Saturday, 6 February 2016

குளிர் வெளியில் எரிந்துழலும் மனது


பாடைக்கம்புகள்  இரண்டையும் எடுத்து வளம் பார்த்து கல்லின் மேல் வைத்துவிட்டு, தலைமாடு கால்மாடு என  இரண்டு இரண்டு கம்புகளாக அளவு எடுத்து வெட்டி சணல்கயிறால் கட்டத்தொடங்குகிறேன். திடீரென பறைமேளச்சத்தம் உச்சத்தொனியில் ஒலிக்க, முகத்தைத் திருப்புகிறேன். கொஞ்சம் மங்கலாக தெளிவில்லாமல் உருவங்கள் தெரிகிறது. வாசலில் கட்டிய வாழைக்குட்டி மட்டும் இலையை அசைத்துக் கொண்டு நிற்பது தெளிவாக தெரிய, பாடைக்கு கட்ட நான்கு வாழைக் குட்டி வெட்டனும் என நினைத்தபடி கத்தியை எடுக்க கையை நீட்டுகிறேன்.  உடல் அசைவினால் கழுத்தில் இருந்து நீர்க் கோடு மெல்லிய வெப்பத்துடன் உருண்டு ஓடியது. உடலெங்கும் ஒருவித கசகசப்பாய் இருக்கவே  கையால் கழுத்தை துடைத்துக் கொண்டே கண்களைத் திறந்தேன். பக்கத்து கட்டிலில் நண்பன் மூச்சினை சிரமத்துடன் விடும் ஓசை  கேட்டது.  தூக்க கலக்கத்துடன் கைப்பேசியில் நேரத்தினைப் பார்த்தேன் அதிகாலை மூன்று மணி.

முழுமையாக கனவினை மீள நினைக்கமுடியவில்லை ஆனால் பாடையோடு தொடர்புபட்ட கனவு எனப் புரிந்தது. ஏன் இந்தக் கனவு.. அதுவும் நான் பாடைகட்டும் கனவு. ஊரில் யாருக்காவது என்னவும் நடந்திருக்குமோ. தோள்கள் இரண்டும் துடிக்க, மீண்டும் நேரத்தினைப் பார்த்தேன். மூன்றுமணி. "அப்ப ஊரில் விடிய எழுமணி. அப்படி ஏதும் அவச்செய்தி என்றால் இவ்வளவும் போன் அடித்திருப்பார்கள்." நினைவுகள் தேற்றினாலும் மனம் மிரண்டுபோய் கிடந்தது. முதுகின் முள்ளந்தண்டுப் பள்ளத்தில் வெப்பத்துடனான ஈரலிப்பு ஒருவித சங்கடத்தை உண்டு பண்ணியது. இந்த அதிகாலையில் செத்தவீட்டுக் கனவு ஏன் வரவேண்டும். பகுத்தறிவால் ஒரேயடியாக நிராகரித்துவிட முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டிருந்தது கனவின் நீட்சி.

சிறுவயதுகளில் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்தால் அல்லது அழுதால் அம்மா திருநீறு பூசிவிடுவார். சிலநேரம் எழுப்பி கால் கழுவிக்கொண்டுவந்து படுக்க வைப்பார். அப்போதெல்லாம் கனவு கண்டால் அது பலிக்கும் என்றும், ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன் நிகழும் என்றும் கதைகளாக சொல்லி மீண்டும் உறங்க வைப்பார். சில நாள்களில்  திட்டும் விழும். கண்ட கண்ட இடங்களுக்கு போகாதே என்று சொன்னால் கேட்டால்தானே ஊர்சுற்றிவிட்டு இரவில வந்து அனுங்கிறது..என, அந்த இரவுகள் நினைவுக்குள் குடைய, கனவின் மீது  வெறுப்பு எழுந்தது.

இப்போது இந்தக் கனவின் பலனை யாரிடம் கேட்பது? அம்மாவும் இல்லை இருந்தால் போன் அடித்தாவது கேட்கலாம். மனதுக்குள்  மரண வீட்டுக் கனவு பிரமாண்டமாக வளர்ந்துவிட்டிருந்தது. இன்னும் சொற்ப வேளைகளில் என்னை விழுங்கி விடவும் கூடும். வேறு வழியின்றி  எழுந்து கணணியைப் போட்டேன். தேடுதளத்தில்  "கனவில் தோன்றும்  மரணநிகழ்வின் பலன்கள்". என எழுதி தேடுகுறியை அழுத்திவிட்டு காத்திருக்கத்தொடங்கினேன்.

சிந்தனை நீட்சியின் முடிவில் எதோ ஒரு புள்ளியில் எங்களை அறியாமலேயே மரணத்தைப் பற்றி பேசவோ, நினைக்கவோ தொடங்கி விடுகிறோம். நிரந்தரமற்ற இந்த வாழ்வின் பக்கங்களை வலிமையான சட்டகங்களால் கட்டிக்கொண்டிருப்பதாக  நினைத்துக் கொண்டே வினையாற்றிய பொழுதுகளை, இரைமீட்கும் கணங்களில் மெல்லிய புன்னகை ஒன்று இதழ்களில் எழுந்து மறையும்.  நிகழும் ஒவ்வொரு மரணங்களும் ஒவ்வொரு விரிவுரைகளாக நீண்டுகொண்டிருந்தாலும், அடுத்த கணங்கள் மீதான நம்பிக்கை இமயமளவு எழுந்து நின்றுவிடுகிறது.

இந்த கணங்களை நகர்த்திக் கொண்டிருப்பது எது. மரணமா ?வாழ்வா ? மரணமென்றால் எதற்காக இவ்வளவு ஆலாபனைகள். வாழ்க்கை என்றால் எதற்காக இத்துனை பாதுகாப்பு ஏற்பாடுகள். ஒரு கனவுக்கே இவ்வளவு  பதற்றம் எழுகிறதே.. மரணத்தினை சந்தித்தால்..எப்படி எதிர்கொள்ள இயலும். அப்படியாயின் இதுவரை சந்தித்த மரணங்கள், அந்த மரணங்களுக்காக சிந்திய கண்ணீர்கள் எல்லாமும் பொய்யா?  அல்லது உறவுகளை தொலைவில் விட்டுவிட்டு இங்கே தனிமையில் இருப்பதால் உருவாகி இருக்கும் பலவீனமா இந்தக் கலக்கம். கணனித் திரையில் இருந்து  உருவங்கள் இறங்கி அறையெங்கும் நிறையத்தொடங்கின. கனவினை மறந்து  அந்த நிழல் உருவங்களின் நர்த்தனத்தில் மூழ்கத்தொடங்கியது நினைவுகள்.

முதன் முதலாக கலங்கித் திகைத்து செய்வதறியாது சோர்ந்து நின்ற மரணம் அவனது. எவ்வளவோ துணிவாக யதார்த்தமாக காலங்களை எதிர்கொண்ட  அவனால் அந்த ஒரு நிகழ்வை கடந்து போக முடியவில்லையே என்பதனை இன்று நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது. அது மரணங்களை சர்வசாதரணமாக கடந்து போய்க்கொண்டிருந்த காலம் தான். ஒரு கிழமைக்கு ஒரு மரணமென்றாலும் நிகழாது இருந்ததில்லை. ஒன்றில் பலாலி செல் உயிர்குடிக்கும் அல்லது வானூர்தி தன் துப்பலால் உயிர் பறிக்கும். "மச்சான் அங்க இரண்டு பேர் சரியாம்." " ஒ சரிவா நாங்கள் பந்தடிக்க போவோம்" இப்படியான உரையாடல்கள் மூலம் தான் மரணங்களைக் கடந்து கொண்டிருந்த காலம் அது. இன்றோ நாளையோ நாங்களும் செல்லுக்கோ விமானக் குண்டுக்கோ என்றிருந்த அந்த நாட்களில் எப்படி அவனால் இப்படியொரு முடிவினை எடுக்கமுடிந்து.

காதலைச்சொன்னவன்  வீடுதிரும்ப முன், அவளின் தந்தை வீட்டுக்கு வந்து தமக்கையை தரக்குறைவாக பேசிவிட, தமக்கையும் தாயும் இவனின் காலடியில் விழுந்து குழற, எங்களைப் பற்றிய நினைவுகள் கூட எதுவுமில்லாமல் பொலிடோல் குடித்துவிட்டான். மூன்று மணித்தியாலங்களின் பின், எல்லாம் அடங்கியபின், அவனைக் கண்டுபிடித்தோம். மறுநாள் வெட்டிக்கிளித்து தைத்த உடலை கண்ணீருடன் பாடையில் வைக்கையில் அவளும் தகப்பனும் அழுதுகொண்டே அந்த முற்றத்து மண்ணில் வந்து விழ, சிலர் அடிக்க ஓட அவனின் தாய் ஓங்கிக் குரல் கொடுத்தாள். டேய் விடுங்கோடா அவளுக்குத் தானே இவன் ஆசைப்பட்டவன்.  சிதைந்துபோயிருந்த நினைவுகளை என்னால் அந்தக் கணங்களில் ஒருமைப்படுத்த முடிந்திருக்கவில்லை. நண்பர்கள் எல்லோரும் விறைத்து நின்றனர். மூப்புக்கு நின்ற சொக்கப்பாவின் குரலால் எங்களை அறியாமலேயே பாடையை தூக்கினோம். நடந்தோம்.

இன்றும் கூட நண்பர்களிடம் அலைபேசினால் ஏதாவது ஒரு இடத்தில் அவனது கதை வரும். அப்போதெல்லாம் " டேய் உன்னோடதானே திரியிறவன் நீ நினைத்தாயாடா இப்படி செய்வான் என்று" எனக்  கேட்பார்கள். நினைத்திருந்தால்,தெரிந்திருந்தால்  அவனுடன் நானும் சேர்ந்து குடித்திருப்பேனே என மனதுக்குள் சொல்லிக் கொள்வேன். ஏனென்றால் அன்று  காதலை சொல்ல அவனைத் தூண்டியதே நான் தானே...

இதேபோல நண்பர்களின், இளையவர்களின் மரணங்கள் கலங்க வைத்தாலும், முதியவர்களின் மரணங்கள் கொண்டாட்டமாகவே இருந்தது. நாங்கள் குழுமி இருக்கும் இடத்துக்கு மரண சேதி வரும். "வந்து ஒருக்கா எல்லாத்தையும் செய்யுங்கோ" என்ற அழைப்பும் வரும். பிறகென்ன... வதிரி தென்னம் சாராயமும், ஊர்க்கள்ளும் கலந்து விளையாட.. சொக்கப்பாவின் ஆணை எங்களிடம் மட்டுமே செல்லுபடியாகும்.

டேய் பூவரசு தறிக்கேக்கை நெஞ்சுக்கு இரண்டு அடித்துண்டு கனமாக எடுத்துப் போடு. கொத்துக்கொள்ளி ஐந்து அந்தர் எடுத்துவா, என உத்தரவுகள் அனல் பறக்கும். யாராவது ஒருவன் அந்தநேரம் பாத்து சொல்லிவிடுவான், உவன் தாய்க்கு சோறே குடுக்கவில்லை பிறகேன் உந்த மனுசிக்கு உந்தளவு விறகு... இரண்டு பன்னாடையும் நாலு கொக்காரையும் காணும். அந்தக் கதை எப்படியோ அங்கே இங்கே என்று மாறிப் போய் கடைசியா மகனிடம் போய் ஒரு சின்ன சண்டையாவது வந்துமுடியும்.

பாடையை அலங்காரமாக கட்டனும், பறைமேளம் நாலு கூட்டு பிடிக்கணும் என்று மூத்த மகன் சொல்லிக்கொண்டு இருக்க, பக்கத்தில இருந்து இளையமகள் சொல்லுவாள். வருத்தத்தில கிடக்கேக்கை ஒருக்காலும் வந்து பார்க்காதவன் இப்பவந்து எல்லாத்தையும் செய்திட்டு பேர் எடுத்துக்கொண்டு போகப்போகிறான். அந்த நேரத்தில் அவளுக்காக அவளது கணவன் குரல் கொடுத்துவர, டேய் நீர் வந்தான் வரத்தான்  இதில கதைக்கப்படாது. என்ர  அம்மாவுக்கு நான் செய்வன் நீயாரு கேட்க என்று மகன் கிளம்ப, அந்தநேரம் பார்த்து, அந்தாள் கேட்கும் படுக்கையில வச்சு மலம் சலம் எல்லாம் அள்ள நான் வேணும், மனுசியை தூக்கி குளிக்கவைக்க நான் வேணும், இப்ப நீ வந்து ... சொல்லிப்போட்டன் நீ வீட்டு வாசல்படிக்கு  வரக்கூடாது... முடிக்க முதலே மகன், ஓ அதுக்குத் தானே அந்தளவு காசையும் காணியையும் உனக்கு தந்து கட்டிவச்சது வேற என்னத்துக்கு "  சண்டை கிளம்ப எங்களுக்கு பொழுது போகும். சங்கடத்தோடு அந்த இடத்தைவிட்டு விலக முற்படுகையில்  "அத்து பொறுடா இப்ப இவங்கட வண்டவாளம் எல்லாம் வரும் கேட்டுவைப்போம் பின்னுக்கு உதவும்" என அகிலன் இழுத்து மறிப்பான்.

எத்தனை மரணங்கள். அதன் பின் எத்தனை நிகழ்வுகள். காலகாலமாக கதையாமல் இருந்தவர்களும், சந்திக்காமல் இருந்தவர்களும் கண்ணீரும் கம்பலையுமாக கட்டிப்பிடித்து ஒப்பாரி வைப்பார்கள். 'அக்காள்" என்ற ஒற்றை அழைப்பில் கரைந்து உருகுவார்கள்.  நேற்றுவரை முகம் பாராமல் இருந்தவள் மூக்கு துடைக்க தன் முந்தானையைக் கொடுப்பாள். தாயின் இறப்புக்கு கடைசிவரை அழாமல் இருந்துவிட்டு இறுதியாக பாடை சுற்றும் போது கதறி அழுத சின்னம்மாவிடம் பின்னொருநாளில் 'ஏன் உங்கள்  அம்மாவுக்கு கூட அழவில்லை" எனக் கேட்டபோது. அம்மா தானடா ஆனால் என்ர மனுசனை அந்த மனுசி படுத்திய பாட்டை நினைக்கையில், எந்த ஒரு மாமியும் சொல்லாத வசனத்தையல்லோ சொல்லி ஏசினது எப்படியடா அழ.. என்றபடி அழத்தொடங்கினார்.

பாடை கட்டுவது ஒரு கலை. கிராமத்துக்கு கிராமம் ஒவ்வொரு முறையில் கட்டுவார்கள். பாடைக்கு என்று பனைமரத்தில் சீவி எடுத்த இரண்டு சிராம்பு கிளாம்பாத வைர மரங்கள் (கம்புகள்)  குறைந்தது பத்தடி நீளத்தில் இருக்கும். இரண்டு கம்புகளையும் ஒன்றரை அடி அகலத்தில் ஒரு சாண் உயரத்தில் வைப்பார்கள். நன்றாக வளையக்கூடிய வாதநிவாரணி அல்லது இப்பிலுப்பை மரத்தில் இருந்து சிறிதும் பெரிதுமாக கிளைகளை வெட்டி எடுத்து, அதில் தெரிந்து எடுத்து இரண்டடி அகலத்தில் பண்ணிரண்டு கம்புகளை வெட்டுவார்கள். பாடைக் கம்பின் முன் பக்கத்தில் இரண்டும் பின் பக்கத்தில் இரண்டும் கட்டியபின் பாடைக் கம்பை திருப்புவார்கள். இப்போது கட்டிய நான்கு கம்புகளும் இரண்டு முனைகளில் நிலப்பக்கமாக இருக்கும் இப்போது மிகுதி இருக்கும் எட்டுக் கம்புகளையும் சமமாக இடைவெளிகளில் கட்டுவார்கள். பின் மீண்டும் பாடைக் கம்பை பழையநிலைக்கு மாற்ற, நடுவில் கட்டிய  எட்டுக் கம்புகளும் கீழேயும் கால் தலை மாடுகளுக்கான கம்புகள் நான்கும் மேலேயும் வந்திருக்கும். பின் வெட்டிவந்தவற்றில்  நன்றாக வளையக்கூடிய நான்கு கம்புகளை நான்கு மூலையிலும் கட்டி வளைத்து இரண்டு பக்கங்களிலும் இணைப்பார்கள். ஆடாமல் இருக்க அவற்றை சிறு சிறு கம்புகளால் இறுக்கி கட்டுவார்கள். "பெட்டி" என்றால் இந்த அளவுப் பரிணாமம்  கொஞ்சம் மாறும். நான்கு மூலையிலும் வாழைக் குட்டியும் இளநீரும் வாழைப்பழமும் கட்டுவார்கள்.

வெள்ளை  கட்டி முடிய பாடை அலங்கரிப்பு தொடங்கும். அதற்கிடையில் பன்னாங்கு பின்னிக் கொண்டுவந்து பாடையின் படுக்கைக்குள் வைத்துவிடுவார்கள். வாணிஸ் (பாடத்தாள்) தாளில் பூவும் வளைகோடுகளும் வெட்டி நான்கு குஞ்சமும்  செய்து நான்கு மூலையிலும் கட்டி பாடையின் நடுவில் ஒரு சின்னத்தடியை கூராக சீவி அதில் ஒரு பப்பாசிக் காயை குத்தி அதிலும் பூக்களும் குஞ்சமும் செய்து குத்திவிட பாடை அலங்கரிப்பு வேலை முடியும்.

சுண்ணப்பாட்டு முடிந்து தீபங்களை அணைத்துவிட்டு உருத்துக்கார பெண்கள் சிறுவர்கள் சுடலைக்கு வரமுடியாதவர்கள் எல்லோரும் மூன்று முறை சுற்றி வாய்க்கருசி போட்டதும் படை பந்தலுக்குள்  கொண்டுவரப்படும். அந்த பாடையின் அழகும் அதை தூக்கி வருகையில் ஏற்படும் சிறு அசைவும் மேளத்தின் ஓசையும் வேறு ஒரு சந்தர்ப்பமாக இருந்தால் எவ்வளவு தூரம் மனதை கொள்ளைகொள்ளும். ஒயில் நடையில் பெரிய  அன்னமொன்று ஒன்று இசைக்கு ஏற்ப அசைந்தபடி நீர் அலைகளை ஊடுருவி என்னை நோக்கி வருவது போலவே இருக்கும்.  ஒப்பாரிகளும், விம்மல்களும், கூடி நிற்பவர்களின் உரையாடல்களும் மிகுந்து நிற்க மேளத்தின் ஒலி உச்சபட்ச உயர்வைக் கொடுக்க பாடை உயரும். நகரத் தொடங்கும்.

எந்த செத்த வீட்டுக்குப் போனாலும் பாடை காவினால்தான் செத்த வீட்டுக்கே போன உணர்வு வரும். பாடை காவுதலை இறந்தவருக்கான ஒரு மரியாதையாக கூட கொண்டிருந்தோம். அதற்கென்றே சம உயரத்தில் நண்பர்கள் கூடி இருப்போம். ஆள்மாறி ஆள்மாறியும் சிலநேரம் பிடிவாதமாக சுடலைவரையும் காவிச்செல்வோம். வழிவழியே பாடை சென்றதற்கான அடையாளமாக வெட்டி ஒட்டிய வாணிஸ் தாள்களை கிளித்துப் போட்டுக்கொண்டும் செல்வோம். அதன் அர்த்தம் இந்தப் பாதையால்  அவ நிகழ்வு ஒன்று கடந்துள்ளது. மங்கள நிகழ்வுக்கு செல்பவர்கள் இந்த பாதையை தவிர்க்கவும் என்பதேயாகும்.

கண்கள் பேசும் செத்தவீடுகளையும், அன்றே காதல் உருவான செத்தவீடுகளையும் கூட காணலாம். இளம்பெண்களின் அழகைக் காண ஒன்றில் செத்தவீட்டுக்குப் போகணும் அல்லது அவர்கள் விடிய முத்தம் கூட்டும்போது போகணும் என்பார்கள் எங்கள் ஊரில். இதற்காகவே போன செத்தவீடுகளும் உண்டு. விழுந்து விழுந்து எல்லா வேலைகளையும் செய்துமுடிய, கடைசி நேரத்தில அவளோடு கல்லூரிகளிலோ பல்கலைக்கழகங்களிலோ கற்றவர்கள் வந்து சிரமமில்லாமல் அவளின் மனதை உருக்கி எடுத்து சென்றுவிட்ட சம்பவங்களும் நடந்துபோனதுமுண்டு.

ஒருவன் எவ்வளவு அநியாயம் செய்தவனாக இருக்கட்டும். மரணத்தின் பின் அவனை எதுவும் பேசமாட்டார்கள். செய்த ஓரிரு நல்ல செயல்களைப் பற்றி மட்டும் பேசுவார்கள். எப்போதாவது ஒருநாள் அவன் செய்த வினைகளுக்குதானே தானே அப்படி செத்துப்போனான் என்று பேசும் கணங்களில் என் சாவு எப்படி நிகழ்ந்துவிடப்போகிறது என யோசிப்பேன். 

ஊரின் நினைவுகள் கண்களில் நீர்கோக்க, இயல்பினைக் கடந்து கணணியைப் பார்த்தேன். கணனியின் திரை சலனமில்லாமல் இருண்டு கிடந்தது. மனதினைப்போல... எல்லாம் மறந்து  என் மரணம் இனி எப்படி நிகழ்ந்துவிடப்போகிறது என்ற ஆதங்கம் எழுந்து நிறையத்தொடங்கியது. கிரிகைகளோ மேள ஓசைகளோ பாடையோ இல்லாமல், இறந்தும் எட்டோ பத்தோ நாள்களின் பின் ஆக மிஞ்சிப் போனால் தேவாரத்தினை ரேடியோ ஒன்றில் போட்டுவிட்டு யாராவது ஒருசிலர் நிற்க,  மின் அடுப்பில் சிலநிமிடங்களில் எரிந்தழிந்து போய்விடுவேன் என்ற உணர்வு வர உடலினை ஒருமுறை குனிந்து பார்த்துக்கொண்டேன். 

"இப்படித்தானோ" என்று இரண்டாயிரங்களில் ஊரில் இருந்து எழுதிய என் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. 

நெஞ்சிலடித்து
ஓடிவந்தணைத்து ஒப்பாரிவைப்பர்
அப்புறமென்ன கொஞ்சம்
தள்ளியிருந்து
எப்படியாம் ..............!
செத்தவன் மீண்டும் செத்துப்போகும்படி
பித்துப்பிடித்த கதைகளை
வாய்கள் மெல்லும்
வெற்றிலை வரும்வரை .

பாடையிலிருந்து
ஐயர்,பந்தல் வரை பார்த்து .....பார்த்து
செய்தவர்கள்
அக்கம் பக்கம் பார்த்து
வேலியோடு ஒதுங்குவார்கள்
வரும்போது இருமிக்கொண்டு வந்து
உறுமிக்கொண்டு நிற்பார்கள் .
செத்தவனை நினைப்பார்களா ?

கட்டாடியும் மேளமும்
நிலத்திலிருக்க ஐயர் மட்டும்
கதிரையிலிருந்து காலாட்டியபடி
மூவரின் எண்ணவோட்டமும்
ஒரு முவாயிரம் தாண்டுமா
என்று தானிருக்கும் .

இடையிடையே
ஓரிரு குரல் ஓங்கியொலிக்கும்
எட்டிப்பார்த்தால்
கிட்டடிச்சொந்தமாயிருக்கும் .

அடிமனதில் ஆசையை
புதைத்தவள் மட்டும் எதோ
பிரமை பிடித்தவளாய்
அழவும் முடியாமல் .........
ஆற்றுப்படுத்தவும் முடியாமல் ...........

அடித்தகண்ணீர்க் கவிதையை அவள்
வீட்டுசுவரில் ஒட்டி
இனியவன் ஆத்மா சாந்தியடையும் என்று
கதைத்துக்கொண்டு
கூடித்திரிந்தவர்கள் வரவும்
பாடையில்வைத்து தூக்கவும்
சரியாய் இருக்கும்,
ஊரிக்காடு மட்டும் ஊர் திரண்ட 
ஊர்வலம் நீளும்.

முடிவில்
கை கால் கழுத்தில் போட்டதை
கவனமாக வேண்டிமடியில்
கட்டுவான் கொள்ளிவைத்தவன் .
பெரும் சுமை முடிந்ததாய்
பெருமுச்சுவிட்டபடி விலத்துவார்கள்
ஒவ்வொருவரையும் ஒவ்வொருவர் .
அப்புறம்
கொஞ்சநாள் மட்டும்
வீட்டில் அழுகையொலி கேட்கும்
அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக
சுருதி குறைந்துகொண்டு வரும் .

இப்படித்தானோ .........!
என் சாவுவீடும் நிகழும் .

நன்றி -பொங்குதமிழ் இணையம் 

4 comments:

 1. பழைய நினைவுகளை கிளறிவிட்டிர்கள் .நன்றி
  ///கண்கள் பேசும் செத்தவீடுகளையும், அன்றே காதல் உருவான செத்தவீடுகளையும் கூட காணலாம். இளம்பெண்களின் அழகைக் காண ஒன்றில் செத்தவீட்டுக்குப் போகணும் அல்லது அவர்கள் விடிய முத்தம் கூட்டும்போது போகணும் என்பார்கள் எங்கள் ஊரில். இதற்காகவே போன செத்தவீடுகளும் உண்டு. விழுந்து விழுந்து எல்லா வேலைகளையும் செய்துமுடிய, கடைசி நேரத்தில அவளோடு கல்லூரிகளிலோ பல்கலைக்கழகங்களிலோ கற்றவர்கள் வந்து சிரமமில்லாமல் அவளின் மனதை உருக்கி எடுத்து சென்றுவிட்ட சம்பவங்களும் நடந்துபோனதுமுண்டு.//
  உண்மைதான் நண்பரே .எனக்காவும் ,நண்பர்களுக்காகவும் இப்படி போனதுண்டு .செத்தவீட்டுக்கு போனால் கேள்விகள்கள் அதிகம் வராதுதானே .ஊரிக்காடு ,கொம்மாந்துறை ,கம்பர்மலை கால்கள் சுற்றிய இடங்கள் அல்லவா

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் சுற்றிய இடங்களா ? பக்கத்தில வந்திட்டீங்க வாங்க பேசுவோம்
   நன்றியும் அன்பும் தலைவா

   Delete
 2. அருமையான சில விடலைச்செயலை நினைக்க வைக்கும் முன்பாகம்! கவிதை சிந்திக்க வைக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. வரவுக்கும் கருத்திற்கும்
   நன்றியும் அன்பும்
   பாஸ்.

   Delete