Thursday 30 August 2012

மானம் காக்கும் நாய்கள் (உருவகக்கதை )

                           சந்தியில் இருந்து மூன்றாவது வீடுதான் அதனுடைய வசிப்பிடம்.என்றுமே அது தான் அங்கே  இருப்பதாக நினைப்பதில்லை. தன்னுடைய வீட்டிலதான் மற்றவர்கள் இருப்பதாக  எண்ணியிருந்தது. வீட்டில் அங்கே இங்கே என்று திரியும்போது எப்பவாவது கண்ணாடியில் தன் முழு உருவத்தையும் கண்டுவிட்டால் காணும். அன்று முழுக்க அந்த தெருவெல்லாம் ஒரே களோபரம்தான். சிலுப்பிக்கொண்டு திரிவதிலும், சின்ன சின்ன சத்தங்களைகொடுத்தும்,திரும்பிப்பார்த்தும், மற்றவர்களை ஏங்கவைப்பதில் அளவில்லாத சந்தோசத்தை அடைந்துகொள்ளும்.


                                         
     உண்மையில் அது அழகுதான்.இல்லை அழகிதான். விரல்களுக்கு ஏற்ற நகங்களும்,நெற்றியில் சின்ன பொட்டும்,கொஞ்சும் கண்களும்,மொழு மொழு என்றிருக்கும் உடலமைப்பும்,வளர்ந்து மிகமிருதுவாக பார்த்தாலே தடவத்தோன்றும்  மினுங்கும் கூந்தலும் பார்ப்போர் கண்களை கொள்ளையடிக்கும்.நடக்கையில் மெல்லியதாய் ஏறி இறங்கும் தோள்களை, அடிமேல் அடிவைத்து மெதுவாய் மென்மையாய் வைக்கும் பாதங்களை வர்ணிக்க இனித்தான் வார்த்தைகள் கண்டு பிடிக்கவேண்டும். அப்படியொரு அழகி.மட்டுமில்லாமல் வீட்டிலும் எலோருக்கும் செல்லம் வேறு,அப்படிப்பட அழகிக்கு கர்வம் இருந்துதானே ஆகும். திமிர்கலந்த கர்வத்துடன் தெருவில் நடக்கையில்,அழகியை  பின்னால் தொடர்ந்து  அந்ததெருவின் வாலிப அழகன்கள் எல்லோரும் சண்டையிட்டுக்கொண்டு போவார்கள்.சில சமயங்களில் மற்ற மற்ற இடங்களில் இருந்தும் காற்றில் கடத்தப்பட செய்தியால் சிலபலபேர் வந்து பெரும் சண்டைகள் மூண்டு தெருவே அல்லகொள்ளப்படுவதுமுண்டு. 
                                                             இப்படியாக அழகியை அடைவதற்காக கடும் போட்டிகள் நடந்தாலும்,அழகியின் மனமோ தெருமுனையில் எப்பவும் இருக்கும் வேலைவெட்டிக்கு போகாத,மற்றவர்களால் பொறுக்கி என்று அழைக்கப்படும்,திடிரென எங்கிருந்தோ வந்து குடியேறிய  அந்த கருப்பனை தான் பிடித்திருந்தது.கழுத்தில் ஒரு வெள்ளி சங்கிலியை போட்டிருக்கும் பார்க்கவே சகிக்காத அவனிடத்தில் என்னதான் கண்டதோ தெரியவில்லை.அவனைக்கண்டால் காணும் அழகியின் சர்வமும் ஒடுங்கிவிடும்.எத்தனையோ பேர் எத்தனையோ தடவைகள் அவனைப்பற்றி சொல்லியும்,அவனின் ஒழுக்ககேடுகளை புட்டுபுட்டு வைத்தும்,அழகி நம்பவே இல்லை.அவன் மீதான பொறாமையால் சொல்லுவதாக நினைத்து அவனை நினைத்தே அந்த தெருவினில் நடை போடுவாள்.அழகியின் உளக்கிடக்கையை உணர்ந்துகொண்ட கருப்பன் கண்டும் காணாதது போல இருந்துகொண்டு மற்றவர்களை வம்பிழுத்தும்,வயது மூத்தவர்களை கிண்டலடித்தும், தன்னைவிட பலம்குறைந்தவர்களை கலைத்தும் அடித்தும் தன் ஹீரோயிசத்தை வெளிகாட்டி அழகியை இன்னும் இன்னும் ஏங்க வைத்தான்.அழகியின் மனதில் கருப்பனுடன்  இணைந்தவாழ்வில் கிடைக்கப்போகும் சந்தோசத்தை,அது வாழ்நாள் முழுவது தொடர,எப்படியெல்லாம் மற்றவர்கள் பொறாமைப்படும் படியாக வாழ போகிறேன் என்பது போன்ற கற்பனைகளே மிகுந்திருந்தது.
                                         சந்தர்ப்பத்துக்கு காத்திருந்த கருப்பனுக்கும் அன்றைய சனசந்தடியற்ற அந்திப்பொழுது வாய்ப்பாக அமைந்துவிட்டது.அழகிக்கோ பெரு மகிழ்ச்சி.தான் நினைத்தவனே தன் வாழ்க்கை துணையாக கிடைத்திருப்பதையிட்டு.சந்தோசமாக தன்னை முழுதும் கொடுத்தாள்.திமிருடன் திரிந்த அவளுக்கு இப்போது அளவிடமுடியாத பெருமையும் வந்துவிட்டது.அழகியின் நடமாட்டங்களை அவதானித்த மற்றவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.கேட்டும் கேளாதுபோல அடிக்கடி கருப்பனை தேடி சந்தித்துவந்தாள் அழகி. நாளடைவில் கருப்பனின் வாரிசு அவளிடம் வளரத்தொடங்கியது.மிகுந்த சந்தோசத்துடன் கருப்பனிடம் ஓடினாள் அழகி.அங்கே கருப்பன் இருந்துக்கான எந்தொரு அடையாளங்களும் காணப்படவில்லை.திகைத்த அழகி  தான் மோசம் போனதை உணர்ந்துகொண்டாள்.தலையை தொங்க போட்டு வந்தவளை,நரம்பில்லாத நாக்குகளால் கடபடி பழித்தனர் மற்றவர்கள்.அழுதுகொண்டு வீட்டுக்கு ஓடினாள். வீட்டில் அவளின் தோற்றம் மாரயு இருப்பதை அவதானித்த வீட்டில இருந்தவர்கள்,கண்ட கண்ட இடத்தில திரிந்த உனக்கு இங்கை இனி இருப்பிடம் கிடையாது என அடித்து கலைத்தனர்.உறவுகள் வெறுக்க,யாருமற்ற  அனாதரவான நிலையில் என்னசெய்வது  எனத்தெரியாமல் கால்போனவழி நடக்கத்தொடங்கினாள்,கண்போனவழி நடந்த அழகி .

                          மிகவும் அலங்கோலமான நிலையில் இருந்த அழகி அடிக்கடி தன் முந்தைய வாழ்வை நினைத்து கலங்குவாள்.நாட்களின் நகர்வில் வழிகண்டு யாருக்கும் தெரியாமல் பெற்றெடுத்தாள் இரண்டு மகவுகளை.அப்பன் பெயர் தெரியாத பிள்ளைகள் என்றும்,அவளை நடத்தை கூடாதவள் என்றும் இந்த உறவுகள் திட்டப்போகிறதே என்ற அச்சத்தில் என்னசெய்வது என யோசித்தவள்,ஒரு முடிவுடன் குழி தோண்ட தொடங்கினாள் மண்ணில் உயிருடன் தன மகவுகளை புதைப்பைதற்கு.

படங்கள் ;நன்றி இணையம்
#தனிப்பட யாரையும் சுட்டுவதற்காக அல்ல#

22 comments:

  1. வணக்கம் பாஸ்..
    இது உருவக கதையா? இல்லே யாருக்காச்சும் எழுதப்பட்ட உள்குத்தா?

    ReplyDelete
    Replies
    1. நண்பனே மன்னிக்க,இணையம் செய்த தவறால் உங்களின் கருத்திடலை இப்போதுதான் பார்க்கமுடிந்தது.
      உள்குத்துதான் பாஸ் சமூகத்துக்கு, தனிப்பட யாருக்கும் இல்லை பாஸ்

      Delete
  2. அருமையாக இருக்கிறது.
    நாய் போல் மனிதர்களும்
    மனிதர்கள் போல் நாய்களும்....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா,உங்களின் கருத்திடல் என்னை இன்னும் ஊக்கப்படுத்துகிறது. நன்றி வரவுக்கும்,கருத்துப்பகிர்வுக்கும்

      Delete
  3. அழகிக்குச் சவுக்கடி கொடுப்பதை, நாயின் மூலம் உருவகித்திருக்கிறீங்க.
    ரசித்தேன் நண்பா

    ReplyDelete
  4. நான் காமெடிக்கு கமெண்ட் போட்டேன். நீங்க சீரியஸ்ஸா நினைச்சிட்டீங்க போல இருக்கே

    ReplyDelete
    Replies
    1. என்ன பாஸ் இப்படி கேட்டுட்டிங்க .......அது எனது கவக்குறைவே பாஸ்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தடைசெய்யப்பட்ட இடத்தில் வந்திருந்தது உங்களின் கருத்து.இப்பதான் பார்த்தேன் மன்னிக்க மன்னிக்க .மனதில் வைக்காமல் தொடர்ந்து வருக

      Delete
  5. சமூகத்தில் சிலரின் நிலையும் இந்த வைரவர் வாகணம் போலத்தான் !ம்ம் கூடாத இடத்தில் கூடினால் வருவது தன் வாரிசுக்கு மட்டும் இல்லை தனக்கும் தான்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா,எங்களின் சமூதாயம் போய்க்கொண்டிருக்கும் வழி தரும் வலி இது .........................

      Delete
  6. உருவகம் காலச்சுழ்நிலையைச் சுட்டி நிற்கின்றது! கதை மிகவும் ரசித்தேன்!யதார்த்தம் சொல்லும் நிலை!ம்ம்

    ReplyDelete
  7. இது கதையல்ல...நிஜ நிகழ்வின் தொகுப்பு என்பதை உணர்ந்து கொண்டேன்...நிஜம் வலிக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாம்ஸ் நன்றி வரவுக்கு.
      உண்மைதான் எங்களின் வாழ்வு இப்படியாக தான் மாறிக்கொண்டு அல்லது மற்றப்படுக்கொண்டு இருக்கிறது..
      நன்றி கருத்திடலுக்கு.

      Delete
  8. மனைத வாழ்வில் மிகவும் பொருந்தும் கதை........
    வர்ணிப்பு மிக அழகு

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பனே ,வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்

      Delete
  9. கதை ஆரம்பத்தில் இருந்து படிக்கும்போது ஆனந்தத்துடன் படித்துக்கொண்டே வரும்போது எச்சரிக்கை ஒலிகளும் குறிப்புகளும் அழகியை அதன் மனதை மாற்ற இயலாது என்பதை அது கருப்பன் மேல் வைத்திருந்த திடமான நம்பிக்கையை நமக்கு உணர்த்தியது....

    தான் அழகு என்பதில் தொடங்கி தான் ஒருத்தர் வீட்டில் இருக்கிறோம் என்று நினைத்தால் அது நம் தரத்தை குறைக்கும் என்று நினைத்தோ என்னவோ தன் வீட்டில் அனைவரும் இருக்கிறார் என்ற இறுமாப்போடு சுத்துகிறது என்று படித்தபோதும் அழகியை பற்றிய வர்ணனையும் அழகியின் அன்பைப்பெற அக்கம்பக்கம் இருக்கும் ஹீரோஸ் முயற்சிக்கும்போது யாருக்கும் சிக்காமல் தன் அழகு பற்றிய கர்வத்துடனும் கருப்பன் மீதான நேசத்துடனும் வளையவருவதை படித்தபோது படைப்பாளியின் ரசனையை ரசிக்கமுடிந்தது...

    என்ன தான் அழகு என்றாலும் மனம் போன போக்கில் சுற்றித்திரியாமல் தான் நேசித்த ஒருவனிடம் மட்டுமே தன்னை ஒப்படைத்த அந்த உன்னதத்தை போற்றத் தோன்றியது....

    கருப்பனைப்பற்றி அக்கம்பக்கத்தினர் செய்த எச்சரிக்கையை கொஞ்சம் நிதானித்து கேட்டிருக்கலாம்.. அதன் வாழ்க்கை சீர் கெடாமல் இருந்திருக்கும்...ஹூம்...

    கருப்பன் தனக்கே உரிய கெட்ட எண்ணத்துடன் அழகியை வளைக்க செய்த சாகசங்களும் வார்த்தை ஜாலங்களும் அழகியை மனதை பறிகொடுக்க வைத்துவிட்டது. அழகியும் என்ன செய்வாள் பாவம்.. நல்லவன் என்றே நம்பி தன்னை ஒப்படைத்தாள்...

    கெட்டவன் என்றும் கெட்ட எண்ணத்துடன் தானே வளைய வருவான். வளைக்க துடிப்பான்.. வளைத்து தான் எதிர்ப்பார்த்ததை அடைந்ததும் சிட்டாய் பறந்து மறைந்து விட்டானே...

    அழகியின் அழகும் போய் அதன் கற்பும் போய் இதுநாள் வரை பெற்ற நல்ல வாழ்க்கையும் போய் எல்லாவற்றையும் ஒரே க்‌ஷணத்தில் இழந்ததே கருப்பனுக்காக.. அதை நினைத்து பரிதாபப்படும் அதே நேரத்தில்....

    தன் மானத்தை காக்க நான் பெற்ற மகவுகளை உயிருடன் புதைக்கும் அதன் நெஞ்சுறுதியை பார்த்து அதிர்கிறது மனம்....

    மனிதர்களில் தான் இப்படி துரோகித்து வஞ்சித்து ஏமாற்றி ஓடிப்போவோரும் அதனால் வஞ்சிக்கப்பட்டவர் தலைகுனிந்து சமுதாயத்தின் முன் தலைகுனிந்து கெட்ட பெயருடன் உயிரை மாய்த்துக்கொள்வோரை கண்டிருக்கிறேன்....

    சமுதாயத்திற்கு ஒரு சாட்டையடி இந்த கதை....

    ஏமாற்றி வஞ்சித்து துரோகிப்போருக்கு ஒரு நெற்றியடி இந்த கதை...

    தெளிந்த நடை... அருமையான கருத்து அடங்கிய கதை.... வாசிப்போர் மனதை கனக்கவைக்கும் கதைக்கரு....

    அன்பு வாழ்த்துகள் நெற்கொழுதாசன்... தங்கள் பெயர்... தங்களின் வலைப்பூவின் பெயர் “ இன்னும் இருக்கிறேன் “ கதை, கதைக்கரு எல்லாமே மிக வித்தியாசமாக அருமையாக இருக்கிறதுப்பா....

    அன்பு வாழ்த்துகள் மேலும் தொடரட்டும்....

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சந்தோசமாக உள்ளது.ஒரு நல்ல ஆழ்ந்தவாசிப்பின் தன்மையை உங்களிடம் கண்டு கொள்கிறேன்.
      நன்றி மஞ்சுபாஷிணி.எனது ஊருடன் என் பெயரையும் இணைத்தே புனைபெயரை வைத்துள்ளேன்............
      நன்றி வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்

      Delete
  10. உருவகம் மிக மிக அருமை. மேலும் தொடரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா,உங்களின் வாழ்த்துக்கள் என் இருத்தலை இன்னும் ஊக்குவிக்கும்.

      Delete
  11. அருமையான கதை. எளிமையான எழுத்து நடையும் யதார்தமான வர்ணனைகளும். ஒரு ஆழமான விசயத்தைத் தொட்டீர்கள். ஆனால் அதன் ஆழததுக்குள் முழுசாகச் செல்லவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா,மிகவும் சந்தோசமாக உள்ளது. உங்களின் விமர்சனங்கள் என்னை இன்னும் வளப்படுத்தும். சமூதாயத்தின் சிக்கல்களை சொல்லமுயன்றதால் கண்டபடி குற்றச்சாடுக்களை வைக்க மனம் தயங்கியது.ம்ம்ம்ம்ம்ம் இனி வரும் பதிவுகளில் அவற்றை நிவர்த்தி செய்ய முயல்கிறேன் ஐயா.

      Delete