Monday, 30 July 2012

காலங்கள் மீது பயணிக்கும் காதல் ..


அதிஉச்ச காத்திருப்பொன்றை
வழங்கிவிட்டிருந்தது 
காலம்,இந்த காதலின் மீது !

எத்தனை மழைப்பொழுதுகள்
கடந்தனவென்று நினைவிலில்லை!

பார்வைகளாலும் சிரிப்புக்களாலும் 
சின்னதலையசைப்புக்களாலும்
பகல்கள் கடந்தன ................
அவற்றின் மீதான நினைவுகளால் 
இரவுகள் இறந்தன ............

நிழல்தந்த ஆலமரம் 
நிறையதடவை இலையுருத்தி 
துளிர்த்து நின்றது !!

பகிர்தலுக்கான காத்திருப்பின் 
கணங்களில் நிகழும் 
பதற்றத்தை,தயக்கத்தை
தளம்பல்களை,புலம்பல்களை 
புரிந்துகொள்ளாமல் 
யாராவது வந்துவிடுவார்கள் அல்லது 
மிக மிக தாமதமாய் நீ வருவாய்  ............

ஊரடங்கு குண்டுவெடிப்பு 
சுற்றிவளைப்பு தலையாட்டல் 
என்றெல்லாம் அந்தரித்த காலத்திலும் 
பின்னான பேச்சுகாலங்களிலும் 
பேசுதல் என்பதுதாண்டி சஞ்சரித்திருந்தது நேசிப்பு.

உலவியொன்றின் மையப்புள்ளியை 
சுற்றிவந்தோம்  விலகாமலும் நெருங்காமலும்
என்மீதான உனது கரிசனைகள்
மிக மிக அதிகரித்திருந்தன 
கனிந்த பழமொன்று காம்பினை இழக்கப்போகும் 
கணங்களை ஒத்திருந்தன .......... 

காலநீட்சியின் வியூகங்கள் வியாபிக்க......
உடைப்பதற்கான சாத்தியங்கள் இருந்தும்,
சாத்தியங்கள் பற்றி யோசிக்கதொடங்கிய 
கணமொன்றில் தற்கொலை செய்துகொண்டது 
பகிர்தல், இருவருக்குமிடையில் ...........................

அதிஉச்ச காத்திருப்பொன்றை
வழங்கிவிட்டமைக்காக 
நிராதரவான காலமும் அன்பும் 
பயணிக்கதொடங்கின 
இணைந்து  .................................!!11 comments:

 1. மிக நெருக்கமான காதல் போர்க்காலத்தில் இடப்பெயர்வால் அதுவும் இடம்மாறியதாய் புரிந்துகொள்கிறேன் சரியா ?!

  ReplyDelete
 2. கவிதைக்காக எழுதப்பட்டதே தவிர காதல் வயப்பட்டு இருந்ததில்லை .....
  இன்னும் தாம் காதலிப்பதை வெளிப்படையாக சொல்லிக்கொள்ளாத நிலையொன்றினை வைத்து எழுதினேன்
  நன்றிகள் வரவுக்கும் பகிர்வுக்கும்

  ReplyDelete
 3. பார்வைகளாலும் சிரிப்புக்களாலும்
  சின்னதலையசைப்புக்களாலும்
  பகல்கள் கடந்தன ................
  அவற்றின் மீதான நினைவுகளால்
  இரவுகள் இறந்தன ............//

  காதல் வயப்பட்டவர்களின்னிலையை
  மிக அழகாகச் சொல்லிப்போகும் வரிகள்
  (தங்கள் கூற்றுப்படி காதல் வயப்படாமலே
  இத்தனை நேர்த்தியாகச் சொல்லிப்போனதைக்
  கண்டு வியந்து போகிறேன்)
  மன்ம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வுடன் வரவேற்கிறேன் திரு ரமணி.
   உங்களின் வரவுக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி.
   காத்திருக்கிறேன் உங்களின் விமர்சனங்களுக்காக .......

   Delete
 4. காதலில்தான் எத்தனை வகைகள், கவிதை அருமையாக சொல்லி செல்கிறது வலியுடன்....!

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு.நாஞ்சில் மனோ,ஒவ்வொரு காதலும் புதிதுதான்.
   அவற்றின் வலிகளும் அழகான வலிகள் தானே!!
   வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி

   Delete
 5. காத்திருப்பும் கைவிடுதலும் காதலின் காத்திருப்பில் ஒரு நிலையாகிப்போன யுத்த அவலம் என்று நினைக்கின்றேன் கவிதையில்!ம்ம்

  ReplyDelete
  Replies
  1. வாழ்வில் இழப்புக்களும் பிரிவுகளும் எங்களுக்கு வரமாகிபோனவை.
   காதல் ஒரு வசந்தகாலம்.............
   ஆனால் .................காலங்கள் மாறுகின்றன,
   காலமாற்றத்தை புறச்சூழல் தீர்மானிக்கிறது .

   Delete
 6. வித்தியாசமான வரிகள்... பாராட்டுக்கள்...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
  Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_7.html) சென்று பார்க்கவும்...

  நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

  ReplyDelete
  Replies
  1. நன்றி திண்டுக்கல் தனபாலன் ,நிறையத்தடவைகள் உங்களின் தளத்துக்கு வந்திருக்கிறேன்.
   மிகவும் சந்தோசமாக உள்ளது,ஒரு ஆரம்பகட்ட பதிவரை அரவணைக்கும் உங்களின் பெருந்தன்மைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
   நிச்சயம் இணைந்திருப்பேன் ,நன்றி வலைச்சரத்தில் இணைத்தமைக்கு .

   Delete