Sunday 20 October 2013

நிறமிழந்து போவேனோ

பார்த்தலையும்,
புன்னகைத்தலையும்,
நிராகரித்துவிடும் பலரை கடக்கவேண்டியிருக்கிறது.

அரவணைப்புகான ஏக்கத்தைதையும்
இன்றின் ஏமாற்றத்தையும்
சுமந்து திரியும் சிலரையும் கடக்கவேண்டியிருக்கிறது.

வீடுகளில்,
வேலைத்தளங்களில் - இருந்து
ஏதாவதொன்றை காவி வருபவர்களையும்,
ஒரு சீக்கரெட் , கபே வழியாக
ஏதோவொன்றை  இறக்கி வைக்க முயல்பவர்களையும்
சந்திக்க வேண்டியிருக்கிறது.

லெதர் ஜக்கெற்றுக்களும்
மப்ளர்களும் மனதையும் மூடிவிட
ஐபோனும் கூலிங்கிளாசும்
பொறிகளையும் தின்றுவிட
கொட்டடி முதல் கொடிகாமம் வரை
உறவாடி உணர்வோடு இருந்தம் என்பவரையும்
பொறுத்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது.

சென் நதியிலும் லூவர் மியூசியத்திலும்  ஈபிள் கோபுரத்திலும்
நீண்ட மெற்றோக்களிலும் ஏறிவந்த பின்னும்
ஒரு ஆபிரிக்கனை,
ஒரு துனிசியனை,
ஒரு ரூமேனியனை,
கள்ளன் கறுவல் என்று திட்டிக்கொள்பவர்களையும்
சகிக்க வேண்டித்தான் உள்ளது.

இந்தப் பயணத்தில் ...
முகமூடிகள்  மட்டுமல்ல
முகமில்லதவர்களும் பக்கத்து இருக்கைகளில்,

ஒரு காலத்தில்,
வல்லைக் காற்றையும்
வல்லிபுரக்கோவிலையும்
தாவடிச் சுருட்டையும்
கீரிமலைக் கேணியையும் சுகமென்றவர்கள்,
மாத விடுப்பில் பார்த்த
சுவிசும், பார்சிலோனாவும், லூட்சும் போதும் என்கிறார்கள்.
வலைபின்னி வலைபின்னி
வாழ்வினை இரையாக்கி கொள்கிறார்கள்.

இப்போது,
எனது பயமெல்லாம்
இவர்களைப்போல,
நானும் ஒரு அகதி என்பதை மறந்துபோவேனோ ?

4 comments:

  1. மறந்து விட்டால் அனுபவிக்கலாம்...!

    ReplyDelete
  2. காலம் தவிக்கும் சுற்றத்தை பார்ப்பதில்லை...

    தங்கள் வேதனை கவிதையில் மிளிர்கிறது

    ReplyDelete
  3. மறதி என்பது தான்
    நமக்கு கிடைத்த பெரும்வரம்...
    மறதி மரத்துப்போனால்
    வாழ்வின் பொருள் தேடியே
    ஓய்ந்துபோவோம்...
    மறதி சில நல்ல செய்திகளை
    புனையட்டும்..
    உங்களுக்கு வெற்றி மாலையாய்
    இணையட்டும்..
    உணர்வுகள் மிகுந்த கவிதை தம்பி...

    ReplyDelete
  4. மறந்துதான் பாருங்களேன் நண்பரே! துயர நினைவுகளை மறக்கப் பார்ப்பது மனித இயல்பு தானே! நல்ல கவிதை.

    ReplyDelete