Thursday 16 August 2012

மௌனிப்புக்களின் பின்னால் ......

                                     தாவாரத்தில போட்டிருந்த வாங்கிலை நித்திரை வராமல் படுத்திருந்த துரையர், தலையணையை இழுத்து ஆட்டி சரிசெய்து,  வசதியாக  கழுத்தையும் கொஞ்சம் இழக்கி ஒரு நிம்மதியான படுக்கைக்கு தயாரானார். வயதுகளும் வரவரநித்திரையும் வருதில்லை, அப்பா வைரவா காளியாத்தா என தனக்குள்  சொல்லியபடி,நேரம் என்ன இருக்கும் என பார்ப்பதுக்காக தன்  வழமையான பாணியில மேல பார்த்தார். கூரையின் ஓட்டைகளின் இடையால பல இடங்களில் சந்திரனின் வெளிச்சம் தெரிந்தது. பனையோலையால் வேயப்பட்டிருந்த கூரை, தான் காலாவதியாகிவிட்டதாக சொல்லிக்கொண்டிருந்தது. தினமும் அந்த கூரைகளை பார்ப்பதாலோ என்னவோ துரையருக்கு பௌர்ணமி நிலவு ஓட்டைகள் ஊடாகதன் கரங்களை அனுப்பி தடவிக்கொடுப்பதை அனுபவிக்க முடியவில்லை.மாறாக,எரிச்சல்தான் வந்தது. எல்லாம் நாளையோடு அடைபட்டுவிடும்தானே,எத்தனை நாளைக்குதான் மேயாமல் இருப்பது. வெயில் மழை என எல்லாம் வெளியாலை விழுகிறதை விட வீட்டுக்குள்ளை தானே கணக்க விழுகிறது. அதுவும் காணாதென்று புருனைசிலந்தி,பூரான் என எல்லாம் உதில தானே கிடந்து விழுதுகள். பூரான் பூச்சிகளின் நினைவு வந்ததும் எட்டி உள்ளே பார்த்தார் துரையர்.
                                        மண்ணெண்ணெய் விளக்கின்  வெளிச்சத்தில் மகள் கடுமையாக படித்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் ஒருவித நிம்மதியுடன்,
ஆழ்ந்து மூச்சினை இழுத்துவிட்டார்.உவள் பிள்ளை படுக்க சொன்னாலும் படுக்காமல் எந்தநேரமும் படிப்பு படிப்பு என கிடந்தது சாகிறாள்.என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இவள் இருந்திருந்தாலும் பரவாயில்லை நேரகாலத்துக்கு என்ன என்ன தேவையோ அதை செய்திருப்பாள்.ஒரு அப்பனா  நான் செய்யகூடியதெல்லாம் செய்யுறன்தான் இருந்தாலும் பிள்ளையின்ற தேவையெல்லாம் எனக்கு விளங்குமோ, அதுகும் ஒன்றும் சொல்லாது அம்மாவை மாதிரியே இருக்கிறாள்.  திடீரென்று  தன்னையறியாமல் தாயின் தன் நினைவுகளால் தூண்டப்பட்ட துரையர் கண்களை நெரித்து மூடி நெற்றியை கையால் இறுக்கி பிடித்தார்.இந்த வயதிலும்,எவ்வளவு கரைச்சலை, சோகத்த துக்கத்த கண்ட எனக்கே எப்பவோ நடந்த அம்மான்ர  இழப்பு தாங்க முடியாதபோது,பாவம் பிள்ளை எப்படி தாங்கி இருப்பாள்,அதுவும் நினைக்க முடிக்க முதல் நடந்ததை.யோசித்த துரையர்,மகள்மீது இன்னும் இன்னும் பரிவையும் பாசத்தையும் கொட்டி அவளின் மன மகிழ்வுக்காக,எதையும் செய்யும் நிலைக்கு தன்னை மேலதிகமாக மேருகேற்றிக்கொடார்.
                                                                 உந்த சனியன் பிடிச்ச நிலவு மனுசனை  படுக்கவிடாது போல,கண்ணுக்கை விழுகுது என்,புறுபுறுத்தபடி பிரண்டு படுத்தவருக்கு தண்ணி குடிக்கணும் போல இருந்தது. தண்ணி எடுப்பதற்காக குசினிக்கை போக எழுந்தார். பலமான இருமல் ஒன்று சொல்லாமல் கொள்ளாமல் வந்து விழுந்தது. இருமல் சத்தத்தால் கவனம் கலைந்த ரேவதி, அப்பா  இன்னும் படுக்கவில்லையா விடிய வீடு மேயவேனும் என்று சொன்னனியள் முளிச்சிருந்திட்டு எப்படி மேல ஏறி இறங்க போறியள்,சும்மா   அங்கை இங்கை திரியாமல் படுங்கோவன்.நேரகாலத்துக்கு படுக்காமல் பிறகு சும்மாஅங்கைநோகுது இங்கைநோகுது என்றுதொனதொனக்க போறிங்கள்.மகளின் வார்த்தைகளையும் அதில் ஒலித்த பாசநெகிழ்வையும் உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளாமல்,நீ இன்னும் படுக்கலையோ என்னத்த படிக்கிறியோ சாமம் சாமமாக முழிச்சு உந்த படிப்பால ....எப்படி படிப்பை குறை சொல்வது என தெரியாமல் வார்த்தைகளை முடிக்க முடியாமல்  திண்டாடினார்.தந்தையின் தளம்பலை உணர்ந்த ரேவதி, அப்பா எப்படி எண்டாலும் உந்த கிளறிக்கல் சோதனையில பாஸ் பண்ணினால் எனக்கு வேலைதருவாங்கள்.என்னைப்பற்றி யோசிக்காதையுங்கோ உந்த பிரச்சனை களையெல்லாம் தாண்டி உயிரோட வந்த எனக்கு நித்திரை குறைஞ்சா உயிரென்ன போடுமா என்ன என்று கூறி முடித்தாள்.அவளது வார்த்தைகளில் இருந்த பிடிவாதம் கலந்த சலிப்பு துரையரின் முகத்தில் மோதியது.மண் குடத்தை சரித்து மளமளவென்று தண்ணியை குடித்தவர்,பிள்ளை இவன் செல்வம் விடியக்காத்தாலை வந்திடுவான்.மடத்தில பொடியளுக்கும் சொன்னனான்,அவங்களும் வந்திடுவாங்க  நீ நேரத்துக்கு படு என்று கடமைக்காக கூறினார்.மடத்தடி பொடியளும் வருவாங்கள்,என்ற தந்தையின் குரல் ரேவதி மனதில் புது அதிர்வுகளை உண்டாக்கியது.ம்ம்ம் சிலவேளை தீபனும் வரக்கூடும்என வாய் முனுமுனுக்க,மனமோ என்ன சில வேளை அவன் கட்டாயம் வரணும் என வேண்டியது.ஒருவித பூரிப்புடன் ஆறைக்குள் நுழைந்தாள் ரேவதி.மகள் உள்ளே போனதை அவதானித்த, துரையர் அல்லாடிக்கொண்டிருந்த மனதுடன் நின்ற இடத்திலேயே நின்றார்.வானத்தில் முழுநிலவு முற்றத்தில் நின்ற பூவரசின்நிழலை காலால் மிதித்துக்கொண்டிருந்தவர் எதோ ஒரு உணர்வு  உந்தித்தள்ள நிலவொளியில் வந்து நின்றார்.
                                       
                                                 முழு நிலவு வெளிச்சத்தில் நிமிர்ந்து வீட்டை பார்த்தார். மிகவும் அமைதியான அந்தநேரத்தில் மனதில் எண்ணரேகைள் விரியத் தொடங்கியது. மூன்றுஅறை வீட்டுக்கு அத்திவாரம் போட்ட காலம் முதல் சுவர் எழுப்பி, கோப்பிசம்போட வளவில  நின்ற உயரிகளை எல்லாம் தறித்து பின் அந்த பனையடிகளை பார்க்கையில் எதோ ஒன்றை இழந்துவிட்டதுபோல கவலைப்பட்டதும்,கோப்பிசம் போட்டு, ஓடு எடுக்க லோறிகார மணியத்திடம் ஓடர் குடுத்ததும் பின் சண்டைகள் தொடங்கி ஒரு மண்ணும் வராமல் போக ஒன்றும் செய்யேலாம அப்படியே விட்டுவிட்டதும்,வெயில் பட்டு வளைமரம் வெடிக்குதென மேத்திரி அக்கினைபன்னியதால் ஓலை வெட்டி மெய்ந்ததும்,போனாபோகுதெண்டு  நிலம் இழுக்காமல் குடிபுகுந்ததும் வரிசையாக வந்தது.வீடு முழுக்க முடிக்காமல் வீடுக்குள் சமைக்க கூடாதென இவளின் பிடிவாதத்தால் புறிம்பா ஒரு கொட்டில்குசினியை போட்டு சமைத்ததும்,வீடும் முடிக்காமல்,வீட்டில சமைக்காமலும் மனைவி இறந்துபோனதும்,நின்றபடிதுரையரின் மனதில் நினைவுப்படமாய் ஓடியது.மௌனமாய் சிலநிமிடங்கள் கழிய தலையை  உதறிக்கொண்ட துரையர்,இனிமேலும் நித்திரைகொள்ளாமல் இருந்தா விடிய வீடு மேஞ்ச மாதிரித்தான்,சரிவராது எப்படியும் படுக்கவேண்டியதுதான்.என நினைத்துக்கொண்டவராக தான் படுத்திருந்த கட்டிலை நோக்கி நடந்தார். கட்டில் போர்வையை சரிப்படுத்திவிட்டு படுக்க சரிந்தார், அந்தகணத்தில் வாசலில் படுத்திருந்த நாய் குலைக்கதொடங்கியது.அட உந்த கோதாரி விளுவான்கள் நேரம்காலம் இல்லாமல் உதாலதிரியுறாங்கள்.வீடு மேஞ்சு முடிச்சுட்டு வேலியையும் ஒருக்கா வடிவா திருத்திவிடவேனும்,என தனக்குள் சொல்லியபடி கண்ணை மூடிக்கொண்டார் உறக்கத்தினை அழைப்பதற்காக.
                                               அதிகாலை கண்விழிக்கவில்லை ஆதவன்.மெல்லிய குளிர்,புல்லினங்களின் மகிழ்சிக்குரல்கள்.அரண்டு எழும்பிய துரையர் கண்களை கசக்கிவிட்டு உற்று நோக்கினார் முற்றத்தை.விடியுதுபோல என சொல்லிக்கொண்டு எழும்பவும் செல்வம் சைக்கிளை கொண்டு உள்ளே வரவும் சரியாய் இருந்தது.வந்திட்டிய செல்வம் வா வா,இப்பதான் நானும் முழிச்சன்.எங்கையடா இரவு நித்திரையும் வரல்ல.....என இழுக்கவும்,ம்ம்ம் காணும் துரைஅண்ணை,வா வெயில் வரமுதல் வேலைதொடங்குவம், நித்திரை நாளைக்கும் கொள்ளலாம் தானே.என கூறி அவசரப்படுத்தினான் செல்வம்.டே, பொறுடா வாயெல்லாம் கசகசக்குது, ஒரு தேத்தண்ணி போட்டுகுடிச்சுட்டு தொடங்குவம் என்றபடி துரையர் தட்டியில் கழுவி வைத்திருந்த கேத்திலை எடுத்தார்.அப்பா விடுங்கோ நான் போட்டு தல்லாம், என்றுகொண்டு,அவிழ்ந்த கூந்தலை அள்ளி கொண்டை போட்டபடி வெளியாலை வந்தாள் ரேவதி. மாமா அப்பர் இரவு முழுக்க நித்திரை இல்லை. என்று செல்வத்திடம் கூறி தன்சார்பாக ஏதாவது சொல்லட்டும் என நிறுத்தினாள்.கொப்பர் வீடு மேயாமல் எங்க தூங்குவார்,அதவிடு உன்ர  கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு நீயும் நித்திரை இல்லைபோல பிள்ளை. ம்ம்ம்ம் ஒரு அலுவலை நினைச்சுக்கொண்டு படுத்தா இப்படித்தான்.சரிசரி வெயில் வந்தா கரைச்சல் கொஞ்சம் கொஞ்சமா தொடங்குவம அண்ணை, என்றுவிட்டு பொடியளிட்டை சொன்னனி தானே வருவங்கள் தானே,என கேள்வியையும் சேர்த்து முடித்தான் செல்வம்.ஓமடா,ஒரு எட்டு மனியளவில வருவாங்கள் எண்டு நினைக்கிறன் சொல்லியபடி கத்தியினை எடுத்து இந்தா பிடி செல்வம் முதல்ல வெட்டி எல்லாத்தையும் இறக்குவம்,பிள்ளை தட்டுமுட்டு சாமான் எல்லாம் ஒதுக்கி ஓரமா வச்சிட்டாதானே, என கேட்டார். குசினிக்குள் இருந்தபடியே ஓம் அப்பா எல்லாம் நேற்றே எடுத்து வசிட்டன் ,கொஞ்சம் இருங்கோ தேத்தன்னி முடிஞ்சுது.குடிச்சிட்டு நில்லுங்கோ. என்றாள் ரேவதி.அவளுக்குள் எட்டுமணி எப்ப வரும் தீபன் வருவானா?இந்த கோலத்தில பார்த்தா என்ன நினைப்பான்,எப்படி அவங்களுக்கு முன் எப்படி நிக்க போறன்,போன்ற சிந்தனைகளே ஓடிக்கொண்டிருந்தது.
                                                              ரேவதி,அழகிதான்.வறுமையும்,கல்வியும் அவளை இன்னும் புடம் போட்டிருந்தன.அதட்டியோ அருண்டோ போகாத ஒரு தன்மையில் அவளின் பேச்சுக்களும் நடத்தைகளும் இருக்கும்.எவராலும் எந்த ஒரு அவசாட்டும் சொல்லமுடியாத நிலையில் தன்னை வைத்திருக்கிறாள். உதவிகள் செய்வதிலும் சரி,அரவணைத்து போவதிலும் சரி தன்னால் இயன்றவரை விட்டுக்கொடுப்புடன் இருப்பாள்.அமைதியான சுபாவமுடைய அவளுக்குள்ளும் ஒரு காதல் இருந்தது .யாருக்கும் தெரியாமல்.வெளியாலை சொன்னா வளப்பு  சரியில்லை என்று தந்தையை பழிப்பார்கள் என்ற நினைப்பும், இயல்பாகவே பெண்களுள் இருக்கும் தயக்க உணர்ச்சியும் அணை போட்டு வைத்திருந்தது அவளின் ஆசைகள்மீது.இருந்தாலும் அவளையும் மீறி  இடையிடையே தீபனின் நினைவுகள் வெளிவந்து விடுவதும் மிகுந்த பிரயாசைப்பட்டு அடக்கி கொள்வதுமாக இருந்தாள்.எங்காவது தீபன் அவளை ஏறெடுத்து அன்பாக பார்த்தால் போதும் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவனை கட்டிப்பிடிக்கணும் போல தோன்றும்.ரேவதியை பொருத்தவரை தீபனுக்குள் என்ன இருக்குதோ என்ற கவலை எல்லாம் கிடையாது.தான் அவனை காதலிக்கிறேன் அதுமட்டும்தான் அவளுக்கு தெரியும்.இன்றைய பொழுது அவளுக்கு இரட்டை சந்தோசமா இருந்தது. ஒன்று மேயாமல்கிடந்தவீடு மேயப்படுகிறது அடுத்தது அதை மேய்பவர்களில் தீபனும் ஒருவன்.அது ஒரு சொல்லமுடியாத இன்ப உணர்வாக இருந்தது  அவளுக்கு.
