Monday, 12 November 2012

இவன்தான் இவன்தான் தமிழன்


 தொழுவான் தமிழன்
தொடர் தொல்லை கொடுத்தால் 
அழுவான்  அடங்கியேயவன் 
விழுவான் காலிலேன்றே யார்ப்பரித்த தன்று பகை!

ஆண்ட இனம், 
அரசுகொடி சுற்றமென்று வாழ்ந்த இனம்,
கண்டமெல்லாம் கடந்து தமிழ் 
கொண்டுசென்று நிலைத்த இனம், 
பண்பாடிப்பாங்காய் பளுவின்றியொரு
பகையின்றி வாழ நினைத்த இனம்,

இனங்கள் சமமென்று 
இதயத்தால் உரைத்தனர் எம்மவர். 
பிணங்கள்தான் விழுமென்றனர் சமமென்றால்,
பிரதானிதாமென்றே தம்மொழியென்றே 
இணக்கமின்றியே இயற்றினர் பல்கதை!!

அடங்குகையில் அடித்தனர் 
ஒதுங்குகையில் ஓங்கி உதைத்தனர் 
பதுங்குகையில் பாடையே கட்டினர்_தடுமாறி 
தாங்குகையில் தாய்மண்ணையே சிதைத்தனர்.

ஓடியவன் திரும்பினான் 
ஒதுங்கியவன் நிமிர்ந்தான் 
பதுங்கியவன் எழுந்தான் 
தாங்கியவன் துடித்தான்.

விடுதலையொன்றே மூச்சாய்
வில்லிருந்து விடுபட்ட சரமாய் 
கொடுபடைமுடிக்க புறப்பட்டனர் 
கொள்கையோடு நம்மவர்.

அணிகள் பல ஆங்கு முகாம்கள் சில 
பணிகள் ஒன்றே அதன் வழிகள் ஒன்றே 
இனிவிடுதலையெமக்கே  அகமகிழ்ந்தது தமிழ்_அந்தோ 
பனிப்போர் விளைந்தது பல்லுயிர் பிரிந்தது.

அன்றேமகிழ்ந்த பகை _இன்று 
கைகோர்த்து நின்றே நடந்தது,
வென்றிடவென்றேயொரு 
வரைமுறையின்றி கொன்றழித்து எக்களித்தது.
என்றுமில்லா பேரழிவு 
எந்தையினத்தின் சீரழிவு._இன்றும் 

ஒன்றுபடாத்தமிழன் இவனுக்கேதுக்கடா மானம் 
இரண்டகமிவன் குணம்  இவனுக்கேதடா வெட்கம் 
கூனிகுழைந்து மடியேந்தும் இவனுக்கேதடா ரோசம்.
அடிதொழுது உயிர்வாழும் இவனுக்கேதடா வீரம்.


6 comments:

 1. நல்ல ஆக்கம், பாராட்டுக்கள். ஒன்று சொல்லவேண்டும். இப்படி கவிதைப் பாடுவதும் வெளியிடுவதுமான் ஆர்வத்தை ஈழத்துப் போராளிகள் மத்தியில் குமாஸ்தா போராளிகள் என்று அங்கீகரித்த்ம் அங்கீகரிக்காமலும் பெயரிடப்படுகிறது என்று அறிய முடிந்தது. முடிந்தால் இனம் ஒன்றுபட ஒரு படிப்பகம், விளையாட்டு மய்யம்,பரப்புரை நிகழ்வுகள் செய்வதும் ந்ன்று எனத்தோண்றுகிறது.வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. முதற்கண் நன்றி ஐயா,வரவுக்கும் கருத்திடலுக்கும்.
   உங்களின் குற்றச்சாட்டு புரிகிறது. செயற்பாடுகள் அவசியமானவை. அதுவும் இன்றைய காலத்துக்கு அத்தியாவசியமானவை. ஆனால் இன்றைய சமூகத்தில் சமூக போராளிகளுக்கான உயரிய இடமே நகைப்புக்குரியதாக மாற்றப்பட்டு வருகிறது. அவற்றையெல்லாம் களைந்து இனியாவது ஒன்றுபடவேண்டும் என்ற ஆவா ஒன்றின் விளைவிவே இந்த கருத்தாக்கம். நிச்சயமாக "முடிந்தால் அல்ல" ஒவ்வொருவராலும் முன்னெடுக்கப்பட வேண்டிய காலத்தின் தேவை அது.

   Delete
 2. வார்த்தைகள் வசப்பட்டுள்ளன...

  ReplyDelete
 3. உச்சந்தலையில் ஏறும்படி சாட்டையடியாக சிறப்பான வார்த்தைப்பிரயோகம் சீரிய கருத்து. கோபத்துடன்கூடிய உங்கள் ஆதங்கம்தான் அனைத்துத் தமிழ்மக்களதும் ஆதங்கம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா. விதைகள் முகிழ்க்கும் காலம் விரைவில் வரும் இயங்குவோம் தொடர்ந்தும். மிக நீண்ட காலத்தின் பின் உங்களின் கருத்திடல் என்னை மகிழச்செய்கிறது.நன்றி நன்றி

   Delete