Thursday 22 November 2012

பெருந்தீ சுமந்தோரே, வாருங்கள் மலர்கள் சுமந்து.....

திசைகள் மூடி இருள் கவிழும் 
இந்த பனிப்பொழுதின் 
ஈரமெல்லாம் உலர்ந்து 
மோதிக்கடக்கிறது காற்று,

இனி 
பெரு வீதிகளிலும் ஓரங்களிலும்
படரும் பின்உருகி கசியும் பனித்திரள்.
இந்த மனங்களைப்போல,

இலைகளை உதிர்த்திவிட்டு 
வேர்களில் உயிர்ப்பை 
ஒளித்துக்கொண்ட மரங்களாய்
உள்ளெரியும் பெருந்தீயை மறைத்து 
பொறுத்திருக்கிறோம் இந்த கார்த்திகையிலும்,

கொழுந்துவிட்டெரியும் 
பெருந்தீயில் கொதித்து  
உருகி வடிந்து  கண்ணீராய் வெளிவருகிறது 
கோபங்களும் ஆற்றாமைகளும்,

நாளை,
சூரியதேவனின் தீண்டல்களால் 
துளிர்க்கும்மரங்கள் _ சட்டென 
வெடித்துக்கிளம்பி முகிழ்விடும்.
அந்த வசந்தகாலத்தில் 
பெரும் இடிகொண்டு இறங்கும் ஊழித்தீ.

பிரளய அதிர்வுகளை பிறப்பித்து
பொழியத்தொடங்கும் ஊழித்தீயில்
இரத்தகறைகளும் உக்காத உடல்களும்
எரிந்தழிந்து போக,
சுடுகாடாகிய என்தேசம்
குளிர்ந்து மீளக்கருக்கொள்ளும்.

இன்று
கொடிய ஒரு இலையுதிர்காலத்தை
சுமத்திவிட்டது காலம்.

இந்த
இழிகாலத்தை
கடந்து போவோம் பெருந்தீயுடன்.

பெருந்தீ சுமந்தோரே,
வாருங்கள் மலர்கள் சுமந்து_இது
தேகத்தை கரைத்த தெய்வங்கள்
கண்விழிக்கும் காலம்,
ஒளியேற்றி மலர்தூவி_நாம்
காலவெளி கடக்கும் கதைகளை சொல்லுவோம்.

10 comments:

  1. காலத்தின் தேவை உணர்ந்த கருத்தாளம் மிக்க கவிதை. வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே ,வரவுக்கும் கருத்திடலுக்கும் .

      Delete
  2. manam kaththalum kalaththin kadayam anna kathirukirom vali sumanatha varalaru.

    ReplyDelete
    Replies
    1. வரலாறுகள் மாறும் மீண்டும் தமிழ் ஆளும்.அதுவரை காத்திருப்போம் தமிழோடு.நன்றி சகோ கருத்துப்பகிர்வுக்கு

      Delete
  3. வணக்கம் தம்பி...
    நலமா?

    உங்கள் கவிதைகளில்
    கையாளப்படும்
    வார்த்தை பிரயோகங்கள்
    என்னை மிகவும் கவர்ந்து இழுக்கின்றன

    கவிதையின் பொருளில்
    மனம் கனக்கும் செய்தி இருப்பினும்...
    கையாண்ட விதம்
    மிகவும் கவர்ந்தது...

    அருமை அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன் அண்ணா,
      எனது வரிகள் உங்கள் மனங்களை தொட்டிருப்பதையிட்டு மகிழ்கிறேன்.
      உங்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் என்னை இன்னும் இருக்க தூண்டும்.
      நன்றி அண்ணா .

      Delete
  4. வார்த்தைப் பிரயோகங்கள் மிக நன்று...

    நினைவுகூறலும் அவசியம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பனே,
      ஒவ்வொரு தமிழ் பேசுவோருக்கும் அந்த கடமை உண்டு.
      நன்றி நண்பா

      Delete
  5. இயற்கையை இழுத்துவந்து இந்தக்கருப்பொருளில் இணைத்துக் கவி புனைந்தபாங்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா,உங்களின் வாழ்த்துக்களும்,ஆசிர்வாதங்களும்,முக்கியமாக விமர்சனங்களும்,என் இருத்தலை இன்னும் வளப்படுத்தும்.காத்திருக்கிறேன் ஐயா.

      Delete