Tuesday 5 March 2013

தொலைக்கப்பட்ட அன்பு...........

கசிந்துகொண்டிருக்கிறது
தொலைக்கப்பட்ட அன்பின் மீதான
கடைசி துளிகளும்.

முதல் சில
நாட்களைப்போலவே இல்லை
இந்த பிந்திய நாட்கள்,

அதீதமான அரவணைப்பை
வெறுத்தொதுக்கும்
மழலையொன்றின்
பக்குவமற்ற நாட்களாய்
கடந்துபோனது முந்தைய சில நாட்கள்.

எல்லை நோக்கி
வளர்ந்துகொண்டிருக்கும் மரணமொன்றை,
எல்லைகடந்து
வளர்ந்துகொண்டிருக்கும் வாழ்தலொன்றை,
உணர்த்தியழுதத்துகின்றன
இந்த நாட்கள்.

தொலைக்கப்பட்ட  அன்பு
அழிந்துபோய்விடுவதில்லை - அது
வேர்களில் அடங்கிக்கிடக்கிறது
பின் அதுவே
இலைநுனிகளில்
நீராய் திரண்டும் வருகிறது.

யாரவது ஒருவருடைய
கண்களை பார்க்கும் போதும்,
யாராவதொருவர் முகத்தினை தடவும் போதும்,
யாரவது ஒருவர்
கை அசைக்கும் போதும்.
தொலைக்கப்பட்ட அன்பு மிக கனதியாகிவிடும்.

அன்பின் மீதான கடைசி துளிகளும்
நாளையொன்றில்
வெளியேறிவிடக்கூடும்.

ஆதலால்,
இப்போதெல்லாம்
எழும் கேள்வி
கடைசி துளிகளும் வெளியேறிய வெற்றிடத்தை
எதைக்கொண்டு நிரப்புவது என்பதே ?



2 comments:

  1. அளவிட முடியாதது அன்பு...

    ReplyDelete
  2. ///தொலைக்கப்பட்ட அன்பு
    அழிந்துபோய்விடுவதில்லை - அது
    வேர்களில் அடங்கிக்கிடக்கிறது
    பின் அதுவே
    இலைநுனிகளில்
    நீராய் திரண்டும் வருகிறது.////

    நிச்சயமாக தம்பி... அன்பு எப்போதும் அழியாது. ஈரலிப்புக் குறையாது.. அருமையான கவிதை... பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete