Wednesday, 11 November 2015

கதை சொல்லத் தொடங்கிய கதை.

 இந்தக் கதைக்கும், கதைசொல்லியான எனக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று, இந்தப் பிரதியை வாசிக்கும் போது  நீங்கள் நினைக்கக் கூடும் என்ற நினைப்போடுதான்   இப்பிரதியினை உருவாக்கத் தொடங்குகிறேன். எவ்வகையானதொரு  நோக்கு நிலையில்  நின்று நீங்கள் இதனை வாசிப்பீர்கள் என்ற ஒரு சந்தேகமும் என்னுள் எழாமல் இல்லை ஏனென்றால் நான் கூட புதிய கதைசொல்லிகளின் கதைகளை, வாசிப்பின் ஆரம்ப காலங்களில் அதிகளவு ஈடுபாட்டுடன் வாசித்ததில்லை. பின்நவீனத்துவம் ,பெருங்கதையாடல்களின் முடிவு, பிரதியினை கட்டுடைத்தல், மையசிதைவு அல்லது மையமின்மை போன்ற பல்வேறு உத்திகளுடன் ஒரு கதையை ஆரம்பித்து நகர்த்துதல் என்ற பல்கோட்பாட்டு நிலையில், ஒரு சிறுகதைக்கான கட்டமைப்பு மீதான கரிசனம் அதிகரித்தபின் கண்ணில் படும் எந்த ஒரு பிரதியையும் வாசிக்க தவறியதில்லை. உண்மையில் இன்றைய இந்த நிலைக்கு நான் பாரிசில் சந்தித்த ஒரு ஈழக் கதைசொல்லி தான் காரணம்.


தொண்டைமனாற்று செல்வச்சன்னதி கோவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி நீளும் அந்த பிரதான பாதையின் குறியீட்டு இலக்கம் சி 15. சன்னதி கோவிலின்  முகப்பில் இருந்து ஆரம்பித்தால் வரும் முற்சந்தியில் இடதுபக்கம் திரும்பி ஒரு ஐந்து நிமிட நடைதூரத்தில் இருக்கும்  வளைவினூடாக பயணித்து  அங்கிருந்து சுமார் இருபது நிமிட தூரத்தில் வயல்வெளிகளையும் கல் வீடுகளையும் சிறிய சிறிய பற்றைகளையும்  ஒரு தனியார் கல்வி நிலையத்தையும் கடந்தபின் யாழ் பருத்தித்துறை  பிரதான வீதியோடு நீங்கள் பயணித்துவந்த பாதை இணையும். அது ஒரு முற்சந்தியாகவும் அதன் மையத்தில் ஒரு நூலகமும் பிரதான வீதியின் அருகில் இரண்டு தனியார் கடைகளும், ஒரு பேருந்து தரிப்பிடமும் இருக்கும். 15 ம் கட்டையடி என்று அழைக்கப்படும். அந்த இடம் தான் இந்தக் கதை ஆரம்பிக்கும் தளம்.

இப்படித்தான் இந்தக் கதையின் ஆரம்பத்தினை ஆரம்பித்தேன். முழுதாக மூன்று மாதங்களும் பதினைந்து நாட்களும் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தமையால் இதை முழுதுமாகவே  மறந்துவிட்டிருந்தேன். பின்னொரு நாளில் மீண்டும் உத்வேகத்தோடு ஏதாவது எழுதிவிடவேண்டும் என்ற நிலையில் கோப்புக்களை பிரட்டித் தேடி எடுத்தபோது எழுதிக்  குறையில் நின்றிருந்த இந்தக் கதை  கண்ணுக்குள் உறுத்தியது. ஆரம்பித்த முறையையும், கதையின் கருவையும் மறந்துவிட்டிருந்த நிலையில் கதைக்காக, ஆரம்பித்த நாளிளிலிருந்த மனநிலைக்கு  என்னை கடத்திப்போக முயன்றேன். கால நீட்சி உணர்வுகளை சிதையப்பண்ணி இருந்தமையாலும், இலங்கையில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அவதானங்களாலும் கதையினை கண்டடைதல் என்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்து நின்ற பேருந்தில் 15 கட்டை இறக்கம் என்ற நடத்துனரின் குரலினைக்கேட்டு இருக்கையில் இருந்து எழுந்து வாசல்படியை அடைந்த நடேசன்  நிதானமாக பேருந்திலிருந்து இறங்கினான். நல்ல வெயில். முன்னர் போல வீதி வெறிச்சோடிக் கிடக்கவில்லை. வெயிலையும் பொருட்படுத்தாமல் கனரக வாகனங்களும் மொட்டார்சைக்கிள்களும் ஓரிரு சைக்கிள்களும் இடைவிடாது வீதியில் ஓடிக்கொண்டு இருந்தன.

அந்த இடத்தின் சூழலை மெதுவாக எடைபோட்டான் நடேசன். 15  மைல் என்று எழுதி அடையாளமிட்டு நடப்பட்டிருந்த கல்லை தேடினான். காணவில்லை. நேரே அந்தக் கல் இருந்த இடத்தை நோக்கி நடந்து போனான். கைகால்  குறண்டுவது போலவும் ஆமை தன்  தலை மற்றும் கால்களை உள்ளுக்குள் இழுத்துவிடுவது போலவும் தனக்குள் ஒடுங்கி விடுவதாயும் உணர்ந்தவன் மைல் கல் இருந்த இடம் நோக்கி  மெதுவாக நடக்கத்தொடங்கினான்.

சரியாக இருபத்து எட்டு ஆண்டுகளுக்கு முன், பதினைந்து  வயதில், பாடசாலை முடிந்த குதூகலத்துடன் மிக வேகமாக சைக்கிளில் வந்தவன் சந்தியில் குழுமி நின்ற மக்கள் கூட்டத்தை கண்டதும் சைக்கிளை மெதுவாக நிறுத்தி அருகில் நின்ற பெரியவரிடம் என்ன நடந்தது என்று கேட்டான். காட்டிக் குடுத்தவனை ஊர்வலமாக கொண்டுவந்து கண்ணை கட்டி வைச்சிருக்கிறாங்கள் என்றார். சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு கூட்டத்துக்குள் நுழைந்து ஒருவாறு கண்ணைக் கட்டிய அந்த நபரை பார்ப்பதற்கு வசதியாக நின்றுகொண்டான் நடேசன்.

புலம்பெயர்ந்த  பின்னான காலம் உண்மையில் எனக்கு ஒரு பொற்காலம் தான்.  கதை சொல்லி ஒருவரின் நெருக்கமும் இங்கே தான் கிடைத்தது. ஊரில் இருந்தவரை வாசிப்புக்களோ அல்லது இலக்கிய உரையாடல்களோ குறைந்த பட்சம் ஒரு புத்தகத்தைப் பற்றி கதைக்கவோ யாரும் இருந்தததில்லை. எந்த நேரமும் படி படி என்று ஆக்கினை செய்யும் அப்பாவின் குரலும், சாப்பிடு சாப்பிடு என்று தொடரும் அம்மாவின் குரலும் டேய் பான் வேண்டிவாடா, பருப்பு வேண்டிவாடா என்ற அக்காவின் குரலும் புகையிலை தோட்டத்தில் கேட்டு உடைத்தபடி நல்லதம்பி பேசும் தூசனங்களும் மட்டுமே இலக்கியங்களாக இருந்ததெனலாம். ஆக மிஞ்சிப்போனால் கடலைவாத்தி மேடையில பேசின பேச்சுக்கள் மட்டும்தாம் மிகப்பெரிய இலக்கிய ஆதர்சமாக இருந்த காலம் அது.

 எழுத்தாளனின்  தகுதி என்ன எடுத்த  எடுப்பிலேயே அந்த கதைசொல்லியிடம் கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்த கதை சொல்லி தேநீரைக் குடித்தபடி இலகுவாக "ஒன்றுமில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள் நானும் இனிக் கடைப்பிடிப்பம்"என்று இலகுவாக நிறுத்தி விட்டு, நீங்கள் இப்போது வாசிக்கும் புத்தகம் என்ன என்று கேட்டார்.புத்தகத்தை சொன்னேன். சிரித்துவிட்டு ஓய்வுநாளில் வீட்ட வாங்க தேவையான புத்தகங்களை எடுத்துசென்று வாசிங்க, என கூறினார். அடுத்த திங்கள் லீவு அன்று வருகிறேன் என்று கூறியபடி விடைபெற்றேன் கதைசொல்லியிடமிருந்து.

வாசலில் சைக்கிளைப் போட்டுவிடு ஓடிய நடேசன் தாயின் கையை இறுக்கிப்பிடித்தான். மகனின் முகத்தையும் கை நடுக்கத்தையும் கண்ட தாய் பதறி என்னடா நடந்தது ஏன் இப்படி ஓடிவாராய் முகம் எல்லாம் எல்லாம் வெளிறிக்கிடக்கு என்னாச்சப்பன். என கேட்டபடி தலையை தடவினார். அம்மா 15 கட்டை சந்தியில இயக்கம் ஒரு ஆளைக் கொண்டுவது வெட்டினவங்கள் அந்த இடமெல்லாம் ஒரே இரத்தம் அந்தாள் சாப்பிட்ட  சோறு கழுத்தால கொடுப்பட்டு ரத்ததில மிதந்து கிடந்தது. ஏனம்மா இப்படி வெட்டுகினம். எனக் கேட்டான். ஐயோ கடவுளே எப்ப நடந்தது நீ ஏன் அதப் பார்க்கப்போனனி. பேசாமல் வீட்ட வாறது தானே என்றபடி நடேசனை அழைத்துசென்று முதல் குளிச்சிட்டு வா. என்றபடி கிணற்றடிக்கு அனுப்பினாள். நீண்ட ஒரு தயக்கத்துடன் கிணற்றை நோக்கி சென்ற நடேசன், அலைந்த மனதுடன்  நீரை அள்ளி தலையில் ஊற்றி தோயத்தொடங்கினான்

போய் சாமி கும்பிட்டுவாங்கோ அதெல்லாம் ஒன்றுமில்லை. அம்மா சோறு தல்லாம் சாப்பிடலாம். என்று குளித்துவிட்டு வந்த நடேசனிடம் கூறினார். தாய் குழைத்து வைத்திருந்த சோற்றினை பார்த்த நடேசன் ஓங்காளித்து வாந்தி எடுத்தான். அன்றிலிருந்து ஐந்து நாட்கள் இந்திராணி மாவட்ட வைத்தியசாலையில் காச்சலுக்கு கிசிச்சை பெற்றான்.

ஊரின் நிலைமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகத்தொடங்கின. எங்கும் தண்டனைகளும் கொலைகளும் நிறைந்து போயின. மக்களில் ஒரு சாராரும் கல்விமான்களில் ஒரு சாராரும் மௌனமாக இருந்தனர். மறுதரப்பினர் பொடியள் செய்வது சரி, இப்படி தண்டனைகள் கொடுத்தால் தான் எல்லோரும் திருந்துவினம் என்று கொக்கரித்து வழிமொழிந்தனர். நடேசன் தன் பதினாறாவது வயதில் சொந்த கிராமத்தை விட்டு தாய், தந்தையை, சகோதரியை  விட்டு வெளியேறினான்.

நான் பாரிஸில், நாட்கள், பொழுதுகள் இரவு பகல் என்றில்லாமல் வாசிக்கத்தொடங்கினேன். கண்டதெல்லாம், தெரிந்ததெல்லாம் வாசிக்கத்த்தேன். இந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதவும் தொடங்கி இருந்தேன் என்பதனை கூச்சத்துடன் சொல்லிக்கொள்கிறேன். எழுத ஆரம்பித்த நாட்களில் ஒவ்வொருவரும் கண்ணுக்குள் வருவார்கள் ஒரு பந்தியினை எழுதி முடிந்ததும் இவர் என்ன சொல்லுவார், அவர் என்ன நினைப்பர் ,இதைப் பார்த்தால் ஊரில என்ன நினைப்பினம் என யோசிக்கவும் வேண்டி வந்தது. ஒவ்வொருவருக்காவும் எழுத்தின் சாரத்துக்களை மாற்றி எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் எழுதி முடித்து விட்டு, இரண்டு மூன்று நாட்களின் பின் மீண்டும் வாசிக்கையில் உயிரோட்டமில்லாத ஒரு சவக்களை உடைய எழுத்தாகவே அமைந்திருந்ததை உணர்ந்தும் கொண்டேன்.

பாரிஸ். உலக கலைகளின் இருப்பிடம். எந்த துறையை எடுத்தாலும் அதில் பாரிஸின் பங்களிப்பு பிரமிக்க வைக்கும். பாரிஸில் வாழ்ந்த அறிஞர்களை பட்டியலிட்டால் இந்த பக்கம் முழுவது நிறைந்துவிடும். பெருமை மிக்க பாரிஸில் தமிழர்களும் தம் கலைசார்ந்த நிகழ்வுக்கு பெரும் பங்களிப்பினை செய்துவந்தனர். மற்ற எந்த நாட்டிலும் இல்லாத வகையில் தமிழின் கலைகளில் பரிஸ்வாழ் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகவும் வியக்கவைப்பதாகவும்  இருந்தது. இப்படிப்பட்ட ஒரு தளத்தில் நானும்  இயங்கத் தொடங்கினேன். அப்படியான ஒரு வாசிப்பு நாளில் பாரிஸில் இருந்து வெளியாகிய அம்மா ஓசை எக்ஸில் உயிர்மெய் குமுறல் எரிமலை சமர் என சில சஞ்சிகைகள் கிடைத்தன.

 நடேசன் தன்பதினேழாவது வயதில் ஊரை விட்டு வெளியேறினான்.  இருபதாவது வயதில் பாரிஸ் வந்தடைந்தான். பாரிஸ் நடேசனை "நாடா" வாக்கியது. இதிலிருந்து கதைமாந்தன் நாடா என்றே அழைக்கப்படுவான்.

வழமையான புலம்பெயர் வாழ்வியலை நாடாவும் அனுபவித்தான் கொண்டாடினான். பல நாடுகளுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் சென்றான். தமக்கைக்கும் திருமணம் பேசி  பரிஸுக்கே கூப்பிட்டான். திருமணம் முடித்தான். தாய் தந்தையரை அழைத்து தன்னோடு வைத்துக்கொண்டான். பாரிஸின் புறநகர் ஒன்றில் நிலவீடு வாங்கி சராசரியான ஒரு தமிழனாக தன்னையும் மாற்றிக்கொண்டான். பிள்ளைகளை இருவரும் வளர்ந்து தங்கள் அலுவல்களை தாங்களே செய்யும்  நிலைக்கு வந்துவிட்டிருந்தனர் .

அவ்வாறாதொரு நாளில், லாசெப்பல் சாப்பாட்டுக் கடையில் மதிய உணவினை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். தம்பி  ஒரு மரக்கறி சாப்பாடு என்ற குரலினை கேட்டு நிமிர்ந்து பார்த்தான் நாடா. தனக்கு முன்னால் வந்தமர்ந்த நபரை எங்கேயோ பார்த்தது போன்ற நினைவு வர மீன்டும்  மீன்டும் யோசித்தான்,  உணவு வந்துவிட நிமர்ந்து மீண்டும் முன்னால் இருந்த நபரைப் பார்த்தான். அந்த நபரோ தன உணவிலேயே கவனமாக இருந்தார். சோற்றில் பீட்ரூட் கறியினை கலந்து குழைக்க  சோறு சிகப்பாகியது. முகத்தை நிமிர்ந்து பார்த்தான். குடல்மேல் எழும்பி தொண்டையை அடைத்தது. முகம் நினைவுக்கு வந்தது. வம்பில பிறந்தது என்றபடியே கதிரையை தள்ளி எழுந்த நாடா வாயைப்பொத்தியபடி ஓடிப்போய் கடைவாசலில் வாந்தி எடுத்தான். வாந்தியோடு சோறும் கலந்து வந்தது.

கண்கள் கலங்கி சிவந்து உதடுகள் துடிக்க, 15 கட்டை நினைவுக்கு வந்தது. குருதியில் மிதந்த சோறு நினைவுக்கு வந்தது. சன்னிதி கோவில் முகப்பிலிருந்து கழுத்தில் தொங்கிய  மட்டையோடு கைகள் கட்டப்பட்ட நிலையில்  பெருத்த மனிதர் நடந்துவர சனங்கள் கூட்டமாகவும், அந்தக் கூட்டத்தினிடையே   பெண்ணொருத்தியின் விம்மி அழும் குரலும் கேட்டது. அதன் பின் எதுவுமே நினைவில் வர மறுக்க தளர்ந்து ஒடுங்கிப் போய் கடையில் ஓரத்தில் இருந்த கதிரையில்  அமர்ந்தான் நாடாவாகிய நடேசன்

நடேசனுக்கு மிக நெருக்கமாக மக்கள் கூட்டத்தின் மத்தியில் அவர்கள் நின்றிருந்தார்கள். மக்கள் சுற்றி வர கூட்டமாக முனுமுனுத்தபடி நின்றனர். கைகள் பின்னால் கட்டப்பட நிலையில் கண்களை சுற்றி கறுத்த துணியால் கட்டியிருந்தனர். அவரின் பருத்த தேகத்திலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்தது. ஒரு பழைய சாரத்தினை மட்டும் கட்டியிருந்த அந்த மனிதர் கால்களில் வெள்ளைப் புழுதிபடிந்திருந்தது. அந்த வெள்ளை புழுதிகளில் வியர்வை கோடு கோடாக இறங்கிக் கொண்டிருந்தது. என்ன நடக்கபோகிறது என்று தெரியாமலேயே மௌனமாக அவமானப்படுத்தப்பட்ட ஒரு உணர்வற்ற நிலையில் அவரது உடல் குறுகி நின்றது. உடல் மொழியில் இருந்து  நாளை இந்த மக்கள் முன்னால் எப்படி நடமாடப்போகிறேன் என்ற கேள்வியே எழுவது போல இருந்தது நடேசனுக்கு.

ஒற்றையில் எழுதி வந்து எதோ வாசித்தார்கள் அவர்கள்.  தண்டனை வழங்க தீர்மானிக்கப்பட்டது என்ற சொல் மட்டும் தெளிவாக விளங்கியது நடேசனுக்கு. அவர்களில் இருவர் நடேசனை பின்னாலிருந்து தள்ளி, 15 மைல் கல்லின் மேல் கழுத்து இருக்கும்படி குனிய வைத்து பிடித்தனர் ஒருவன் தலைமுடியை இழுத்துப்பிடித்திருந்தான். கல்லின் மேல்பகுதியில் கழுத்து வாகாக பொருந்தி இருந்தது.

ஆளுக்கு நல்ல அடிவிழப்போகுது போல  அதுதான் ஆடாமல் அசையாமல் பிடிக்கினம் என நினைத்தபடி அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான் நடேசன். சனங்களுக்கிடையில் இருந்து ஒருவன் நான்காவது ஆளிடம் ஒரு உரப்பையை கொண்டுவது கொடுத்தான். தனது பிஸ்ரலை கழட்டி அந்த ஆளிடம் கொடுத்துவிட்டு வளம் பார்த்து நின்றுகொண்டான் அந்த நான்காவது ஆள்.  உரப்பையை உதறியபோதுதான் நடேசனுக்கு விபரீதம் புரிந்தது. திரும்பி ஓட முயன்றான். பலவகை குரல்கள் சனக்கூட்டத்திருந்து கேட்டுக்கொண்டு இருக்க அந்த நான்காவது ஆள் கையில் இருந்த வாளை உயர்த்தி அந்த மனிதனின் கழுத்தில் சரியாக இறக்கினான்.

15 மைல் கல் ரத்தத்தில் குளித்தது. ஒருபக்கம் மலைபோல உடல் கிடந்தது துடித்துக்கொண்டு கிடக்க, தலையை கையில் பிடித்திருந்தவன் கிழே போட்டான். துள்ளி உருண்ட தலை  அடங்கியபோது நடேசனின் காலடியில் கிடந்தது. திடீரென மிக வேகமாக வந்து நின்ற  வானில் அந்த ஐவரும்  சிரித்தபடியே ஏறினர். வாகனத்தின் அடர்ந்த புகை அந்த கூட்டதிருந்த மக்களின் முகங்களை விட வெள்ளையாக இருந்தது. அவர்கள் போய் விட்டனர் . நடேசன் சைக்கிளை எடுத்து வீடு நோக்கி ஓடினான்.  அந்த தனியார் கல்விநிலைய சந்தியில் தலைவிரி கோலமாக தாயும் சிறு பெண் குழந்தையும் ஓடிவருதையும் கண்டான். வேறு எதுவும் காணவில்லை அல்லது உணரும் நிலையில் மனம் இருக்கவில்லை.

பாரிஸிலிருந்து வெளியாகும் ஏதாவது ஒரு சஞ்சிகைக்கு ஒரு கதை எழுதிவிட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. புலம்பெயர் தமிழ் இலக்கியத்தளத்தில் சிறு சஞ்சிகைகளின் தாக்கம் வரையறைக்குற்பட்டதல்ல. அரசியல் என்றாலும் இலக்கியம் என்றாலும் மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டே இருப்பவை மட்டுமல்ல, சர்ச்சைகள் புதிய புதிய இலக்கிய முயற்சிகள் என சிறு சஞ்சிகைகளின் போக்குகள் அந்த சூழலை மாற்றி அமைத்துவிடும். அப்படியான சஞ்சிகைகள் கைக்கு கிடைத்ததும் அந்த சஞ்சிகைகளின் ஆசிரியர்களின் நட்பினை தேடி அலையத் தொடங்கினேன். ஏதாவது ஒரு சஞ்சிகையில் நானும் ஏதாவது ஒரு கதையை எழுதிவிட வேண்டும். எனது கதை சொல்லும் தகுதியை நிருபிக்கவேண்டும் என்ற ஆசை  பல மடங்கு பெரிதாகி நின்றது.

ஒரு நாள்  தொடரூந்தில் தாஸ்தயேவ்ஸ்கியின் "அருவருப்பான விவகாரம் " என்ற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு குரல், தம்பி என்ன புத்தகம் வாசிக்கிறீங்க ? புத்தகத்தை காட்டிவிட்டு அவரைப் பார்த்தேன். திகைத்தேன். ஈழத்தின் மூத்த கதைசொல்லி. பழகினேன். பழகினார் . அன்று தொட்டு பலதும் கதைத்தோம். இலக்கியம் அரசியல் எல்லாம் கதைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள்ளும் நம்பிக்கை வரத்தொடங்கியது நானும் என்றாவது ஒரு நாள் ஒரு கதையை எழுதி விடுவேன் என. இப்படியான நாளில் தான் அவரிடம் கேட்டேன் எழுத்தாளனின் தகுதி என்ன என்று.

கடையில் வேலை செய்யும் மனிதர் நடாவுக்கு இஞ்சி போட்ட தேநீர் கொண்டுவந்து கொடுத்தார். நடாவின் பார்வை கடைக்குள் திரும்பியது. அவன் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.  மெதுவாக எழுந்து காசினை கொடுத்துவிட்டு கடையில் வேலை செய்யும் அந்த மனிதரிடமே யார் ஆள் என அவனைக் காட்டி கேட்டான் நாடா.

அவரைத் தெரியாதா இங்கை பெரிய ஆள். இயக்கத்தினர முக்கிய பொறுப்பு. இப்பவும் வேலை செய்கிறார். நல்ல காசு வைச்சிருக்கிறார். நல்ல மனுசன். ஏன் உங்களுக்கு அவரைத் தெரியுமோ என் கேட்டுவிட்டு கடையின் உள்ளே சென்றார். எனக்கு தெரியுமோ, எனக்கு அவனைத் தெரியுமோ, என்ன கேள்வி இது. எப்படி மறக்க. வெட்டிக்கொண்ட பாவியை எப்படி மறப்பது. அதுவும் ஒரு அப்பாவியை ..நல்ல மனுசனாம் சீ. அதில இப்பவும் இயக்கத்துக்கு வேற  வேலை செய்கிறானாம்.

நடாவுக்கு புழுதி படிந்திருந்த காலில் வியர்வைக் கோடுகள் நினைவுக்கு வந்தது. பசிக்குது என்று வந்த வேறொரு இயக்கப்பொடியனுக்கு ஒரு கிழமை ஒளிச்சு வைச்சிருந்து சாப்பாடு கொடுத்ததுதான் அந்த பெருத்த மனிதர் செய்த தப்பு. அதை  எல்லைத்தகராறு  காரணமாக ஏற்கனவே சண்டைபிடித்திருந்த பக்கத்து வீட்டுக்காரன்  பயன்படுத்தி தன் செல்வாக்கையும் சேர்த்து சொல்லிக்குடுத்து விட, இவங்களும் தங்கட ஆளைக் குளிரவைக்க என்றேல்லோ சொன்று போட்டவங்கள். அங்கை ஒரு அப்பாவியின் வாழ்க்கையை குலைத்துப்போட்டு இங்கை வந்து தாங்கள் மட்டும் சந்தோசமாக பிள்ளை குட்டிகளோடு.... கொஞ்சம் கூட குற்றவுணர்வு இல்லாமல் எப்படி இவங்களால் இருக்கமுடிகிறது.

கதையை திட்டமிட்டு எழுததொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக கதை வளர்ந்தது. இப்போது எந்த சஞ்சலமும் இல்லை.கதை எப்படியாகவும் இருந்துவிடட்டும் எவரைப் பற்றிய நினைவுகளும் இல்லை. யார் என்ன சொன்னாலும் கதை எழுதி முடித்துவிடுவதுதான் என்ற வைராக்கியம் எழுந்து பூதாகராமாகி நின்றது.

மைல் கல் இருந்த  இடத்தை அடைந்த  நடேசன் அவ்விடத்திலேயே நின்றான். எந்த ஒரு அடையாளங்களும் இல்லாமல்  கல் இருந்த இடம் அழிந்துபோய் கிடந்தது. இதேபோலத்தானே அந்த மனிதரும் எந்த ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து போய் இருப்பார். இப்படி எத்தனை எத்தனை மனிதர்கள். நாளைய காலத்தில் எல்லாமும் இப்படித்தான் மறைந்து போகுமோ என  எண்ணிய நடேசன், அந்த மனிதரின் நினைவுகளை எப்படியாவது பதிவு செய்து விடவேண்டும் என தனக்குள் எண்ணிக்கொண்டான்.  அந்த மனிதரின் வரலாற்றை பதிவு செய்துவிடவேண்டும் என்ற நினைவு வந்ததும் மனதில் இருந்த பாரம் குறைவது போல உணரவே, ஆழமாக ஒருமுறை மூச்சினை இழுத்து விட்டான் நடேசன்.

திரும்பிப் பார்த்தான். வீடு செல்லும் பாதை நீண்டு கிடந்தது. நடந்து போவார் எவருமில்லை. எல்லோரும் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். மிக வேகமாக வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினான் நடேசன்.

நான் கதையை எழுதி முடித்துவிட்டேன். எழுத்துப்பிழைகள் கொஞ்சம் இருந்ததை அவதானித்துவிட்டு அவற்றை திருத்தும் நோக்கில் கதையினை மீள வாசிக்கத்தொடங்கினேன்.விரைவில் அந்தக் கதையினை பாரிஸில் வெளியாகும் சஞ்சிகை ஒன்றில் வாசிக்கலாம். அந்தக் கதை இப்படி ஆரம்பித்திருந்தது.

பாரிஸின் பிரபல உணவு விடுதி ஒன்றில் அந்தக் கொலைகாரனை சந்திப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எதிர்பாராமல் நிகழ்ந்த அந்த சந்திப்பில் அவனுடைய கண்களில் இருந்து கொலைவாள் ஒன்று இறங்கி என்னை நோக்கி வருவதைக் கண்டேன்.  

No comments:

Post a Comment