                                                            பிள்ளை உதிலநிக்காத,ஓலை வெட்டிவிட்டன் தள்ள போறன் என்ற செல்வத்தின் குரலைகேட்டு சடாரென்று விலத்தினாள். ரேவதி ஓடிப்போய்கடையில பாண்  சொல்லிவச்சனான், வேண்டிகொண்டுவா, பிந்திப்போனா  சிலநேரம் ஆருக்கும் குடுத்திடுவான், என்ற தந்தையின் குரலால் இயல்புக்குவந்தவள்,பாணுக்கு என்ன குடுக்கிறது என கேட்டாள் தகப்பனை.அந்த கேள்வியில் பாணா அவங்களுக்கு கொடுப்பது என்ற தயக்கம் இருந்தது.பொடியளுக்கு தெரியும் தானே வீடு மேயேக்கை சாப்பாடு அப்படி இப்படிதான் இருக்குமென்று.பாணுக்கு சாம்பலை கிம்பலை இடிக்கலாம் நீ போய் வேண்டிவா,அப்படியே இவன் செல்வத்துக்கு ஒரு கட்டு பீடியும் வேண்டிவா என்றார்.பிள்ளை நீ உதெல்லாம் வேண்டவேண்டாம் பாணை  மட்டும் வேண்டி வா காணும், என செல்வம்  சொன்னான்.கடைக்கு போக தயாராகினாள் ரேவதி.வயர் பின்னல் பாக்கை எடுத்து கான்ரிலில் கொழுவிக்கொண்டு வெளியாலை சைக்கிளை உருட்டிக்கொண்டு போகவும். முன் படலையை தள்ளிக்கொண்டு தீபனுடன் இன்னும் ஐந்துபேர் உள்வந்தார்கள்.எப்படி அவர்களை கடந்தாள்,சைக்கிளில் ஏறி சந்தி முகாமை கடந்து கடையடிக்கு போனாள் என்றே தெரியாது அவளுக்கு, ஆனால் கடையடியில நிற்கிறாள்.ஒரு மிதமான உணர்வால் உடல் முகம் எல்லாம் போழிவுற்றதுபோலஇருந்தது அவளுக்கு.  பாணை வேண்டிக்கொண்டு வீட்டுக்கு திரும்பியவள் மிக மும்முரமாக எல்லோரும் வேலையில் இருப்பதை அவதானித்தாள்.எல்லோருக்கும் தேநீர் போடுவதற்காக குசினிக்குள் நுழைந்தவளை பக்கத்து வீட்டு ஆச்சியம்மாவின் குரல் வெளியாலை இழுத்தது.
                                               எடியேய் வீடு மேயுறதெண்டால் சொல்லப்படாத,நான் வந்திருப்பன் தானே உதவிக்கு,என்ன பிள்ளையோ,தனிய என்னசெய்வாய். என்று கொண்டு விரைந்து வந்த ஆச்சியம்மாவை கண்டதும் ரேவதிக்கு ஒரு நின்மதி பிறந்தது.என்னடா இஞ்சாலை சத்தமா கிடக்கு எண்டு எட்டிப்பார்த்தா குறுக்காலை போவாங்கள் கூரையில இருக்கிறாங்கள்.அப்பதான் தெரியும் வீடு மேயுறதெண்டு.வேளைக்கு சொல்லதெரியாதையடி உனக்கு, என்று நெருடிய ஆச்சியம்மாவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சும்மா சிரித்துக்கொண்டு நின்றாள் ரேவதி. துரையர் சொல்லணும் என்றுதான் நினைச்சன் மறந்துபோனனை என்று கூரை மேலிருந்து குரல் கொடுத்தார். மேச்சல் தொடங்கி வேகமடைந்தது.ஒருபக்கம் ஆச்சியம்மாவின் உதவியோடு  சாமபல் இடித்து,பாணை துண்டுதுண்டாக வெட்டி தேத்தனியையும் போட்டுவிட்டு தகப்பனிடம் கூறினாள் ரேவதி,இறங்கி சாப்பிடும்படி.செல்வம் இறங்கடா,தம்பியவை இறங்குங்கோ,பாணை திண்டிட்டுதொடங்குவம் என்று
அழைத்தார்.இறங்கியவர்கள்கைகாலைகழுவிக்கொண்டுவந்தார்கள் சாப்பிட தீபன்மட்டும் கைகால்  கழுவாமல் பாணுக்கு பக்கத்தில இருந்திட்டான். பார்த்த ரேவதிக்குபத்திக்கொண்டுவந்தது.கைகால்கழுவுறபழக்கம் இல்லையாக்கும், ஆளைப்பார் அவற்றசொட்சும் சிவப்புரீசேட்டும் உதுகளையும் தோய்க்கிறானோ  இல்லையோ நெடுக உப்பிடியே தானே திரியுறான். மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.பாசமோ, கோபமோ என்று புரியாத ஒரு ஏச்சாக இருந்தது அவளுக்கும் அது.
                                                            எகத்தாள பேச்சுகளும்,செல்வத்தின் நக்கல் கதைகளும்,கிழே இருந்து ஓலை எறிபவன் வேணுமென்று செல்வத்தை நோக்கி எறிவதும், மற்றவர்களின் சிரிப்புமாகநடந்து கொண்டிருந்தது மேச்சல். அவனைப்பாத்து கட்டு அவனைப்பாத்து கட்டு என்ற செல்வத்தின் குரல் தீபனின் வேலைசெய்யும் திறமையை பாரட்டுவதாகவே பட்டது ரேவதிக்கு. மதியம் ஒருமணிளவில் மேச்சலை முடித்து இறங்கினார்கள் எல்லோரும். செல்வம் மட்டும் ஓலையோன்றை கொளுத்திப்போட்டு, வீடுபத்தி எரியுதடா வீரபத்திரா ஓடிவந்து நூராடா,என கத்தி தானே நூர்த்துப்போட்டு இறங்கினான். ஆச்சியம்மாவும் ஓடியோடி எல்லாம் கூட்டி துப்பரவாக்கி கொண்டு நின்றா.இறங்கி தாங்கள் மேய்ந்த வீட்டினை சுற்றி பார்த்து சந்தோசத்துடன் கதைத்தார்கள் தீபனும்,மற்றவர்களும். புறப்பட தயாரானபோது,தம்பியவை நில்லுங்கோடா,என்றபடி அருகில் வந்த துரையர் காசினை எடுத்து உதில கொத்துரொட்டிஏதும் வேண்டிசாப்பிடுங்கோ என்று நீட்டினார். சொல்லிவைத்தது போல ஒன்றாக மறுத்தனர் அவர்கள்.உதென்ன சும்மா இருங்கோ, எங்களுக்கு என்ன, மடத்தில சும்மா இருக்கிற நேரத்துக்கு இதிலவந்து உதவியை செய்து போட்டுபோறம்.நீங்கள் எண்டாவென்றால், வேண்டாம் வேண்டாம். செல்வண்ணை சொல்லுங்கோ,என மறுத்துவிட்டு புறப்பட ஆயத்தமாகினர் தீபனும் மற்றவர்களும்.அந்த நேரத்தில் தீபன் ரேவதியை பார்த்த பார்வையில் ரேவதிக்கும் புரிந்தது  அவனுக்குள்ளும் காதல் இருப்பதை.மடத்துக்கு போகுதுகள், என மனதுள் நினைத்துக்கொண்டவள், அவனின் பார்வைகளால் பூரித்துப்போயிருந்தாள்.
