Sunday 23 December 2012

இனியாவது சொல்லிவிடு.

மலர்ந்துகொண்டே இருந்தவள் நீ
வண்ணமும் வாசமும் தான் 
நாளுக்குநாள் மாறிக்கொண்டன.
நினைத்துக்கொண்டே இருந்தவன் நான் 
மலர்தலை தடுக்கவா முடியும். 

உன் விழிகள்  
ஏணியாகவும் இருந்தது _எனை 
தாலாட்டும் ஏணையாகவும் இருந்தது.

சிரித்தேன்.
கடந்தும் திரும்பி பார்த்தாய்.
விரும்பித்தானே பார்த்தாய்?

முடக்கில் போட்ட பனங்குத்தி  
மக்கி மடங்கும்வரை அரியாசனம்.
அப்புறமென்ன தரையே ஆசனம்.
கடந்து போனது நீ மட்டுமா,
காலமும் தான்.

பகிர்ந்த சில வார்த்தைகளில்
பொதிந்திருக்குமோ  என்றெண்ணி, 
பகுத்தறிந்து அதுவா இதுவா 
என்றங்கலாய்த்தல்லவா_என் 
அனேக அந்திகள் கலைந்தது. 

மாரடிக்கும் பெண்(டு)கள் கூட 
ஓய்ந்ததுண்டு_உனை 
தேடிதிரிந்த நான்?

எரிகல் விழுகையிலும் 
கல் எறிகையிலும் 
உன்னைத்தான் நினைக்கிறேன்._மறுநாள் 
என்ன நினைத்திருப்பாய்.

எப்பவாது உன்வீட்டு நாய் _உனை 
கொஞ்சி இருக்குமே!
கலைத்த போதும் அது கூட 
கடிக்கவில்லையே !!

சாத்துப்படி இல்லாத 
விக்கிரகம் நீ 
சரிந்தும் படுக்கவிடாத 
சாமக்கோழியும் நீ.

தவறியொருமுறை 
கண்ட கழுத்துகீழ் மச்சம்_இன்னும் 
கண்டத்து சனியாய் வதைக்குது.
எனை மீறி சிலநேரம் 
விழி தேடிப்போகுது.

தாடியை தடவியபடியே _உனை 
நினைப்பது சுகம்,
தனியே கிடந்தது 
சிரிப்பது அதிலும் சுகம்.

நீ எரிகிறாய் 
நான் புகைகிறேன் 
நெருப்பும் புகையும் 
ஒரே  இடத்தில் இருக்கவேண்டும்.

அறுகருசியோ 
வாய்க்கருசியோ_அருகில் 
நீ இருந்தால் காணும்.

இந்த எழுதுகோலில் நிரம்பி இருப்பது
யுன் இதழ் வடித்த நீரா?
என் கண்ணிதல் வடித்த துளியா?

உணர்ந்திருந்தோம். 
உணர்ந்திருப்பாய் எனநினைந்து, 
உரைக்கவில்லை 
நீயும் தான்.

இனியாவது சொல்லிவிடு.


15 comments:

  1. ம்...
    அத்தனையும் அழகு...

    காதல் நிறைந்த வரிகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சௌந்தர். ஒவ்வொரு காதலும் அழகானவைதானே,அழகானவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் அழகாகத்தானே இருக்கும்.நன்றி சௌந்தர் உணர்வுடன் கலந்து வெளிப்படுத்தியமைக்கு

      Delete

  2. எப்பவாது உன்வீட்டு நாய் _உனை
    கொஞ்சி இருக்குமே!
    கலைத்த போதும் அது கூட
    கடிக்கவில்லையே !!
    //////////////

    சூப்பர் வரிகள் ஒவ்வொன்றும் அழகு

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா,
      காதலி வீட்டு நாய்கூட ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்வது காதலில் இதெல்லாம் சகயம் அப்படியா ?நன்றி வரவுக்கும் கருத்திடலுக்கும்

      Delete
  3. காதல் கவிதையில் கரைபுரண்டு ஓடுகின்றது .படிமங்கள் சொல்லிவிடுங்கள் உரியவளிடம் தாடியைத் தடவிக்கொண்டு இருமல்! சாமக்கோழியாக!:))))))

    ReplyDelete
  4. காதல் கவிதையில் கரைபுரண்டு ஓடுகின்றது .படிமங்கள் சொல்லிவிடுங்கள் உரியவளிடம் தாடியைத் தடவிக்கொண்டு இருமல் போல சாமக்கோழியாக இருக்கவேண்டாம்!:))))

    ReplyDelete
    Replies
    1. கடந்து போனது நீ மட்டுமா,
      காலமும் தான்.....................
      ஐயா,ஒரு கவிதை மட்டுமே இது நம்புங்க.
      இனிமேல் காதல் வந்தால் சொல்கிறேன்.
      நன்றி தனிமரம் நேசன்னா.

      Delete
  5. மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சகோ.எனது பகிர்வு உங்களின் மனதையும் தொட்டிருப்பதையிட்டு மகிழ்கிறேன்.நன்றி வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.

      Delete
  6. முடக்கில் போட்ட பனங்குத்தி
    மக்கி மடங்கும்வரை அரியாசனம்.
    அப்புறமென்ன தரையே ஆசனம்.
    கடந்து போனது நீ மட்டுமா,
    காலமும் தான்.//////

    இங்கை........... இங்கைதான் கொழுவியிருக்கிறியள் விரையமான காலத்தைப்பற்றி . காதலிலை துணிவு மட்டும் போதாது , இடம் பொருள் ஏவலும் வேணும் . படைப்புக்கு வாழ்த்துக்கள் நேற்கொழுதாசன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமகன்.
      விரையமான காலத்தைப்பற்றி///////அந்த காலங்களை நினைப்பதில் அல்லது நினைவூட்டுவதில் இருக்கும் சுகம் எதிலும் கிடைக்காது இல்லையா கோமகன்.
      எவ்வளவு அங்கலாய்ப்புகளுடன் அந்த காலம் கழிந்தது ம்ம்ம்ம் நன்றி கோமகன் வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்

      Delete
  7. அழகு... அழகு அழகு.. ஐயையோ.. எந்த வரியை சொல்றதெண்டே தெரியலையே... ஒவ்வொரு வரியிலும் காதல் ததும்பி வழியுதே....திரும்ப திரும்ப படித்தேன்...இந்த வரிதான் அதிகம் அழகு என்று சொல்ல முடியாதபடி.. அப்படி நச்....
    இது கற்பனை என்று நீங்கள் சொல்வதால் நம்புகிறேன்... :) கவிஞன் கற்பனையைக் கூட அனுபவித்து அதன் உணர்வில் மூழ்கி எழுபவன்... அதை உங்கள் கவி வரிகள் சொல்லுகின்றன... பாராட்டுக்கள் தம்பி...

    ReplyDelete
    Replies
    1. அஹா அஹா நன்றி அக்கா. ஒவ்வொரு வரியிலும் காதல் ததும்பி வழியுதே..///எல்லோருக்குள்ளும் காதல் இருக்கிறது அது காதல் கவிதைகளை படிக்கும் போது கொஞ்சம் விழிப்படைந்து மனதில் கலந்துவிடுகிறது போலும்////// நன்றி அக்கா

      Delete
  8. ,அருமை அருமை தனிமை ,இடம், தேடல், வலி ,காலம், எல்லாம் கலந்த சுவையான ஒரு பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. திருப்பி திருப்பி படிக்க வைக்கின்ற அருமை வரிகள் சகோ...மீண்டும் அந்த நாள் நினைவுகளை நெஞ்சில் நிலை நிறுத்த வைக்கின்ற வளமான வரிகள் ஒவ்வொன்றும்....

    //இந்த எழுதுகோலில் நிரம்பி இருப்பது
    யுன் இதழ் வடித்த நீரா?
    என் கண்ணிதல் வடித்த துளியா?//

    //தவறியொருமுறை
    கண்ட கழுத்துகீழ் மச்சம்_இன்னும்
    கண்டத்து சனியாய் வதைக்குது.
    எனை மீறி சிலநேரம்
    விழி தேடிப்போகுது...//

    மிக மிக பிடித்த வரிகள்...

    ReplyDelete