Sunday 3 November 2013

வெள்ளாடையோடு வருகிறாள் வாள்சுமந்த தேவதை

தேச ஒருமைப்பாடென்று கூடிக்
கற்பழித்தவர்கள்  எங்கள் வாய்கால்களில் 
தங்கள்  குறிகளை 
கழுவிக்கொண்டிருக்கிறார்கள்.

வாருங்கள் மன்றாடுவோம்.

கழுகின் நிழல்களில்
வாள் சுமந்த  நீதிதேவதை
வெள்ளையாடையோடு  வருகிறாள்

உயர்ந்த ஜனநாயகநாடும்
காந்தியச் சக்கரங்களால்
சாம்பல் மேடுகளிலும் எலும்புச்சிதைவுகளிலும்
ஏறி வருகிறது.

காடுகளை அழிக்கையில் உறங்கி இருந்திருப்பார்கள்.
அல்லது
விருந்தில் இருந்திருப்பார்கள்.
இவர்களுக்கு எதுவுமே தெரியாது
வாருங்கள் மன்றாடுவோம்.
நீதி கேட்போம்.

வண்ணாத்துப்பூச்சிகளையும்
மின்மினிப்பூச்சிகளையும் கொன்று சிதைத்த
கதைகளை சொல்லுவோம்.

கூட்டம் கூட்டமாய் தவித்து நின்ற
மான்குட்டிகளை நஞ்சு பூசிக்கொன்ற
கதைகளை சொல்லுவோம்.

ஒலிவ் சுமந்த வெள்ளைப் புறாக்களை
அம்பால் துளைத்த வேடன்களின்
கதைகளை சொல்லுவோம்.

சிதைந்த உடல்களிலும்
அழுதுவந்த நடைபிணங்களிலும்
குறிபுதைத்துக்  கொக்கரித்த யந்துகளின்
கதைகளை சொல்லுவோம்.

இவர்களுக்கு எதுவுமே தெரியாது
வாருங்கள் சொல்லி மன்றாடுவோம்.
நீதி கேட்போம்.

வட்டமேசைகளில் வர்ணக்கொடிகளின் கீழ்
கோப்புகளில் தேடுவார்கள்.
எலும்புகளையும் மண்டையோடுகளையும்
கிழிந்த ஆடைகளையும் வைத்து
விவாதிப்பார்கள்.

பின்
திரைமறைவில்
சமாதான தேவதையின் தட்டுக்களில் 
பாலச்சந்திரன்களின்
இசைப்பிரியாக்களின் தசைதுண்டுகளை  நிறைத்துவிட்டு
விலை பேசுவார்கள்.

இவர்களுக்கு எதுவுமே தெரியாது
தங்களின் தேச நலன்களை தவிர
எங்களுக்கும் எதுவும் புரியாது
வாருங்கள் சொல்லி மன்றாடுவோம்.
நீதி கேட்போம்.

3 comments:

  1. யதார்த்தத்தை தோலுரிக்கும் உணர்ச்சிமயமான எழுத்துக்கள்...

    ReplyDelete
  2. அதிக வலி வார்த்தை ஜாலம்!ம்ம்

    ReplyDelete