                                                                          அதே  மகிழ்வுடன் வீட்டினுள் நுழைந்தாள் ரேவதி. புதிய ஒலைவாசமும் அதன் வெண்மையான நிறமும்,உள்ளெங்கும் நிறைந்திருந்த ஒரு மங்கலான இருளும் அவளை மிதக்கவைத்தன. நிமிர்ந்து பார்த்தவள்  வானம்  தெரியாததால் மகிழ்ந்து சிரித்துக்கொண்டாள் என்ன ஆத்தா சந்தோசமா?என்று கேட்டபடிவந்த தந்தையை பார்த்தள்.மிகவும் களைத்துப்போய் உடம்பெல்லாம் ஒலைத்துகள்களும்,தூசுக்களுமாய் இருந்தது. பார்க்க பாவமாய் இருந்தது.அப்பா வெளியாலை போகவில்லையோ என்றுகேட்டாள்.துரையருக்கும்விளங்கியது மகளின்  கேள்வி,நெடுகஎசுரபிள்ளையே குடிக்க போகவில்லையோ என்று கேட்குது.மெல்லிதாய் உதடுகளில் சிரிப்பினை வைத்துக்கொண்டு செல்வம் நிக்கிறான் ஒருக்கா போய் வருவமெண்டு உன்னிட்ட சொல்லதான்  வந்தனான்.என்றார். அதுதானே பார்த்தேன்.சரி சரி நான் வீட்டை கூட்டி துடைக்கிறன் மிகக்கேடாமல் கெதியா வாங்கோ,நானும் ஒருக்கா கடைக்கு போகணும் என கூறி அனுப்பினாள்.கடைகோ,பார்த்து போ பிள்ளை சந்தியில கவனம்,என்றபடி செல்வத்தையும் அழைத்துக்கொண்டு புறப்பட தயாரானார்.ஆச்சியம்மாவும் புறப்பட்டு விட்டிருந்தா ஆடுகளுக்கு குலை வெட்டனும் என்று சொல்லிவிட்டு.
                                               வாடிக்கை கள்ளை முடித்து அதுக்கும் மேலாக கொஞ்சம் எடுத்து குடித்துக்கொண்டிருந்தனர் துரையரும்,செல்வமும்.ஒரு கட்டத்தில் பாட்டுகளும் புலம்பல்களும் வரத்தொடங்கியது,செல்வத்தின் வாயிருந்து.டேய் செல்வம் காணுமடா வாடா போவம் என்று துரையர் சொன்ன போது மணி ஆறைத்தாண்டி கொண்டிருந்தது.அண்ணா நீ சொன்னா கேட்பன்,வா போகலாம் என செல்வம் தள்ளாடி எழுதபோது கட்டியிருந்த சாரம் இளகிநின்றது.இறுக்கி கட்டிக்கொண்ட செல்வம் வா போவம் என நடக்கத்தொடங்கினான் முன்னால். அவனுக்கு உலகமே தள்ளாடுவது போல தெரிந்திருக்கும்.இருவரின்  சைக்கிளும் முகாம் இருக்கும் இடத்தைகடந்து முடக்கால திரும்பிய போதில் எட்டத்தில கூட்டமாய் சனங்கள் அல்லகொள்ள பட்டு அங்குமிங்குமாய் நின்றிருந்தார்கள்.என்ன என்று பார்க்க துரையரும் செல்வமும் அருகில் சென்றனர்.அவர்களை கண்ட ஆச்சியம்மா உரத்து அழத்தொடங்கினாள். துரையரின் கைகளை பிடித்துக்கொண்டனர் சிலர்.என்னவோ நடந்து போச்சு என்பது மட்டும் விளங்கியது துரையருக்கு. என்னடா விடுங்கோடா,எதுக்கு என்னை பிடிக்கிறியள் என உரத்து சத்தமிட்டபடி பிடித்தவர்களை உதறி தள்ளிவிட்டு முன்னே கூட்டமாய் இருந்த இடத்தை நோக்கி போனார்.அங்கே,இடிந்தவீட்டின் பின் பக்கமாக மலசலக் கூடகுழியின்மேல்,ஆடைகளால் கைகள் கட்டப்பட்டுவாயில் துணி திணிக்கப்பட்டு கிடந்தாள் ரேவதி. தொடைகளில் இருந்து வழிந்து பரவி இருந்த இரத்தம் அவள் பெண்மை சிதைக்கப்பட்டு இருந்ததை சொல்லியது.கண்கள் இருட்ட அருகில் நின்றவனை இறுக்கி பிடித்துக்கொண்டார் துரையர்.
                                         பக்கத்து முகாமிலிருந்து நாய் ஒன்று குரைக்கும் ஒலி பரவத்தொடங்கியது காற்றில், இருளோடு கலந்து.


