும் முதலில் கதைசொல்லியும் நண்பனும் வைக்கும் கிளைமோர்  வயரினால் இயக்கப்படுவது. அடுத்தது தொலைபேசியால் இயக்கப்படுவது.  இரண்டாவதை வெடிக்கவைக்க அந்த இயக்க உறுப்பினரும் கதை சொல்லியும் செல்கிறார்கள். பொதுவாகவே தொலைபேசி மூலம் இயக்கப்படுவது ஒப்பிட்டு ரீதியில் பாதுகாப்பானது தப்பித்தலுக்கும்  இலகுவானது. அந்த இளைஞர்கள் என்னவானாலும் சரி என்ற ஒரு மனநிலையையும், தான் இலகுவாக  தப்பிக்கும் நோக்கில் கூட இதை செய்திருக்கிறார் அந்த இயக்க உறுப்பினர் என்று கொள்ள இயலும். 

  காமத்தினை அல்லது பாலியல் உள மனநிலையை எழுத்தில் கொண்டுவருதல் என்பது சிக்கலான ஒன்றுதான். அனோஜன் அநேக கதைகளில் காமத்தை எழுதுகிறார். சந்தர்ப்ப சூழல்களால்  காமவயப்பட்ட, எல்லை மீறுகின்ற  பாத்திரங்களின் உள  சிக்கலை முன் வைக்க முயல்கிறார் கிடாய் கதையில். இதிலும் கிடாய் ஒரு குறியீடு. மூன்று பெண் ஆடுகளுக்கு ஒரு கிடாய் என கதையில் ஒரு புள்ளி வைக்கிறார். அதை சுற்றி பின்னப்படுகின்ற கோலம்  மனிதர்களின் கதை. புள்ளி ஒழுங்காக அமைந்தால்தான் கோலம் ஒழுங்காக அமையும். மனைவியிடம் பெற முடியாத சுகத்தினை, அனுபவத்தினை காமாட்சி என்ற திருமணமாகாத, தன்னை விட வயது அதிகமான  முதிர்  பெண்ணிடம் உணர்ந்துகொள்கிறார் இராசையா. காமாட்சியின் தொடர்புகளால் இராசையாவின்  மனைவி  தற்கொலை செய்கிறாள். மகள் தனித்து வளர்கிறாள். அந்தக்  காலங்களிலும் இராசையா காமாட்சி உறவுகள் தொடர்கின்றன. தேவி அதனால் மனம் பாதிப்படைகிறாள்.  அதே இராசைய்யாவின் உலகு  தேவியிடம் நிகழ்கிறது அல்லது நிகழ்வதாக இராசைய்யாவின் மனப்பிறழ்வு முன் வைக்கிறது.  விமலரூபன் என்ற சிறுவன்  தீபாவிடம் கல்வி கற்கிறான். அவனுடன் தன்  மகளுக்கு உடல் தொடர்பு ஏற்படுவதை காண்கிறார் அல்லது கற்பனையில் உருவாக்குகிறார். இறுதியில் கோபத்தில்  விமலரூபனை தாக்கிய பின் இராசையா மகளைப் புணர்கிறார். அத்தோடு விமலரூபனையும் இழுத்து சென்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்.  தந்தை மகளைப் புணர்வதை ஒரு மீறலாக முன் வைத்து கதையை எழுதி இருக்கிறார். அந்த மீறல் அவர் தற்கொலை செய்வதுடன் தீர்க்கப்படுகிறது. அவர் உத்தமனாக்கப்படுகிறார். இராசையா குற்றவுணர்விலிருந்து விடுவிக்கப்படுகிறார்.   தந்தையாக, கணவனாக  எதுவிதமான குற்றவுணர்வும் கொள்ளாத இராசையா, காணும் பெண்களை  எல்லாம்   பாலியல் நோக்கில் அணுகக்கூடிய, சிந்திக்கக்கூடிய  இராசையா   அவைகள் குறித்தோ அதன் அறம் குறித்தோ கவலை கொள்வதில்லை. பின் எதற்காக அவர் தற்கொலை செய்துகொள்கிறார். அவரை விடுவித்து நிரபராதி ஆக்கிவிடுவது அப்பட்டமான ஆண் மனம். இங்கே எதுவுமே மீறப்படவில்லை. மீறுதல் போல ஒரு தோற்றம் நிகழ்கிறது  அடிப்படையில் சராசரி ஒழுக்கவாதியின் அட்டவனையின் கீழ்தான் இராசையா இறுதியில் கொண்டுவரப்படுகிறார். துயரம் என்னவென்றால் காமாட்சி  வளர்க்கும் ஆடுகள்தான். எதற்காக இந்தக் கதையில் அவை வருகின்றன. இராசையாவிடம் இருந்து  ஒரு உதவியையும் எதிர்பார்க்காத காமாட்சி உடல் சுகத்துக்காக மட்டும் இராசையாவை அணுகுவதாக  என காட்டுகிறார். (காமாட்சிக்கு ஏற்கனவே ஒரு ஆண்  உறவு இருந்திருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்)    தனக்கு தன்  குடும்பத்துடன் உழைப்பு எல்லாம் இருக்கவேண்டும். ஆனால் இன்னொரு பெண் படுக்கைக்கு வேண்டும் அதற்கு காமாட்சி போல ஒருத்தியை கற்பனை  செய்துவைத்து கொள்வது. இதுவா மீறல் .

