Tuesday 19 November 2013

உன் பாடலுக்காக காத்திருக்கிறேன்.

இந்த கணங்களை கடந்து போவது 
எப்படி என்று தெரியாமல்....
கனத்த மௌனத்துடன் சலனமற்றுக்கிடக்கிறேன்  
வெறுமையை சுமந்தபடி ...

நீ  
உனது பிரியங்களால் 
தின்று கொண்டிருக்கிறாய்.

கண்ணீர் கூடப்  பிரியம் தான்.

கனவுகளை தின்னும்  பூதத்திடம்
மோதுகிற வண்ணத்துப்பூச்சியே,
ஏக்கம் தெறிக்கும் உன் கண்கள்
என் அறைகளில் அலைகின்றன..

திரண்டெழும் நீரை மறுப்பதாக
நடித்து நீ விழுத்தும் வார்த்தைகளோடு
மௌனித்துப்போவதை விட வேறெதையும்
செய்ய முடியவில்லை என்னால்.

என்ன செய்ய முடியும் என்னால் 
கண்ணீரை துடைப்பதற்கு
விழி துடைக்கும்  சிறுகரத்தினைவிடவா..!!!

அநேக பொழுதுகளில்,
வணக்கத்தில் தொடங்கி
கண்ணீரில் முடிந்துவிடுகிற வார்த்தைகளில்
மூழ்கிக்கிடக்கிறேன் நீ போனபின்பும்,
ஆற்றுப்படுத்தும் வித்தை தேடி.

எப்படித்தான் ஒப்பனை செய்தாலும் 
உனக்கான
வார்த்தைகளை உருவாக்குவதில் தோற்றுப்போகிறேன்.

தோழியே...
அவாந்திரவெளிகள் கடந்தும்   கூடடையும் பறவை.
நீ பறவையாகு...
நாளைய விடியலில்
உன் பாடலுக்காக காத்திருக்கிறேன்.
அன்புத் தோழனாக...
அன்று என் மௌனமும் தொலைந்திருக்கும்.



(என் அன்புத்தோழி ஒருவரின் கண்ணீர் என்னை சிதைத்த  கணத்தில் எழுதியது )

3 comments:

  1. காத்திருக்கின்றேன் கவிதை கண்ணீர் சிந்த வைக்கின்றது கவிஞரே!

    ReplyDelete
  2. கலங்க வைக்கிறது தோழரே...

    ReplyDelete
  3. தோழிக்காய கண்ணீர் வ்ரி வடித்த அன்பு உள்ளமே... உன் தோழமையே போதும் அந்தத் தோழிக்குப் பலம் கொடுக்கும்...
    நீ கவிஞன் என்று மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறாய்,
    புறத்தாக்கங்களால் உள்ளே புரண்டு எழும் உணர்வுகளை வரிகளில் வடிப்பதன் மூலமாய்...

    ReplyDelete