Monday 29 April 2013

தப்பாய்யா இது................!!!


             விரும்பினா படியுங்கோ இல்லாடிலும் தயவு செய்து  படியுங்கோ, நீங்கள் எப்படியும் படிப்பியள் என்று  தெரியும். ஒ, படிக்க தொடங்கியிட்டியள் என்ன, இனி உடன விசயத்துக்கு போகத்தான் வேணும்.

            அது ஒண்டுமில்ல  இண்டைக்கு  ஒரு இடத்தில கொஞ்சம் புத்திமதி சொல்லிச்சினம் அதை கேட்ட நேரத்தில இருந்து கையும் ஒடலை காலும் ஓடலை, எதுக்கு அவர் அப்படி அறிவுரை சொன்னார் என்று தலையை போட்டு உடைக்காதையுங்க போற போக்கில கட்டாயம் சொல்லித்தான் போவன்.


அவர் சொல்ல வெளிக்கிட்டதும் எனக்கு சட்டென்று ஊரில  சைக்கிளில்  திரிந்த நினைவுதான் வந்தது. சைக்கிளுக்கும் ஒரு பேர்  மோனல். மோனல் யார் தெரியுமே சிம்ரனின் தங்கச்சி ,உந்த விசயத்த கேட்டுத்தான் அந்த பிள்ளை அப்படி ஒரு முடிவு எடுத்தோ தெரியா, அது இருக்கட்டும், நாப்பது பக்க  கொப்பியை சுருட்டி பொக்கற்றுக்குள் வைச்சுக்கொண்டு படிக்க எண்டு போறது. வடிவா கவனியுங்க படிக்க எண்டுதான் போறது. போறவழியில ரோட்டுக்கரையில இருக்கிற வீடுகளில்  வாசல்கேற்றடியில் இரண்டு மூன்று வயதுபோனவையள் சேர்ந்து கதைச்சுக்கொண்டு  இருப்பினம், அப்ப அவையளுக்கு வேற பொழுது போக்குகள் இல்லை. மெதுவா சைக்கிளை கிட்ட கொண்டு போய் ஒரு காலை ஊன்றிக்கொண்டு ஐயா என்று  அன்பாக கூப்பிட அவையளும் என்னவோ எதோ என்று பரபரப்போடு என்ன என்று ஒருவரை முந்தி ஒருவர் கேப்பினம்... ஒரு நிமிஷம் சும்மா நின்றுவிட்டு  அதில்லை ஐயா பாடைக்கு சொல்லவோ  என்றோ அல்லது பூவரசுஓடர் குடுக்கவோ  என்றோ கேட்டு விட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடுவோம். சட்டென்று அவர்களுக்கும் விளங்காது, புரிந்து கொண்டதும் நடக்குமே ஒரு வசவு............,
         
                எரிவண்டு அடிக்கிற செக்கல்நேரம், அந்த பிரதான வீதியின் மதவடியில் இருகேக்க, யாராவது ஒரு அப்பாவி ஊருக்குள யாரையாவது  தேடி வந்து  விலாசம் கேட்பார்கள். அப்ப நல்லவங்க மாதிரி ஒரு பவ்வியம் காட்டி, தேடிவந்தவரிடம் அவர் தேடிவந்தவரின் காதலியின் அல்லது கோபக்காரனின் விலாசத்தை கொடுத்து அனுப்பி விட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அந்த இடத்துக்கு போவோம்.அந்த அப்பாவி கிழிக்கப்பட்டு தொங்கிய தலையுடன் எங்களை பார்த்து..........................
             அந்த சந்தியில் இருந்த எந்தபக்கம் போறதென்று காசுபோட்டுபார்த்து, அந்த ரோட்டில போற கூட படிக்கிற  பிள்ளைகளுக்கு பின்னால வீடுமட்டும் போய், அந்த ஊரவங்களிடம் கொளுவுப்பட்டு, தாய் தகப்பனிடமெல்லாம் கண்டபடி பேச்சு வாங்கி அடுத்தநாள் அடுத்த ரோட்டிலும் இதே வழக்கமாகி, காதலும் இல்லாமல் காதலியும்இல்லாமல் எல்லோரையும் காதலித்து எல்லோரிடமும் ஏச்சுகளை திட்டுக்களை வாங்கி.................
           இருந்தாப்போல புளியடியில சும்மா நாலு பிள்ளையளை பார்ப்பம் எண்டு நிக்கும் போது ஐம்பத்தொன்று பஸ் வரும் யாராவது ஒருத்தன் வாடா யாழ்ப்பாணம் போவம் என்று சொல்ல நின்றபடி அப்படியே பஸ் ஏறி யாழ்ப்பாணம் போய் சாரத்தையும் தூக்கிபிடிச்சுக்கொண்டு  அங்கினேக்கை திரிஞ்ச எங்களை பார்த்து  சனங்கள் தங்களுக்குள்ளை திட்டி கொட்டிய  முனுமுனுப்புக்களை எல்லாம்  கேட்டும் கேளாதது போல திரிந்த ............
             இப்படியெல்லாம்   நல்லவங்களா இருந்தவனை புத்திமதி சொல்லி திருத்திறன் எண்டு வெளிக்கிட்டு ஒரு அரை மணித்தியாலம் அறிவுபூர்வமாக உணர்ச்சிபூர்வமாக சொல்லி பார்த்து முடியாமல் .............கடசியா ஒன்று மட்டும் சொன்னார் நீங்க மாறவே மாட்டிங்கடா........
        இந்தளவு அறிவுரை  சொல்லும்படி என்ன செய்தேன்.
        அவரை கண்ட உடனே வணக்கம் சொன்ன நான் கை குடுக்கவில்லை அது ஒன்றுதான் நான் செய்த தப்பு.............
            தப்பாய்யா இது !!! 

8 comments:

  1. எப்பொருள் யார் யார் வாய்...

    ReplyDelete
  2. இனிய வணக்கம் தம்பி...
    சிலர் ..அப்படித்தான்
    எதிர்பார்த்தவண்ணம் எதிர்வினை
    இல்லாவிட்டால்
    வினைகள் எதுவாயினும்
    தவறு என்றுதான்
    பொருள்படும்...

    ReplyDelete
  3. அடுத்தவர் மனசை நோகடிக்காமல் நீங்களும் கைகொடுத்திருக்கலாமே

    ReplyDelete
  4. பொருட்படுத்துதல் வீணானது...

    ReplyDelete
  5. மிகவும் நகைச்சுவையுடன் இன்று என் பயணம் தொடங்கி இருக்கின்றது இப்போது கைகொடுக்க நெற்கொழுதாசனை எங்கே தேடுவேன்:))) !நன்றாக இருக்கின்றது பதிவு கைகொடுக்க வேண்டியது இங்கு ஒரு சம்பிரதாயம் நல்லவிடயங்களை பின்பற்றுவது தவரில்லைத்தானே!

    ReplyDelete
  6. ஆமா இந்தப்பூவரசு தான் எத்தனை வசை மொழியைக் கற்றுக்கொடுத்திருக்கும்:)))) கிராமத்தில்!

    ReplyDelete
  7. காதலும் இல்லாமல் காதலியும் இல்லாம அலைவதிலும் அதுவும் சாரத்தில் திரியும் காலம் மிகவும் ரம்மியமான சந்தோஸம் தரும் பால்யகாலம் ஐயா!:))))

    ReplyDelete
  8. மோனல் ஞாபகம் வருகின்றதே :)))பார்வை ஒன்றே போதுமே என்று பாடிய ஜொல்லுக்காலம்:))))

    ReplyDelete