Wednesday, 25 December 2013

என்னதான் இருந்தாலும் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்...(இது, கதையல்ல. எடுத்துக்கொள்ளலாம் )

     இப்படித்தானுங்கோ சின்னனில எனக்கு  உந்த வெள்ளயளை அறிமுகப்படுத்தினவை. அப்பேக்க எனக்கு ஒரு ஆறோ ஏழு வயசெண்டுதான் நினைக்கிறேன். ஆங்கில புத்தகத்தை எடுத்தா முதல் பக்கத்திலேயே போட்டு இருந்தாங்கள். எதோ என்னவோ என்று  பிரமிச்சுபோய் பார்த்தேன். நம்மள மாதிரித்தான் இருந்தாங்களா அப்படியே விட்டுட்டன். பிறகு கொஞ்ச காலத்தில காந்தி உந்த வெள்ளையனே வெளியேறு என்று சொன்னார் எண்டும் படிப்பிச்சாங்கள். என்னடா இவங்கள் நல்லவங்கள் தானே உந்த மனுஷன் எதுக்கு இப்படி செய்கிறார் என்றும் யோசித்தேன். அந்தள் கொண்டு திரிஞ்ச  கம்பை பார்த்த பயத்தில ஒன்றும் கேட்கவும் இல்லை யாரிடமும் சொல்லவும் இல்லை.    அப்படியே கொஞ்சகாலம் போச்சா... எங்காவது கொஞ்சம் பிந்திப் போனால் காணும்  வெள்ளைக்காரன் மாதிரி நேரத்தை மதிக்கணும் என்றாங்கள். ஏதாவது விசேசத்துக்கு கொஞ்சம் ஊத்தையாக போனாலோ அல்லது தலையை கிளயை இழுக்காமல் போனாலோ,அல்லது ஏதும் அவசரத்தில யாரையாச்சு கவனிக்காமல் இருந்தாலோ  உடனே, வெள்ளைக்காரனின் பழக்க வழக்கங்களை பாருங்கள் என்று உதாரணம் வேற..சொன்னாங்களா ..அதோட விட்டாங்களா என்ன சாப்பிடேக்கை, குளிக்கேக்கை  ஏன் மூ ..... பெய்யேக்கை கூட வெள்ளைக்காரனைப்பாருங்கள் வெள்ளைக்காரனைப் பாருங்கள் என்றுதான் சொன்னாங்கள்.

   என்னத்த எடுத்தாலும் வெள்ளைக்காரனைப் பாரு, வெள்ளைக்காரனை மாதிரி இருக்கோணும்... என்று ஒரே கதையா இருந்திச்சா எனக்கும் வெள்ளைக்காரன் என்றால் எதோ நிலவில குளிச்சு, செவ்வாயில தூங்கி சூரியனில நடந்து வந்த வங்களோ என்ற மாதிரி ஒரு விம்பம். வயது வர வர வெள்ளைக்காரங்கள் பற்றிய நினைப்பும் வளர... அந்தநேரம் பார்த்து வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த ஒரு சிலரும், அங்கை என்ன மரியாதை, என்ன மதிப்பு, என்ன ஒரு வாழ்க்கை முறை..ஆ..  ஊ.. என்றாங்களா... எப்படியாவது ஒரு வெள்ளைக்காரனையாவது ஒருமுறை பார்க்கணும் என்ற பெரிய ஆசை வந்திடுத்து...தேடித்திரிஞ்சனா ஒருபக்கம் வெள்ளைக்காரனை பார்க்கணும்  எண்ட கனவும் வளர மறுபக்கம் L M G யில் இருந்து R B G என்று மாறி  9 M இல வந்து நிக்க, காலம் என்னையும்  தூக்கி எறிந்தது வெள்ளைக்காரகளின் நாட்டில்.

மிகப்பெரிய சந்தோசமா இருந்திச்சு.  நானும் வெள்ளைக்காரங்களை போல வாழலாம்.. வெள்ளைக்காரங்களோடு பழகலாம் என்ற நினைப்பே ஒரு பெரிய இன்பமாக இருந்துதா... அப்படியே நினைச்சுக்குக்கொண்டு திரும்பினா முன்னால ஒரு வெள்ளை.. மணம் என்றால் தாங்க முடியாத மணம். வந்த இடத்தில மூக்கை பொத்துவது நாகரீகம் இல்லை என்றபடியால் சகிச்சு கொண்டு தாண்டிய போது வச்சிருந்த கனவு கொஞ்சம் தளம்பித்தான் போச்சு..இருந்தாலும் எங்கோயோ ஒன்று இரண்டு தப்பிப்போகும் தானே என்று கடந்து வந்து கொஞ்சநாள் கழியத்தான் இங்கை எல்லோரும் மூக்கை போத்திக்கொண்டு தான் வாழுகினம் என்று புரிந்தது.

ஒரு இடத்தில பதியனும் என்று விடியக்காத்தல குளிருக்கை கொண்டுபோய் விட்டாங்களா நீளமா ஒரு இருநூறு சனம் பல நூறு நாட்டுக்காரங்கள். என்னடா மனிதஉரிமையை மதிக்கிற நாட்டிலும் லைனிலா நிக்கணும் என்று பார்த்தா ஒரு ஆபிசர்  வந்து நெஞ்சை பிடிச்சு தள்ளுது எனக்கு பத்தில நின்றவரை. எனக்கெண்டா எங்கட ஊரில ஒரு  ஆபிசர் இப்படி ஆளில் கை வைக்க முடியுமோ என்ன..தவறியும் ஒரு இடத்தில சந்தேகம் கேட்டா எதோ தன்ர மடியில கையை வச்சிட்டான் என்ற மாதிரி பாக்கிறதும் கத்துறதும்... சா சா மடியில கையை வைச்சா ஒன்றும் சொல்லமாட்டங்கள். மறந்து போனேன். உதுக்கு வேற பழமொழி தான் சொல்லணும்.

எல்லா கனவும் உடைஞ்சு போக சரி வந்தனாங்கள் வாழத்தானே வேணும் என்ற நினைப்பில ஒரு சாப்பாட்டுக்கடையில் வேலைக்கு சேர்ந்தமா ... சா சா சாப்பாட்டுக்கடை என்றால் நம்ம ஆக்கள் கோவிப்பினம் ரெஸ்ரோறன்ட் என்று கௌரவமா சொல்லணும். இரண்டாயிரம் மூயிரம் கண்டு போயிலைக்கு ஒருநாளில் கெட்டு உடைச்சவனை ஒரு இடத்தில நிண்டு கழுவு என்று சொன்னால் கேக்கவா வேணும். அப்படி அடிச்சு பிடிச்சு கழுவுற நாளில் தான் முன்னுக்கு நின்ற சாப்பாடு  கொண்டுபோய் கொடுக்கிற வெள்ளை குப்பையிக்க கிடந்த ஒரு சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டுது....எட கண்றாவி இவனார்ரா என யோசிக்கைக்கைதான் சாப்பாடே வெறுத்துப்போனது.

சரி போகட்டும் சாப்பாடுதானே பசிக்குத்தானே என்று விட்டனா மற்றப்பக்கத்தால இவங்களின் இன்னொரு பசி... அதையெப்படி இங்கை சொல்லுவது எப்படியெல்லாம் சொல்லமுடியாதோ அப்படியெல்லாம் அந்த பசி தீர்ப்பு ஆங்காங்கே நடக்க ஐம்புலனும் அடக்கி ஒரு முனிவரா, சித்தரா வேலைக்கு போனமா வந்தமா என்று காலத்தை தள்ள வேண்டியதா போச்சு. ஒருக்கா இடக்கு முடக்கா ஒரு வெள்ளை இருந்த வீட்டிக்கு போக வேண்டிய சூழல். அப்படி இப்படி என்று நினைத்துக்கொண்டு அங்கை போனால், பூனை ஒருபக்கம் நாய் ஒருபக்கம் எலி ஒருபக்கம் உதுக்கெல்லாம் நடுவில அவன் ஒருபக்கம்... சா சா வெள்ளைக்காரன் அப்படியெல்லாம் இருக்கமாட்டான். தப்பா நீங்கள் நினைச்சா நான் பொறுப்பில்லை ஆமா...எனக்கு நானே சொல்லிக்கொண்டு அலுவலை முடிச்சு வெளியேறியபோது றோட்டு காத்து முகத்தில படேக்கதான் இன்னும் பூமியில் இருக்கிறன் என்ற நினைப்பே வந்தது.யாரும் நரகம் போன ஆக்கள் இருந்தால் வாங்கோ ஒப்பீடு செய்யலாம்.

