Sunday 14 December 2014

இன்றென் பெருவாழ்வு.

பறவைகளின்றி வானம் இறந்து கிடக்க,
இலைகள் கழற்றிய கிளைகள்
காற்றோடு குலவுகின்றன,

மதில்களில் பூனைகள் இல்லை.
வாசல்களில் யாதொன்றினதும் அரவங்களும் இல்லை.
அறைகளில் ஒளிரும் மின்குமிழ்கள்
கண்ணாடி யன்னல்களில் ஒளியத்தொடங்குகின்றன.

குளிர் புணர்ந்து அந்தி கவிழ்ந்துவிட்டது.
இனியிருள் சூழ்ந்து
அமைதி வளர்ந்துவிடும்.
மூச்சுக் காற்றில் வெப்பம் தெறிக்க,
உள்ளங்கைகளில் குளிர் குத்தும்.

இரண்டுபட்டுக் கிடக்கிறது தேகம்.
மனதும்,

கிடுகுவேலிப் புலுனிக்குருவி  நான்
இந்தப்பனிக் குளிக்கும்
மரங்களில் எனக்கேது மறைவு.

செயின் நதியும்
ஈபிள் கோபுரமும்
மோனோலிசாவின் முகமும்
உலகின் அழகான ராஜபாட்டையும்
டயானாவின் கார் மோதிய தூணும்
கடிகாரத்தின் இலக்கங்களாகிடச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

தொடரூந்துகளிலும்
இரவுநேர ஊர்திகளிலும்
அவதியோடு கழிந்ததுபோக
மிச்சமிருக்கும் உறக்கத்தோடு
கம்பளியொன்றுக்குள் புதைந்துவிடுதலும்,

வலிந்து திணித்த புன்னகையோடு
முகமறியாதவனுக்குப்  பதில் வணக்கமும்
நண்பனுக்கு வாழ்த்தும்,
தொலைபேசி அழைப்புக்குச் சிரிப்பும்
இந்தப் பெருவாழ்வின் பக்கங்கள்.

வாழ்வைக் கடையும்
காலக்கயிறாகி விலகாது கிடக்கும்
ஏழாவது அறிவே
இன்றெனக்குக்
எனக்குக் கிடைத்த சாபமோ.

வல்லைவெளியின் கண்டல் மரங்களிலும்
வல்வைக்கடலின் முருகைகற்களிலும்
நீண்ட வயல்வெளிகளின் வரப்புகளிலும்
அடிபெருத்த ஆலமர நிழலிலும்
இன்னும் ஒளிந்திருக்கலாமென் வாழ்வு.

திரும்பிப் பார்க்கிறேன்.
பனிபடந்த வீதியில் உருகிக்கொண்டிருக்கிறது
என் சுவடுகள்.


1 comment:

  1. பலரின் இதயச்சுமைத் தவிப்புக்கள் போல சுவடுகள் பனித்தேசத்தில். கவிதை அருமையான ஊர் நினைப்பினை தீண்டிவிட்டது.

    ReplyDelete