Monday 28 July 2014

குறிகளை தின்னும் சுடுகுழல்கள்...

ஆமணக்கும் நெருஞ்சியும்
பூவரசும் பனங்கூடல்களும் இயல்பிழந்து போக
அரசமரங்கள் எழில் கொள்கின்றது,

மின்குமிழ்களின் பின்னும்
தொலைபேசிக் கோபுர அடிகளிலும்
தொடரூந்து தண்டவாள இடைவெளிகளிலும்
யாருமறியாமல் நிறைந்துகிடக்கிறது
பேரிருள் சூழ்ந்த மௌனமொன்று..


வீதிகளும் விளம்பரத்தட்டிகளும்
விடுதிகளும் வங்கிகளும்
வடுக்களின் மேல் வர்ணம் பூசிப்போக,
அடிப்பிளவுகளில் உயிரடங்கி
வெதும்பிக் கிடக்கிறது தலைமுறைக்கனவு

கிராமத்து முனைகளில்,
சுடுகுழல்களில் ஒளிந்திருக்கும் குறிகள்
விரகம் தீர்க்கும் வன்மத்துடன்  அலைகின்றன.
நகரத்து ஒழுங்கைகளில்
தேரவாத காவிகள்  தம்மபததின் பக்கத்தில்
இனவாதத்தை எழுதி ஓதுகின்றனர்.

அதிகாரங்களும் அடையாளங்களும்.
நிர்வாணிகள் மீது
குறிகளைப் புதைத்துவிட வக்கிரத்துடன்
அரசநிழலில் உருக்கொள்கின்றன

என் தாய் நிலமே...
சுடுகுழல்களால் வரையப்பட்ட கோடுகளை மீறி 
எப்படிப் பாதுகாக்கப்போகிறோம் 
எங்கள் குறிகளை...

1 comment:

  1. அருமையான பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete