Monday, 17 December 2012

அந்த இரவுகள் அழகானவை(ஒரு உரைநடைப்பகிர்வு)

இரவுகள் அழகானவை .  
நிலாக்கால இரவுகளை விட, இருள் நிறைந்திருக்கும் 
இரவுகள் மிக மிக அழகாவை. 
சூழ்ந்திருக்கும் அமைதியை, 
மென்மையான குளிர்பரப்பி தேகம் தொடும் தென்றலை, 
இடையிடையே அருகில் இருக்கும் சிறு மரங்களின் இலை அசைவுகளை, 
எதோ சிறு விலங்கின் காலடி பட்டு எழும் சருகுகளின் ஒலிகளை, 
தொலைவில் தெரியும் நட்சத்திரங்களை,
குறுக்கும் நெடுக்குமாக பறந்துபோகும் இரவுப்பறவைகளை,
மின்சார கம்பிகள் மீது கூட்டமாகவும்,
தனியனாகவும் இருக்கும் காகங்களை, 
இரசிக்க முடியும் இரவுகள் எப்படி அழகில்லாமல் போய்விடும்.
பகலொன்றின் இயக்கங்களின் வன்மைகளை தொலைக்கும்,
அடுத்த புலர்வின் அமைதியை விதைக்கும் இரவுகள் எப்படிதான் அழகில்லாமல் போகும். 

எமக்கான இரவுகளும் இப்படிதான் அழகாக இருந்தது. 
ஆம் இருந்தது.
யாரும் நடமாட தயங்கிய  இரவுக்காலங்கள் எமக்கானது. 
கைதுகளும், காட்டிக்கொடுப்புகளும் மலிந்து, 
அடுத்த கணமேன்பதே கேள்விக்குறியான காலத்தின் இரவுகள் அவை.             
ஊரடங்கால் ஊரடங்கி கிடக்கும். 
வீடுகளின் வாசல் கதவுகளை பூட்டவே *அரிக்கன் லாம்புடன் எம்மவர்கள் சென்ற இரவுகள் அது. 
அந்த இரவுகள், 
எல்லோரும் பயந்து அடங்கிக்கிடக்கும் இரவுகள், 
எமக்கான இரவுகளாக இருந்தது.

படிப்பும்,பந்தடியும் மட்டுமே அன்றைய கனவுகள்.
அதில் படிப்பு சிலபேருக்கு மட்டும் வந்தது.
நாற்சந்தி கிணற்றுக்கட்டில்,
ஒருவர் காலில் ஒருவர் தலைவைத்து வளைந்து படுத்திருப்போம்.
அல்லது கோவில் மடத்தில் நிரையாக படுத்திருப்போம். 
எப்படியும் ஐந்து பேராவது இருப்போம். எங்களில் ஒருவனின் காதல் கதை, அல்லது யாராவது ஒரு ஊர் அழகியின்? கதை என தொடங்கி,எங்கெங்கோ எல்லாம் சென்று முடியும்.
பொதுவாக குழுவாக திரிபவர்களில் மையப்புள்ளியாக ஒருவன் இருப்பான். அவனை  சுற்றியே ஒரு குழு இயங்கும் இது ஒருஎழுதப்படாத தனி விதி. 
எங்களுக்குள்ளும்  ஒருவன் மையமாக இருந்தான்.
எங்களின் அன்புப்பாசை அத்து. இது அத்தானின் சுருக்கம்.
அத்து டேய் என்றால் அதில் அன்பின் உச்சம் தெரியும்.
கூடவே எதோ ஒரு உள்குத்து விழபோவதும் புரியும்.
அடர்ந்த இருளூடாக ஊடறுத்து செல்லும் எங்களின் குரல் ஒலிகள் அயல் வீடுகளுக்கு ஆறுதல் கலந்த அச்சங்களை தான் கொடுக்கும்.
தூரத்தில் நாயின் குலைப்பொலியோ அல்லது ஆள்காட்டிக்குருவியின் அச்ச ஒலியோ எழுந்தால் எங்களின் இருத்தல்,அளாவுதல் கலைக்கப்பட்டு அருகில் இருக்கும் நன்பனின் வீட்டுக்குள் போய்விடுவோம். சிலதடவைகள் பிடிபட்டு சின்னா பின்னமாகி மறுநாள் அடையாள அட்டையை முகாமில் வேண்டிய நிகழ்வுகளும் நடந்தேறிய காலங்கள் அவை.
எமக்கான மிகப்பெரிய அரணாக கல்வி கற்கிறோம் என்பதே இருந்தது.

எதைபற்றியும் கவலை கொள்ளாத,
யாருக்காகவும் அடங்கிப்போகாத அந்த காலத்தின் இரவுகள்,
ஒவ்வொரு இரவுகளும் தனிமனித சுகந்திர மீறலாகவும்,
அதுவே எங்களுக்கு சந்தோசமாகவும்,
இருந்ததென்பதென்னவோ உண்மைதான்.
இன்றைய இரவுகளில்,
அவற்றை நினைக்கையில் வருந்தினாலும், அந்த நேரத்தில் அப்படி இருந்திருக்காவிட்டால் இன்று, அன்று அப்படி இருந்திருக்க வில்லையே என்று கவலைப்பட்டிருப்பமோ என்னவோ. 

இரவின் அமைதியை ஊடுருவும் எங்களின் சத்தத்தினை மீறி,
வழமையாக  கிணற்று கப்பியல் ஒன்று  கீச்சிடும். அப்போது நேரம் ஒன்பதரை என்பது தெளிவாகும். வாத்தியார் தினசரி அந்த நேரம் தான் குளிப்பது வழமை.
பத்து பத்தரைக்கு ஒருமுறை சேவல்கள் கூவி ஓயும்.
எப்படியாவது ஒருவன் *அருக்கூட்டி விடுவான்.
அத்து செவ்விளநீர் கிடக்குடா 
மிக அலட்சியமாக போய் அந்த இளநீர் குலையை வெட்டி கொண்டு வருவோம்.
வாழைக்குலை, கோழி, ஒருபனைக்கள்ளு  என அந்த இரவுகள் ஒவ்வொன்றும்  நிரம்பி இருந்தது. 
வாழைக்குலையை வெட்டி பராமரிக்காமல் இருந்த கோவில் பூங்கொல்லைக்குள் ஒளித்து வைக்க, மறுநாள்  எதேட்சையாக பார்த்த தலைவர் அதனை கோவிலுக்குள் எடுத்துக்கொண்டுபோய் வைத்ததும், 
யாராவது ஒரு கூட படித்தவளின் வீட்டு முகப்பில் ஒரு தலை வாழை இலையை வைத்து பூ, பிள்ளையார் என கிடைக்கும் பொருள்களை கொண்டு  *செய்வினை மாதிரி செய்துவிட்டு போய்விடுவதும்,
மெல்லிய மழைநேரத்தில் கோழிபிடிக்க மதில் மரம் எல்லாம் ஏறி இறங்கியதும்,
 கதவுகளை கயிற்றால் கட்டிவிட்டு  வீடுகளுக்கு கல்லெறிந்து விட்டு ஓடியதும்,
என கழிந்த அந்த இனிமையான இரவுகள்.
குடும்ப சண்டைக்காக இருட்டடி அடித்த மறுநாள் கணவன் மனைவியாக இருவரும் வந்து திட்டி திணறடித்த அந்த இரவை,
பாத்தியடா அத்து அடிச்ச அடிக்கு பலன் இருக்குதானே, பக்கத்தில் இருந்தவன் அந்த திட்டை கூட பெரிதாக எடுக்காமல் இருவரும் சேர்ந்து வந்ததை சுட்டிகாட்டிய அந்த இரவை,
வெறியில வருபவர்களுக்கு அடிப்பதும்,சிலபேரை வீட்டில் கொண்டுபோய் விடுவதும் என கழிந்த இரவுகளை,
மருந்துகுடித்து தற்கொலைக்கு முயன்றவரை முச்சக்கரவண்டி பிடித்து கொண்டுபோகையில்,அவர் எடுத்த வாந்தியில் நனைந்து மணக்க மணக்க வீடுவந்த இரவினை,
எரிந்தநிலையில் இருந்த பெண்ணை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல  பிடித்த கையில் ஒட்டிக்கிடந்த தோலின் திசுக்களை செய்வதறியாது பார்த்த அந்த கனத்த இரவினை,
இடம்பெயர்ந்து வந்து அயல் கிராமத்தில் வசித்துவந்த ஒருவர்  பிரசவத்துக்காக மனைவியை தவிப்புடன் சைக்கிளில் கொண்டுசெல்கையில்  ,உதவிக்கு இரண்டு பிரதான முகாம்களை கடந்து வைத்தியசாலைக்கு சென்ற இரவினை,
மறு இரவு எங்களின்  கையை பிடித்து அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும்,அவர் கலங்கிய கண்களை பார்த்த இரவும்,
திருமண வீட்டுகளுக்கான வேலைகள் அனைத்தையும் செய்து முடித்த இரவுகளை.
சாவு வீடுகளில் துணைக்கு இருக்கும் இரவுகளை,
அதுவும் அழகிகளின் வீட்டு இழவென்றால் அப்படியான இரவுகளை,
அந்தியேட்டி இரவுகள் என,
அன்னதானத்துக்கு சமைத்த இரவுகள் என,
ஒவ்வொரு இரவும் மறக்க முடியாதவையாகவும் அழகானவையாகவும் தான்  இருந்தது.
கிராமத்தின் அந்த ஒவ்வொரு இரவுகளும் அழகான அனுபவமாகத்தான் இருந்தது.

இன்றும், இரவுகள் வருகின்றன, 
இயந்திரத்தனமான இரவுகளாகவே கடந்தும் போகின்றன.
வேலை,பயணக்களைப்பு, அதிகாலையில் இணையத்தில் உலாவல்,பின் மிக கனமான கம்பளிப்போர்வைக்குள் கனத்த மனதுடன் அடங்கிப்போதல் என ஒரு வழமையாக மாறிவிட்டது இரவுகள்.
எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கழிந்து போகின்ற இன்றைய இரவுகள்
மிக மிக கேவலமாய் உணர்த்துகிறது இருத்தலை.
ஆளுக்கு ஒருதிசையில் பிரிந்து கிடக்கும் ஒவ்வொருவருடனும் இணைய
வழியில் கதைக்கும் நேரங்களில் பழைய அந்த இரவுகள் தான் இரை
மீட்டப்படுகின்றன.
கதைக்க தொடங்கும் ஆரம்பத்தில் ஒரு இடைவெளிகளை உணர்ந்தாலும்,
அடுத்த நிமிடங்களில் அன்றைய நாங்களாகவே மாறி போய்விடுகிறோம், 

இப்போதெல்லாம்,
அவர்களும் சரி, ஊரில் இருப்பவர்களும் சரி, அழைக்கும்  கணங்களில் சொல்கிறார்கள்.
எதுவும் அப்ப  போல இல்லையடா............ 
உங்களைப்போலவும் இல்லையடா..........

*அருக்கூட்டிவிடுதல் ;ஆசை ஊட்டி விடுதல்
*அரிக்கன் லாம்பு ; காற்றால் அனையாதபடி கண்ணாடி கூண்டு பொருத்தப்பட மண்ணெண்ணெய் விளக்கு.
*செய்வினை ; ஒருவருக்கு கெடுதல் செய்யும் நோக்குடன் செய்யப்படும் ஒரு படையல் வகை.

3 comments:

 1. மீண்டும் அதே வாசனை...

  ReplyDelete
 2. ஒவ்வொரு நிகழ்வும் மறக்க முடியாதவைகள் தான்.. நிச்சயமாக சில நிகழ்வுகள் என்னையும் பாதித்துள்ளன..
  அந்த இரவுகள் இனியொரு பொழுதில் வருமா என்ற ஏக்கமும் இருந்ததுதான்...
  சிலரின் கெடுபிடிகள் மட்டும் இல்லையென்றிருந்தால் அந்த இரவுகளே இன்று வரைக்கும் போதும்..
  இணையமும் தேவையில்லை... கணனியும் தேவையில்லை

  ReplyDelete
 3. கிராமத்தின் அந்த ஒவ்வொரு இரவுகளும் அழகான அனுபவமாகத்தான் இருந்தது.

  இன்றும், இரவுகள் வருகின்றன,
  இயந்திரத்தனமான இரவுகளாகவே கடந்தும் போகின்றன.
  வேலை,பயணக்களைப்பு, அதிகாலையில் இணையத்தில் உலாவல்,பின் மிக கனமான கம்பளிப்போர்வைக்குள் கனத்த மனதுடன் அடங்கிப்போதல் என ஒரு வழமையாக மாறிவிட்டது இரவுகள்.//////

  80களில் இருந்த நாட்களை நான் தாயகத்தில் தேடியபொழுது ஏமாற்றம் என்ற முள்ளு ஆழ இறுக்கியது . அங்கு தற்சமயம் நடைமுறையில் உள்ள மனித விகாரங்களுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும்பொழுது , இப்பொழுது இங்கு உள்ள நாட்கள் நல்லது என எனக்குப்படுகின்றது . சுய ஆக்கத்திற்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் நேற்கொழு .

  ReplyDelete