Sunday 30 December 2012

அவர்கள் அப்படி(யே)த்தான் இருக்கிறார்கள்.....!!!

                                      மேற்கு அடிவானை நோக்கி  சூரியன் நகரத்தொடங்கிய மாலைப்பொழுது. கண்ணைக்கூசும் மெல்லிய மஞ்சள் ஒளியால்  சுவர்கள், மரங்கள் என  வெளிச்சம்படும் இடங்கள் எல்லாம் மஞ்சளாக  மாறி இருந்தன. முன்வாசல் படிக்கட்டில் இருந்து   வீதியையே பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மாவின் மனம், அடிக்கடி நிறம்மாறி அங்கும் இங்கும் அலையும்  அடிவான்மேகங்களைப்  போல உணர்வுகளை மாற்றி மாற்றி அலைந்து கொண்டிருந்தது.  "விடியக்காத்தல வெளிக்கிட்டதாக அதுகள் அடிச்சு சொன்னதுகள், இன்னும் இங்கை வரவில்லையே எப்படியும் இந்த நேரம் வந்திருக்கணுமே, என்ன ஆச்சோ, வந்தவாகனத்தில ஏதும் பிரச்சனையோ என்னண்டு தெரியேல்லையே, பிள்ளையின்ர போனும் வேலை செய்யுதில்லை, வான்காரனும் யார் என்று தெரியவில்லை" என புறுபுறுத்தபடி அடுத்து என்ன செய்வது என தெரியாமல் பதறிக்கிடந்தாள் செல்லம்மா. "கடவுளே தோட்டத்துக்கு போன மனுஷன் வரமுதல் வந்தாள் எண்டா தப்பினேன், இல்லாட்டி உந்த மனிசன் இண்டைக்கு சிப்பிலியாட்டித்தான் விடும்"  என கடவுளையும்  நோந்துகொண்டிருந்தவள்,  தூரத்தில் வாகனத்தின் இரைச்சல் கேட்டதும் அந்தரப்பட்டு வாசல் கேற்றை நோக்கி ஓடினாள். கோவிலடி முடக்கால் திரும்பி  வரும் வானைக்கண்டவுடன் நீண்ட பெருமூச்சொன்றை விட்டாள் செல்லம்மா.
                                       


                           வீட்டுக்கு அருகில் வந்து வான் நின்றதும்,முன் சீற்றில் இருந்து இறங்கினாள் ரேவதி.எட்டி அருகில் போய் பயணப்பையை வேண்டும் சாக்கில்  வானை நோட்டமிட்டாள், வானுக்குள் யாருமில்லை.சுருக்கென்று குத்தினாலும், வெளிக்காட்டாமல் "தம்பி வாருமன் ஒரு ரீ குடிச்சிட்டு போகலாம்",என அழைத்தாள்."இல்லையுங்கோ நான் வானை சேர்விசுக்கு போடணும் நேரம் காணாது பரவாயில்லையுங்கோ" என மறுத்துவிட்டு புறப்பட்டான் குமார். அவளைக்கடந்து  வான் போவதை வெளியில் சொல்லமுடியாத உணர்வுடன் பார்த்தாள். அயர்ச்சியுடன் வீட்டுக்குள் நுழைந்த செல்லம்மா "என்னத்துக்கு இவ்வளவு நேரம் செண்டது? ஆற்ர  வான், றைவர் பொடியன் புதிசாக்கிடக்கு" என கேட்டாள், மகளைப்பார்த்து. வந்தததும் வராததுமா ஆரம்பிச்சிட்டியா உன்ற தொணதொணப்ப , என்ன ஆக்கினை இதாலதான் நான் வர மாட்டேன் என்று சொல்லுறனான்,ஆற்ர  வானென்டாலும் உனக்கென்ன," என்றபடி அறைக்குள் புகுந்து கதவை அடித்து  சாத்தினாள் ரேவதி.சாத்தியவேகம், கதவு மோதிய சத்தம் எல்லாம் இணைந்து செல்லமாவின் மனதை புண்ணாக்கியது. திரும்ப கேட்க மனம் தூண்டினாலும் தன்னை அடக்கிக்கொண்டவள் என்ன செய்வது என்று தெரியாமல்  திகைப்புடன் விக்கித்து நின்றாள். ஒன்றும் செய்யத்தோன்றாமல் அப்படியே பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தவள் நினைவுகளால்  அழத்தொடங்கினாள்.
                                     எப்படியெல்லாம் வளர்க்கணும் படிப்பிக்கணும் இந்த ஊர்சனத்துக்கு என்ற மகள் என்று சொல்லிக்காட்டனும் என ஆசைப்பட்டு இவளை பொத்தி பொத்தி வளர்த்தா இவள் இண்டைக்கு என்ன மாதிரி கத்துறாள்,சின்னனிலை இருந்து எல்லாத்தையும் சொல்லி சொல்லி வளர்த்தும்,இப்படி  எடுத்தெறிந்து கதைக்கிறாள் எண்டா எங்கையோ தப்பிருக்கு என்ன செய்வது உந்தாளுடன் கதைக்கவும் முடியாது இப்பபார்  வெட்டுறன் கொத்துறன் என்று சத்தம் போட்டு இன்னும் பிரச்சனையாக்கிப்போடும், எதுக்கும் இவளின் கொழும்பு படிப்பை கொஞ்சம் குறைச்சா தெரியும்  என்னெண்டாலும்  எங்கட கண்ணுக்கு முன்னால என்டா பார்த்துக்கலாம் என யோசித்தவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக எழுந்தாள். தன்னை திடப்படுத்திக்கொண்டு இரவுச்சமையலை ஆரம்பிக்க குசினிக்குள் நுழைந்தாள்.
                      வெளிக்கேற் திறக்கும் சத்தம் கேட்டு குசினி யன்னலால் எட்டிப்பார்த்தாள் செல்லம்மா. தாயின் முகத்தைக்கண்ட ரூபன்  "அம்மா  அக்கா வந்திட்டாளா " என்று சத்தமாக கேட்டான்.அவனின் குரலில் மிக ஆழமான பிரிவின் வலி ஒன்று எழுந்து ஓய்ந்ததை உணர்ந்த செல்லம்மா,"ஓமடா  இப்பதான் வந்தவள் அலுப்பில படுத்திட்டாள்  போலிருக்கு கத்தி எழுப்பாதை" என்று கூறியவள் "இண்டைக்கு யாருக்கு வெற்றி" என திருப்பிக்கேட்டாள். அவங்கள் ஒரு கோல் அடிசிட்டாங்க என இழுத்தான் ரூபன்.நீங்கள் எப்பதான் வென்று வந்திருக்கிறியள் என கூறிய செல்லம்மா, உன்னைத்தேடி மாஸ்ரர் வந்திட்டு போறார் வந்தா சொல்லசொன்னவர் என்றாள்.பாடசாலையின் உதைபந்தாட்ட அணியின் தலைவராக இருக்கும் ரூபன் ஒரு சிறந்த உதைபந்தாட்ட வீரன். அவனால் வழிநடத்தப்படும் அணி அனேகமாக வென்று வருவதுதான் வழமை. மிக எளிமையாக  அமைதியாக  எல்லோருடனும் ஒட்டிக்கொள்ளும் சுபாவம் உடையவன் ரூபன். அதனால் தானோ என்னவோ அவனுக்கு நண்பர்களும் மிக அதிகமாக இருந்தனர்.  நீண்ட நாட்கள் காணாமல் இருந்த தமக்கையை பார்க்கும் ஆசையில் ஓடிவந்தவன் தமக்கை உறங்குகிறாள் என்றவுடன் ஏமாற்றம்  அடைந்தான். தன்னைப்பார்க்க காத்திருப்பாள் அக்கா என்ற நினைவுடன் வந்தவனுக்கு கண்ணெல்லாம் கலங்கியது. கதவினை தட்ட போனவன் மனமில்லாமல் திரும்பி தாயிடம் போனான். அப்பா வரவில்லையா இன்னும் என்று ஆறுதலாக கேட்டான். இன்னும் வரயில்லை நீ சாப்பிடவில்லையா எனதிருப்பி கேட்டாள்  செல்லம்மா. இல்லையணை நான் குளிக்கணும் என்றபடி திரும்பி வந்து துவாய் சவற்காரம் போன்ற இத்யாதிகளை எடுத்துக்கொண்டு கிணற்றடியை நோக்கி சென்றான்.
                                                என்ன இவள் இன்னும் வெளியாலை வரவில்லை என்றபடி அறையை நோக்கி சென்றவள் கதவை தட்டி ரேவதியை கூப்பிட்டாள். ஒரு பதிலும் இல்லாமல் சிலகண நேரம் கழிந்தது.திரும்பதட்ட கையை எடுத்தவேளை சடாரென்று கதவை திறந்து வந்தாள்  ரேவதி. எதிரே நின்ற தாயை ஏறிட்டுப்பார்த்த அவள் ஒன்றும் பேசாமல் கிணற்றடியை நோக்கி நடந்தாள். ரூபன் கிணற்றடியில் நிற்பதை  உணர்ந்திருந்தாலும் தெரியாதமாதிரி  கிணற்றடிக்கு வந்தவள் அப்போதுதான்   ரூபனை  கண்டவள் போல, டேய் என்னடா நான் வந்தது தெரியாதா உனக்கு ?என்று கேட்டாள். தமக்கையின் அழைப்பில் உருகிப்போன ரூபன்,  நீ மாடுமாதிரி வந்தவுடன் போய் படுத்திட்டாய்   பிறகு என்ன என்னைக்கேட்கிறாய் ?என திருப்பி அவளைக்கேட்டான். உனக்கென்ன வீட்டில இருந்து பந்தடியும் சைக்கிளும் என்று திரியிறாய்,நான்தான் லூசி மாதிரி கொழும்பும் இங்கயும் என்று அலையுறன், சரி சரி வேளைக்கு  குளிச்சிட்டு விடு நானும் குளிக்கணும், அலுப்பா இருக்கு என்றபடி வீட்டுக்குள்  திரும்பினாள் ரேவதி. குசிக்குள் நின்ற செல்லம்மாவால் மகளின் நடவெடிக்கைகளை  புரிந்துகொள்ள முடியாமல் போனது.  அவனோட வடிவாதானே கதைக்கிறாள் நான் தான் ஏதும் தப்பாக நினைச்சு இருப்பனோ, அதுகள் எதுக்கு அப்படி போனில சொல்லவேணும், சும்மா அதுகள் ஒரு இளம் பிள்ளையில பிழையை போடாதுகள். எதுக்கும் இந்தாளிட்ட கொஞ்சம் பொறுமையாக கதைக்கனும் என நினைத்தபடி செல்லம்மா குசினி வேலைகளில் மூழ்கிவிட்டாள். 
                                   உயர்தரம் வரை கற்று, பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமையால், வீட்டிலேயே அடைந்து கிடந்தவளை, வேறு தெரிவுகள் இன்றி கொழும்பில் இருக்கும் ஒரு தனியார் கல்வி நிலையத்தில் கணக்கியல் பாட நெறியை கற்க போகும்படி வற்புறுத்தினாள் செல்லம்மா.  முதலில் மறுத்தவள், பின் பெற்றவர்களின்  தொடர் வற்புறுத்தலால் சம்மதித்தாள்.  வீட்டை விட்டு வெளி இடம் ஒன்றில் இருப்பதை நினைத்தே பார்க்க முடியாமல் இருந்தது ரேவதிக்கு . தாய் தந்தை தம்பி இவர்களை விட்டுவிட்டு எப்படி அதுவும் தனியாக, இடம்வலம் தெரியா ஒரு இடத்தில் என்ன செய்வது எப்படி போவது எப்படி வருவது என எண்ணிப் பயந்தாள். இருந்தாலும் இப்படியே இருந்து ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்ற உண்மையை புரிந்துகொண்ட நிலையில் தான் கொழும்பில் தன்  படிப்பினை தொடர ஒத்துக்கொண்டாள்.ரேவதியின் சம்மதம் கிடைத்த சில தினங்களில் கொழும்பில் இருக்கும் தனது நெருங்கிய உறவினருடன் கதைத்து அங்கே, ரேவதி தங்கி கல்வியினை மேற்கொள்வதற்கான  ஏற்பாடுகளை செய்தாள் செல்லம்மா. கொழும்புக்கு மகளை அனுப்பி படிப்பிக்கும் ஏற்பாடுகளில் பெரிதாக விருப்பம் இல்லாதவராகவே செல்வம் இருந்தார். மகளைப்பிரிவது ஒன்று, மற்றது சமுதாய சிக்கல், என பலவற்றையும் யோசித்தே தயக்கம் காட்டினர். செல்லாமாவின் வற்புறுத்தலாலும் மகளின் எதிர்கால நலனை முன்னிட்டும் இறுதியில்  ஒத்துக்கொண்டார்.  பெரும் மன பதற்றத்துடன் உறவை, ஊரை பிரிந்து கொழும்பினை அடைந்தவள், சிலதினங்கள் சடுதியான சூழல் மாற்றத்தினை உள்வாங்க முடியாது தவித்தாள். எல்லா நிலைகளிலும் தான் பின் தங்கி இருப்பதாக உள்ளூர நினைத்து புழுங்கினாள். எந்த ஒரு காரியத்துக்கும் யாராவது ஒருவரின்  துனையை நாடவேண்டிய தன நிலையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தாழ்மையடைந்தாள். தன்னுடன் படித்த  வகுப்புத் தோழியின் உதவியுடனும் தங்கி இருந்த வீட்டாரின் உதவியுடனும் ஒருவாறு படிப்பதற்கான பதிவுகளை மேற்கொண்டு, வகுப்பு போகத்தொடங்கியவள்  ஓரிரு மாதங்களில் கொழும்பு என்ற நகரத்தின்  வசதி வாய்ப்புகளுள் முழுதாக தன்னை மறந்துவிட்டிருந்தாள்.
                                 
                                               ஊரில் அனுபவிக்காத ஒரு சுகந்திரம், தன் வாழ்வில் நினைத்து கூட பார்க்காத ஒரு கொடை தனக்கு கிடைத்திருப்பதாக எண்ணிக்கொண்டாள் ரேவதி. போன், இன்ரர்நெட் வசதி இலகுவான போக்குவரத்து, கையில தேவைக்கு மீதமான பணம் என எல்லாம் கிடைக்கதொடங்கியதும் அடிக்கடி ஊரையும் கொழும்பையும் ஒப்பிட்டு பார்த்துக்கொள்வாள், மழைக்காலம் என்றால்  அட்டைகளும் சருகுகளும், சேறுகளும், வெயில் காலத்தில் கடும் வெக்கையும் புழுதிகளும், குளிக்கிற இடம் தொட்டு படுக்கிற இடம் வரை ஒரே தூசுகளும் குப்பைகளுமாய் இருக்கும் வீடு எங்கே கொழும்பு வீடுகள் எங்கே எவ்வளவு வசதிகள் என மனம் செய்த ஒப்பிடுகளால் ஊரினை வெறுக்க தொடங்கினாள்.கல்வி  நிலையத்தால் வழங்கப்படும் நீண்ட லீவுகளை அடுத்து வேண்டா வெறுப்புடன் தான்  ஊருக்கு புறப்படுவாள் ரேவதி. இப்படியான ஒரு பயணத்தில் தான் வான் றைவர் குமாரின் நட்புக்கிடைத்தது.
                          ஆரம்பத்தில் தன்னை கிராமத்தாள் என நினைத்து விடுவான் என்றெண்ணி கதைப்பதுதானே  கொழும்புக்கௌரவம்  என குமாரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தவள், அவனின் வாகனமோட்டும் திறமையை, பயணப்பாதைகளில் சிங்களம் கதைக்கும் வேகத்தை, கூடவரும் பயணிகளின் தேவைகளை அறிந்து நடக்கும் விதங்களை பார்த்து அவனில் ஒரு மரியாதை வைத்து அவனுடன் கதைத்தாள். இவ்வாறு ஆரம்பித்த நட்பு அடுத்த அடுத்த பயணங்களில்  முன் சீற்றில் இருந்து போகும் அளவுக்கும், அதை தாண்டியும் வளரத்தொடங்கியது. சரி பிழை என்பதுக்கு மேலாக ஒரு திரில்லான அனுபவத்தை, இனிமையான கனவுகளின் அத்திவாரத்தை, ஒரு கௌரவமான எதிர்காலம்  பற்றிய அவாவை  அவளுக்குள் விதைக்கத் தொடங்கியது குமாரின் நட்பு. அவளுடன் கூடப்படிக்கும் நண்பர்களின் காதல் அல்லது காதல் என்றபோர்வையில் நடக்கும் எதுவுமே ரேவதிக்கு தப்பாகத் தெரியவில்லை. எதோ ஒரு வழமையான ஒன்றாக, ஒரு நேரச்சாப்பாடு போலத்தான் தோன்றியது. சில மாதங்களில், குமாருடனான அவளது நட்பு காதலாக உருமாறியது அவளுக்குள். குமார் சாவகச்சேரியை சேர்ந்தவன் என்பதும், ஒருநாள் வானில்  வரும்போது அதுதான் தன் வீடு என்று காட்டியதும் தவிர வேறெதுவும் தெரியாத ரேவதி அதைபற்றியெல்லாம் கவலைப்படவோ, அன்றில் அறிந்துகொள்ள வேண்டுமென்றோ ஆவல் காட்டவில்லை. அப்படி  அறிந்து கொள்ள முயல்வது தன் காதல்மேல், குமார் மேல் நம்பிக்கை இல்லாதிருப்பதை தான் குறிக்கும் என்றே நினைத்தாள். அடுத்த சில கொழும்பு, யாழ் பயணங்கள் ரேவதியின் மனத்தை முற்றாக குலைத்தது விளைவு குமாரிடம் காதலை சொன்னாள் ரேவதி. குமாரின் மெல்லிய தலையாட்டலுடன் ஆரம்பித்த காதல் பயணம், கல்வி நிலையத்துக்குப்  போகாமல் கொழும்பின் புறநகர் பிரதேசங்களை, கடற்கரைகளை, நாடி செல்ல தூண்டியது. காதலின் பேரால் ரேவதி தன்னை முழுமையாகவே இழந்தும் விட்டிருந்தாள்.
                                     ரேவதியின் நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்த ரேவதி தங்கி இருந்த வீட்டார் ரேவதியின் நண்பிகளை  விசாரித்தபோதில் ரேவதியின் காதல் கதைகள் முழுவதும் சொல்லிவிட்டார்கள். அவர்களும் தங்களில் பிழை வந்துவிடக்கூடாது என்பதற்காக,செல்லம்மாவிடம் எல்லாத்தையும் சொல்லிவிட்டனர். செல்லமாவும், பிரச்சனையை  செல்வத்துடன் கதைத்ததன் விளைவே ரேவதியை ஊருக்கு அழைத்தது.
           இதனை ரேவதியாலும் ஓரளவு ஊகிக்க முடிந்திருந்தது. தீர்க்கமான முடிவுக்கு வந்த ரேவதி குமாரிடமும் தன் முடிவினை தெரிவித்தாள். எதுவென்றாலும்  யோசித்து செய், அப்படி அதிகம் பிரச்சனை என்றால் சொல்லு நான் வந்து அழைத்துப்போகிறேன், என்றும் கூறினான் குமார். இந்த வார்த்தைகளை கேட்ட ரேவதி நிலை கொள்ளமுடியா மகிழ்வில் உயரப்பறப்பது போல உணர்ந்தாள். வெளியில் சொல்லமுடியாத ஒரு வித கர்வம் அவளின் மனதுக்குள் எழுந்து அலையடிக்க தொடங்கியது. என்னவென்றாலும் பரவாயில்லை பார்த்துவிடுவோம் என்று வீட்டுக்கு வந்தவளுக்கு அன்று இரவே நரகமாகியது வாழ்வும் இருப்பும்.
                                 ஆரம்பத்தில், இரவுநேர அமைதியை ஊடுருவி ஒலித்துக்கொண்டிருந்த பி பி சி யின் செய்திகளை மீறாமல் மெல்லியதாகத்தான் ஆரம்பித்தது, செல்லாம்மாவுக்கும் ரேவதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை. செல்வமும் வந்து சேர்ந்துகொள்ள செல்லம்மாவின் குரலில் எழுந்தவேகம் ரேவதியை இன்னும் இன்னும் தூண்டியது. பொறுமையிழந்த ரேவதி ஓம் நான் காதலிக்கிறன் அவன்ர வானில்தான் இன்றும் வந்தேன் இனியும் வருவேன் உங்களால என்ன செய்யமுடியுமோ செய்யுங்கோ என்று  சொல்லி மிடுக்குடன் நின்றாள். மூத்த பிள்ளை அதுவும் பொம்பிளைப்பிள்ளை என்று ஒருநாள் கூட அடிக்காத ஏன் இரைந்து கூட பேசாத செல்வம் அப்போதுதான் தான் செய்த தவறை உணர்ந்து குறுகி தலை குனிந்து நின்றார். செல்லம்மாவோ அடுத்து என்ன சொல்லப்போகிறாளோ என்ற பதைப்பில் பேச்சு வராமல் இறுகிப்போய் இருந்தாள். அந்த கணநேர அமைதியை, அவர்களுக்குள் ஓடிய எண்ண ஓட்டங்களை நிறுத்தும் படியாக எழுந்தது ரேவதியின் குரல், நாளைக்கு குமார் வரும், உங்கட விருப்பம் என்ன வென்று சொல்லுங்க, உங்களுக்கு  பிடிக்காட்டி என்னை மறந்து விடுங்க, நானும் குமாரும் எங்காவது போய் வாழ்ந்து விடுகிறோம். என்று  கூறியவள்  மிக சர்வ  சாதரணமாக நடந்து தனது அறைக்குள் சென்றாள். தூணில் சரிந்து இருந்தபடி செல்லம்மா அரற்றத்தொடங்கினாள். செல்வம் ஒன்றும் சொல்லத் தோணாமல் செல்வம் முற்றத்தில் அசைபோட்ட படி படுத்திருந்த மாட்டை அன்றுதான் பார்ப்பது போல கண்கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தார், மனதுக்குள் நாளை, நாளை என்று அடித்துக்கொண்டு இருந்தது. விடயம் கைமீறியதையும் தன் இயலாமையையும் நினைத்து தனக்குள் ஒரு  தீர்மானத்துக்கு வந்தவராக எழுந்த செல்வம், அரற்றிக்கொண்டிருந்த செல்லம்மாவிடம் இப்ப எதுக்கு கத்திக்கொண்டு கிடக்கிறாய்,எழும்பு விடியட்டும் பார்ப்போம், என்றவாறு  செல்லம்மாவை உறுக்கி அழைத்து சென்றார் வீட்டுக்குள்.
                                   மறுநாள் வீட்டில் யாரும் யாருடனும் கதைக்கவில்லை. தமக்கையின் காதல் கதைகளை அறிந்த ரூபன் அவளை அடித்தே கொன்றுவிடுவதாக உறுமிக்கொண்டு திரிந்தான். இடையிடையே  வரட்டும்  வரட்டும் அவன் வரட்டும் என்றும் முனுமுனுத்துக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும், எதோ தனக்கும் இதுக்கெல்லாம் சம்மந்தம் இல்லாததுபோல காட்டிக்கொண்டும், ரேவதி ஹோலில் போட்டிருந்த கதிரையில் அமர்ந்து இருந்தாள். அவளது அதீத நம்பிக்கையையும் பிடிவாதத்தையும் பார்த்த செல்வமும் செல்லம்மாவும் திகைத்துப்போய் இருந்தனர். நேரம் கடந்துகொண்டிருந்தது. ரேவதி தனது கைத்தொலைபேசியை எடுத்து குமாரை அழைத்தாள், மறுமுனையில் தொலைபேசி அணைக்கப்பட்டு இருந்தது. மெல்லிய நடுக்கம் ஒன்று ரேவதிக்குள் பரவத்தொடங்கியது.
     
     
     
    

8 comments:

  1. ஈழத்து நடையில் அருமையான கதை..!! ம் முடிவு..?

    வாழ்த்துக்கள் தம்பி.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி கட்டான் அண்ணா,உங்களின் கருத்திடல் என் இருத்தலை இன்னும் வளமாக்கும். விமர்சியுங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்,இன்னும் நான் மாணவனே......
      முடிவு ?////வாசிப்பவர்களின் ஊகத்துக்காக கதையை அந்த இடத்தில் முடித்து விட்டேன்.

      Delete
  2. இரண்டுவிதமான தலைப்பில் கதையை நகர்தியிருக்கின்றீர்கள் நேற்கொழு . ஒன்று கிடுகுவேலிக் கலாச்சாரம் மற்றையது குடும்பத்தின் கண்டிப்பு . இறுதியில் பறவை திசைமாறிவிட்டது . இது யார்குற்றம் ?? கிடுகுவேலிக்லாச்சாரத்திலா அல்லது வளர்ப்பிலா ?? இளையவர்கள் ஒன்றை மட்டும் மறக்கின்றார்கள் . அனுபவங்களின் அரவணைப்பை , கிராமத்தான் கதை என்றும் , கவ்வைக்கு உதவாது என்றும் நகரத்துக்கவர்ச்சியில் விட்டில் பூச்சிகளாக விழுகின்றார்கள் . பெண் என்றால் தகாத உறவும் ஆண் என்றால் கூடா நட்பும் அவர்களை தடம்புரள வைக்கின்றன . பிரச்சனைகளைத் தொட்ட உங்கள் கதை ஏனோ தீர்வை சொல்லத் தயங்குகின்றது . எனினும் நல்ல கதையைத் தந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி கோமகன் ஐயா,
      உங்களின் கருத்திடல் ஆழ்ந்த உங்களின் வாசிப்பின் பரப்பினையும், என் கதையினையும் எனக்கு மீள ஒருதடவை உணர்த்தியது.
      "பிரச்சனைகளைத் தொட்ட உங்கள் கதை ஏனோ தீர்வை சொல்லத் தயங்குகின்றது" .///////////////ஐயா வாசிப்பவர்கள் அந்தகதையூடாக நகர்ந்து முடிவினை ஊகிக்க வேண்டும் அதனூடாக தங்களின் வாழ்வியலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அந்த இடத்தில் முடித்துள்ளேன். இது எனது நான்காவது கதை.இனி வரும் கதைகளில் என் தவறுகளை திருத்தி இன்னும் அழகாக எழுத முயல்கிறேன். விமர்சியுங்கள் தொடர்ந்தும்

      Delete
  3. முடிவும் தலைப்பும் ஒரே கருத்தைச் சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது..
    கதையின் நகர்வு நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  4. உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆத்மா,உங்களுக்கும்,உங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
      //////முடிவும் தலைப்பும் ஒரே கருத்தைச் சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது..
      கதையின் நகர்வு நன்றாக இருக்கிறது//////////////நன்றி நண்பா,உங்களின் விமர்சிப்புக்கள் என் இருத்தலை இன்னும் அழகாக்கும்.காத்திருக்கிறேன்.

      Delete

  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete