Friday, 27 April 2012

ஆசை என்னையும் விடவில்லையே.............

ஒருவாறு கிடைச்ச நேரத்தில நானும் ஒரு பதிவுப்பக்கத்தை   தொடங்குவம் என்று வெளிக்கிட்டு இப்பதான் முடிச்சன் .....இனி எப்ப எப்ப நேரம்கிடைக்குதோ அப்பப்ப ஒரு பதிவை போட்டுத்தள்ளுவன் பாருங்கோ ......நீங்கள் எப்படியும் வாசித்து ஒரு குட்டோ இல்லை ,தட்டோ(அந்த தட்டு இல்லை பாருங்கோ இது வேற தட்டு ) வைச்சுட்டு போனியள் எண்டால் நானும் கொஞ்சம் சந்தோசமா இன்னும் நேரத்தை இதுக்கை விடுவன்.சரி சரி வாங்கோ ......

தேர்தலும் நாமும் .................

கடந்த இரண்டு மூன்று கிழமைகளாக நான் வசிக்கும்இந்த தேசத்தின் தலைவியையை நிர்ணயிக்கும் சக்திக்கான (அப்படியென்று பஸ்சில வாற எங்கட அரசியல் அவதானிகள் சொன்னார்கள் )தெரிவைப்பற்றியே எங்கும் கதையாய் இருந்தது .அதிலும் நம்மவர்கள், அவர்வந்தால் இதைத்தருவார், இவர்வந்தால் அதை நிறுத்துவார் என எதிர்வுகூறல்கள் மிகப்பலமாக இருத்தது இந்த இடத்தில் எம்மவரை பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகணும் .ஒரு பத்து அல்லது பதினைந்து பேரில் இருவர் எப்படியும் உள்ள இணையத்தளம் எல்லாம் அலசி ஆராய்ந்து அரசியல்,பொது அறிவை ?வளர்த்து கொண்டவர்களாக தம்மை காட்டிக்கொள்வார்கள் .கூட்டமா எதைப்பற்றி கதைத்தாலும், தம்மோடு தொடர்பில்லாது இருந்தாலும் நைசாக உள்வந்து கையை சொடுத்து சவா தம்பி (சவா பிரஞ்ச்,தம்பி தமிழ் கவனத்தில் கொள்க )என்று ஆரம்பித்தால் உனக்கு என்னதெரியும் நான் இருபது வருடமாக இருக்கிறன், என முடிக்கும் போது,யாராவது ஒருத்தன் கேட்பான், அண்ணை நீங்கள் குசினியோ செய்யிறியள் ?என .அவரும் சுற்றிபார்த்து அந்த வேக்கையிக்கை யாரும் நிப்பானா ?நான் இப்பவும் கழுவுற இடம்தான் என முடிப்பார் .....இப்ப அவரால் பாதிக்கப்பட்ட மற்றவன் தொடங்குவான் இருபது வருசமா கழுவுறவரின் கதையை பார்றா........என ......அதிலும் இணையத்தை அலசும் இருவருக்கும் கொளுவல் ஏதாவது வந்தால் ........அதையெல்லாம் தனியாக ஒரு பதிவில போடுறன் இப்ப விடயத்துக்கு வருவம் .
                                                                           
பொதுவாக தேர்தல் காலங்களில் ஒருவிதமான உற்சாகம் மக்களிடையே பரவியிருக்கும். வீதிகள், சுவர்கள், மரங்கள் எல்லாம் வேட்பாளரின் பிரதிநிதியாய் மாறி அவரின் அடையாளங்களை சுமந்து நிற்கும் .எங்களின் ஊரில நடந்த தேர்தல்களை நினைத்து, நானும் வீதிகளையும், மதில்களையும் ஒன்றுவிடாமல் பார்த்தேன் எங்காவது ஒரு பிரச்சார ஒட்டி இருக்கிறதா என்று ஒன்றுகூட இடையூறுகளை ஏற்படுத்துமிடத்தில் எதுவும் இல்லை .இங்கா தேர்தல் நடக்கிறது என யோசிக்கவைக்கும் படி அவரவர் வேலைகளில் அவரவர் .ஊரில தேர்தல் காலத்தில் நாங்கள் வேலைவெட்டிகளை எல்லாம் விட்டு விட்டு ஒரு சூறாவளிபிரச்சாரம் செய்தநினைவுதான் வந்தது .
                                               
இரவு ஒன்பது மணிக்கு தொடங்கும் எங்கள்
அணியின் நடவெடிக்கைகள் .பிரச்சார ஒட்டியுடன் போலிஸ் பிடித்தால் தடுப்புதான் .இருந்தாலும், நாங்கள் ஒரு தில்லுடன் தொடங்குவோம் ஒரு நாற்பது லீற்றர் கலனில் பசை கரைத்து ஒருவன் சைக்கிளில் கொண்டு வர ,இன்னொருவன் தும்பும் வாளியுமாக ஒரு பத்துபேர் ஆரம்பிப்போம் .வீடு வாசல், கடைகண்ணி, வீதி முடக்கு என எங்கும் ஒட்டித்தள்ளுவோம்.அப்ப பிரச்சார ஒட்டி தடைசெய்யப்பட்டு இருந்தது .நாங்கள் ஒருபக்கத்தால் ஒட்டிவர சிலசமயம் போலிஸ் ஓயில் ஊத்தி விடுவாங்கள் .அதைமறுநாள் பார்க்கும் போது வரும் கோபமிருக்கே அது அன்று இரவு தெரியும் ....உயர இடங்களில் இலக்குவைத்து ஓட்டிவிடுவோம் .ஒரு கொத்து ரொட்டிக்கும், கொக்ககோலா வுக்கும் தான் எங்களின் தேர்தல் பணிகள் நடைபெற்றது என்பதையும் சொல்லியே ஆகவேண்டும் .ஒரு தடவை எமது பகுதியின் வேட்பாளரின் பிரதான ஆதரவாளரின் வீட்டில் ஒரு விசேடம் ,நான்கு, ஐந்து நாட்கள் இரவில் அவரின் வீட்டு பலகாரம் தான் உணவு எமக்கு .இப்படித்தான் ஒருதடவை கிராய் பிள்ளையார் கோவில் பக்கத்தில் பிரசார ஒட்டிகளை ஒட்டிவிட்டு வீதியின் ஓரமாக கொண்டுசென்ற பலகாரங்களை சாப்பிட தொடங்கிய போது ,தடி பொல்லுகளுடன் அந்த இடத்தின் கிழடுகட்டை எல்லாம் வந்து சத்தம் போட,அவர்களுக்கு விளக்கம் சொல்லி நம்பாமல் ,பின் ஒரு சைக்கிளை கொடுத்து அடுத்தநாள் போய் வேண்டி வந்தோம். முதல்நாள் அந்த பகுதியில் ஒரு மாடு களவு போனதாகவும் அந்த கள்ளர் தான் என்று எங்களை பிடித்ததாக சொன்னார்கள் .இன்னொருநாள் தொண்டைமானாறு முற்சந்தியில் ஒட்டிக்கொண்டிருக்கும் போது போலிஸின் வாகனம் வருவதை கண்டு ,(போலிஸின் வாகனத்தின் முகப்பு வெளிச்சம் ஒரு விதமாக பரவி வரும் அதை வைத்து அனுமானிப்போம் .)பக்கத்து வீட்டு மதில் பாய்ந்து பூக்கண்டுக்குள் இருக்க வீட்டிக்காரர் தம்பி உள்ளவாரும் நான் பார்த்துக்கொண்டு தான் இருந்தனான் நீங்கள் ஒட்டுறதை ............என கூறி அழைத்து தேநீர் தந்து அனுப்பினார்கள் .ஓடி கலைந்து பின் ஒன்றாகி ,ஒருமுறை வாகன வெளிச்சத்தை கண்டு போலிஸின் வாகனம் என நினைத்து ஓடி சைக்கிளை கொண்டுபோய் போட்டிருந்த பானங்குற்றியில் இடித்து தூக்கி ஏறிந்து அப்படியே படுத்திருக்க, லோறிகடந்து போனது வெளிச்சத்துடன் .இடக்குமுடக்கான இடத்தில் வெளிசத்துடன் வாகனம் வந்தால் ஓரளவு அனுமானிப்பும் போலிஸின்வாகனம் தான் என்று வந்தால் போதும் எதோ அவசரத்தில் இருப்பதை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு ஒன்னுக்கு அடிப்பதுபோல ஒரு நடிப்பு கொடுப்போம் ...வாறவனும் யாரோ குடிகாரபயலுகள் என கடந்து போவார்கள் .


தேர்தல் அன்று இருக்கே ,எப்படி சொல்வது அந்த சந்தோசத்தை .சாவடிக்குள் கண்காணிக நம்மாளை அனுப்பிவிட்டு நாங்கள் வெளியாலை இருந்து நாம ஆட்களை அனுப்பிக்கொண்டிருப்போம். பொதுவாக எமது பிரதேச சாவடிக்குள் கள்ளவாக்கை ஆரம்பிக்கும் பொறுப்பு என்மீதே விழும் ,ஒரு மொக்குதுணிவுடன் உள்ளே போக படிப்பிச்ச வாத்தி நக்கலாய், பேரை பார்த்துவிட்டு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......... இப்ப பேரும் மாத்திவிட்டான்கள் என சொல்லி சிரிப்பார் அது காணுமே, ஒரு பிள்ளைக்கு அவளுக்கு அப்ப ஒருஇருபது வயதுதான் இருக்கும் அவளுக்கு கொடுத்த வாக்குசீட்டின் பெயர் வைரி.அவளும் வாக்களித்து தான் வந்தாள்.இன்னொரு நண்பன் மிகவேகமாக வாக்குசீட்டை வேண்டிக்கொண்டு போனவன் சிரித்துக்கொண்டு வந்தான் என்னடா என்றால் ,சீட்டை கொடுக்க அங்கிருந்த கண்காணிப்பாளர் தம்பி இது D வோட் என்றிருக்கிறார் ,இவனும் அதுக்கென்ன தாங்கோ போடுறன் என்று சொல்ல கண்காணிப்பாளர் தம்பி D  வோட் என்றால் ஆள் செத்துப்போச்சு (death)என்று அர்த்தம் என சொல்ல , இவன் தலையை சொரிந்து கொண்டு நிற்க, அந்த கண்காணிப்பாளரே கலைத்து விட்டார் .இன்னொரு நண்பன் எழு தடவைகள் வாக்களித்து பின் மீண்டும் போக, தம்பி இனி வராதே என கண்காணிப்பு உறுப்பினர்கள் சொல்லி அனுப்பினார்கள் .எவ்வளவு கவலைப்பட்டான் அந்த நண்பன் .எங்களுக்கு எத்தனை மிரட்டல்கள் ,நாங்கள் மற்றவர்களை விரட்டிய விரட்டல்கள் என தேர்தல் காலம் ஒரு களையாகதான் போனது .


இன்று, இருப்பினை தக்கவைத்துக்கொள்ள, எதனையும் செய்யும் அந்த சுயனலவாதிகளுகாக அறிந்தோ அறியாமலோ நாங்களும் துணை நின்றிருக்கிறோம் என்பதனை நினைக்க, இன்னும் எம் மக்களின் தலைவிதிகளில் அவர்களின் கையெழுத்து இடப்படுகிறது என்பதனை நினைக்க ,கனக்கிறது மனது செய்வதறியாது .லட்சக்கணக்கான உயிரழிவுகள் ,உணர்வழிவுகள் ஏற்படுத்திய,மனிதம் மறந்த பேரினவாத அரசுடன் கைகோர்த்து தம் இருப்பை தக்கவைக்கும் இந்த கடைநிலை மனிதர்களின் அரசியல் வாழ்வினை இனியாவது நாம் புரிந்து செயற்படவேண்டும் .


இந்த பரந்த தேசத்தின் தேர்தல்களை பார்க்கும் போதுதான் நாங்கள் வாக்களிப்பை எப்பளவு மோசமாக நடத்தியிருக்கிறோம் என புரிகிறது .தவறான தேர்ந்தெடுப்புக்களை எவ்வளவு லாவகமாக செய்திருக்கிறோம் . வெறும் முக அறிமுகத்துக்காகவும் ,பொழுதுபோக்குக்காகவும் ,கொஞ்சம் எம் சுய தம்பட்டத்துக்காகவும் எவ்வாறான பாரிய தவறினை செய்திருக்கிறோம்.இனிவரும் காலங்களிலாவது இந்த நிலை மாற அல்லது மாற்ற உழைப்போம்.                                         

10 comments:

 1. வாய்யா ஏறி வாயா...?? பதிவுலகத்துல நல்லா இரு...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பனே, இப்பவும் பஸ்சில தானா வேலை ?

   Delete
 2. யோவ்...செகுரிட்டி செக்க எடுய்யா...முதல்ல...

  ReplyDelete
 3. வணக்கம் இடுகாட்டான்.!
  முதலில் வாழ்த்துக்கள் பிளாக்கில் வலம் வருவதற்கு..!! நல்லதோர் பதிவு அதிலும் உங்கள் அவதானிப்பு அருமை தொடருங்கள் தொடர்கிறோம்..

  திரட்டிகளில் இணைகலாமே..?. இல்லையென்றால் ஆளில்லாத டீக்கடையில் கோப்பி ஆத்தின மாதிரித்தான் இருக்கும்.;-)

  ReplyDelete
 4. வணக்கம் இ.காட்டான்

  ReplyDelete
 5. பதிவுலகில் பிரவேசித்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்...... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பதிவுலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கின்றோம்.

  வாழ்த்துக்கள் நண்பா.

  தங்கள் வருகை நல் வரவாகட்டும்,

  ReplyDelete