Tuesday 23 April 2013

அன்பில் இழைதல்

ஓசையை
தொலைத்த சொல்லொன்று
தளர்ந்து விழுந்தது காலடியில் .......

மெல்லிய
காற்றில் எழும் சிறகொன்றின்
வலி சுமந்து விழுந்திருக்குமோ?

கிளைகளும்
வேர்களும் வெறுத்த மலரொன்றின்
ஏக்கம் தாங்கி விழுந்திருக்குமோ?

பசியோடு
வலையில் இறந்துபோன  சிலந்தியின்
கோபம் சுமந்து விழுந்திருக்குமோ?

தேடத்தொடங்கினேன்

கனத்த
மௌனசெதில்களின் பின்
பிரியமொன்று விட்டுச்சென்ற
ஈரலிப்பில் மூழ்கிக்கிடந்தது
ஓசையற்று,

என்
இமையோரங்களில்
பிரியத்தின் படிமங்கள்

தின்னதொடங்கியது
ஓசை கலந்த அந்த சொல்
கொஞ்சம் கொஞ்சமாக என்னையும்.

10 comments:

  1. அருமை...அருமை! அற்புதமாக இருக்கின்றது கவிதை!
    பிரியத்தின் பிரிவை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

    //கனத்த
    மௌனசெதில்களின் பின்
    பிரியமொன்று விட்டுச்சென்ற
    ஈரலிப்பில் மூழ்கிக்கிடந்தது
    ஓசையற்று,

    என்
    இமையோரங்களில்
    பிரியத்தின் படிமங்கள்//

    கனம் சுமந்த வரிகள்...

    வாழ்த்துக்கள் சகோ!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் இளமதி. உங்களின் கவனத்தையும் எனது வரிகள் தொட்டிருப்பதையிட்டு மகிழ்கிறேன்.அன்புகலந்த நன்றிகள் வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும்.

      Delete
  2. /// என்
    இமையோரங்களில்
    பிரியத்தின் படிமங்கள் ///

    அருமையான சொல்லாடல்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் திரு தனபாலன் அண்ணா, உங்களின் வரவும் கருத்திடலும் என் இருத்தலை இன்னும் இன்னும் மெருகூட்டும். அன்பு கலந்த நன்றிகள்.

      Delete
  3. ஏக்கத்தை அழகாக சொல்லியுலீர்கள்

    ReplyDelete
  4. கனத்த
    மௌனசெதில்களின் பின்
    பிரியமொன்று விட்டுச்சென்ற
    ஈரலிப்பில் மூழ்கிக்கிடந்தது
    ஓசையற்று,
    ///////////// பிரிவு அது விட்டுச் செல்லும் அமைதியான வலி என்றுமே ரணமாகிப்போன வலிகள் நேற்கொழுவா . படைப்பிற்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள் . தொடருங்கள் .

    ReplyDelete
    Replies
    1. அந்த ஈரலிப்பு இருக்கும் வரை மனிதம் நிலைத்திருக்கும் மனங்களில்.மிக்க நன்றி ராஜராஜன்.உங்களின் விமர்சிப்புக்கள் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் காத்திருக்கிறேன் அன்புகலந்த நன்றிகளுடன்.

      Delete
  5. அருமையான படிமங்கள்! சிறந்த கருத்தாழம்! வாழ்த்துக்கள்!
    (ஒரே ஒரு நெருடல்: முதல் வரியில் ‘ஓசையை தொலைத்த சொல்’ என்று தொடங்கிவிட்டு, கடைசியில் ‘ஓசை கலந்த அந்த சொல்’ என்கிறீர்களே! அதை மட்டும் ‘கலைந்த’ என்றோ, ‘துறந்த’ அல்லது ‘மறந்த’ என்றோ மாற்றி விட்டால் சரியாக இருக்கும்).

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஐயா,
      ///////என்
      இமையோரங்களில்
      பிரியத்தின் படிமங்கள்/////
      இந்த வரிகள்
      அந்த நிராதரவான நிலையை பார்த்து அதனை நேசிக்க தொடங்குவதை குறியிடுகிறது.
      நேசிப்பிற்கு உள்ளான இரண்டு பக்க நேசிப்புக்களால் நிராதரவான நிலை மறைந்து போவதையும், இன்னும் அதனுடைய பெரு நேசிப்பால் ஒருவன் தன்னை அதனோடு ஐக்கியமாக்கி கொள்வதையும் சொல்லவே அவ்வடி எழுதினேன். மிக்க நன்றி ஐயா. உங்களின் நட்பின் கருத்துரைகள் கண்டு மிக மிக அகமகிழ்ந்தேன் இன்னும் கருத்தாடுங்கள் என்றும் அன்புடன்........

      Delete