                                                           
                                                                       
          எண்டு : என்று
         கோப்பிசம்:வசிப்பிடங்களில் ஓடு போடுவதற்காக இணைக்கப்படும் மரங்கள்.                                                                 
           படங்கள் :இணையம்.                                                         







18 comments:

  1. Replies
    1. அண்ணர் தலையிடிக்குது உதன் அர்த்தம் என்ன ?

      Delete
  2. Pala ninaivukalai manasukkul varavaitha kathai.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவி அழகன்.வரவுக்கும்,கருத்துப்பகிர்வுக்கும் பகிர்வுக்கும்

      Delete
  3. ம்ம் ஆமியின் அத்துமீறல்களை அதிகம் உணர்ச்சிமொழியில் வன்னியின் நிகழ்வோடு சொல்லும் கதை!ம்ம்ம் அத்துமீறல்!ம்ம் நம் நிலை!

    ReplyDelete
  4. தீபன் !ம்ம் நானும் வேற ஓரு கோணத்தில் பார்க்கின்றேன்!ம்ம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ, வரவுக்கும் கருத்துக்கும்.
      எங்களின் சமூகத்தில் அப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.!!!

      Delete
  5. சிறுகதையில் மனசு சோகமாகிப்போகின்றது!ம்ம் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  6. இதை தவிர என'ன சொல்லற என்றே புரியவில்லை.மனம் பாரப்பட்டு இருக்கு.உண்மைச்சம்பவத்தை நேரே பார்த்ததாய் மனச்சாட்சி துடிக்கிறது.அருமை சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ,வரவுக்கும் கருத்துக்கும்.

      Delete
  7. கிடுகின் வாசனை,பாண் சம்பலென மிக மிக ரசனையோடு வாசித்தேன் நெற்கொழுதாசன்.இடையிடயே ஊடும் காதலும் அழகு சேர்த்தது கதைக்கு.கதையாக நினைக்கவேயில்லை.ஊரில் அப்பா அம்மாவோடு வாழ்ந்த காலத்தில் இருந்தமாதிரி ஒரு நினவு.அத்தனை சந்தோஷத்தையும் அள்ளிக்கொண்டு போனது முடிவு....எம் அவலம்.ஐயோ என்று அரற்றிக்கொள்கிறேன் ஒரு விநாடி !

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா,உங்களின் கருத்துரைகள் இன்னும் என்னை இயக்க நிலையில் இருக்க செய்கிறது.மிக்க நன்றி

      Delete
  8. அருமையான கதை

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிநேகிதி,வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்

      Delete
  9. கிராமிய மணத்தோடு எமது அவலம் சொல்லி இருக்கிறீர்கள் கதைக்கிடையே மெலிதாக இழையோடும் காதல் இலக்கிய தகுதியை அதிகரிக்கிறது முருகேசு ரவீந்திரனுடய கதைகளில் இத்தன்மை காணப்படும்..
    கதை என்று தோன்றாத படி நகர்த்தியி
    ருக்கிறீர்கள் இன்று தான் பார்க்க முடிந்தது இலக்கிய குவியத்திற்காக வேலணையூர்-தாஸ்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேலணையூர் தாஸ் அண்ணா,
      மிகப்பெரிய அங்கீகாரம் ஒன்றை வழங்கி இருக்கிறிர்கள்.
      ஆரம்ப புள்ளியொன்றில் இருக்கும் என்னை நகர்த்திக்கொண்டிருப்பது உங்களைப்போன்ற இலக்கிய நண்பர்களின் கருத்துக்களே ..........
      காத்திருக்கிறேன் உங்களில் ஆசிக்காக,
      வரவுக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றி.

      Delete