Monday 15 July 2013

உருவம் இழந்த வீடும்.........................

எப்படி அழைக்கப்படும்
நானில்லாத எனது வீடு
யாருமில்லாத இன்றில்.........

என் பெயரால் அழைக்கப்படமுன்
அண்ணாவின் பெயரால்,
அப்பாவின் பெயரால்,
அம்மாவின் பெயரால்,
அம்மம்மாவின் பெயரால்,
அழைக்கப்பட என் வீடு.........

எப்பவோ துளைத்து
கறல் ஏறிய சன்னங்களையும்,
எறிகணை சிதைத்து சிராம்பு கிளம்பிய
வளைமரங்களையும்,
அண்ணாவை தொடர்ந்து
எனது கீறல்களையும் சுமந்த
வைரமரக்கதவுகளையும்,
மஞ்சள் பூக்கொடிமரம் சுற்றிபடர்ந்து
மங்கலமாய் நின்ற  தூண்களையும்,
சுமந்த என் வீடு.........

எப்படி
அழைக்கப்படும்
யாருமில்லாத இன்று.

எல்லையோர ஒற்றைபனையும்,
வேலிக்கிளுவையில் படர்ந்த கொவ்வையும்,
செம்பருத்தியும் நித்தியகல்யாணியும்
நாலுமணிப்பூச்செடியும்
முற்றத்து மண் அள்ளி
கொட்டிஉலவிய காற்றும்
உறைந்துதான்போய் கிடக்குமோ?
நானிருந்த வீட்டில்,

நிசப்த
சூனிய சூழலை கடந்து
காகங்களும் கரியவால் குருவிகளும்
ஓரிருமுறை வந்து போகலாம்.

பூனைகளும் நாய்களும்
என்றாவது இரைதேடியோ
அன்றிலொரு
மறைவிடம் தேடியோ வந்து போகலாம்.

இதுதான்
அவனின் வீடு என்று
ஏதாவது பழைய நினைவுகளுடன்
யாரவது நண்பர்கள் கடந்து போகலாம்.

தாகம் தீர்க்கவோ
குறைந்தது,
முகவரி தேடியோ யாரவது கதவை தட்டி
ஏமாந்திருக்கலாம்......

யாருமில்லாத எனது வீடு
உருவத்தால் இன்னும்
வீட்டைப்போலதான் இருக்கிறது.
உணர்வுகளை இழந்த
ஒரு தேகத்தைப்போலத்தான் கிடக்கிறது.

இங்கும்
பூட்டிய வீடுகளை கடக்கையில்
எனது வீடு நினைவுக்கு வந்துவிடுகிறது.
கூடவே
வீடைப்போல சீரழியும்
இந்த வாழ்க்கையும்.



6 comments:

  1. வீடு கவிதை அருமை.உங்கள் வீட்டின் நினைவும் உண்மை

    ReplyDelete
  2. மனதில் உள்ள வலி புரிகிறது...

    உண்மையாகவும் முடித்துள்ளீர்கள்...!

    ReplyDelete
  3. அருமையான வரிகள்.துவக்கத்தின் மூன்று வரிகள் இன்னும் அருமை.

    ReplyDelete
  4. இங்கும்
    பூட்டிய வீடுகளை கடக்கையில்
    எனது வீடு நினைவுக்கு வந்துவிடுகிறது.
    கூடவே
    வீடைப்போல சீரழியும்
    இந்த வாழ்க்கையும்///////////வாழ்த்துக்கள் சொந்தமே!!!மனம் கனக்கிறது.

    ReplyDelete
  5. தங்களின் தளம் அறிமுகம் : http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html

    ReplyDelete
  6. உங்களின் இந்த கவிதை எனது தளத்தின் வாரத்தொகுப்பில் முதலிடத்தை அலங்கரித்திருக்கின்றது... உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தொடர்ந்து இன்னும் பல அற்புத படைப்புகளைத்தாருங்கள்... http://jeevanathigal.blogspot.com/2013/07/14-to-20-07-2013.html

    ReplyDelete