இணைகோடு நல்ல கதை. பவித்திரா ஒரு  சிங்கள இராணுவ வீரனை காதலிக்கிறாள். காதல் பகிரங்கமாக வர அவனுடன் வாழ்வதற்காக சென்றுவிடுகிறாள். தமிழ் மனநிலையில்  அதனை எதிர்கொள்ளும் மனநிலை வெளிப்படுகிறது. கோமதி என்ற பசுமாடு காணாமல் சென்று விடுகிறது. பின் சிலகாலங்களில்  திரும்பி வருகிறது வீட்டில் சேர்த்துக் கொள்ளுகிறார்கள். பவித்திரா விலக்கி வைக்கப்படுகிறாள். எதோ ஒரு முனையில் கோமதி என்கிற பசுவையும் பவித்திராவையும் இணைத்து பார்க்க தூண்டி விடுகிறது இது ஒரு அபத்தம். தவிர்த்துப் பார்த்தால் நல்ல  கதை. அவள் சிங்கள இராணுவத்தை காதலித்திருப்பதன் காரணமாகவோ, அவளுக்கு ஒரு நண்பன் உதவி செய்வதாக இருப்பதாலோ அவளது ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது தமிழ்மனத்தால். தவிர்த்து அதிகாரம் குறித்தும்  பேசுகிறது. அபிவிருத்தி எல்லாவற்றையும் மூடி விடுகிறது. அங்கே இறந்த இரண்டு இளைஞர்களும் ஒரு இன  அழிவின் குறியீடு. அபிவிருத்தி இன்றைய அரசியல். அதிகார துணையிருப்பு.  அதில் தன்  வாழ்வை  கொண்டு அலையும் இளைஞன்  வேறென்ன செய்யமுடியும் 

இச்சை, மனநிழல்  போன்றவை சாதாரண கதைகள். அதிலும் இச்சை கதையாக வரவேயில்லை.  ஒரு பாலியல் தூண்டலுக்கான கதையாடல்தான். மனநிழலும் அதுபோல ஒன்று இந்த கதையமைப்பை ஒத்த ஆயிரம் கதைகளை வாசித்திருப்போம். எதுவுமே புதுமையோ இயல்பை கடந்தவையோ இல்லை.

உறுப்பு என்ற சிறுகதை குறித்து கொஞ்சம் கவனம் கொள்ளத்தான் வேண்டும். அதிகாரத்தால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் கதைசொல்லி அதன் விளைவை பல இடங்களில் எதிர்கொள்கிறான்.சக  மாணவர்கள் முன் அவனது குறி இயல்பின்மை  வெளிப்படுகிறது விளைவு  சமூகத்தால் சீண்டப்படுகிறான். ஆண்மயப்பட்ட சமூகம் தானே எமது. அவனது ஆண்மையை கேலிசெய்கிறது. ஆண்மையை கேலி செய்தல் என்பது எல்லாவற்றையும் கவிழ்த்துவிடும் ஒன்றாக கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூகம் எமது. இதனால்  எல்லாவற்றிலிருந்தும் தன்னை ஒதிக்கிக்கொள்ளும்  கதைசொல்லி தனக்குள் சிதைவுற்று இயலாமையால் தன்னிலும் பலவீனமாவர்களை துன்பத்திற்கு உள்ளாக்குகிறான். இயல்பின்மையை, மற்றவர்களை  துன்புறுத்தி  மறைத்துவிடும் இயல்பு இயல்பானது.   இறுதியில் ஒரு மசாஜ் நிலையத்திற்கு போகிறான். அங்கும் இயல்பின்மை வெளிப்படுகின்றது . பின்  மசாஜ் செய்யும் பெண் அவனை உதட்டில்  முத்தமிட கேட்கிறாள். முத்தமிடுகிறாள்.  அதுவரை குறி இயல்பின்மையால்  கேலியையும், கிண்டலையும், அவமானத்தையும் மட்டுமே  கண்டு கொண்ட அவன். அவள் அந்த இயல்பின்மையை கவனத்தில் கொள்ளாது முத்தமிட முன்வந்ததை, முத்தமிட்டத்தை   அவன் புரிந்துகொள்கிறான். அந்தக் கணம் அவனை மாற்றி அமைக்கிறது. இன்பத்தின், வாழ்வின்  தூல நிலைகளை புரிய வைக்கிறது.   கதையின் இடையிடையே வந்துபோகும் அணிலாகட்டும், அந்த மசாஜ்நிலைய பெண்ணை எதிர்கொள்ளும் சம்பவங்களாகட்டும் கதையாக கூடிவராதவை. அவைகளை விலக்கி வைத்துப் பார்த்தால்  நல்ல கதை.

இந்தக் கதைகளின் கூட்டுவெளிப்பாடு, யுத்தம் நிகழ்ந்த ஒரு நிலத்தில் வாழும் சனங்களின் வாழ்வை முன்வைக்கிறது. முடிவுற்ற யுத்தம் விதைத்துச்  சென்றிருப்பது எல்லையற்ற  ஒரு வறுமையை. வறுமை நிலவும் நிலத்தில் உடலும்  ஒரு பண்டமாகிவிடும். ஆனால் இந்தக் கதைகளில் அவ்வாறு நிகழவில்லை.  சமூகத்தின் ஆழ்மனக்கிடக்கையை ஊடுருவாமல் நீர் மேல் பாசிபோல, அந்த சமூகத்தின் அடிமட்ட சிக்கல்களை கண்டுகொள்ளாமல்  அன்பு நேசிப்பு ஆதரவு என்ற சொற்கள் எல்லாம் அர்த்தமிழந்த ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோமோ என்ற அச்சத்தை தூண்டும் வகையில் உருவாகின்றன. காமம் பாலியல் பிறழ்வுகள் சமூக அறச்சிதைவு  போன்றன எல்லாக் கதைகளிலும் பேசு பொருளாகிறது. ஆனால் எங்கோ, எப்பவோ  கேள்விப்பட்ட ஒரு சம்பவத்தை  சொல்லும் பிரதியாளர்   ஆரம்பத்திலும் முடிவிலும் ஏதாவது ஒரு புனைவினை அல்லது குறியீட்டினை செய்துவிட்டால் அது கதையாகிவிடும் என்று நம்புகிறார். நம்மையும் நம்ப வைக்க முயல்கிறார்.  எல்லாக் கதைகளிலும் அதன்  தொடர்சியை கண்டுணர முடியும்.

 இந்தக் கதைகளில் இயங்கும் பெண்கள் செல்வமக்கா , காமாட்சி, அஜந்தா, பவித்திரா அனைவரும்  ஒரே ஒழுங்கமைவில் வருகிறார்கள் அவர்களுக்குள்  வித்தியாசங்களை கண்டுகொள்ள இயலவில்லை. அவர்களின் உணர்வுகளும் காமம் சார்ந்த வெளிப்படுத்தல்களும் உதாரணமாக செல்வமக்கா, அஜந்தா, தேவி அவர்களின் பின்னணியிலும் காரண காரிய நிகழ்வுகளும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடவில்லை.  எமது ஆண் சமூகம்  கணவனை இழந்த பெண்ணை, தனித்திருக்கும் ஒரு பெண்ணை,  எப்படி பாலியல் சார்ந்து  எதிர்கொள்ளுமோ அதே மனநிலையில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு பாலியல் தொழிலாளிக்கு அல்லது காமவயப்பட்ட பெண்ணுக்கு ஒரு புறத்தோற்றத்தை தருகிறார் அது காலகாலமாக ஆண்களால் உருவமைப்பு செய்யப்பட்டு கிடைக்கும் ஒரு மலினமான உருவமைப்பு. அதை மீறி அவரால் எதையும் எழுதிவிட முடியவில்லை.

   கதைகளில் வரும்  ஆண்கள் அனைவரும் எதோ ஒரு இழையில் காப்பாற்றப்படுகிறர்கள் அல்லது ஓரளவு உத்தமமானவர்களாக தோற்றமழிக்கிறார்கள்.  கதைகளில் மீறல்கள் என்று கருத்தப்படுபவைகளை, அவை உண்மையில் மீறல்கள் அல்ல.   செல்வமக்கா இப்படியாக இருக்கிறாள் என்றால் அவளின் அந்த நிலைக்கு என்ன காரணம் ? அவளை அந்த நிலைக்கு தள்ளிய  அகப்புற சூழ்நிலைகள் என்ன எவையும் இல்லை வெறுமனே செல்வமக்கா காமத்திற்கு, வாசிப்புக்கு, ஒரு ஊறுகாய் போல உருவாக்கப்படுகிறாள்.

கதைகள் ஒரே அச்சில் நின்ற இடத்தில் சூழல்கின்ற தன்மையை கொண்டிருக்கின்றன. ஒரு மூடுண்ட தளத்தில் கண்ணைக்கட்டிவிட்டு கதைகள் சொல்லப்படுகின்றன. அவை எங்கேயும் அழைத்து செல்லவில்லை. காமத்தை எழுதுவது என்பது மிக சிக்கலானது. காமம்  குறிகளையும், மார்பகங்களையும், தொடைகளையும் மட்டுமே  கவனத்தில் கொள்வதில்லை.  அவற்றையும் மீறி வாழ்வு குறித்தும் அது கவனம் கொள்ளும். அன்பையும் நேசிப்பையும் அது பேசி நிற்கும்.

எல்லோரும் அனோஜன் போர் பற்றிய சிறுகதை எழுதவில்லை என்கிறார்கள். ஆனால் அவர் எழுதியிருப்பது முழுவதும் போரின் கதைகளைத்தான்.  போர் நிகழ்த்திய காயத்தின் வடுக்களைத்தான். அவரது கதைகளின் மூலம் போர்தான். ஆனால் போர் நீங்கிய நிலத்தின் அக உணர்வுகளை அவரால் எட்டமுடியவில்லை மிக மேலோட்டமாக எல்லாவற்றையும் அணுகுகின்ற போக்கினை காணமுடியும்.   இலங்கை தமிழ் கதைகளில் இருந்து போரை விலக்கி ஒரு கதை எழுதிவிட முடியும் என்றால் அது அடுத்த பத்து ஆண்டுகளின் பின் சாத்தியமாகலாம். அவ்வளவு அழிவுகளை சிதைவுகளை இந்த போர் தந்திருக்கிறது. போருக்கு வெளியே ஒரு இலக்கியம் இருக்கிறது என்று வளமான ஒரு நிலையில் இருந்து யாரும் பேசலாம். ஆனால் ஈழத்தில் இருந்து ஒருவனால் பேசமுடியாது. அனோஜன் கூட போரை விலகி தான் கதையை எழுத்துவதாக கூறலாம். ஆனால் அவரின் கதைகளில் போர் ஒளிந்திருக்கிறது. போர்தான் அவரது கதைகளை உருவாக்குகிறது.

பாரிஸ் 28வது  வாசிப்பு மனநிலை விவாதத்தில் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம்


.

No comments:

Post a Comment