அம்மா அப்பவும் சொன்னா 'டேய் போகாதயிடா நாலு ஆடும் ஐஞ்சு மாடும் வேண்டி வளக்கலாம் என்று"..இப்பதான் யோசிக்கிறேன் இங்கை வந்த காசையும் போட்டு ஒரு பத்து எருமையும் கூட வேண்டி வளத்திருக்கலாம்.. அதுகளுக்கு என்றாலும் சொன்னது விளங்கும். இந்த வெள்ளையளுக்கு....

என்னவோ போங்கோ நடக்கிறது நடக்கட்டும் என்ற நினைப்பில பிழைப்பில் கவனமாக இருக்க, வருடக் கடைசி என்று உந்த வெள்ளையள் எல்லாம் பையை தூக்கிக்கொண்டு சுற்றுலா வெளிக்கிட்டினம். சரி சரி கொஞ்சமாவது பரவாயில்லை என்று பார்த்தா.. ஒரு பதினைச்சு நாள் கழிய வந்து... பானும் கேக்கும் கடனா கேக்குதுகள்.

எட எங்கட பாரதேசிப்பயலுகளே, எத்தன கதையை சொல்லி வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் என்று குளறினியல். ஒரு பேப்பரை வச்சு இவங்கள் செய்கிற வேலையை சொன்னன் எண்டா நாறிப்போகும் பாத்துக்கோங்கோ...

வெள்ளைக்காரன் நாட்டில வாழலாம் என்ற எங்கட ஆக்களிந்த கதையை நம்பி கெட்ட நாளுபெரிலநானும் ஒருத்தன் பாருங்க இதில ஒளிக்க ஒன்றும் இல்லை.சரி சரி எல்லோரும் ஏறின குதிரைதானே இந்த வாழ்க்கை என்று நானும் ஏறி இப்ப இறங்கமட்டாமல் .. குதிரையின்ற போக்கில விட்டுட்டன். கிடைக்கிடை திரும்பி பார்க்க்கினான் எவ்வளவுதூரம் ஓடியிருக்கிறன் என்று..அதெங்கை ஓடினால்தானே நின்ற இடத்திலேயே குதிரை நிக்க சுற்றி இருக்கிற எல்லாமேல்லோ ஓடுது...

ஓடுற காலத்துக்கு கையை காட்ட யாரெல்லாம் வரப்போரியள்....

படக்குறிப்பு.
படம் 01.. பாரிசின் தொடரூந்து தடத்தை கடக்கும் சிறுவர்கள் (நல்ல வளர்ப்பு )

படம் 02... பாரிசின் நிரந்தர இலகுவான உழைப்பு (தமிழில் கெட்ட வார்த்தையால களவு என்றும் சொல்லுவினம் )

படம் 03.  பாரிசின் மென்மையான குடிமகன் (இவர் பிச்சை எடுக்கவில்லையாம் வேலை இல்லாமையால் விரும்பியவர்கள் நன்கொடை கொடுக்கலாமாம் )


4 comments:

 1. அடப்பாவமே நொந்து... நூடில்ஸ் ஆகியது நீங்கள் மட்டுமில்லை நானும் தான்.

  ReplyDelete
 2. why don't you return to your back home, when you don't like

  ReplyDelete
 3. வணக்கம்
  அனுபவ பகிர்வு அருமை வாழ்த்துக்கள்.. என்னசெய்வது. காலம் செய்த கோலம்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
 4. வணக்கம்
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete