Tuesday, 28 May 2013

நானில்லாத எனது அறையில்............

யன்னலால் எட்டிப்பார்த்து
எக்கத்தொடு மெல்ல திரும்புமோ
நிலவொளி,

நிசப்தத்தால் நிலைகுலைந்து
வெதும்பி வெளியேறுமோ
மலர்தடவிய தென்றல்,

நிழல்கரங்களால்
நிலம் தடவித் தவிக்குமோ
தளர்ந்து கொம்பாய் கிடக்குமோ
செம்பருத்தி,

மேட்டுக்குள் கடக்கும் எலிகள்
இறங்கி உலாவுமோ,
மேசை லாச்சிகளில்
குட்டிகளை ஈனுமோ,

என்னதான்  நிகழும்
எனது அறையில் !!

சுவரில் மாட்டிய அழகியின் படத்தில்
கூடுகட்டிய வண்டு
ஆணியடித்த தடத்தில் உறங்கிக்கிடக்கும்
ஆடை கொழுவியில்
அமைதியாய் கிடக்கும் வலைபின்னி சிலந்தி,

கதவில் ஒட்டிய படம்
மக்கிப்போயிருக்கும் -அந்த
கதவும் கொஞ்சம் இறங்கிப் போயிருக்கும்.
மேசையும் கதிரையும் புத்தகங்களும்
தூசுகளில் கிடக்கும்.
மையிறுகி பேனையும்,
தோல்வெடித்துக் காலணியும்,
சக்குப்பிடித்து எண்ணைப் போத்தலும்,
அந்தந்த இடத்திலேயே கிடக்கும்.

இவையும்
நிகழ்ந்திருக்க கூடும்.

யாருக்கும் தெரியாது,
நானில்லாத அந்த அறையில்
என் கனவுகளும்
நிராகரிக்கப்பட்ட பிரியங்களும்
கண்ணீரின் உவர்ப்பு வீச்சமும்
பெருமூச்சுக்களும்
ஒரு காலடிக்காக காத்திருப்பது !!

7 comments:

  1. யாருக்கும் தெரியாது,
    நானில்லாத அந்த அறையில்
    என் கனவுகளும்
    நிராகரிக்கப்பட்ட பிரியங்களும்
    கண்ணீரின் உவர்ப்பு வீச்சமும்
    பெருமூச்சுக்களும்
    ஒரு காலடிக்காக காத்திருப்பது !!

    மிக மிக அருமை
    நிச்சயம் அறை கத்திருக்கத்தான் செய்கிறது
    நாம் இருக்கையில் உயிர் பெறும் அறை
    இல்லாத போது நிச்சயமேங்கித்தான் கிடக்கும்
    அழகான அருமையான சிந்தனை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மனதில் இப்படி இருக்கோமோ என்று நினைக்க வைத்தது வரிகள்... முடிவிலும் வரிகள் அருமை... வாழ்த்துக்கள்... TM 2

    ReplyDelete
  3. தனிமையான அறையில் இப்படியும் இருக்கலாம் என்பதை கவியாக்கிய சிந்தனை அருமை அதுவும் முடிவில் இன்னொரு சிந்தனையைத் தூண்டிச் செல்லும் வண்ணம் முடித்து இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  4. ஏனோ மனதை மெலிதாய் வருடி கனக்க செய்தது கவிதை

    ReplyDelete
    Replies
    1. நீயில்லா உனதறை-உன்
      நீண்ட நினைவுகளை
      நீர்த்துப் ேபாகாதபடி
      நிச்சயமாய் காத்திருக்கும்
      ெநகிழ்த்தும் உன் வரிகளால்
      ெநஞ்சம் கரைந்திருக்கும்

      Delete
  5. யாருக்கும் தெரியாது,
    நானில்லாத அந்த அறையில்
    என் கனவுகளும்
    நிராகரிக்கப்பட்ட பிரியங்களும்
    கண்ணீரின் உவர்ப்பு வீச்சமும்
    பெருமூச்சுக்களும்
    ஒரு காலடிக்காக காத்திருப்பது !!...................mm kathyupipukal kanathyyanavi

    ReplyDelete