Monday 1 July 2013

எனக்கான பாடல்...........

இது எனக்கான பாடல்.
எனக்கான இந்த பாடல்
உங்களுக்கான அடையாளங்களை
சுமந்திருக்கலாம் .........
ஆனாலும் -இது
எனக்கான பாடலேதான். 

தரவையிலும் தரிசுநிலத்திலும் 
பாடிக்கொண்டிருக்கும் 
ஒற்றைப்பறவையின் பாடலொன்றை
ஆழ்ந்து கேட்டிருந்தால்,

ஆளரவமற்று 
வெறுமையோடு அடங்கிக்கிடக்கும் 
பெருவீட்டில் அமைதியோடு 
முடங்கிக்கிடக்கும் 
நாயொன்றின் விழிகளை 
கூர்ந்து பார்த்திருந்தால்,

கனிநிறை மரத்தில் கிளைதாவி 
குரலெடுக்கும் அணிலொன்றின்
தவிப்பின் காரணத்தை 
ஒருநாளாவது தேடியிருப்பின், 

எனக்கான இந்தபாடலின்
நியமம் புரிபடக்கூடும்.
இல்லையேல்,

ஓசைப்பிணைப்புக்களாலும் 
வார்த்தைச்சிக்கல்களாலும்
உணர்த்தப்படப்போவது 
எதுவென்று புரியப்போவதில்லை உங்களுக்கு
எனது பயணத்தைப்போல.......

அர்த்தச்செறிவுகளை தேடி
அங்குலமங்குலமாய் அலசி 
அடையாளம் கண்டுகொள்ள முயன்றாலும் 
தெரிந்துவிடப்போவதில்லை உங்களுக்கு 
எனது  இருப்பைப்போல..... 

இந்த பாடலின் முடிவில் உங்களுக்கு 
எதுவுமே இருக்கப்போவதில்லை
எனது வாழ்க்கைப்போல............ 

இருந்தாலும்,
வெறுப்புக்கள் உமிழ்ந்த
இருப்பினை சுமந்த
எனக்கான பாடல் 
உங்களிடமிருந்தொரு பெருமூச்சை 
பரிசாக கேட்கலாம்.
மறுத்துவிடாதீர்கள்..........

6 comments:

  1. யாருக்கும் எதுவுமே இருக்கப்போவதில்லை என்பதாலும், நியமம் புரிபடுவதாலும் பெருமூச்சு வரவில்லை... அதற்கு பதில் :

    பரிசு : வாழ்த்துக்கள்... நன்றி... தொடர்க...

    ReplyDelete
  2. நிச்சயமாக இது
    எங்களுக்கான பாடலும்தான்
    அதனால்தான் தானாக வெளியேறிய
    பெருமூச்சை தடுக்க இயலவில்லை
    தடுக்க விரும்பவும் இல்லை
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பாடல்களின் இசை வேறுபட்டிருக்கலாம்.
    மெட்டமைப்பு வேறுபட்டிருக்கலாம்.
    ஆனால் பொருள் ஒன்றே...
    நமக்கான பாடல் என்று சொல்லுங்கள் சகோதரரே!

    வாழ்த்துக்கள்!

    த ம.3

    ReplyDelete
  4. நமக்கான பாடல் அருமைக்கவிதை ஒவ்வொரு இதயமும் இதைத்தேடும் !வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  5. இருந்தாலும்,
    வெறுப்புக்கள் உமிழ்ந்த
    இருப்பினை சுமந்த
    எனக்கான பாடல்
    உங்களிடமிருந்தொரு பெருமூச்சை
    பரிசாக கேட்கலாம்.
    மறுத்துவிடாதீர்கள்.........

    எப்போதும் மறுக்க மாட்டோம் சொந்தமே!அருமை!

    ReplyDelete